வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட 60 வயது மாநிறம் - ஒரு படம் - இரு பார்வை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******


இத்தொடரில் இதுவரை எட்டு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டுதங்குமிடத்தின் வெளிப்புறத் தோற்றம்...


தேவதாரு மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில்...


தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் நண்பருடன் கொஞ்சம் விஷமம்...

லான்ஸ்(d)டௌன் பகுதியில் ஒரு சில இடங்களை பார்த்து விட்டு எங்கள் தங்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ஆங்காங்கே தேவ(dh)தாரு மரங்களின் அணிவகுப்பு. பார்க்கவே இரம்மியமாக இருந்தது. லான்ஸ்(d)டௌன் நகருக்கு வருவதற்கு முன்பாகவே இப்படியான தேவ(dh)தாரு மரங்கள் அடர்ந்திருந்த பகுதி ஒன்றில் வண்டியை நிறுத்தி சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். எங்கள் பயணம் கடைசி நேரத்தில் முடிவானதால், லான்ஸ்(d)டௌன் பகுதியில் தங்குமிடம் தேடியபோது அதிக கட்டணங்களில் மட்டுமே தங்குமிடங்கள் இருந்தன.  ஒரே ஒரு நாளுக்காக ஒரு அறைக்கு ஆறாயிரம் அல்லது அதற்கு அதிகமாகக் கொடுப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. மேலும் தங்குமிடங்கள் தேடியபோது லான்ஸ்(d)டௌன் நகரை விட்டு விலகி, சத்புலி எனும் இடம் அருகே இருந்த ஷிவாலிக் ரிவரைன் ஹோம்ஸ்டே” என்ற பெயர் கொண்ட தங்குமிடம் கிடைத்தது.  அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டபோது எங்களுக்குத் தேவையான ஐந்து அறைகள் இருப்பதாகச் சொல்லவும் உடனே சரி எனச் சொல்லி முன்பணமும் அனுப்பி விட்டோம்.  


நாங்கள் பயணிக்கும் நாளுக்கு முதல் நாள் மேலும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்துவிட்டோம். நாங்கள் சென்று கொண்டிருந்தபோதே சில முறை எங்கள் வருகை குறித்து எங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் தங்குமிடத்தின் உரிமையாளர். ஒரு வழியாக சூரியன் மறைவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக தங்குமிடம் அருகே சென்று விட்டோம்.  என்னதான் கூகுள் பாபா உதவியுடன் மேப் மூலம் அந்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் என்றாலும் ஒரு சில இடங்களில் அங்கே இருக்கும் நபர்களிடமும் நாங்கள் செல்லும் பாதை சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது.  எங்கள் ஓட்டுனரோ கொஞ்சம் அடம் பிடித்துக் கொண்டிருந்தார் - நீங்கள் நகரை விட்டு விலகி இந்த இடத்தினை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் - முன்பணம் செலுத்தாமல் இருந்தால் நகருக்குள் அல்லது நகருக்கு அருகில் தங்குமிடம் பார்த்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டே வந்தார்.  அவரிடம் அதிகம் பேசாமல் வண்டியை ஓட்டுங்கள், முன்பதிவு செய்த இடத்திற்கே போகலாம் என்று சொல்லி விட்டோம். தரைத்தளத்தில் மூன்று அறைகளும், முதல் தளத்தில் இரண்டு அறைகளும் எங்களுக்காக ஒதுக்கி இருந்தார். அறைகள் நன்றாகவே இருந்தன என்பதோடு சுத்தமாகவும் இருந்தது. எங்களுக்குத் தந்த அறைகள் தவிர ஒரே ஒரு அறை மட்டுமே இங்கே இருக்கிறது. அந்த அறையில் தங்குமிடத்தின் உரிமையாளர் இருந்தார்.  தவிர ஒரு சமையலறையும் உண்டு.  நாங்கள் சென்று சேர்ந்து எங்கள் உடைமைகளை அவரவருக்கான அறைகளில் வைத்து விட்டு, சற்றே இளைப்பாறி, தங்குமிடத்தின் சமையலறையில் இருந்த பொருட்கள் கொண்டு தேநீரும், நூடுல்ஸ்-உம் தயாரித்தார்கள் எங்கள் குழுவிலிருந்த பெண்மணிகள். தேவையானவர்கள் நூடுல்ஸ் உண்டு தேநீர் அருந்தினார்கள்.  அங்கே இருக்கும் சமையல் சிப்பந்தி பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது பண்டிகையான Chசட்ட்(tt) பூஜைக்காக ஊருக்குச் சென்று விட்டார் என்றும், அதனால் இரவு உணவு தேவையெனில் முன்னரே சொல்லிவிடுங்கள் என அருகே இருக்கும் உணவகத்தின் தொடர்பு எண்ணையும் எங்களிடம் தந்து விட்டார்.  சிறிது நேரம் கழித்தே உணவுக்கான தேவையைச் சொல்லலாம், அதற்கு முன்னர் தங்குமிடம் அருகே கொஞ்சம் உலா வரலாம் என்று முடிவு செய்தோம்.  நயார் ஆற்றங்கரையில்...

தங்குமிடம் சாலையோரத்திலேயே இருந்தது. எதிரே மலைத்தொடர்.  தங்குமிடத்தின் பின்னே அழகான ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.  தங்குமிடத்தில் Balcony கதவினைத் திறந்தால் பின்னால் சிறு நடைப்பயணத்தில் ஆறு. சின்னச் சின்னதாய் ஒன்றிரண்டு வீடுகள் என ரம்மியமான காட்சி. இருட்டு அப்பகுதியைச் சூழ்வதற்குள் ஆற்றங்கரைக்குச் சென்று வரலாம் என அனைவரும் புறப்பட்டுச் சென்றோம்.  பொதுவாக உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் நதிகள்/ஆறுகள் பனிபடர்ந்த சிகரங்களில் இருக்கும் பனி கோடைக்காலத்தில் உருகுவதால் உண்டாகும் ஆறுகள் தான். ஆனால் எங்கள் தங்குமிடத்தின் பின்புறம் ஓடும் ஆறு பனி உருகுவதால் உண்டாகும் ஆறு அல்ல. நயார் ஆறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுக்கு இரண்டு பிரிவுகள் - கிழக்கு நயார் ஆறு மற்றும் மேற்கு நயார் ஆறு.  நாங்கள் தங்கிய இடத்தின் பின்னே இருப்பது கிழக்கு நயார் ஆறு.  சத்புலி எனும் இடத்திற்கு சற்று தொலைவில் இரண்டு நயார் ஆறுகளும் சங்கமித்து தொடர்ந்து ஓடி கங்கை நதியுடன் சங்கமிக்கும். நயார் ஆற்றின் மொத்த நீளம் 91 கிலோமீட்டர் என சில தகவல்கள் பார்த்தேன். ஆற்றில் இருக்கும் தண்ணீரின் அளவை அளக்க சில வசதிகள்...

சூரியன் மறையும் நேரம் என்பதால் சற்றே இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து அதன் பக்கத்தில் இருக்கும் சிறு சந்தில் நடக்க ஆரம்பித்தோம்.  ஆற்றின் படுகையில் ஒன்றிரண்டு வீடுகள், மற்றும் அரசாங்கத்தின் குடிநீர் வாரியத்தின் அலுவலகம் ஒன்று என சிலவற்றை பார்க்க முடிந்தது. அரசுத்துறையின் சார்பாக ஏதோ வேலைகளும் நடந்து கொண்டிருப்பதால் அங்கே சில உழைப்பாளிகள் குடிசைகளில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆற்றின் படுகையில் ஆங்காங்கே தண்ணீர் வரத்து இருக்கும்போது எவ்வளவு அடி தண்ணீர் வரத்து இருக்கிறது என்பதை அளப்பதற்கான மானிகள் இருந்தன.  அவற்றை எல்லாம் கடந்து செல்லும்போது ஆற்றில் அடித்துக் கொண்டு வந்த சில உயிரினங்களின் எலும்புகளையும் பார்க்க முடிந்தது. அப்படியாக நடந்து சென்ற போது சலசலத்து ஓடும் ஆற்றின் ரம்மியமான ஓசையையும் கேட்டு ரசித்தபடியே செல்ல முடிந்தது.  நாங்கள் ஆற்றின் அருகே சென்றபோது சூரியன் மறைந்து சந்திரன் தனது அழகிய முகத்தினைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தான். சந்திரனின் அழகு கீழே ஓடிக்கொண்டிருக்கும் நயார் ஆற்றில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பெரிய பெரிய பாறைகள் மீது மோதியபடி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, ஆற்று நீரில் தெரியும் சந்திர பிம்பம், எதிரே தெரியும் மலைச்சிகரங்கள், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்புப் பாலம் என பார்க்க மிகவும் ரம்மியமான காட்சிகள் என எங்களால் அங்கே இயற்கையெழிலில் மூழ்க முடிந்தது. பாறைகளின் அருகே சென்று சில படங்களை எடுத்தோம்.  கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பிக்கவே, அதற்கு மேல் அந்த இடத்தில் இருப்பது அவ்வளவு சரியல்ல என்பதால் தங்குமிடத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் - அடுத்த நாள் காலை மீண்டும் இங்கே வரவேண்டும் என்ற திட்டத்துடன்! அப்படியே நடந்து வரும்போது அங்கே இருந்த சில வீடுகளில் இருப்பவர்களுடன் சிறிது உரையாடல். மேலும் தகவல்கள், அந்த தங்குமிடம் அருகே கிடைத்த மேலும் சில அனுபவங்கள் என வரும் பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்களின் படங்களும், ஆற்றின் படங்களும் மிக நன்றாக உள்ளது.

  சென்ற இடத்தின் விபரங்களும், தங்குமிடத்தின் விபரங்களும் அனைவருக்கும் பயனுள்ளவை. ஆற்றின் எழில் மிக்க காட்சிகளை தாங்கள் விவரித்த போது ஆற்றின் அருகிலேயே நாங்களும் நடந்து சென்ற அந்த குளுமையை அனுபவித்தேன். அவ்வளவு அழகான வர்ணனை. ரசித்துப்படித்தேன்.

  அடுத்த நாள் தங்கள் பயணம் எப்படி துவங்கியது எங்கெல்லாம் சென்றீர்கள் என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு, படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணத்தில் இணைந்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. இத்தகைய ஆற்றுப் பகுதியில், அதிலும் மலையின் பனி உருகி வரும் ஆற்றில் செல்வது ஆபத்துதானே. நம்மை அறியாமல் சட் என வெள்ளம் வந்துவிடும் அல்லவா?

  புது இடத்தின் ஒரு நாள் வாடகை என்ன? ஊருக்கு ஒதுக்குப்புறம் என்றாலே காலை அழகிய இயற்கை கீட்சிகள், பின்னாலேயே ஓடும் ஆறு என அருமையாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பனி உருகி வரும் ஆற்றில் வெள்ள வரத்து திடீரென அதிகரித்து விடும் அபாயம் உண்டு. அது போலவே அணையில் தடுத்து வைக்கப்பட்ட ஆற்று நீர் வெளியேற்றப்படும் போதும் அபாயம் தான்.

   ஒரு நாள் வாடகை - தங்குமிடத்திற்கு - அடுத்த பகுதியில் எழுதி இருக்கிறேன். இடம் நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 3. நயார் ஆற்றங்கரை நன்றாக இருக்கிறது.

  மாலை சந்திரன் ஆற்றில் தெறித்து தகதகக்கும் நிழல் பின்னணியில் மலை என அருமையான காட்சிப் படம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 4. வெங்க்ட்ஜி அருமையான ஆறு, அதன் சுற்றுப்புறம் ரம்மியம். மிகவும் ரசித்தேன். இப்படியான பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தால் மனதுக்கு மிகவும் தெம்பாக இருக்கும். காணொளி ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. நயார் நதி காண்பித்து அது பற்றி விவரங்கள் நன்று. காணொளியும் தேவதாரு மரங்கள் பைன் பரங்கள் போன்றுதான் இல்லையா? காண்பதற்கு அப்படித்தான் இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவதாரு மரங்களும் பைன் மரங்கள் போலவே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 6. இன்றைய பயணக் கட்டுரைப் பதிவு சிறப்பு.
  பொன்மொழியும் அழகு. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 7. நயார் ஆற்றங்கரை அழகு இரவு சலசலக்கும் ஆற்றில் தெரியும் சந்திர ஒளியும், மேலே சந்திரனின் தோற்றமும் பார்க்க அழகு. அருமையான சூழ்நிலையில் நடப்பது சுகம்.
  வரும் போது மக்களிடம் உரையாடல் அருமை.
  படங்கள் மற்றும் விவரங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. ஒரேடியாக கூகுளை நம்பவும் முடியாது. எங்கெயாவது கொண்டுபோய் நிறுத்திரும். வாயிலே இருக்கு வழி என்பதே உண்மை. அதிலும் சுத்தவிடும் ஆட்களும் இருக்காங்க. டபுள் செக் செஞ்சுக்கணும்.

  முந்தாநாள் டிவியில் ஒரு செய்தி. அண்டை நாட்டில் கூகுள் காட்டிய வழியில் போனவங்க எங்கோ போய், வண்டி சாலையிலாத இடத்திலெல்லாம் போய் மண்ணில் மாட்டி நின்னு போச்சாம். ஆறு கிமீ நடந்து அடுத்த கிராமத்துக்குப் போனாங்களாம். நல்லவேளை ரெண்டு நபர்கள். தனியாகப்போயிருந்தால்.... கஷ்டம்'

  துளசிகோபால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீபத்தில் இந்தியாவில் கூட இப்படி கூகுளை நம்பிச் சென்ற கார் ஒன்று படிக்கட்டுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறது! மிகவும் சிரமப்பட்டு படிகள் வழி காரை இறக்கி இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....