புதன், 28 ஜனவரி, 2026

நடை நல்லது - பூக்களும், இயற்கையின் கொடையும் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




காலை நேரத்தில் புறப்பட்டா தான் வியாபாரம் நடக்கும்... 
சம்பாதிச்சா தானே இன்றைக்கு பொங்கி சாப்பிட முடியும்....

காலை நேரங்களில் இங்கே நல்ல பனி.  போதாதற்கு நேற்றைய இரவு மழையும் கொசுத் தூறலாய்! ஞாயிறு காலை 04.45 மணிக்கே விழித்து விட்டேன்.  கொஞ்சம் நேரம் நண்பர்களின் வலைப்பூக்களை ஸ்வாசித்து வந்தாயிற்று.  அதன் பிறகு கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் என்று சொல்ல, இல்லத்தரசி நானும் வருகிறேன் என்று சொல்ல, ஒரு வழியாக ஏழு மணிக்கு சற்று முன்னர் வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டோம்.  மேலூர் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.  காலை நேரப் பனி, இரவின் மழை என இரண்டும் கூட்டு சேர்ந்து தங்களது வேலையைக் காண்பித்திருக்க, ரம்மியமாக இருந்தது சீதோஷ்ணம்.  பொறுமையாக இயற்கையை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம்.  காலை வேளை நமக்கு நடை என்றால், சில உழைப்பாளிகளுக்கு வேலைக்குச் செல்லும் நேரமாக இருந்தது.  பாத்திரம் விற்பனை செய்யும் நபர் அவரது வண்டியில் விதம் விதமான அலுமினிய பாத்திரங்களுடன் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றார்.  வீட்டு வேலை/கட்டிட வேலை செய்யும் பெண்கள் தங்கள் கிராமத்திலிருந்து நடந்தே எதிரே வந்து கொண்டிருந்தார்கள்.  



குரைத்துக் குரைத்துக் களைத்தேன்.....
இது ஓய்வுக்கான நேரம்....
சாலையோரச் செல்லம் ஒன்று.....



பயனுள்ள வரை தான் கவனிப்பு...

பயனில்லை எனில் குப்பை மேட்டில் தான்...



நான் தான் லாலிபாப் க்ளைம்பர்....


தேர் கொடுக்க பாரியில்லை......
மின்கம்பமே எனக்குத் தேர் ஆனது.....
படர்ந்து இருந்த கொடி......


நான் பூவா...  இல்லை காயா? சொல்லுங்களேன்...


க்ருஷ்ண கமலம்....


எனக்குப் பின்னே யார்? 

என்று கேட்கிறது இந்தக் கொடி....


ஒற்றைப் பனையும் கீழே கொடியும்...


பலா - விரைவில் என்னைப் பறிக்கலாம்.... சுவைக்கலாம்...


கொய்யாத் தோப்பும், நடுநடுவே நந்தியாவட்டைச் செடியும்...


வாழைத் தோப்பு...


பாகல் கொடி...


எனக்கும் இங்கே இடம் உண்டு...


ஏதோ ஒரு உயிரினத்தின் உழைப்பில் உருவான கலைவடிவம்....


மொட்டும் மலரும்....


எனக்கும் வியர்க்கும் என்று சொல்கிறதோ இந்த மலர்....


விருட்சிப் பூக்கள் தோட்டம் உருவாக்கத்தில்...


விளையாடலாம் வாங்க...  


நடக்கும் சாலை....


என் இனமடா நீ என்று கசகசா சொல்லுமோ?


அழகான எனக்குப் பெயர் Devil's Claw! 


பனித்துளி...  குளிருது, கொஞ்சம் துடைச்சு விடுங்களேன்...


பச்சையின் நடுவே அழகிய பூ...  சிறிது என்றாலும் அழகு...


எருக்கை இலையும் மொட்டும்...
(படம் எடுத்த அன்று ரதசப்தமி...)
வண்டியில் வந்து கத்திரி கொண்டு என்னை வெட்டினார் ஒருவர்....
பால் வெள்ளையாய் கண்ணீர் விட்டேன் நான்....

விதம் விதமான பூக்களின் நல்மணம், மண்ணின் மணம், மரங்களிலிருந்து வீசும் ஒரு வித மணம் என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சுக்காற்றோடு காற்றாய் நாசியின் உள்ளே செல்ல, மிகவும் சுகமாக இருந்தது.  மலர்களின் மீது பனித்துளிகள் பார்க்கும்போதே அப்படி ஒரு அழகு.  சில பூக்கள் என்ன வகை, அவற்றின் பெயர் என்ன, எதற்கு பயன்படும் என்கிற தகவல்கள் எதுவுமே தெரியாது என்றால் கூட அந்தப் பூக்களை, இலைகளை, செடி-கொடிகளை, அழகுக்காகவே ரசிக்க முடியும் என்பது தான் இயற்கையின் பெரும்குணம்.  ஒவ்வொரு பூக்களையும் பார்க்கும்போது இது என்ன பூ என்கிற சம்பாஷணைகள் எங்களுக்குள்.  Photo எடுத்துக் கொண்டு, Google Lens வழி கேட்டால் தகவல்கள் சொல்லுமே என்றபடி இல்லத்தரசி பக்கத்திலேயே! அதனால் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டே வந்தேன்.  


ஒரு பூ மிக அழகாக இருந்தது.  பூ அழகாக இருந்தாலும், அதற்கான பெயர் தெரியாது! வீட்டிற்கு வந்த பிறகு Google Lens பயன்படுத்தி பெயர் கேட்டால் சொல்கிறது - Devil’s Claw அல்லது Tiger’s Claw என்கிறது.  அழகான பூவிற்கு பெயர் என்னவோ இப்படி பயமுறுத்தும் விதமாக.  


இன்னுமொரு பூ - மஞ்சள் வண்ணத்தில் நடுவே ஒரு சிவப்புத் திட்டுடன் அழகாய்.  பெயர் என்ன என்றால் Argemone mexicana Mexican Prickly Poppy or Flowering Thistle என்கிறது Google.  தமிழில் கேட்டால் கசகசா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இனம் என்கிறது! என் இனமடா நீ என்று கசகசா சொல்லுமோ?



நீங்க மட்டும் தான் நடப்பீங்களோ...  
நாங்களும் நடப்போம்ல!


பார்த்த அனைத்தும் சாலையோரப் பூக்கள், அதன் பயன் குறித்து தெரிந்து கொள்ளாமலே நாமும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்று பேசிக் கொண்டே சென்றோம்.  அம்மா இருக்கும்போது அவர் இப்படியான செடி-கொடிகளைப் பார்த்தால் இது இது இந்தச் செடி, இப்படிப் பயன்படும் என்றெல்லாம் சொல்லுவார்.  ஆனால் இப்போது அவர் சொன்னது பலவும் நினைவில் இல்லை.  ஏதோ பசுமையாக இருக்கிறது என்கிற நிலையிலேயே எனது அறிவு இருக்கிறது.  பார்க்க அழகாக இருக்கிறதே என்றால் அது நமக்குப் பயனில்லாததாகவும், பார்க்கவே நன்றாக இல்லையென்றாலும் அது பயனுள்ளதாகவும் இருக்கக் கூடும்.  எத்தனை எத்தனை செடி, கொடி வகைகள் - இயற்கை எப்போதுமே நம்மை அதிசயப்படுத்திக் கொண்டே இருக்கிறது.  


சிறு சிறு உருண்டைகளாக சிவப்பு வண்ணத்தில் இருக்கும் காய் ஒன்று - நடுநடுவே வெள்ளைக் கோடு - அந்தப் படத்தை எடுத்து, Google இடம் கேட்டால் அதன் பெயர் Lollipop Climber என்கிறது! என்ன ஒரு பெயர் பாருங்கள்! 


வாழைத் தோட்டம், விருட்சிப் பூத் தோட்டம், கொய்யாத் தோப்பு அதன் நடுவே இருக்கும் நந்தியாவட்டை செடிகள் என பார்க்கும் இடங்களில் பசுமை அழகை இயற்கை நிறைத்து வைத்திருந்தாலும், இது போல பசுமையுடன் இருந்த இடங்கள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிற விஷயத்தினையும் நடையின் போது பார்க்க முடிந்தது.  இன்னும் கொஞ்சம் வருடங்களில் இந்தப் பசுமை முழுவதும் அழிந்து/அழிக்கப்பட்டு காங்க்ரீட் காடுகளாக இந்தப் பகுதி உருவாகும் என்கிற நிதர்சனமும் மனதில் ஒரு பக்கம் பயமுறுத்துகிறது.  எத்தனை எத்தனை குடியிருப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன - அத்தனையும் வாங்குவதற்கு மக்களும் இருக்கிறார்கள்!  வியாபாரம் நடக்கிறது என்பதால் தானே விற்பனையும் தொடர்ந்து நடக்கிறது.  இன்றைய காலை நடையின் போது கூட வீட்டு மனைகள் விற்பனை குறித்த ஒரு பதாகை - சொத்துத் திருவிழா என்கிற பெயரில் பார்த்தேன் - அது குறித்து தனியாக எழுதுகிறேன்.


வழியில் பார்த்த செல்லங்கள், கேட்பாரின்றி/உபயோகமின்றி  கிடக்கும் ஆட்டோ ஒன்று, வழியில் பார்த்த குழந்தைகளுக்கான Sports Turf என எல்லாவற்றையும் பார்த்தும் படம் எடுத்தும் வீடு திரும்பினோம். ஞாயிறு நடையில் எடுத்த படங்களும், காணொளியும் இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன். இப்படியாக ஞாயிறின் நடை நல்லவிதமாக இருந்தது. மீண்டும் வேறொரு நடை நல்லது பதிவுடன் உங்களனைவரையும் சந்திக்கும் வரை….


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....