ஞாயிறு, 19 மே, 2024

கதம்பம் - ரோல் நம்பர் 1 - பால் சர்பத் - மழை - சின்சியர் ஸ்டூடெண்ட் - ஆசை முகம் மறந்தாயோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட சித்திரைத் தேர் திருவிழா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


ரோல் நம்பர் 1 - 8 மே 2024:




தோ பாருங்கோ! உங்க ரெண்டு பேரோட பேசிண்டு இருக்க எனக்கு நேரமில்ல சரியா! சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு நான்  கிளாஸ்ல உட்காரணும்! 


என்னவர்: இவ அலப்பறை தாங்க முடியலடா செல்லம்! 


சமையல் ஆச்சு! பதினோரு மணிக்கு குடிக்க மோர் சிலுப்பி வெச்சிருக்கேன்! இட்லிக்கும் அடைக்கும் ஊறப் போட்டிருக்கேன்! காலையில கஞ்சி போட்டு குடிச்சிடலாமா???


என்னவர்: நீ பண்ணி குடுக்கற உப்புமாவக் கூட சாப்பிடறேனேம்மா!!


உப்புமாவக் கூடன்னா என்ன அர்த்தம்?? உப்புமா என்ன விஷமா??


என்னவர்: அப்படியில்லம்மா! எனக்கு உப்புமா பிடிக்காதுன்னாலும் நீ எது பண்ணிக் குடுத்தாலும் நான் சாப்டுண்டு தானே இருக்கேன்னு தான் சொல்றேன்!


கண்ணா! உன்னை கிராதகியா ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு போன மாதிரி என்ன விட்டுடாத கண்ணா! கூகுள் மீட்ல என்ன சேர்த்து விட்டுடு என்ன!


மகள்: ஒண்ணும் பயப்படாதம்மா! நான் உனக்கு சொல்லித் தரேன்! இப்ப ஜாயின் பண்ணிட்ட பாரு! டவுட் இருந்தா hand raise பண்ணலாம்!ரியாக்ட் பண்ணலாம்! ம்யூட்ல போட்டு வெச்சிக்கோ! பேசணும்னா மைக் ஆன் பண்ணிக்கோ! ஓகேவா??


ஓகே கண்ணா! கிளாஸ் ஆரம்பிச்சிட்டாங்க! எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு முதல்ல கேட்போம்!


நான் தான் உங்க கிளாஸ் டீச்சர்! எல்லாரும் உங்கள introduce பண்ணிக்கோங்க! முதல்ல 'ஆதி வெங்கட்' ங்கிற ஐடில இருந்து சொல்லுங்க!


அட! இங்கயும் நான் தான் ரோல் நம்பர் 1!!!! 


நமஸ்காரம் மேம்! நான் ஆதிலஷ்மி வெங்கட்ராமன்! ஹோம் மேக்கர்! ஸ்கூல் டேஸ்ல ஹிந்தி எக்ஸாம்ஸ் எழுதியிருக்கேன்! விஷாரத் முடிச்சிருக்கேன்!


ஓ! சூப்பர்! அப்போ உங்களுக்கு அக்ஷரங்கள் தெரியும்! தொடர்ந்து நம்ம நிறைய பேசலாம்!


#சமஸ்கிருதம், #ஆன்லைன்_வகுப்புகள்


*******


பால் சர்பத் - 9 மே 2024:




கொளுத்தும் வெயிலில் வயிற்றை குளுகுளுன்னு வைத்திருக்க இது ஏற்ற பானம்! ரெசிபி யூடியூப் உபயம் தான்..🙂 சிறிதளவு பாதாம் பிசினை இரவே நீரில் ஊற வைத்து விட்டால் சட்டென்று செய்து வெயில் நேரத்தில் பருக ஏதுவாக இருக்கும்! பாதாம் பிசினுடன் தேவைக்கு ஏற்றபடி  தேங்காய்ப்பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கலந்தால் குளுகுளு சர்பத் ரெடி!


தேங்காய்ப் பாலுக்கு பதிலாக பசும்பாலும் சேர்த்துக் கொள்ளலாம்! நாட்டுச் சர்க்கரைக்கு பதிலாக வெள்ளை சர்க்கரை! மேலே ஐஸ்க்ரீமும் போட்டு பரிமாறலாம்! பாதாம் பிசின் வயிற்று புண்களை குணப்படுத்த உதவும்! உடல் சூட்டையும் குறைக்கும்! சர்பத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மாற்றிக் கொள்ளலாம்!


*******


மழை - 10 மே 2024:


வெப்பமும் புழுக்கமுமாய் இருந்த இறுக்கமான சூழலுக்கிடையில் இறுதியாக இன்று எங்கள் ஊரிலும் காற்றும் மழையுமாய் சற்று நேரம் இறைவனின் கருணை மழை பொழிந்து குளிர்ந்தது! நீண்ட நாட்களாயிற்று! மழையை பார்த்து! சிறு பிள்ளை போல் கைகளை நீட்டி மழையை ஸ்பரிசித்தேன்!


*******


ரோஷ்ணி கார்னர் - 16 மே 2024:




நான் போய் கை காலெல்லாம் அலம்பிண்டு வரேன்! சாப்பிடலாம் என்ன!!


க் + ஐ - கை


என்ன சொல்ற??


இல்ல! இன்னிக்கு கிளாஸ்ல சொல்லிக் குடுத்தாளா! அதான்  சொல்லிப் பார்த்தேன்!!


இங்க பாருடா செல்லம் உங்கம்மாவ!!


என்னப்பா??


நான் சாதாரணமா சொல்றதெல்லாம் இவ 'பிரித்து எழுதுக' மாதிரி சொல்லிண்டு இருக்கா...🙂


அம்மா! ஆனாலும் நீ ரொம்ப ஸ்டூடண்ட்டா இருக்கறம்மா...:))


#சமஸ்கிருதம், #ஆன்லைன்_வகுப்புகள்


*******


ஆசை முகம் மறந்தாயோ? - 17 மே 2024:



இரு வேறு இந்திய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து அமெரிக்காவில் வசிக்கும் ப்ரணவும் நிருபமாவும் ஒன்பது வருடமாக காதலித்து வருகின்றனர்! ஒரு கட்டத்தில் தங்கள் காதலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்பி எளிய முறையில் திருமணமும் செய்து கொள்கின்றனர்!


இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதலும், அன்பும் செழித்திருக்க ஒரு வாரம் போல இனிமையாக கடந்து செல்கிறது! திடீரென ப்ரணவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையென நண்பன் ரங்கனிடமிருந்து தகவல் வருகிறது! 


ப்ரணவ் தன் பெற்றோரையும் தங்கைகளையும் பார்த்து பத்து வருடங்களாகிறது! தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவன்! கூடிய சீக்கிரம் தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்! அப்படியே நிருபமாவைப் பற்றி சொல்லி அவர்கள் சம்மதத்துடன் முறைப்படி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்தித்திருந்தான்!


இந்த நிலையில் தான் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிய வருகிறது! கவலையோடும் யோசனைகளோடும் அடுத்த இரண்டு நாட்களில் ப்ரணவ் இந்தியாவுக்கு கிளம்புகிறான்! ஒரு வார இனிமையான குடும்ப வாழ்வுக்குப் பின்னர் இருவரும் பிரிவதைப் பற்றி கவலை கொள்ளும் நிருபமா ஊருக்கு கிளம்பும் ப்ரணவுக்கு வேண்டிய லக்கேஜுகளை தயார் செய்து செய்கிறாள்!


நாட்கள் கடந்து செல்கிறது! ப்ரணவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை! ஊருக்குச் சென்று விட்டானா என்றும் தெரியவில்லை! நண்பன் ரங்கனிடம் விசாரித்ததில் ப்ரணவ் தந்தையை பார்க்கவும் செல்லவில்லை என்ற செய்தி நிருபமாவின் இதயத்தை இடியென தாக்குகிறது!


ப்ரணவைத் தேடி இந்தியாவுக்கு கிளம்பும் நிருபமா இங்கு தன்னை யாரெனச் அவன் பெற்றோரிடம் சொல்வாள்? உயிருக்குயிராய் காதலித்த ப்ரணவ் நிருபமாவை ஏன்  தவிக்க விட்டான்? அவனுக்கு என்ன தான் ஆனது? இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள்?

அன்பும் ஆசையும் கொண்ட இருவரின் கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆசைகளுக்கும் காலம் என்ன பதில் சொல்லப் போகிறது? அதை இருவரும் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதெல்லாம் மீதிக்கதை!


சமீபத்தில் கிண்டிலில் நான் வாசித்த நாவல் தான் ஆசை முகம் மறந்தாயோ? நம்ம Vidya Subramaniam மேமின் எழுத்தில் வெளிவந்த இந்த அருமையான நாவலை வாசித்ததும் வாழ்வைக் குறித்தான பல புரிதல்கள் தோன்றுவது உண்மை! வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. எனது அலுவலகத்தில் அடுத்த பத்து நாட்கள் பெரிய போராட்டம். அது மட்டுமின்றி வேறொரு செயலும் 31ம் தேதிக்குள் நடைபெற வேண்டும். நடக்க வாய்ப்பே இல்லை என்று நொந்திருந்தேன். இப்போதும் நடக்காது என்று தெரியும் என்றாலும் இன்றைய வாசகம் சட்டென மனதில் பூத்தூவியது. அதுவும் அது சம்பந்தமாக இப்போதுதான் போனில் ஒரு நண்பருடன் பேசி விட்டு உடனே வந்து இங்கு வலையைத் திறந்தாள் முதலில் கண்ணில் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கும் என நம்புவோம்! நல்லதே நடக்கட்டும் சார்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. சளைக்காமல் சமஸ்க்ருதம் பயிலும் உங்கள் ஆர்வத்தை வியக்கிறேன், பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பால் சார்பதி நன்றாய் இருக்கிறது. எனக்குதான் குளுமையாக எது சாப்பிட்டாலும் உடனே தொடர் இருமல் வந்து விடுகிறது! அடுத்த ஒரு மாதம் படுத்தல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வாமை உள்ளவர்கள் கவனமாக தான் இருக்க வேண்டும்! சில்லென்று இல்லாமல் சாதாரணமாக் தேங்காய்ப்பால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. ஆசை முகம் மறந்தாயோ படிக்க ஆவலாய் இருக்கிறது. நான் கிண்டியில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிக்க வேண்டிய புத்தகம் சார். நிறைய நிறைய தகவல்களும் ஸ்வாரஸ்யங்களும் நிறைந்த நாவல் இது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  5. பெயரில்லா19 மே, 2024 அன்று 8:53 AM

    சமஸ்கிருத வகுப்பு சார்ந்த உங்கள் மூவரின் உரையாடல்கள் சுவாரசியம். வகுப்பிற்கு மீண்டும் வாழ்த்துகள்!

    பால் சர்பத் - ஆஹா!!! நல்லாருக்கு. ஜமாய்ங்க!! ஆதி!

    நானும் பாதாம் பிசின் நல்லது சில வருடங்களாகவே பயன்படுத்துகிறேன் இப்படி ஆனா என்ன..... இனிப்பு எதுவும் சேர்க்காத பானங்கள். இதில் நான் சப்ஜா சியா விதைகளும் சேர்த்துக்கொள்வதுண்டு.

    இங்கும் மழை வந்து குளிர்வித்திருக்கிறது! எப்பவும் இல்லாத பெங்களூரா இருந்தது வெயிலில்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதாம் பிசினை இனிப்பில்லாமல் நான் செய்ததில்லை! சியா விதைகளும் வாங்கினதில்லை! முயற்சி செய்து பார்க்கிறேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. வாசகம் அருமை. நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்பிக்கை வழி நடத்தும்!

    ஆசைமுகம் மறந்தாயோ சஸ்பென்சோடு இருக்கும் போல ஈர்க்கிறது. வாசிக்கும் வாய்ப்பு?! ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை முகம் மறந்தாயோ பயணம் செய்ய விரும்புவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! கயிலாஷ் யாத்திரை இதில் வர்ணிக்கப்பட்டுள்ளது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. சமஸ்கிருதம் பயின்று வெற்றிகரமாக சான்றிதழ் பெற வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. பால் சர்பத்தைப் பார்த்ததும் நீங்கள் எழுதியிருப்பதை வாசித்ததும் குடிக்க வேண்டும் என்ற ஆவல். இங்கும் நீண்ட வேனில் காலத்திற்குப் பிறகு மழை மனதைக் குளிர்விக்கிறது.

    ஆசை முகம் மறந்தாயோ கதையில் இறுதியில் சந்திக்கிறார்களா இல்லையா என்பதை அறியும் ஆவலைத் தூண்டிவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் சர்பத் எளிதில் செய்து சுவைக்கலாம் சார்!

      ஆசை முகம் மறந்தாயோ நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. சமஸ்கிருத வகுப்பு சுவாரசியம்.
    புத்தக தகவல் நன்று.
    நான் வேள்பாரி நாவல் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை! புத்தகம் வாசித்தல் பயனுள்ளது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....