அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ஆசை முகம் மறந்தாயோ? என்கிற நூல் குறித்து தான். வித்யா சுப்ரமணியம் நமக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆன எழுத்தாளர், சக பதிவர், முகநூலிலும் இவர் நமக்கு பரிச்சயமானவர் தான். இவரை நான் குடும்பத்தினருடன் நேரிலும் சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவரது உப்புக்கணக்கு மிகவும் அற்புதமான நூல். அந்த நூல் குறித்து என் இல்லத்தரசி எழுதிய பதிவினை இங்கே வாசிக்க முடியும். சரி இப்போது இன்றைய பதிவுக்கான நூல் குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்.
“ஒவ்வொரு மனிதனும் காதலில் பிறந்து கடவுளை நோக்கித்தான் செல்கிறான். அவன் விரும்பினாலும், விரும்பாவிடினும் மரணம் நிகழ்வது போல அவன் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவன் பயணம் இறைமையை நோக்கித்தான். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வயது வரை என்பது எவருமறியாத பிரும்ம ரகசியம். குறுகிய இந்த வாழ்வில் தான் மனிதனுக்கு எத்தனையெத்தனை இன்பங்கள், துன்பங்கள்! இன்பங்களை வரவேற்பதும், துன்பங்களைக் கண்டு அஞ்சி விலகுவதும் தான் பொதுவாக மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. மாறாக இரண்டையும் சமமாக பாவித்து அனுபவிக்கத் தயாராகி, அந்த அனுபவங்களிலிருந்து தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பது சிலர் மட்டுமே. துன்பங்கள் எல்லாம் நம்மை நாமறிவதற்காகவே என்று எண்ணுபவர்கள் அவற்றைக் கண்டு அஞ்சி விலகுவதில்லை.”
தனது முன்னுரையில் இப்படித்தான் ஆரம்பித்து இருக்கிறார் எழுத்தாளர். எத்தனை அற்புதமான சிந்தனை. வாழ்க்கை குறித்த ஒரு பார்வையை, நமக்குப் புரியும் விதமாக சொல்லிச் செல்வது போலவே இந்தக் கதையிலும் சூழல்களை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். படிக்கும்போதே அடடா, என்னவெல்லாம் பிரச்சனைகள் இந்தப் பெண்ணுக்கு என்று கதையின் நாயகி குறித்து நாம் சிந்திக்கும் விதத்தில் எழுதியிருக்கிறார். நாயகி நிரூபமா (எத்தனை அழகிய பெயர்!) இந்தப் பெயருக்கு சமஸ்கிருதத்தில் - தனக்கு ஒப்பீடு இல்லாதவள் என்ற பொருள் உண்டு. கதையிலும் இந்த நாயகிக்கு ஒப்பீடு இல்லை தான். சிறு வயதிலேயே தனது தாயை இழந்து, பின்னர் சகோதரனையும் இழந்து, அந்த சோகத்திலேயே இருந்த தந்தையையும் இழந்த பின்னர் தனது முயற்சியால் படித்து அமெரிக்காவில் மேற்படிப்புக்குச் சென்றவர்.
அதே போல ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்தினரை தனது உழைப்பால் மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுடன் அமெரிக்காவில் தங்கி படித்தபடியே மேற்படிப்பும் படித்துக் கொண்டிருக்கும் பிரணவ். தனது இரு சகோதரிகளுக்கும் தனது சம்பாத்தியத்தில் திருமணம் செய்து வைத்த பிறகே தனது திருமணம் என்ற கொள்கையுடன் இருக்கும் அவருக்கும் காதல் வாய்க்கிறது. ஆனாலும் தனது கொள்கையில் எந்த விதமும் மாற்றமும் இருக்காது என்ற உறுதியுடன் தான் இருக்கிறார் பிரணவ். காதல் என்பதற்கான அர்த்தம் இங்கே பலருக்கும் புரிவதில்லை. காதல் குறித்து இப்படித்தான் எழுதுகிறார் எழுத்தாளர். எத்தனை சிறப்பான சிந்தனை. எல்லா காதலர்களும் இப்படிச் சிந்தித்தால் காதல் தோல்வி என்பதே இங்கே இல்லாமல் இருக்கும்.
“நாம இப்போ மாணவர்கள். ஸ்காலர்ஷிப்லயும், பார்ட் டைம் வருமானத்துலயும் இங்க மூச்சு திணற வாழ்க்கையை நடத்திட்டிருக்கோம். ஏதோ ஒரு லட்சியத்துக்காக வாயைக் கட்டி வயித்தைக் கட்டி ஓட்டப்பந்தயம் மாதிரி ஓடிட்டிருக்கோம். இந்தியால இருக்கறவங்க வேணா வெளிநாட்டுல படிக்கறயான்னு நம்பளைப் பார்த்து வாய் பிளக்கலாம். ஆனா நாம இங்க படறபாடு நமக்குதான் தெரியும். இந்த ஓட்டத்துல காதலிக்க நமக்கு நேரமிருக்குமான்றது கூட சந்தேகம்தான். இருந்தாலும் காதலுக்கு அதெல்லாம் தெரியறதில்லையே. எப்படியோ உள்ளுக்குள்ளே நுழைஞ்சு சிம்மாசனம் போட்டு உக்காந்தாச்சு. அப்டியே கொஞ்ச நாள் உக்கார வெச்சுட்டுப் படிப்பை முடிக்கற வழியைப் பார்ப்போம். அதுக்கப்புறம் வேலைன்னு கிடைச்சாதான் காதலைக் கூட சந்தோஷமா அனுபவிக்க முடியும். மனசுல கவலைகளை வெச்சுண்டு காதலைப் பத்தி சந்தோஷமா நினைக்க முடியாது”.
எத்தனை தெளிவான சிந்தனை. நம் நோக்கம் என்பது எதுவென்பது புரிந்து விட்டால் அந்த நோக்கத்தினை அடைவது குறித்து மட்டுமே நமது சிந்தனைகள் இருக்கவேண்டும் அல்லவா… தொடர்ந்து படிப்பை முடித்து ஒரு வேலையிலும் அமர்ந்த பிறகு தங்கைகளின் திருமணம் குறித்த சிந்தனைகளில் இருந்த சமயத்தில், நண்பர் வீட்டு விழா ஒன்றில் எதிர்பாரா வண்ணம் நிரூபமா பிரணவை மோதிரம் போட்டு, மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் வேறு வேறு இடங்களில் இருந்து செலவும் அதிகமாக இருக்க, இப்படி திருமணம் செய்து கொண்டு ஒரே இடத்தில் இருந்தால் பணம் அதிகம் சேமிக்க முடியும் என்பதோடு தங்கைகளின் திருமணத்திற்கு இருவரும் சேர்ந்து பாடுபட முடியும் என்று முடிவெடுக்கிறார் நிரூபமா. இப்படியாக திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள் அதிர்ச்சி தரும் விதத்தில் ஒரு செய்தி வருகிறது - பிரணவின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் எனும் செய்தி தான் அது.
தந்தையைச் சந்தித்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதோடு, தனது திருமணம் குறித்தும் பேசலாம் என்று இந்தியா திரும்புகிறார் பிரணவ். ஆனால் சில தினங்கள் கழிந்தபிறகும் இந்தியாவிலிருந்து ஒரு தகவலும் இல்லை. பிரணவ் ஒரு தகவலும் அனுப்பாமல் இருக்க, நிரூபமாவிற்கு கவலை அதிகரிக்கிறது. என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியாமல் பிரணவின் தோழனை அழைக்க, அப்போது தான் அவளுக்குத் தெரிகிறது - பிரணவ் வரவேயில்லை என்பது. எங்கே சென்று இருப்பான் பிரணவ்? அவனுக்கு என்ன ஆயிற்று? பிரணவின் அப்பா அம்மாவிடமும் பேச முடியாது - தான் யாரென்று சொல்ல முடியும்? ஒன்றுமே புரியாமல் மனக் கவலையில் ஆழ்கிறார் நிரூபமா. அதன் பிறகு அவள் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன? என்பதை நூலினைப் படிக்கும் நமக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்து படித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வாரம் மட்டுமே திருமண வாழ்க்கை என்றாலும், அந்தத் திருமணத்தினால், அதுவும் கணவன் பிரணவ் இல்லாதபோது, அவனது குடும்பத்தினருக்கு அவள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த சிந்தனை மட்டுமே நிரூபமாவிற்கு இருக்கிறது. அதனால் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார் நிரூபமா. நேரடியாக பிரணவின் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தினருடன் பழகி தான் யார் என்பதை புரிய வைக்கிறார். எத்தனை தேடினாலும் பிரணவ் குறித்த தகவல் ஒன்றுமே கிடைக்காமல் போக நிரூபமா என்ன செய்கிறார், அவரது முடிவுகள் எப்படி இருந்தன என்பதை நாமும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். எத்தனை சிறப்பான முடிவாக அது அமைகிறது? பிரணவின் குடும்பத்தினருக்காகவே, பிரணவ் இருந்திருந்தால் என்னென்ன செய்திருப்பாரோ அது அத்தனையும் தான் செய்ய வேண்டும் என நினைக்கும் நிரூபமாவின் சீரிய சிந்தனை என படிக்கும்போதே நமக்கு அவரது சிறப்பு புரிகிறது.
தொடர்ந்து என்ன நடக்கிறது. பிரணவ் கிடைத்தாரா? உயிருடன் தான் இருக்கிறாரா? அப்படி அவர் உயிருடன் இருந்தால், அவர் எங்கே, என்ன நிலையில் இருக்கிறார்? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள வித்யா சுப்ரமணியன் அவர்களின் ஆசை முகம் மறந்தாயோ என்கிற நூலை வாங்கி படியுங்களேன். Kindle Unlimited கணக்கு இருந்தால் இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து படிக்கலாம். புஸ்தகாவில் கணக்கு இருந்தால் அங்கேயும் இந்த நூலினை வாசிக்க முடியும். புஸ்தகாவில் அச்சுப் புத்தகமாகவும் (விலை ரூபாய் 246.50) கிடைக்கிறது.
இந்த நூல் குறித்த, எனது இல்லத்தரசியின் வாசிப்பனுபவம் இங்கே படிக்கலாம் என்பது மேலதிகத் தகவல்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 ஜனவரி 2026


நல்லதொரு அறிமுகம். படித்து ரசித்ததை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாசகம் ரொம்ப நல்லாருக்கு..உண்மைதானே இல்லையா!
பதிலளிநீக்குகீதா
ஆதி, வித்யாசுப்ரமணியம் அவர்கள் எழுதிய உப்புக்கணக்கு பற்றி எழுதியது நினைவிருக்கிறது, ஜி
பதிலளிநீக்குஅது போல இவங்களை உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் என்பதும் முன்பு சொன்னது நினைவிருக்கிறது.
கதை அருமையாக இருக்க்கும் என்று தெரிகிறது உங்கள் விமர்சனத்தில். வாசிக்க வேண்டும்.
ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க. நல்ல சிந்தனைகளை கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் சொல்வதும் அருமை...
கீதா