அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
60 வயது மாநிறம்: வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு தமிழ் திரைப்படம். ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி மற்றும் இந்துஜா ஆகியோர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டில் வெளிவந்த படம். இந்தப் படம் 2016-ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படத்தினை எனது இல்லத்தரசி YouTube தளத்தில் பார்த்துவிட்டு என்னையும் பாருங்களேன் என்று சுட்டி அனுப்பி இருந்தார். இரண்டு பேரும் பார்த்துவிட்டோம் - வேறு வேறு இடங்களிலிருந்து. ஒரு படம் குறித்த இரு வேறு பார்வை - உங்கள் பார்வைக்கு இந்த பதிவு வழி தந்திருக்கிறேன். வாருங்கள் முதலில் எனது இல்லத்தரசியின் பார்வையில் 60 வயது மாநிறம் படம்…
ஆதி வெங்கட் பார்வையில்:
அப்பா! ஆட்டோல வந்தீங்களா? பத்து நிமிஷமா ஆட்டோக்காரர் வெளில நிக்கறார்! காசு எடுத்துட்டு வந்து குடுக்கறேன்னு சொல்லிட்டு இங்க வந்து பெயிண்ட்டிங் பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு ஞாபகமே இல்லையா??
______
இந்த இந்த …. இதக் காணோம்!
என்னதுப்பா??
கையின் மணிக்கட்டை காண்பித்து… இது இது இத தான் காணோம்!
அப்பா! அது வாட்ச்னு கூட தெரியாதாப்பா!
வாட்ச்சை எதுக்குப்பா தோசைமாவுல போட்டுட்டு தேடறீங்க???
_____
அப்பாவுக்கு அல்சைமர் நோய்! நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருபவர்! கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து பல மாணவர்களை சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர்!
காதல் மனைவி திலகா புற்றுநோயால் மறைந்து விட மகன் சிவாவை மட்டுமே வாழ்க்கையின் பிடிமானமாக நினைத்து நாட்கள் நகரும் போது தான் இந்த நோயின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்!
மகன் தன் படிப்பை முடித்து விட்டு மும்பையில் வேலை கிடைக்கவே அப்பாவை பத்திரமாக பாதுகாக்க எண்ணி அல்சைமர் கேர் செண்ட்டரில் சேர்த்து விட்டு விடுகிறான்! மாதாமாதம் பணம் அனுப்பி விட்டால் போதும்! அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணுகிறான்!
இப்படியே ஓரிரு வருடங்கள் சென்ற நிலையில் அலுவலக வேலையாக ஒருமுறை சென்னைக்கு வருபவன் அப்பாவை பார்க்க எண்ணி சென்ட்டருக்கு செல்கிறான்! அங்கிருந்து அவரை வெளியே அழைத்துச் சென்று துணிமணிகளை வாங்கிக் கொடுத்து கேர் செண்ட்டரின் வாசலிலேயே செக்யூரிட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்று விடுகிறான்!
செக்யூரிட்டி கவனிப்பதற்குள் அவர் எங்கோ நடந்தும் சென்று விடுகிறார்! நினைவுகளை தொலைத்து தான் யாரென்பதே தெரியாமல் திரியும் அவர் ஒவ்வொரு இடமாக பயணப்பட்டு ஒரு ரவுடியிடமும் சிக்கிக் கொள்கிறார்! அதன் பின் மகன் இவரை எப்படித் தேடி அலைந்தார்? ரவுடியிடம் சிக்கியவர் எப்படி மீண்டார் என்பது தான் மீதிக் கதை!
60 வயது மாநிறம் என்ற இந்தத் திரைப்படத்தில் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்! தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தினை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்! மகனாக விக்ரம் பிரபுவும் ரவுடியாக சமுத்திரக்கனியும் கதாநாயகியாக இந்துஜா என்பரும் நடித்திருக்கின்றனர்!
யூட்டியூபில் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த போது எதேச்சையாக இந்தப் படம் பார்க்க கிடைத்தது! என்றாவது பார்க்கலாம் என்று எண்ணி Watch laterல் போட்டு வைத்திருந்தேன்! நம்ம வித்யா சுப்ரமணியம் மேம் இந்தப் படத்தை பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக எழுதியிருக்கவும் நேற்றைய மதியப் பொழுதில் பார்த்து முடித்தேன்!
2018ல் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் உறவுகள் இடையேயான பாசப்பிணைப்பு, காதல், நகைச்சுவை என்று எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது! ஃபீல் குட் மூவியில் கொசுறாக சில ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன!
நடிகர் விக்ரம் பிரபு இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம் எனத் தோன்றியது! நடிகை இந்துஜா இதில் சிறப்பாகவே செய்திருக்கிறார்! கதையிலும், கதாப்பாத்திரங்களிலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்! மொத்தத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இதைச் சொல்லலாம்! நட்புடன் - ஆதி வெங்கட்
*******
எனது பார்வையில் 60-வயது மாநிறம்:
அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பி சமையல் வேலைகளையும் முடித்த ஒரு வேளையில், இல்லத்தரசி இரண்டு நாட்கள் முன்னர் அனுப்பிய 60-வயது மாநிறம் படத்தின் சுட்டி நினைவுக்கு வர, இரவு பத்து மணிக்கு மேல் படத்தினைப் பார்க்க ஆரம்பித்தேன். தொடர்ந்து பார்த்து முடிக்க நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. பொதுவாகவே ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் (மொழி, அபியும் நானும், காற்றின் மொழி ஆகிய மூன்றும் பார்த்தவை) எனக்குப் பிடித்தவையாக இருந்ததால் இந்தப் படத்தினையும் ஒரே மூச்சில் பார்த்துவிட்டேன். வழக்கமான ராதா மோகன் பாணி திரைப்படம் - ஆங்காங்கே இருக்கும் நகைச்சுவை, யதார்த்தமான உறவுகள் என பல விஷயங்கள் பிடித்திருந்தாலும், அப்பாவின் காதல் பற்றிப் பேசும் போது மகனுக்கும் காதல் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லி, அந்த காதலுக்காக சில காட்சிகளை சேர்த்திருப்பது தனியாக தெரிந்தது.
படம் முழுக்க ஆங்காங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை ரசிக்க வைத்தன. அல்சைமர் வியாதியின் கொடூரம் அதிக அளவில் காண்பிக்காமல் கோடிட்டுக் காட்டியிருப்பதும் நன்று. தன் கணவர் அருகில் இருக்கும்போதே சக நோயாளி ஒருவரை கணவர் என்று நோயாளி சொல்லும் போது, நோயாளியின் உண்மையான கணவர் கோபம் கொள்ளாமல் பொறுமையாக கூடவே இருந்து மனைவியைக் கவனித்துக் கொள்ளும் காட்சிகள் மனதைத் தொட்டன. இளையராஜாவின் இசையில் படத்தில் இருக்கும் முதல் பாடல் மிகவும் பிடித்திருந்தது. சில லாஜிக் சிக்கல்களும் இருந்தன என்றாலும், ராதா மோகன் அவர்களின் தனித்துவமான இயக்கத்திற்காகவே இப்படத்தினை ஒரு முறை பார்க்கலாம் என்றே நான் சொல்வேன். - வெங்கட் நாகராஜ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
இப்படி ஒரு படம் வந்திருப்பதே எனக்கு தெரியாது. உங்கள் திருமதியின் விமர்சனம் முகநூலில் பார்ததிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். உங்கள் விமரிசனமும் பார்க்கத் தூண்டுகிறது. எனக்கும் ராதா மோகன் படங்கள் பிடிக்கும். சுட்டி எடுத்துக் கொண்டுள்ளேன். பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி. முடிந்த போது பாருங்கள் - உங்களுக்கும் பிடிக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நானும் இப்படத்தை சமீபத்தில் பார்த்தேன் ஆதி, வெங்கட்ஜி. மனதை என்னவோ செய்த படம். இதைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். ராதா மோகனின் படம் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்தில் என்னவோ ஒரு சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. சில காட்சிகள் அனாவசியமாகத் தோன்றியது.
பதிலளிநீக்குநான் பார்த்து பல மாதங்களாகிவிட்டது. எழுத நினைத்தேன் என் பார்வையில். ஆனால் எப்பவுமே எனக்கு எழுத்து என்பது தாமதமாகும், தாமதமாகிற்து டக்கென்று எழுதிப் போட முடிவதில்லை.
பார்க்கிறேன் ...உங்கள் இருவரின் பார்வைகளையும் வாசித்து விட்டு வருகிறேன்,
கீதா
நீங்களும் இந்தப் படத்தினை பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்கு//சில காட்சிகள் அனாவசியமாகத் தோன்றியது// - அதே தான்.
உங்கள் எண்ணங்களையும் பதிவாக வெளியிடுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
உங்கள் இருவரின் பார்வைகளும் நன்று. கிட்டத்தட்ட நான் எழுத இருந்ததை நீங்கள் இருவருமே அழகாகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்!
பதிலளிநீக்குஎன் மாமனாரும் Alzheimer's னால் பாதிக்கப்பட்டிருந்தார். அனுபவங்களும் உண்டு. ராதாமோகன் எடுத்துக் கொண்ட கரு அருமையான கரு. மலையாளத்திலும் இதே நோயின் தாக்கம் சார்ந்த படம் உண்டு. அதுவும் மிக அருமையான படம்.Thanmathra 2005 ல் வெளி வ்ந்த படம். இப்போது Hot Star தளத்தில் இருக்கிறது. free. மோகன்லால் நடித்த படம். இதையும் முடிந்தால் பாருங்கள். மிக அழுத்தமாக அந்தப் பிரச்சனையை மையமாக நன்றாகக் கையாண்டிருப்பார்கள். இரு படங்களையும் சொல்லி பதிவு எழுத நினைத்தேன்.
https://www.hotstar.com/in/movies/thanmathra/1000160452/watch
கீதா
படம் குறித்த உங்கள் கருத்தும் நன்று. நீங்கள் சொன்ன படமும் பார்க்க முயல்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
படம் நேற்றுதான் பார்த்தேன்..நீங்கள் சொன்னது போல் பீல் குட் மூவி தான்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநீங்களும் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. நல்ல படம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கீதா முன்பே சொல்லி லிங்க் அனுப்பியிருந்தார். யுட்யூப் லிங்க். நானும் பார்த்தேன். ஆதிவெங்கட் அவர்கள் ஓரிரு டயலாக்ஸில் பளிச்சென்று நினைவுக்குக் கொண்டு வந்து விட்டார். படம் கண்டிருக்காதவர்களை ஈர்க்கவும் அந்த யுக்தி அருமையாய் உதவும்.
பதிலளிநீக்குஉங்கள்ல் விமர்சனத்தில் அல்சைமரால் தாக்கப்பட்டிருக்கும் மனைவிக்குத் தன்னை நினைவில்லை என்றாலும் கவனிக்கும் கணவர் பற்றி சொன்னது படத்தில் உங்கள் தேடலில் கிடைத்த முத்து. ஆமாம் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் மனதின் மூலையில் சில காலம் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
துளசிதரன்
நீங்களும் படம் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. படம் ஒரு முறை பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நான் இந்த படம் பார்த்து மனது அளவில் பாதிப்பு அடைந்தேன், சில நாட்கள் மனதில் ஓடி கொண்டே இருந்தது, யாருக்கும் இது போன்ற மறதி நோய் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் இரண்டு பேரின் விமர்சனங்கள் நன்றாக இருக்கிறது. வயதானவர்களை பார்க்கும் மருத்துவருக்கு, அக்கறை பொறுமை, பாதிக்கப்பட்டவரின் மகனின் மனநிலை, பிறகு ஏற்படும் மனநிலை பொறுமை, கவனிப்பு, முகம் தெரியாத குடும்பத்தினர் காட்டும் அன்பு, கெட்டவனுக்கும் உள்ளே இருக்கும் நல்ல பண்பு இவைகளை படம் சொல்கிறது. எனக்கு பிடித்து இருந்தது.
இது போன்ற பிரச்சனைகள் ரொம்பவே கஷ்டம் தான். நீங்களும் படம் பார்த்திருப்பது அறிந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை. திரைப்படத்தைப் பற்றிய உங்கள் இருவரது விமர்சனமும் நன்றாக உள்ளது. இந்தப்படம் இதுவரை பார்க்கவில்லை. பொதுவாக எங்கள் வீட்டில் நான் மட்டும் அனேக திரைப்படங்களை பார்ப்பதில்லை. ஆனால் உங்களிருவரது விமர்சனமும் இந்தப் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. கண்டிப்பாக பார்க்கிறேன். பார்த்து விட்டு வந்து சொல்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம், திரைப்படம் குறித்த பதிவு இரண்டும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இந்தப் படத்தைப் பார்க்க முயல்கிறேன். விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது
பதிலளிநீக்குமுடிந்தால் பாருங்கள் நெல்லைத்தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இந்தப் படம் பார்த்திருக்கிறேன். மனதை பாதிக்கும்படம். அல்சைமர் நோய் பற்றி வேறு ஒருபடமும் பார்த்திருக்கிறேன் பெயர் தற்போது நினைவில் வரவில்லை மற்ராஸ் மழைவெள்ளத்தில் கணவன் மனைவி இருவருமே இறப்பதாக முடிவு அமையும் இதுவும் என்னைப் பாதித்த படம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குமிக அருமையான பதிவு. பின்னூட்டங்களில் நட்புகளைச் சந்திப்பது மிக மகிழ்ச்சி. அல்சைமர் பயம் இல்லாமல் எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள்.நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்கு