ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

வாசிப்பனுபவம் - உப்புக்கணக்கு - வித்யா சுப்ரமணியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து; அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவித பயங்களும் அகன்றுவிடும்.

 

*******



சமீபத்தில் படித்த ஒரு மின்னூல் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய உப்புக்கணக்கு. அந்த நூல் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

வெளிநாட்டுக்குச் செல்ல விசா கிடைக்கும் வரை தன் தாய்வழி தாத்தா பாட்டிக்களுடன் சில நாட்கள் வசிக்க ஆசைப்பட்டு சென்னையின் மயிலைக்கு வருகிறான் அனந்து என்கிற அனந்தராமன்! அங்கு  சந்தித்த தன்னுடைய 95 வயது கொள்ளுத் தாத்தா கல்யாணராமன் அவனுக்கு ஒரு உதாரண மனிதராய் தென்படுகிறார்!

 

கூட்டுக் குடும்பமாக நான்கு தலைமுறைகள் சேர்ந்து வசித்துக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே இவனிடம் ஆசையாக பழகுகிறார்கள்! சத்யாக்கிரகியான கொள்ளுத் தாத்தா இந்த வயதிலும் செய்து வரும் யோகாசனங்களும், கடைபிடித்து வரும் வாழ்க்கை முறையும் அவரின் பரந்து விரிந்த சிந்தனைகளும் அனந்துவை வியப்பில் ஆழ்த்துகிறது! அவரிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்!

 

பதினாறு வயதில் தனக்கு முடிவு செய்யப்பட்ட கல்யாணத்திலிருந்து தப்பிக்க எண்ணிய கல்யாணம் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்! ராஜாஜி அவர்கள் மேற்கொண்ட வேதாரண்யம் நோக்கிய உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்கிறார்! அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் அனுபவங்களும் அதன் பின் அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுமாகச் செல்கிறது கதை!

 

நிஜங்களும் புனைவும் பின்னிப் பிணைந்து செல்லும் உப்பு சத்தியாக்கிரக பாதையில் அவர்கள் அன்றைய நாளில் அனுபவித்த துயரங்களை நம் கண்முன்னே நிறுத்திப் பார்க்க வைக்கும் எழுத்து! அங்கு நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கான வாழ்வியல் பாடங்களை போதித்துச் செல்லும் நடை!

 

மயிலையின் மாடவீதியின் பரந்து விரிந்த அழகு! அங்கு நடைபெறும் அறுபத்து மூவர் உலா! நம் பாரம்பரியத்தை  பறைசாற்றும் கலாச்சாரங்கள்! கூட்டுக் குடும்பத்தின் அழகு! அதில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனப்பாங்கு! என்று நம்மை மயிலைக்கு ஒரு உலாவாக அழைத்துச் சென்று காண்பிக்கிறார் ஆசிரியர்!

 

கல்யாணராமன் என்ற இந்த 95 வயது உதாரண மனிதரின் நிதானமும், பக்குவமும், தியாகமும், உழைப்பும், நம்பிக்கையும் இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்! இன்றும் தனக்கு வேண்டிய இரண்டு கதர்வேட்டி கதர்ச்சட்டைக்கு தானே நூல் நூற்றுக் கொடுக்கும் தன்னம்பிக்கை! எந்த ஒரு விஷயத்தையும் அறிவுரையாக சொல்லி வற்புறுத்தாமல் தானே அவர்களுக்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டும் மனிதராக திகழ்கிறார்!

 

இனி நிச்சயம் மயிலைக்குச் செல்லும் போது நம் கண்கள் அங்கே கோவிலின் உள்ளே தியானம் செய்து கொண்டிருக்கும் கொள்ளுத் தாத்தா கல்யாணராமனைத் தேடும் என்பது உறுதி! அந்த அளவு நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்!

 

இப்படியொரு மாபெரும் சரித்திரத்தை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளியநடையிலும், சுவாரஸ்யமான கதையாகவும் கொண்டு சென்ற எழுத்தாளர் Vidya Subramaniam  மேம் அவர்களின் ‘உப்புக்கணக்கு’ என்ற இந்த நூலை வரும் தலைமுறை அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள  வேண்டும்! 

இந்த நூலை வாசிக்கும் போதே கதையாகவும் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன்! அவளையும் வாசிக்க சொல்லியிருக்கிறேன்! நம் சரித்திரங்கள் காலம் கடந்தும் கொண்டு செல்லப்பட வேண்டியவை! 

 

உப்புக்கணக்கு அச்சுப் புத்தகமாகவும் (ரூபாய் 470/-) மின்நூலாகவும் தற்போது கிடைக்கிறது.  அச்சுப் புத்தகம் மற்றும் மின்னூலாக புஸ்தகா தளத்தில் வாங்க சுட்டி கீழே… அச்சுப் புத்தகம் தற்போது இத்தளத்தில் 25% தள்ளுபடியில் ரூபாய் 352.50-க்கு கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல். புஸ்தகா தளத்தில் உங்களுக்கு கணக்கு இருந்து, மாதச் சந்தாவும் கட்டியிருந்தால் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம். 

 

Uppu Kanakku | Tamil | eBooks online | Vidya Subramaniam (pustaka.co.in)

 

இது தவிர அமேசான் Kindle மாதச் சந்தாதாரராக நீங்கள் இருந்தால் கீழே உள்ள சுட்டி வாழி தரவிறக்கம் செய்தும் இந்நூலை வாசிக்கலாம். 

 

Uppu Kanakku (Tamil Edition) eBook : Vidya Subramaniam: Amazon.in: Kindle Store

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

13 கருத்துகள்:

  1. ஆதி, உங்க விமர்சனத்தின் மூலம் கதை மிகவும் அருமையான கதை என்று தெரிகிறது.

    நானும் ஏதேனும் மின்னூல் தளங்களில் சந்தா கட்டியோ அல்லது வாங்கியோ வாசிக்க ஆசைப்படுவதுண்டு. ஆனால் இதுவரை நிறைவேறவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாகவே இது ஒரு அருமையான நூல்! எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி!

      நீக்கு
  2. முகநூலில் படித்தேன். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் சென்ற, செல்ல முயன்று கொண்டிருக்கும் இளைஞர்கள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்பதை விமர்சனம் சொல்கிறது. கூடவே நம் நாட்டின் அன்றைய வரலாறும் கொள்ளுத்தாத்தாவின் மூலம் சொல்லப்படுகிறது என்பதும். கதைகளை உங்கள் மகளுக்கும் சொல்லியதிலிருந்து இக்கதை உங்கள் மனதிற்கு எந்த அளவு பட்டது என்பதும் தெரிகிறது.

    ஆசிரியரும் சந்தித்திருந்திருப்பார் என்றும் தோன்றுகிறது. மிக்க நன்றி பகிர்விற்கு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். உண்மையிலேயே நம் சரித்திரத்தை இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்! என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் இது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  4. அருமையான விமர்சனம்.

    //எந்த ஒரு விஷயத்தையும் அறிவுரையாக சொல்லி வற்புறுத்தாமல் தானே அவர்களுக்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டும் மனிதராக திகழ்கிறார்!//

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம் தாத்தாவை போல தான் நாம் வாழ வேண்டும்! நேர்மறை எண்ணங்களுடன் உதாரணமாய் இருக்க வேண்டும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தாங்கள் அறிமுகப்படுத்திய கதையின் விமர்சனம் நன்றாக உள்ளது.

    /இனி நிச்சயம் மயிலைக்குச் செல்லும் போது நம் கண்கள் அங்கே கோவிலின் உள்ளே தியானம் செய்து கொண்டிருக்கும் கொள்ளுத் தாத்தா கல்யாணராமனைத் தேடும் என்பது உறுதி! அந்த அளவு நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்!/

    சிறப்பானதொரு கதை விமர்சனத்தை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நேற்றைய பதிவுக்கும், அதன் முந்தைய பதிவுக்கும் நேற்று என்னால் வர இயலவில்லை. கொஞ்சம் வேலைகள். பிறகு படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக வாசியுங்கள்! இது உண்மையிலேயே சிறப்பான கதை தான்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி!

      நீக்கு
  6. உப்புக் கணக்கு பெயரே வித்தியாசமாக உள்ளது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஒவ்வொருவருக்குமே இந்த மண்ணோடு ஒரு உப்புக்கணக்கு உண்டு சார். இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....