செவ்வாய், 27 ஜனவரி, 2026

கதம்பம் - மஞ்சள் நிற விழா - No spend January - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட காஷ்மீர் - கண்டதும் காணாததும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மஞ்சள் நிற விழா - 23 ஜனவரி 2026 : 



வசந்த பஞ்சமி என்றழைக்கப்படும் இன்றைய நாளின் சிறப்பாக மஞ்சள் நிறத்தை வடக்கில் சொல்வார்கள்! குளிர்காலத்திற்கு விடைகொடுத்து  வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது! வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதி தேவியை ஆராதனை செய்வார்கள்!


நான் டெல்லியில் வசித்த நாட்களில் மகளின் பள்ளியில் அன்றைய தினம் மஞ்சள் நிற உடையுடுத்தி வரச் சொல்லுவார்கள்! மஞ்சள் நிறத்தில் உணவு கொண்டு வரச் சொல்லுவார்கள்! கைகளில் மஞ்சள் நிற மலர்களை வைத்துக் கொள்ளச் சொல்லுவார்கள்! வசந்த பஞ்சமி என்றால் மகள் பள்ளிக்கு இப்படிச் சென்ற பசுமையான நினைவுகள் தான் எப்போதும் நினைவில் வரும்!


ஆனால்!! கடந்த இரண்டு நாட்களாக வானொலி வழியே நான் கேட்கும் விளம்பரத்தில் எல்லாம் ஜனவரி 23  ‘மஞ்சள் நிற விழா! மஞ்சள் நிற விழா! அன்றைய தினம் மஞ்சள் நிறம் மிகவும் மங்களகரமானதாக போற்றப்படுகிறது! அன்று மஞ்சள் நிறத்தைக் கொண்ட தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பானது! நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் என்று flat 40% ஆஃபர்!! என்று கூவிக் கூவி ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!


வெண்மை நிறத்தை சிறப்பிக்கும் அட்சய திருதியை நாளை வியாபார உலகில் வேறுவிதமாக மாற்றப்பட்டுள்ளதைப் போல இன்றைய மஞ்சள் நிறத்தை சிறப்பிக்கும் இந்த நாளையும் மஞ்சள் நிற விழா என்ற பெயரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்! இதுவரை வடக்கில் மட்டுமே இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது!


தங்கமும், வெள்ளியும் ஒவ்வொரு நாளும் விண்ணைமுட்டும் விதமாக விலை ஏறிக் கொண்டிருக்கும் நாட்களில் இப்படி மஞ்சள் நிற ஆஃபர், வெள்ளை நிற ஆஃபர் என்று நொடிக்கொரு முறை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் சாமான்ய மக்களின் மனநிலை எப்படி இருக்கும்! ஆடம்பரத்திற்காக வாங்குபவர்கள் ஒருபுறம் என்றால் அவசியத்திற்கு வாங்குபவர்கள் வாங்கித் தானே ஆக வேண்டும்!


******


No spend January - 23 ஜனவரி 2026:



வெளிநாடுகளில் வருடத்தின் முதல் மாதமான இந்த ஜனவரியில் இளைஞர்கள் அனாவசியமாக செலவு செய்வதை நிறுத்தும் விதமாக ‘No spend January’ என்ற ஹேஷ்டேகை உருவாக்கி அதை பின்பற்றுகிறார்களாம்! ரீல்ஸ் மோகத்தில் உயிரையே பறிக்கும் இன்றைய சூழலில் இதுபோன்ற நல்ல விஷயங்களை இன்றைய தலைமுறையினர் பின்பற்ற நிச்சயம் முயலலாம்! அதை ட்ரெண்டிங்கும் ஆக்கலாம்!


செலவுகளை குறைக்கும் விதமாக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இதே பிரபஞ்சத்தில் ஆன்மீக வழியில் போற்றப்பட வேண்டிய ஒரு நாளை வியாபார உலகின் மாயையில் வேறுவிதமாக கொண்டாடப்படுகிறது! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

27 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....