அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
காலை நேரங்களில் இங்கே நல்ல பனி. போதாதற்கு நேற்றைய இரவு மழையும் கொசுத் தூறலாய்! ஞாயிறு காலை 04.45 மணிக்கே விழித்து விட்டேன். கொஞ்சம் நேரம் நண்பர்களின் வலைப்பூக்களை ஸ்வாசித்து வந்தாயிற்று. அதன் பிறகு கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் என்று சொல்ல, இல்லத்தரசி நானும் வருகிறேன் என்று சொல்ல, ஒரு வழியாக ஏழு மணிக்கு சற்று முன்னர் வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டோம். மேலூர் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். காலை நேரப் பனி, இரவின் மழை என இரண்டும் கூட்டு சேர்ந்து தங்களது வேலையைக் காண்பித்திருக்க, ரம்மியமாக இருந்தது சீதோஷ்ணம். பொறுமையாக இயற்கையை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம். காலை வேளை நமக்கு நடை என்றால், சில உழைப்பாளிகளுக்கு வேலைக்குச் செல்லும் நேரமாக இருந்தது. பாத்திரம் விற்பனை செய்யும் நபர் அவரது வண்டியில் விதம் விதமான அலுமினிய பாத்திரங்களுடன் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றார். வீட்டு வேலை/கட்டிட வேலை செய்யும் பெண்கள் தங்கள் கிராமத்திலிருந்து நடந்தே எதிரே வந்து கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான பூக்களின் நல்மணம், மண்ணின் மணம், மரங்களிலிருந்து வீசும் ஒரு வித மணம் என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சுக்காற்றோடு காற்றாய் நாசியின் உள்ளே செல்ல, மிகவும் சுகமாக இருந்தது. மலர்களின் மீது பனித்துளிகள் பார்க்கும்போதே அப்படி ஒரு அழகு. சில பூக்கள் என்ன வகை, அவற்றின் பெயர் என்ன, எதற்கு பயன்படும் என்கிற தகவல்கள் எதுவுமே தெரியாது என்றால் கூட அந்தப் பூக்களை, இலைகளை, செடி-கொடிகளை, அழகுக்காகவே ரசிக்க முடியும் என்பது தான் இயற்கையின் பெரும்குணம். ஒவ்வொரு பூக்களையும் பார்க்கும்போது இது என்ன பூ என்கிற சம்பாஷணைகள் எங்களுக்குள். Photo எடுத்துக் கொண்டு, Google Lens வழி கேட்டால் தகவல்கள் சொல்லுமே என்றபடி இல்லத்தரசி பக்கத்திலேயே! அதனால் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டே வந்தேன்.
ஒரு பூ மிக அழகாக இருந்தது. பூ அழகாக இருந்தாலும், அதற்கான பெயர் தெரியாது! வீட்டிற்கு வந்த பிறகு Google Lens பயன்படுத்தி பெயர் கேட்டால் சொல்கிறது - Devil’s Claw அல்லது Tiger’s Claw என்கிறது. அழகான பூவிற்கு பெயர் என்னவோ இப்படி பயமுறுத்தும் விதமாக.
இன்னுமொரு பூ - மஞ்சள் வண்ணத்தில் நடுவே ஒரு சிவப்புத் திட்டுடன் அழகாய். பெயர் என்ன என்றால் Argemone mexicana Mexican Prickly Poppy or Flowering Thistle என்கிறது Google. தமிழில் கேட்டால் கசகசா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இனம் என்கிறது! என் இனமடா நீ என்று கசகசா சொல்லுமோ?
பார்த்த அனைத்தும் சாலையோரப் பூக்கள், அதன் பயன் குறித்து தெரிந்து கொள்ளாமலே நாமும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்று பேசிக் கொண்டே சென்றோம். அம்மா இருக்கும்போது அவர் இப்படியான செடி-கொடிகளைப் பார்த்தால் இது இது இந்தச் செடி, இப்படிப் பயன்படும் என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் இப்போது அவர் சொன்னது பலவும் நினைவில் இல்லை. ஏதோ பசுமையாக இருக்கிறது என்கிற நிலையிலேயே எனது அறிவு இருக்கிறது. பார்க்க அழகாக இருக்கிறதே என்றால் அது நமக்குப் பயனில்லாததாகவும், பார்க்கவே நன்றாக இல்லையென்றாலும் அது பயனுள்ளதாகவும் இருக்கக் கூடும். எத்தனை எத்தனை செடி, கொடி வகைகள் - இயற்கை எப்போதுமே நம்மை அதிசயப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சிறு சிறு உருண்டைகளாக சிவப்பு வண்ணத்தில் இருக்கும் காய் ஒன்று - நடுநடுவே வெள்ளைக் கோடு - அந்தப் படத்தை எடுத்து, Google இடம் கேட்டால் அதன் பெயர் Lollipop Climber என்கிறது! என்ன ஒரு பெயர் பாருங்கள்!
வாழைத் தோட்டம், விருட்சிப் பூத் தோட்டம், கொய்யாத் தோப்பு அதன் நடுவே இருக்கும் நந்தியாவட்டை செடிகள் என பார்க்கும் இடங்களில் பசுமை அழகை இயற்கை நிறைத்து வைத்திருந்தாலும், இது போல பசுமையுடன் இருந்த இடங்கள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிற விஷயத்தினையும் நடையின் போது பார்க்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் வருடங்களில் இந்தப் பசுமை முழுவதும் அழிந்து/அழிக்கப்பட்டு காங்க்ரீட் காடுகளாக இந்தப் பகுதி உருவாகும் என்கிற நிதர்சனமும் மனதில் ஒரு பக்கம் பயமுறுத்துகிறது. எத்தனை எத்தனை குடியிருப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன - அத்தனையும் வாங்குவதற்கு மக்களும் இருக்கிறார்கள்! வியாபாரம் நடக்கிறது என்பதால் தானே விற்பனையும் தொடர்ந்து நடக்கிறது. இன்றைய காலை நடையின் போது கூட வீட்டு மனைகள் விற்பனை குறித்த ஒரு பதாகை - சொத்துத் திருவிழா என்கிற பெயரில் பார்த்தேன் - அது குறித்து தனியாக எழுதுகிறேன்.
வழியில் பார்த்த செல்லங்கள், கேட்பாரின்றி/உபயோகமின்றி கிடக்கும் ஆட்டோ ஒன்று, வழியில் பார்த்த குழந்தைகளுக்கான Sports Turf என எல்லாவற்றையும் பார்த்தும் படம் எடுத்தும் வீடு திரும்பினோம். ஞாயிறு நடையில் எடுத்த படங்களும், காணொளியும் இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன். இப்படியாக ஞாயிறின் நடை நல்லவிதமாக இருந்தது. மீண்டும் வேறொரு நடை நல்லது பதிவுடன் உங்களனைவரையும் சந்திக்கும் வரை….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
28 ஜனவரி 2026


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

படங்கள் யாவற்றையும் ரசித்தேன். மிக ரசித்தேன். கசகசா பூ ரொம்ப அழகு. செடியை பார்த்தால் ஆமணக்கு மாதிரி இருக்கிறது. பூ கசகசா பூ! அது மட்டும் நான் இப்போதுதான் பார்க்கிறேன். மற்ற பூக்கள் பார்த்திருக்கிறேன், படம் பிடித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பூக்களின் படங்கள், அதன்மேல் பனித்துளிகள் என்று படங்களைப் பார்க்கும்போது மனதில் ஒரு பரவசம் வருகிறது. சில பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. அதிகாலை நடை எப்போதுமே பரவசம் தரும்.
பதிலளிநீக்குஆரம்ப காலங்களில் காலை ஐந்தேகால் மணிக்கு மதுரை பாஸ்ட்டாண்டிலிருந்து பஸ் ஏறி வத்ராப், சாத்தூர் என்று பணிக்கு செல்லும் காலங்களில் அந்த அதிகாலையை ரசித்தது நினைவுக்கு வருகிறது. ஓய்வு பெற்றபின் சென்ற வருடம் வரை காலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு நடைப்பயிற்சிக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் தொடர்வதில்லை எதையும்!
நடக்கும் நினைவுகள் என்று முன்னர் எங்கள் பிளாக்கில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்தேன்!
அதிகாலை நடை தான் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆனாலும் ஏதேதோ தடங்கல்கள் வந்துவிடுகின்றன. அதனால் நடுநடுவே இடைவெளி வந்து விடுகிறது. முடிந்தபோதெல்லாம் நடப்போம் என்று நடந்து கொண்டிருக்கிறேன் (றோம்!).
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
படங்கள் எல்லாம் ரொம்ப ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஎல்லாப் பூக்களும் காய்களும் பார்த்திருக்கிறென் ஜி. நானும் இப்படி எடுத்து கூகுள் லென்ஸில் போட்டுப் பார்ப்பதுதான். சிலவற்றின் மருத்துவ குணமும் தெரியவரும்.
என்ன இருந்தாலும் காலை நடைப்பயிற்சி மிக மிகச் சிறந்தது. என்னதான் மாலையில் போனாலும் காலை நேரப் பயிற்சிக்கு ஈடு கிடையாது.
முன்பு காலையில் போய்க்கொண்டிருந்தேன் இப்ப அது முடியாததாக இருக்கிறது. அதனால் மாலையில்
கீதா
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஆமாம் இப்படி கூகுள் லென்ஸ் போட்டு பார்க்கும்போது அந்தப் பூக்கள், இலைகளின் மருத்துவ குணமும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் நாமாகவே அவற்றை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால் எடுத்துக் கொள்வதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
மயில்கள் காணொளி ஆஹா!!!! என்ன அழகு அதுவும் குட்டீஸ் ஓடிப் போய் அம்மா? வோடு சேர்ந்துக்குது பாருங்க!
பதிலளிநீக்குநடக்கும் சாலை படத்தில் தூரத்தில் இடப்புறம் தெரிவது குளமோ?
கீதா
மயில்கள் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதூரத்தில் இடப்புறம் தெரிவது குளமல்ல! இந்தப் பகுதியில் வயல்களும் தோப்புகளும் மட்டுமே. தற்போது அவை அழிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
வாசகம் அருமை. நடைபயணத்தில் கண்ட பூக்கள், கொடிகள், வியாபாரம் செய்ய போகும் வண்டி அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபனித்துளியோடு பூ அழகு.
நீங்க மட்டும் தான் நடப்பீங்களோ...
நாங்களும் நடப்போம்ல!//
உங்கள் குடும்பம் போலவே மூன்று பேராக நடந்து போகிறார்களே!
வாசகம், படங்கள் மற்றும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
//ஏதோ ஒரு உயிரினத்தின் உழைப்பில் உருவான கலைவடிவம்..//..
பதிலளிநீக்குஅட்லாண்டாவில் ஹலோவின் சமயம் மரம் செடி கொடிகளில் இப்படி இயற்கையாக சிலத்திகள் கூடு கட்டி இருக்கும் செயற்கையாக இவர்கள் வாங்கி தொங்க விடவும் செய்வார்கள்.
மேலதிகத் தகவலுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் எல்லாம் அழகாக உள்ளது அதிலும் பனித்துளியுடன் ஒரு சில பூக்கள் மட்டும் பார்த்து இருக்கிறேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜயலக்ஷ்மி.
நீக்கு