வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******


இத்தொடரில் இதுவரை ஐந்து பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


சென்ற பகுதியில் சொன்னது போல, இப்பகுதியில் தொடர்ந்து லான்ஸ்(d)டௌன் பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.


TIP N TOP, லான்ஸ்(d)டௌன்








TIP N TOP பகுதியில் எடுத்த படங்கள் சில...

இதே பெயரில் GMVN தங்குமிடம் இருக்கிறது என்றாலும், அதன் அருகிலேயே, அதே பெயரில் ஒரு View Point-உம் இருக்கிறது. அந்த இடத்திலிருந்து சுற்றிலும் மலைகளையும், இயற்கை எழிலையும் கண்டு ரசிக்க முடியும் என்பதோடு அங்கே சில நிமிடங்கள் அமர்ந்திருந்து இயற்கைச் சூழலில் மூழ்கிப் போகலாம் என்பதும் இந்த இடத்தின் ஒரு ப்ளஸ்! இந்த View Point செல்வதற்கு ஒரு நபருக்கு 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் உண்டு.  எங்கள் குழுவினருக்கான நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு நாங்கள் உள்ளே சென்றோம். இந்த இடத்தில் பலரும் இயற்கைச் சூழலில் நிழற்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தனர்.  எங்கள் குழுவினரும் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.  மொத்தம் பத்து பேர் இருந்த எங்கள் குழுவில் அனைவரையும் சேர்த்து ஒரு சில படங்கள் - மற்ற சுற்றுலா பயணிகள் உதவியுடன் எடுத்துக் கொண்டோம்.  குழுவாக எடுத்துக் கொண்டது இல்லாமல் அவரவர் துணையுடனும் (எங்கள் குழுவில் அப்படி வந்தவர்கள் மட்டும்! நானும் நண்பர் ஒருவர் மட்டும் தனிக்கட்டைகள் 🙂) சில படங்களை எடுத்துக் கொண்டோம்.  பொதுவாக இது போன்ற உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மலைப்பிரதேசங்களில் Maggi Point என்ற பெயரில் சில கடைகள் இருக்கும் - அங்கே கிடைப்பது Maggi மற்றும் தேனீர் மட்டுமே! இந்த TIP N TOP பகுதியிலும் அப்படியான ஒரு Maggi Point இருந்தது - அங்கே சுற்றுலாப் பயணிகளும் அமர்ந்து தேனீர் அருந்தியபடி இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தார்கள்! இயற்கைச் சூழலில் விஸ்ராந்தியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் ரசிப்பதும் மனதுக்கு ரம்மியமான விஷயங்கள் தானே!


St. Mary’s Church, லான்ஸ்(d)டௌன்




St. Mary’s Church அருகே...

மேலே சொன்ன சுற்றுலா தலத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் ஒரு கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் St. Mary’s Church.  நாங்கள் சென்ற போது கதவுகள் மூடி இருந்தன.  வெளியே இருந்தே பார்த்து விட்டு, அதன் முன்னர் சில படங்களை எடுத்துக் கொண்டோம்.  இது ஒரு பழமையான வழிபாட்டுத் தலம்.  இந்தத் தலம் குறித்து சில தகவல்களை பார்க்கலாம்! ஆங்கிலேயர்கள் காலத்தில் Royal Engineers-ஐச் சேர்ந்த Col. A.H.B Hume அவர்களால் 1895-ஆம் ஆண்டு தொடங்கி 1896-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த வழிபாட்டுத் தலம்.  தொடர்ந்து இங்கே வழிபாடுகள் 1947-ஆம் ஆண்டு வரை நடந்து வந்தன என்றாலும் அதன் பின்னர் நடக்கவில்லை.  தற்போது Garhwal Rifles Regimental Centre இந்த இடத்தினை ஒரு அருங்காட்சியகமாக நடத்தி வருகிறார்கள்.  அழகான விக்டோரியன் ஸ்டைலில் அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலத்தில் கண்ணாடிகளால் ஆன ஜன்னல்கள் சிறப்பு.  இங்கே புகைப்படங்கள் தொகுப்பு ஒன்று இருப்பதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், லான்ஸ்(d)டௌன் குறித்து இங்கே காண்பிக்கப்படும் பத்து நிமிட டாகுமெண்டரி திரைப்படமும் மிகவும் ரசிக்கக் கூடிய விஷயம் என்று தகவல்கள் இருக்கின்றன.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மட்டுமே இந்த இடம் திறந்திருக்கும். உள்ளே சென்று பார்க்க ஒரு நபருக்கு பத்து ரூபாய் நுழைவுக் கட்டணமும் உண்டு என்பதையும் நினைவில் கொள்க!


Bhulla Thaal, லான்ஸ்(d)டௌன்



Thaal/Tal என்றால் ஏரி என்று பொருள். Bhulla Thaal என்ற பெயர் பலகை பார்த்து இந்த மலையில் ஒரு ஏரி எப்படி என்று தோன்றலாம்.  இந்த Bhulla Thaal இயற்கையாக உருவானது அல்ல! மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான். இந்திய ராணுவத்தினரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.  இங்கே வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வசதிக்காக சிறிய படகுக் குழாமும் சில விளையாட்டு சாதனங்களும் உண்டு.  லான்ஸ்(d)டௌன் வரும் பலரும் இங்கே நிச்சயம் வருகிறார்கள் என்றாலும் நாங்கள் அங்கே செல்லவில்லை. இந்த இடம் நோக்கிய குறுகிய பாதையில் வண்டிகள் அனுமதிப்பதில்லை.  ஆனாலும் எங்கள் ஓட்டுநர் குருட்டாம்போக்கில் அந்தச் சாலையில் வண்டியைச் செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டு வண்டியைத் திருப்ப வேண்டியிருந்தது. ஓட்டுநர் குறித்து சில தகவல்கள் சொல்ல வேண்டும் என்றாலும் இங்கே சொல்லாமல் பிறகு சொல்கிறேன்.  சில மீட்டர் தொலைவு மலைப்பாதையில் நடக்க வேண்டியிருக்கும் என்பதால் எங்கள் குழுவில் இருந்தவர்களுக்கு அங்கே சென்று வர விருப்பமில்லை. 


சிறுவர்கள், இளம் ஜோடிகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்தமான இடமாக இந்த இடம் இருக்கிறது.  அமைதியான சூழலில் இங்கே அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம் என்பதோடு இந்த ஏரியில் படகில் உலா வரலாம் என்பதும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் தானே.  கட்வாலி (Garhwali) மொழியில் Bhulla என்கிற சொல்லுக்கு ”இளைய சகோதரர்” என்ற அர்த்தம் உண்டு.  இந்த ஏரியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த இளம் Garhwali Rifles உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக இந்த ஏரிக்கு Bhulla Thaal என்ற பெயரையே வைத்துவிட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.  ஏரிப் பகுதியில் செல்வதற்கு கட்டணம் ஏதுமில்லை என்றாலும் படகில் உலா வருவதற்கு நபர் ஒருவருக்கு 50/- ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  ஏரிப் பகுதியில் ஒரு பாலமும் உண்டு! ஏரிக்கரையில் சில பெஞ்சுகள் இருக்கின்றன என்பதால் அங்கே அமர்ந்து இயற்கைச் சூழலை ரசிக்கலாம்.  தினமும் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த ஏரிப்பகுதியும், படகுக் குழாமும் சுற்றுலாவாசிகளுக்காக திறந்திருக்கும். 


St. John’s Church, லான்ஸ்(d)டௌன்



இந்தப் பயணத்தில் பார்த்ததாகச் சொன்ன ஒரு கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் போலவே இங்கே இருக்கும் இன்னுமொரு வழிபாட்டுத் தலம் தான் St. John’s Church. முன்பு சொன்ன St. Mary’s Church தற்போது வழிபாடுகள் நடக்காமல் இருந்தாலும், இந்த St. John’s Church இன்றைக்கும் வழிபாடுகள் நடக்கும் விதத்தில் இருக்கிறது.  TIP N TOP செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த வழிபாட்டுத் தலம் குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்! 1936-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த வழிபாட்டுத் தலம் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, வழிபாடுகள் நடத்த தகுந்த பாதிரிமார்கள் இல்லாத காரணத்தால் வழிபாடுகள் ஏதும் நடக்காமல் பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. பூட்டி இருந்த வழிபாட்டுத் தலம் சிதிலமடைந்தது. 1951-ஆம் ஆண்டு இந்த வழிபாட்டு நிலையம் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.  1980-ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கத்திடமிருந்து, Bபிஜ்னோர் (உத்திரப் பிரதேசம்) பகுதியில் இருந்த கிருஸ்துவ மத அமைப்பினால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, 1983-ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு இங்கே வழிபாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த தலத்தின் உட்புறங்கள் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டவை.  முடிந்தால் இந்த வழிபாட்டுத் தலத்தையும் பார்த்து வரலாம். 


மேலும் பார்க்கவேண்டிய இடங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை வரும் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. அழகிய இடங்கள், அழகிய படங்கள்.  நுழைவுக் கட்டணமோ, படகுக் கட்டணமோ குறைவாகத்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.  டிரைவர் பற்றிய ரகசியத்தை இந்த வாரம் வெளியிடவில்லை போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்ரைவர் குறித்த மேலதிகத் தகவல்கள் தொடரின் பின்னர் வரும் பகுதிகளில் எழுதுகிறேன். பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் மிக அழகு. அதிலும் ஏரி மீது உள்ள பாலத்துடன் கூடிய படம் மிகவும் கவர்ந்தது.

    ரொம்ப நாட்களாக எழுதவேண்டும் என நினைத்தேன். ஆங்கில எழுத்துரு அழகாக இருந்தாலும் படிக்கச் சிரம்ம். ரொம்பவே பெரிதுபடுத்திப் படிக்கவேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஆங்கில எழுத்துரு - உள்ளீடு செய்யும்போது சரியாக இருந்தாலும், அந்த எழுத்துரு இல்லாததால், பதிவு வெளிவரும்போது தானாகவே வேறு எழுத்துருவாக மாறி விடுகிறது. உள்ளீடு செய்யும் எழுத்துருவை மாற்றிப் பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. அழகான இடங்கள் குறிப்பாக Bhulla Thaal என்ற செயற்கை ஏரியும் அழகான பாலமும் நன்றாக இருக்கிறது. இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் தான்.
    தேவாலயங்கள் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட இடங்கள் பற்றிய தங்கள் கருத்துரைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. படங்கள் அருமை. தகவல்கள் உட்பட.

    //இயற்கைச் சூழலில் விஸ்ராந்தியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் ரசிப்பதும் மனதுக்கு ரம்மியமான விஷயங்கள் தானே!//

    அப்படியே வழி மொழிகிறேன் ஜி. மனம் ரொம்ப relaxed ஆகிவிடும். இயற்கையின் சக்தி அது,

    அந்தப் பாலம் உள்ள செயற்கை ஏரி ரொம்ப அழகாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைச்சூழலில் இருக்கும்போது மனது அமைதியாகி சலனமற்று இருப்பதும் அனுபவித்திருக்கிறேன். பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பயணப் பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    இன்றைய பதிவில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் படங்கள் அனைத்தும் இயற்கை எழில் சூழ நன்றாக உள்ளது மலை மீதுள்ள ஏரியின் அழகும் அந்த பாலமும் மனதை கவர்ந்தது. நிறைய இடங்களை சுற்றிப் பார்க்க கட்டண விபரங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தேவாலய இடங்களும், அதைப்பற்றிய தகவல்களும் நன்றாக உள்ளது. பயணத்துடன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஏரி பாலம் , சர்ச் அழகாக இருக்கிறது.

    படகுச் சவாரி இருப்பது சிறப்பு. சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையை ரசிக்க நல்ல பொழுது போக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  8. சிறப்பான தகவல்கள் படங்களுடன் கொடுத்ததற்கு நன்றி. போக முடியாது என்றாலும் போய் வந்தது போன்ற உணர்வு. தேநீர் கடைகள் போல் Maggi points! அந்த அளவுக்கு இந்தியா வில் Maggi அதிகம் ஆகிவிட்டது இல்லையா!.

    தேவாலயங்கள் பற்றிய தகவல்கள் சிறப்பாகன் இருந்தது. ஒலி ஒளிக் காட்சி
    நடத்தப்படுவது வரலாற்று அறிவை வளர்க்க உதவியாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. ஹைய்யோ ! படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது !!!!!

    துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....