அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பழையன கழிதலும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் சமயத்தில் நான் தலைநகர் தில்லியில் இல்லாமல் திருவரங்கத்தில் இருக்கிறேன். எங்களுக்கு பொங்கல் பண்டிகை இல்லை என்றாலும், ஊரெங்கும் பொங்கல் விழாவிற்கான சிறப்பாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும், மஞ்சள் கொத்து, கரும்பு, புத்தாடைகளுக்கான விளம்பரங்கள், வண்ண மயமான கோலங்கள், விழா கொண்டாட்டங்கள் என்று பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதியில் இருக்கும் தனியார் அலுவலக சிப்பந்திகள், ஊழியர்கள் என பார்க்கும் அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. நேற்றைக்கு சில அலுவலக/வியாபார தலங்களின் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போட்டு, கொண்டாட்டங்கள் நடந்ததையும் பார்க்க முடிந்தது.
பொதுவாகவே வடக்கில் பொங்கல் விழா நம் ஊர் போல இருக்காது. வேறு வகைகளில் கொண்டாட்டங்கள் இருக்கும் என்றாலும், நம் ஊரில் இருப்பது போல வருமா என்ன? அங்கேயும் நாங்கள் இருந்த பகுதியில் சில வருடங்கள் பொங்கல் விழாக்கள் நடத்தி, நடனம், இசை, போட்டிகள் என நாள் முழுவதும் கொண்டாடியிருக்கிறோம். அது ஒரு கனாக்காலம். ஒரு மாதத்திற்கும் மேல் அதற்கான தயாரிப்பு முஸ்தீபுகளில் காலம் போகும் என்றால், பொங்கல் சமயங்களில் அடிக்கும் குளிரில் வீட்டை விட்டு வெளியே செல்வதே கஷ்டமாக இருக்கும் என்றாலும், அனைவரும் நம் ஊர் வழக்கப்படி வீட்டில் பொங்கல் கொண்டாடி மகிழ்வோம். அதற்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை தான் எங்கள் பொங்கல் விழா நடத்துவோம். ஒரு நாள் முழுவதும் மிகவும் சிறப்பான முறையில் பொங்கல் விழா கொண்டாடி இருக்கிறோம். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு வழக்கம்போல, சில பிரச்சனைகளால் அந்த விழா எடுப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இப்படியான விழாக்கள் நடத்துவதில் இருக்கும் சிரமங்கள் அதிகமே என்பதை விழாக்கள் நடத்தியிருப்பவர்கள் நன்கு உணர முடியும். பார்வையாளர்களுக்கு அதில் இருக்கும் கஷ்டங்கள் புரியாது என்பதும் நிதர்சனம்.
இங்கே கூட சில விழாக்கள் சமயத்தில் நான் அமைதியாக இருப்பதைப் பார்க்கும் சிலர் என்னிடம் கேட்பது வழக்கம் - ”என்ன சார் ஒண்ணுமே சொல்லலையே?” எனும்போது கூடுதலாக ஒரு புன்னகை புரிந்து அப்படியே நகர்ந்து விடுவேன். இதையே இப்போதைய வழக்கமாக வைத்திருக்கிறேன். எதிலும் அதிக ஈடுபாடு வைத்துக் கொண்டிருப்பதை தவிர்ப்பதே நல்லது என்ற புரிதல் தான் அதற்கான காரணம். நாம் உண்டு நம் வேலை உண்டு என இருப்பதே சரியான வழியாக இங்கே இருக்கிறது. பக்கத்து கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழா ஒன்றிற்குச் சென்று வரலாம் என்ற எண்ணம் இருக்கிறது. முடிந்தால் அங்கே சென்று வந்து, அங்கே கிடைத்த அனுபவங்களையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்போதைக்கு, நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், எங்களது மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்… நல்லதே நடக்கட்டும்… நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்
திருவரங்கம்
15 ஜனவரி 2026







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....