வியாழன், 9 மே, 2024

சித்திரைத் தேர் திருவிழா - 2024 - திருவரங்கம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******


சித்திரைத் தேர் - 6 மே 2024:
டே தம்பி! அந்தப் பக்கமா போ! பலூன்காரரே தேர் வரப்போ குறுக்கே போகாதய்யா! தேர் பார்க்க வந்திருக்கும் ஜனங்களுக்கு இனிய காலை வணக்கம்! நல்லதே நடக்க பிரார்த்தனை பண்ணிக்குவோம்! உங்க நகைகளுக்கும் உடமைகளுக்கும் நீங்க தான் பொறுப்பு! திருடங்க உங்களச் சுத்தி இருக்கலாம்! அதனால ஜாக்கிரதையா இருங்க! குழந்தைங்கள பத்திரமா பார்த்துக்குங்க!


திருவரங்கத்தில் இன்று சித்திரைத் தேர்! இந்த ஊருக்கே ராஜாவான அரங்கன் சப்பரத்தில் ஏறி வீதியுலா வர ஊர்கூடி வடம் பிடித்து ரங்கா! ரங்கா! எனவும் கோவிந்தா! கோவிந்தா! என விண்ணை முட்ட கோஷமிட்டார்கள்!


சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வண்டி கட்டிக் கொண்டு தங்கள் குலதெய்வமான ரங்கநாதரை தரிசிக்க முதல் நாளே இங்கு  வந்துவிடுவார்கள்! தங்கள் வயல்களில் விளைந்த நெல், பயறு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் மாடுகளையும் ஓட்டி வந்து ரங்கனுக்கு சமர்ப்பித்து தங்கள் பக்தியை வெளிப்படுத்துவார்கள்!


தலையில் தேங்காய் உடைப்பது போன்ற நேர்த்திக் கடன்களையும் இந்த சமயத்தில் தான் செலுத்துவர்! ஊரெங்கும் நடைபெறும் அன்னதானம், தாகம் தீர்த்துக் கொள்ள நீர்மோர் பந்தல் என எங்கெங்கு நோக்கினும் திருவிழாவுக்கான சுவடுகள்!


அலைகடலென குழுமியிருக்கும் மக்கள் வெள்ளமும் கிடைக்கும் இடத்தில் வீதிகளிலும் சத்திரங்களிலும் படுத்துறங்கி, நீராடி, நேர்த்திக் கடன்களை செலுத்தி கோவிந்தா! கோவிந்தா! என கைகூப்பி சேவித்துச் செல்வர்! இந்த தேரை ஒட்டி புதிதாக முளைத்திருக்கும் கடைகளும் பல உண்டு!


தேர் இப்ப எங்க வந்திட்டு இருக்கு! தெற்கு சித்திரை வீதி தாண்டியாச்சா! இந்த வருஷம் ரொம்ப கும்பலாமே! தேர் பார்த்தாச்சு! தேர் பார்த்தாச்சு! இப்படி ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்வு பொங்க  ஊர்கூடி தேரை இழுத்தாச்சு! எல்லோரையும் காத்து ரட்சிக்கணும் ரங்கா! நல்லதே நடக்கணும்! 


இது ஆன்மீக பூமி! மக்கள் தங்கள் பக்தி என்னும் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்! 


ரங்கா! ரங்கா!


*******


வீதியுலா - 6 மே 2024:மாலைப்  பொழுதில் தேரோடிய வீதியில் சற்று உலா வந்தோம்! சாலையின் இருபுறமும் இந்த சித்திரை தேரை ஒட்டி நிறைய கடைகள் போடப்பட்டிருந்தன! 


மலை போல் குவித்து வைத்திருக்கும் பலாப்பழங்களும், வாழைப்பழங்களும், முலாம்பழங்களும், வண்ண வண்ண பீங்கான் ஜாடிகள், எவர்சில்வர், இரும்பு பாத்திரங்கள், அழகிய மலர்கள், காதணிகள் என்று பார்வைக்கு பலவிதமான கடைகள் அங்கே இருந்தன!


அவற்றையெல்லாம் வாங்குகிறோமோ இல்லையோ பொழுது போக்க, வேடிக்கை பார்க்க அப்படியே ஒரு ரவுண்ட் காலாற நடந்து வந்தோம்! அந்தப் பகுதியில் மிகவும் கும்பலாக தான் இருந்தது! காவல்துறை நெரிசலை தவிர்க்க  ஒலிபெருக்கியில் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தனர்!


நிலையில் நின்று கொண்டிருந்த தேரின் அருகில் மக்கள் தீபமிட்டும், கற்பூரம் காண்பித்தும் வழிபட்டுக் கொண்டிருந்தனர்! நான் அங்கே போடப்பட்டிருந்த கடைகளில் ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ள சின்னஞ்சிறு பீங்கான் ஜாடி ஒன்று வாங்கிக் கொண்டேன்! 


காலையில் தேரை ஒட்டி பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது என்று சொல்லியிருந்தேன் அல்லவா! மக்கள் வழமை போல் சாப்பிட்ட தட்டுகளையும், தண்ணீர், ஜூஸ் குடித்த குவளைகளையும் தெருவில் வீசியெறிந்து சென்றிருந்தனர்!


அவற்றையெல்லாம் கூட்டி மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளை வாரியெடுப்பது துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் பணியாக இருக்கும்! எங்கு சென்றாலும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உணர்தல் முக்கியம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


23 கருத்துகள்:

 1. திருவிழா காட்சிகள் சுவாரஸ்யம்.  தேர் வரும் சாக்கில் மக்கள் வெள்ளத்தை ரசிக்கலாம், கடைகளை  ரசிக்கலாம்.  ஆனால் இந்த மக்களின் குப்பை போடும் பழக்கத்தை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  தம் வீடாய் இருந்தால் இப்படி செய்வார்களா?  தம் தெருவாய் இருந்தால் இப்படி செய்வார்களா?  எப்போதுதான் மாறுவார்களோ!  மதுரையின் சித்திரைத் திருவிழாவும் நினைவுக்கு வருகிறது.  கோலாகலம், கொண்டாட்டம்தான்.  இவ்வளவு மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தோன்றுமளவு கூட்டம் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். அவர்களது வீடாக இருந்தால் இப்படி செய்வார்களா? ஒவ்வொருவருக்கும் அந்த எண்ணம் இருக்க வேண்டும்.

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. வாசகம் அருமை.
  சித்திரை திருவிழா நேரே பார்த்தது போல இருக்கிறது.
  திருவிழா கடைகள் பார்க்க பிடிக்கும் எல்லோருக்கும்.
  குப்பைகளை குப்பை கூடைகளில் போடும் பழக்கம் வந்தால் நன்றாக இருக்கும் ஊர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா. வேடிக்கை பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத் தான் இருக்கிறது! குப்பை போடுபவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது..:(

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. பெயரில்லா9 மே, 2024 அன்று 9:58 AM

  நல்ல வாசகம்.

  ஒவ்வொரு கிராமமும் சிறிய ஊரும் அந்த ஊரில் குடிகொண்டிருக்கும் தெய்வத்தோடு உணர்வுபூர்வமாகப் பின்னிப் பிணைந்து இருப்பதை இப்படியான தருணங்களில், ஒவ்வொரு ஊர் நிகழ்வின் போதும் காணலாம். நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. இந்த உணர்வினை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது! அது அனுபவத்தில் வரும் ஒன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பக்தி உணர்வுப்பூர்வமானது. அவற்றை இவை போன்ற திருவிழாக்களில் காணலாம்!

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 4. திருவிழாக் கடைகள் காணக் கண்கொள்ளாக் காட்சி! எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த மாதிரி கடைகளைக் கண்டு ரசிக்க. சிறு வியாபாரிகள் பாவம்.

  மண் பாண்டங்கள், பீங்கான், கண்ணாடி வகையறாக்களைக் கண்டாலே நான் நின்றுவிடுவேன். ரொம்பப் பிடிக்கும். பயன்படுத்தவும் ரொம்பப் பிடிக்கும். இங்கும் படத்தில் அந்தப் பீங்கான் ஜாடிகள் ஈர்க்கின்றன. அது போல சின்ன சின்ன சொப்பு வைத்து விளையாடுவடு போன்று!!!! அந்தப் பாத்திரங்களும் ரொம்ப ஈர்க்கும் என்னை. கடைசிப் படம் ரொம்ப cute.

  தேரின் குதிரைகள் அழகு!

  படங்கள் அனைத்தும் செம.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்னஞ்சிறு ஜாடிகளும், சொப்பு சாமான்களும் எப்போதுமே அழகு.

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 5. திருவிழாக் கடைகள் காணக் கண்கொள்ளாக் காட்சி! எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த மாதிரி கடைகளைக் கண்டு ரசிக்க. சிறு வியாபாரிகள் பாவம்.

  மண் பாண்டங்கள், பீங்கான், கண்ணாடி வகையறாக்களைக் கண்டாலே நான் நின்றுவிடுவேன். ரொம்பப் பிடிக்கும். பயன்படுத்தவும் ரொம்பப் பிடிக்கும். இங்கும் படத்தில் அந்தப் பீங்கான் ஜாடிகள் ஈர்க்கின்றன. அது போல சின்ன சின்ன சொப்பு வைத்து விளையாடுவடு போன்று!!!! அந்தப் பாத்திரங்களும் ரொம்ப ஈர்க்கும் என்னை. கடைசிப் படம் ரொம்ப cute.

  தேரின் குதிரைகள் அழகு!

  படங்கள் அனைத்தும் செம.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 6. கடை போடுபவர்களும் சரி, மக்களும் சரி, குப்பைகளைத் தெருவில் போடாமல் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் வர வேண்டும். நான் பார்த்த வரையில் இங்குமே கண்காட்சிகள் நடத்திவிட்டு குப்பையாகப் போட்டுவிட்டுப் போகிறார்கள். சிறு வயதிலேயே வீட்டிலும் பள்ளியிலும் போதிக்க வேண்டும் பெரியவர்களும் உதாரணமாக இருந்தால் நாளைய சமுதாயம் நன்றாக வரும்.

  உங்கள் பழைய பதிவுகளையும் இடையில் பார்த்தேன் ஆதி. கருத்துதான் போட முடியலை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் பழக்கம் சிறுவயது முதலே பழக்கப்பட வேண்டும்.

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 7. வாசகம் சிறப்பு.

  திருவிழா படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 8. தேரோட்டம், அது சம்பந்தமான சிந்தனை, படங்கள் என பதிவு நன்றாக இருந்தது. தேரோட்டம் முடிந்த மறுநாள் நகரெங்கும் குப்பையா இல்லை சுத்தம் செய்துவிட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுநாள் செய்திருப்பார்கள் . பாவம்! அவர்களுக்கு கூடுதல் வேலை தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 9. தேரையொட்டி அன்னதானம் நல்லது. ஆனால் தேவையில்லாதவர்களுக்கும், வீணாகவும் கணிசமான உணவு சென்றுவிடுகிறது. காஞ்சீபு கருட சேவையின்போது தெருவில் லட்டுகள் மிதிபடும். இலவச உணவோடு வருவதால் அதன் அருமை தெரியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். தேவைப்படுபவர்கள் வாங்கி உண்ணலாம்! கிடைக்கிறதே என்பதற்காக வாங்கி கீழே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 10. அரங்கின் விருந்தான தேர்காட்சிகள் கண்டு வணங்கினோம்.

  மாலை கடை உலாவும் நிறைந்த படங்களுடன் கண்டு சுற்றி வந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 11. ஸ்ரீரங்கத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ஜி.

   நீக்கு
 12. இந்த வருடம் ஸ்ரீரெங்கத்திலிருந்து அரங்கனை காணும் பாக்கியம் கிடைத்தது ....ஆஹா மகிழ்வான நேரங்கள்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....