திங்கள், 19 ஜனவரி, 2026

சிறப்பு எதிரி - சுபா - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது சுபா அவர்கள் எழுதிய சிறப்பு எதிரி என்கிற நூல் குறித்து தான்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை எழுத்தாளர்களான சுபா அவர்களின் கதை ஒன்றினை படிக்கிறேன்.  பல வருடங்களுக்கு முன்னர் இப்படியான கதைகள் ரசித்துப் படித்திருக்கிறேன் என்றாலும் அதன் பின்னர் இது போன்ற த்ரில்லர் கதைகளில் இருந்த ஆர்வம் மங்கிவிட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக அது போன்ற எழுத்துக்களை தவிர்த்து விட்டேன்.  ஆனாலும் ஏதோ ஒரு புத்தகம் தேடும்போது இந்த மின்னூல் கண்ணில் பட தரவிறக்கம் செய்து படித்து விட்டேன்.  குறைவான பக்கங்கள், விறுவிறுவென செல்லும் கதைப் போக்கு போன்றவை இது போன்ற கதைகளுக்கு ஒரு பக்கபலம்.  இந்தக் கதையும் அப்படியே.  மொத்தமே 79 பக்கங்கள் தான் என்பதால் சில மணித்துளிகளில் படித்து விடலாம்.  அமேசான் பக்கத்தில் ரூபாய் 99-க்குக் கிடைக்கிறது.  மின்புத்தகம் தான். Kindle Unlimited Subscription இருந்தால், இந்த மின்னூலுக்கென தனியாக காசு கட்டத் தேவையிருக்காது. சரி கதைக்கு வருவோம்…. கதை இப்படித்தான் தொடங்குகிறது….


அகல்யா ஜன்னல் வெளிச்சத்தில் கண்ணாடியில் பார்த்தாள்.  குங்குமம் வைத்துக் கொண்டாள். முதுகு ரவிக்கையை நனைக்கும் ஈரக் கூந்தலை முன்னே எடுத்து டவலால் ஒற்றிக் கொண்டாள். கடவுள் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்த இடத்தில், பிறையில் இருந்த பித்தளை விளக்கை ஏற்றினாள். கற்பூரம் கொளுத்தி, கடவுள்களிடம் கண்மூடி வேண்டிக் கொண்டாள்.  கழுத்துத் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். 


பின் கதவு திறந்து துளசி மாடத்தினருகே வந்தாள். கண்களில் ஒற்றிக்கொண்டு சுற்றி வந்தாள். விழுந்து நமஸ்கரித்தாள். 


‘கடவுள்களே, சீக்கிரம் என் கணவனை விடுதலை செய்யுங்கள்’ என்று வேண்டிக் கொண்டாள்.


இப்படி முதல் அத்தியாயம் தொடங்கும்போதே அகல்யாவின் கணவன் ஏன் சிறையிலிருக்கிறான் என்ற கேள்வியும் அதன் பதிலை தெரிந்து கொள்ளவேனும் கதையை முழுவதும் உடனடியாக படித்து விடவேண்டும் என்ற ஆவலும் நமக்குள் வந்து ஆசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது அல்லவா…  அதனை மேலும் அதிகரிக்க, முதல் அத்தியாயத்தில் இப்படியும் சில வரிகள்….


“சற்றே எரிச்சலோடு போய் கதவைத் திறந்தாள் அகல்யா”. வெளியே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்ததும், கால்களுக்கடியில் பூமி வெடித்தது போல் இருந்தது.  “நீயா?” என்றாள்.  வெறும் காற்றாகக் குரல். வார்த்தைக்கு உயிர் வரவில்லை!


அப்படி யார் வந்திருப்பார்? வந்தவனுக்கும் அகல்யாவிற்கும் என்ன சம்பந்தம்?  அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி விடுவது என்று தொடர்ந்து படிக்கத் தூண்டும் - இது போன்ற கதைகளுக்கென்றே உள்ள ஒரு தூண்டில்….


நாமும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்போம்.  தொடர்ந்து வரும் வரிகளும் அப்படியிருந்தால்…  - “அகல்யா உதடுகளை ஈரம் பண்ணிக்கொண்டாள். அவனுடைய நீளமான முகமும், நெற்றியில் பாதியை மறைத்த தலைமுடியும், கத்தரித்த அளவான மீசையும், சட்டைக்குள் திடமாகத் திரண்டு நின்ற மார்பும், அகன்ற தோள்களும், உதடுகளில் வசீகரச் சிரிப்பும் எத்தனை நாட்கள் அவள் கனவுகளை வருத்தியிருக்கின்றன.  ஆனால் இன்றைக்கு அவனைப் பார்த்தபோது, சாப்பாட்டுத் தட்டில் ஊர்ந்து வந்து விட்ட மண் புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள்.”


வாழ்க்கையில் ஏமாந்து குழந்தையுடன் வந்தவளுக்கு வாழ்வு தருகிறான் கதையின் நாயகன்.  ஆனால் ஒரு பிரச்சனையில் அவன் கொலை செய்து விட அதன் பிறகு நடப்பவை விறுவிறுவெனச் சொல்லிச் செல்கிறார்கள் கதையில்.  கதையில் இருக்கும் விறுவிறுப்பு தான் இது போன்ற குறுநாவல்களுக்கான பிரதான தேவை என்பதை மிகவும் நன்கு உணர்ந்த ஆசிரியர்கள் சுபா.  அவர்கள் இந்த குறுநாவலிலும் அதனை சரியாக பயன்படுத்தி படிக்கும் வாசகர்களை தங்களது நூலினை கீழே வைக்காமல் படிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.  ஒரு மாலை நேரத்தில் தரவிறக்கம் செய்து சில மணி நேரத்திற்குள்ளாகவே படித்து முடித்த குறு நாவல் இது.  கதையின் போக்கு எப்படி, என்ன முடிவு என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த சிறப்பு எதிரி எனும் நூலை வாங்கி படித்துப் பாருங்களேன்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

19 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....