ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஆதி மஹோத்சவ் 2024 - நிழற்பட உலா - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சென்ற ஞாயிறில், தலைநகர் தில்லியில் இந்த வருடம் நடந்த ஆதி மஹோத்சவ் சென்ற போது எடுத்த சில படங்களை ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தேன்.  இந்த ஞாயிறில் அதே மஹோத்சவத்தில் எடுத்த இன்னும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.  ஒவ்வொரு படத்திற்குக் கீழும் படம் குறித்த சில தகவல்களை இணைத்திருக்கிறேன். தவிர இந்த நிகழ்வில் எடுத்த சில காணொளிகளும் உண்டு. முடிந்தால் அவற்றையும் விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் படங்களையும், தகவல்களையும் பார்த்து ரசிக்கலாம்.




படம்-1: Gகோண்ட் வகை ஓவியம் ஒன்று - பசு, சிவபெருமான், ஒரு பானை தெரிகிறது. வேறு ஒரு உருவமும் இருக்கிறது - அது என்ன என்று புரியவில்லை.


படம்-2: இதுவும் Gகோண்ட் வகை ஓவியம் தான் - மீன்கள், காதுகள் இருக்கும் இடத்தில் இரண்டு பறவைகள், தலை அலங்காரம், சிந்தனையில் குழப்பங்களோ என்று சொல்லும் விதமாக பல கிளைகளுடனான மரம்…  இப்படி எனக்குத் தோன்றியது - வரைந்த ஓவியர் என்ன நினைத்து வரைந்தாரோ?




படம்-3 மற்றும் 4: லாக் என அழைக்கப்படும் மெழுகு கொண்டு பொதுவாக வளையல்கள் செய்வதுண்டு.  ஜெய்பூரைச் சேர்ந்த த்ரௌபதி எனும் கலைஞர் (மின்னஞ்சல் முகவரி - dropadibaswa@gmail.com) இவற்றைக் கொண்டு அழகோவியங்களை படைக்கிறார்.  நிறைய பொறுமையும் திறமையும் தேவை எனத் தெரிகிறது.



படம்-5 மற்றும் 6: Dhokra Art வகையைச் சார்ந்தவை இந்த இரண்டும்.  உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொம்மைகள், மேற்கு வங்காளம், ஒடிஷா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கட் பகுதிகளில் பிரபலம்.


படம்-7: நெல்மணிகள், நூல்கள் கொண்டு விதம் விதமான விலங்குகளின் பொம்மைகள், கழுத்தணி, காதணிகள் இறைவனின் மூர்த்திகள் எனச் செய்கிறார்கள்.  ஒடிஷாவின் கோராபுட் பகுதியைச் சேர்ந்த Bhatoda என அழைக்கப்படும் ஆதிவாசிகள் இக்கலையில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.




படம்-8, 9 மற்றும் 10: விதம் விதமான அலங்காரப் பொருட்கள், Wind Chimes, Wall Hangings போன்றவை இவை.  இவை செய்யப் பயன்படுத்துவது எது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட சுரைக்காய்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? படம் 9 ஒரு முழு சுரைக்காய் - உள்ளே உருக்கும் சதைப்பற்றை எடுத்துவிடுகிறார்கள்.


படம்-11: மூங்கில் கொண்டு செய்யப்பட்ட ஒரு பிள்ளையார்.


படம்-12: இதுவும் Dhokra Art தான்.  இது போன்ற பல வடிவங்களில் தயாரிக்கப்படும் பெட்டி இது - பெண்களுக்குத் திருமணம் செய்து வீட்டிலிருந்து அனுப்பும்போது இது போன்ற பெட்டிகளில் நகைகளைக் கொடுத்து அனுப்புவார்களாம்.


படம்-13: Dhokra Art தான்.  மூடியில்லாமல் இருக்கும் இதை சின்னச் சின்னப் பொருட்கள் போட்டு வைக்க பயன்படுத்துவார்களாம். Pen Stand - ஆக பயன்படுத்தலாம்!


படம்-14: இந்த ஓவியத்திற்கான திறமைகள் சீனாவிலிருந்து வந்தன என்று சொன்னார் இதை வரைந்த பெண்மணி. மெழுகு கொண்டு ஒரு துணி முழுவதும் தேய்த்து, அதன் பிறகு வண்ணங்கள் சேர்த்து வரையப்படும் ஓவியம் - அதிக அளவில் வேலைகள் உண்டாம். எத்தனை வித ஓவியங்கள் நம் திருநாட்டில்…


படம்-15: மூங்கிலில் Lamp Shade…


படம்-16: தமிழகத்தின் ஊட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகளான குறும்பர்கள் வரையும் ஓவியம்.இந்த ஓவியம் வரைவதற்கு வேங்கை மரத்தின் பசை பயன்படுத்துகிறார்களாம். முற்காலத்தில் பாறை ஓவியங்களாக இருந்தவை தற்போது காகிதங்களில்.


படம்-17: குறும்பர்களின் வீடு - ஒரு மாடல் - எத்தனை அழகாக செய்திருக்கிறார்கள்…



படம்-18 மற்றும் 19: Lamp Shade…


படம்-20: புற்கள் கொண்டு செய்யப்பட்ட பிள்ளையார்.  மேல் மூடியைத் திறந்து பொருட்களை வைத்துக் கொள்ளலாம் என்பதும் கூடுதல் தகவல்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

24 கருத்துகள்:

  1. ஓவியங்கள், பொருட்களை படங்கள், விளக்கங்கள் மூலம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. முதல் படமே அழகு வசீகரம், அது போல குறும்பர் வீடு மாடல் செம அழகு.

    எல்லாப் படங்களும் மிக அருமை. தெளிவா வந்திருக்கு, வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்பர் வீடு - எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. சிந்தனையில் குழப்பங்களோ என்று சொல்லும் விதமாக //

    எனக்கும் தோன்றியது வெங்கட்ஜி. அதானே ஓவியர் என்ன நினைத்தாரோ!!!

    புற்களில் செய்யப்படுபவகை, மூங்கிலில் செய்யப்படுபவை எல்லாம் மனதைக் கவரும். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் தூசி அடையாமல் பூச்சிகள் கூடு கட்டாமல் பராமரிப்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்றவற்றை தூசு அடையாமல் காப்பது, பராமரிப்பது கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. இந்த ஓவியம் வரைவதற்கு வேங்கை மரத்தின் பசை பயன்படுத்துகிறார்களாம். முற்காலத்தில் பாறை ஓவியங்களாக இருந்தவை தற்போது காகிதங்களில்.//

    வியப்பான சுவாரசியமான தகவல்கள். பிள்ளையார் ஓவியம் சைனாவிலிருந்து வந்த கலை . batik art இப்படித்தான் வந்ததோ என்று தோன்றுகிறாது விளக்கம் மெழுகு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல்.

    Dhokra கலை வகைகள் அனைத்தும் மனதைக் கவர்க்கின்றன. நுணுக்கமாகவும் இருக்கின்றன.

    Gகோண்ட் வகை ஓவியம் (முன்னரும் நீங்க பகிர்ந்திருக்கீங்க வேறு ஒவியங்கள்) லாக் மெழுகு கில் ஓவியம் எல்லாமே வியந்து பார்க்க வைக்கின்றன. அதற்கான விவரங்களுடன் நீங்க கொடுத்திருப்பதும் சிறப்பு, வெங்கட்ஜி! பாராட்டுகள், வாழ்த்துகள் ஜி!

    அனைத்தும் ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள், தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. மஹோத்சவத்தில் எடுத்த அனைத்து படங்களும் மிக அருமை.
    கைவினை பொருட்கள் , ஓவியங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  6. எதைச் சொல்வது எதை விடுவது அழகில்.அற்புதமான படைப்புக்கள் பலவும் கண்டோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  7. ஓவியங்களின் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  8. பட்ங்களும் கலைப்படைப்புகளும் அருமை. இவற்றினிடையே நம் ஊட்டி ஆதிவாசி கலைஞர்களின் ஒவியம்Athanidaye மற்றும் வீட்டு மாடல் கண்டதும் மகிழ்ச்சி, உலோகக் குதிரைகளைக் கண்டதும் சிறு வயதில் வீரபாண்டி (தேனி) திருவிழா நெருங்கும் போது,மண்ணால் செய்து வண்ணம் பூசிய பொம்மைகள் விற்பார்கள். அதை ஆங்கி விளையாடியது நினைவுக்கு வந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் நினைவுகளையும் தூண்டியதில் மகிழ்ச்சி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு

  9. இன்றைய புதுமையான படங்களும் அதன் விவரங்களும் மிக அருமை...

    கைவினைப் பொருட்கள் , ஓவியங்கள் படங்கள் அனைத்தும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள், தகவல்கள் குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  10. இன்றைய படங்களும் விளக்கங்களும் அருமை. கோண்ட் வகை ஓவியங்கள் முதல் மூன்று குழப்புகிறது. தலையில் பானை சுமந்து செல்லும் பெண்கள் ஓவியம் போன்று பல முறை பார்த்திருக்கிறேன். மற்ற கலைப் பொருட்களும் நன்றாக இருக்கின்றன. சில ஒரு மாதிரி இருக்கு (விளக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டு மட்டுமே கோண்ட் வகை ஓவியங்கள். மூன்றாவது லாக் எனப்படும் மெழுகு கொண்டு செய்வது. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமையாக உள்ளது.

    இன்றைய பதிவில் அழகான ஓவியங்கள், மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. சுரைக்காய் சிற்பம், நெற்கதிர் கொண்டு செய்திருந்த விநாயகர், அனைத்தும் செய்தவர்களின் சிறப்பையும், பொறுமையையும் காட்டுகிறது. மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட விளக்குகள் அழகாக இருக்கிறது. புற்கள் கொண்டு செய்யப்பட்ட பிள்ளையார் மிக அருமையாக உள்ளது. அனைத்தையும் பார்த்து, ரசித்து வியந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள், படங்கள் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. இரு வருடங்களுக்கு முன் நாம் இருவரும் இந்த நிகழ்விற்கு சென்றது நினைவில் உள்ளது. இங்கு இது போன்ற நிகழ்வுகள் கிடைக்கவில்லை என்பது வருத்தம்தான்.

    முதல் படத்தில் பானையின் அடியில் உள்ள நீரை அருந்த முயலும் காகமும் உண்டோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத சில அனுபவங்கள் - எனக்கும் நினைவில் உண்டு அண்ணாச்சி.

      முதல் படத்தில் - பானையின் அடியில் உள்ள நீரை அருந்த முயலும் காகம் - இப்போது தான் எனக்கும் தெரிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....