புதன், 14 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கோயில் உலா - ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





*******


இத்தொடரில் இதுவரை நான்கு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


தொடர்ந்து இந்தப் பயணம் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 


மோசமான சாலைகள், மேகவெடிப்பினால் ஏற்பட்ட மலைச்சரிவுகள், அதனால் உண்டான போக்குவரத்து நெரிசல்கள் என இப்படியான பல சங்கடங்களைக் கடந்து நாங்கள் லான்ஸ்(d)டௌன் பகுதிக்கு அருகே வந்து சேர்ந்த போது மதியம் இரண்டு மணி!  லான்ஸ்(d)டௌன் பகுதியில் நிறைய தங்குமிடங்கள் உண்டு என்றாலும், நாங்கள் கடைசி நேரத்தில் பயணத் திட்டம் மேற்கொண்டதால் அந்த இடங்களில் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனவே சற்றே தள்ளி வேறு ஒரு இடத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தோம். அந்த இடம் லான்ஸ்(d)டௌன் பகுதியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது! ஆனாலும் 10 பேர் கொண்ட குழுவாகச் செல்லும்போது முன்னதாகவே தங்குமிடங்களை முடிவு செய்து முன்பதிவும் செய்து கொண்டால் தான் கொஞ்சம் நிம்மதி. தனியாச் சென்றால் ஏதோ ஒரு இடம் பார்த்து தங்கிவிடலாம். குழுவுடன் செல்லும்போது அதிக அளவில் அறைகள் தேவையாக இருக்கும் என்பதால் ஒரே தங்குமிடத்தில் கிடைப்பது கடினம்.  எங்களது இந்தப் பயணத்தில் எங்களுக்கு ஐந்து அறைகள் தேவையாக இருந்தது! 


தங்குமிடங்கள்:


பொதுவாகவே உத்திராகண்ட் மாநிலத்தில் எந்த இடத்தில் தங்குவதென்றாலும், நான் முதலில் பார்ப்பது GMVN என்று அழைக்கப்படும் Garhwal Mandal Vikas Nigam Limited தளம் தான். தங்குவதற்கான கட்டணம் சற்றே அதிகமாக இருந்தாலும், அவர்களது தங்குமிடங்கள் அனைத்துமே மிகச் சிறப்பான இடங்களில், சூழலில் அமைந்து இருக்கும். அங்கேயிருந்து புறப்பட மனதே இருக்காது. எனது முந்தைய பயணங்கள் சிலவற்றில் அவர்களது தங்குமிடங்களில் தங்கியிருப்பதால் அவர்களது தங்குமிடங்களில் சிறப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.  Garhwal பகுதியில் இருக்கும் 7 மாவட்டங்களிலும் பல இடங்களில் அவர்களது தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டமாக தேர்வு செய்து உங்களுக்குத் தேவையான இடத்தில் இருக்கும் தங்குமிடங்கள், அறை வகைகள், அவற்றுக்கான கட்டணங்கள் என அனைத்தும் உங்களால் பார்க்க முடியும். அதோடு, உங்களுக்குத் தேவையான அறையை, இணையம் மூலமாகவே முன்பதிவும் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் வசதி.  லான்ஸ்(d)டௌன் பகுதியில் இருக்கும் அவர்களது இரண்டு தங்குமிடங்கள் குறித்து கீழே பார்க்கலாம். 


Lansdowne Tip N Top:




இந்த இடத்தில் நான்கு விதமான தங்கும் வசதிகள் இருக்கின்றன - Deluxe Hut (3800/-), Super Deluxe (Rs.6300/-) மற்றும் Family Hut (Rs.8400/-). அடைப்புக்குறிக்குள் இருக்கும் கட்டணம் ஒரு நாளைக்கானது! முதல் இரண்டு அறைகளிலும் இரண்டு இரண்டு பேர் தங்கலாம்! மூன்றாவதில் நான்கு பேர் தங்கலாம்! ஒரு நாள் வாடகை கொஞ்சம் அதிகம் என்றாலும் இப்படியான மலைதேசங்களில், அழகான சூழலில் அமைந்திருக்கும் தங்குமிடங்களுக்கு இத்தனை வாடகை இருப்பது வழக்கம் தான். இல்லை இவ்வளவு அதிகம் கொடுக்கமுடியாது என்றால் வேறு தங்குமிடங்கள் பார்க்கலாம். 


GMVN Lansdowne TRH:







GMVN Lansdowne Tourist Rest House (TRH)  என்கிற இந்த இரண்டாம் தங்குமிடத்தில் நான்கு விதமான தங்குமறைகள் இருக்கின்றன.  அவை -  (Rs.2000/-), Deluxe Hut (Rs.2500/-), Deluxe Room (Rs.3300/-) மற்றும் Family Room (Rs.4100/-) மேலே சொன்னது போல, கடைசியில் உள்ள தங்கும் வசதியில் நான்கு பேரும் மற்றவற்றில் இரண்டு இரண்டு பேர்களும் தங்கலாம்.  


உத்திராகண்ட் மாநிலம் முழுவதுமே இவர்களது தங்குமிடங்கள் உண்டு. இந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் இவர்களது தங்குமிடங்களில் நிச்சயம் தங்கலாம். தங்குமிடங்களில் உள்ள வசதிகள் குறித்தும் அவர்களது இணைய தளத்தில் தகவல்கள் உண்டு. அரசு சார்ந்த இவர்களது தங்குமிடங்கள் தவிர தற்போதெல்லாம் நிறையவே தனியார் தங்குமிடங்கள் - குறிப்பாக ஆங்கிலத்தில் Home Stay என்று சொல்லக்கூடிய தங்குமிடங்கள் இருக்கின்றன.  இணையத்தில் தேடியபோது நிறைய இப்படியான தங்குமிடங்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.  மலைவாசஸ்தலம் என்பதால் நகருக்குள் தங்குமிடம் இருந்தால் அதற்கான நாள் வாடகை சற்றே அதிகமாகவே இருக்கின்றன.  நகரை விட்டு விலகி இருக்கும் தங்குமிடங்கள், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் தங்குமிடங்கள் நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய் வாடகை வாங்குகின்றன.  சூழலின் அழகைப்பொறுத்தும், அவற்றில் இருக்கும் வசதிகள் பொறுத்தும் வாடகைகள் குறைவாகவோ, அதிகமாகவோ வாங்குகிறார்கள்.  அப்படி இணையத்தில் தேடும்போது ஏற்கனவே தங்கியிருந்தவர்கள் தந்திருக்கும் கருத்துகளை பார்த்து விடுவதும் நல்லது. பல தங்குமிடங்கள் வைத்திருக்கும் நபர்கள் இந்தக் கருத்துக்களிலும் தில்லுமுல்லு செய்வதுண்டு - அவர்களே வேறுவேறு மின்னஞ்சல்கள் மூலம் தங்களது தங்குமிடம் குறித்து சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து விடுவதும் நடக்கிறது. 



இப்படியான பல வசதிகள் லான்ஸ்(d)டௌன் பகுதியில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அங்கே இருந்த தங்கும் இடங்கள் எங்களுக்குத் தோதாக இல்லை. இடம் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக - நாள் வாடகை ஒரு அறைக்கு ஆறாயிரம் என்ற அளவில் தான் இருந்தது.  அதனால் அங்கே தங்காமல் சற்றே தள்ளி இருக்கும் ஒரு இடத்தில் தங்க முடிவு செய்திருந்தோம்.  அப்படி எங்களுக்குக் கிடைத்த ஒரு இடம் - SHIVALIK RIVERINE HOMESTAY என்கிற தங்குமிடம். லான்ஸ்(d)டௌன் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.  தங்குமிடத்திற்குச் செல்லும் முன்னர் லான்ஸ்(d)டௌன் பகுதியில் இருக்கும் ஒரு சில சுற்றுலா தலங்களைப் பார்த்து விட்டு தங்குமிடம் செல்லலாம் என எங்கள் ஓட்டுனர் அபிப்ராயம் சொன்னார். சரி என நாங்கள் சென்று வந்த சில இடங்கள் என்ன, அந்த இடங்கள் குறித்த தகவல்கள் என அனைத்தும் வரும் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லியிலிருந்து…





18 கருத்துகள்:

  1. தங்குமிடத்தின் வாடகை சற்றே அதிகம்தான் என்று தோன்றுகிறது.  அந்த மாடி குடிசை அழகாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்குமிடத்தின் வாடகை சற்றே அதிகம் தான் என்றாலும் தங்குமிடங்களின் தரம் நன்றாகவே இருக்கிறது. தனியார் தங்குமிடங்கள் குறித்த சில மேலதிகத் தகவல்களை தற்போது இணைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாடகை அதிகம் என்றாலும் இயற்கைச் சூழல். பொதுவா சுவாமி நாராயணன் ஆலயத்தை ஒட்டி இருக்கும் அவர்களது தங்குமிடங்கள் சுத்தமாகவும் ஓரளவு கட்டணத்துடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன். மலைப் பகுதிகளில் தங்க வேறு என்ன ஆப்ஷன்கள் உள்ளன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாமி நாராயண் அருகே இருக்கும் தங்குமிடங்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

      தங்குமிடங்கள் குறித்த மேலதிகத் தகவல்களையும் தற்போது பதிவில் சேர்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. வெங்கட்ஜி தங்குமிடங்கள் குறித்த விவரங்கள் ரொம்ப பயனுள்ளவை. முதலாவதாகப் பகிர்ந்திருப்பவையும் இரண்டாவதாகப் பகிர்ந்திருப்பவையும் GMVN உடையாதுதான் என்றாலும் இரண்டாவதாகப் பகிர்ந்திருப்பவற்றின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது இல்லையா. முதலாவதும் சூழலைப் பார்க்கறப்ப ஓகே என்றுதான் தோன்றுகிறது. தங்குமிடங்களைக் குறித்துப் பார்த்து வைத்துக் கொண்டேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்குமிடங்கள் குறித்த தகவல்கள் யாருக்கேனும் பயன்பட்டால் நல்லதே. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. Home stay குறித்து அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஜி.

    இங்கு Home stay என்று எங்கள் வீட்டருகில் இருக்கின்றன. அழகான வீட்டிலுள்ள அறைகளை பொதுவான சமையலறையுடன் ஆனால் காஃபி, டீ, வெந்நீர், சின்ன சின்ன உணவு - bread sandwich, noodles போன்றவை செய்து கொள்ளலா. வாஷிங்க் மெஷின் எல்லாம் கொடுத்து, டிவி பொது அறை என்று எல்லாமாக ஒரு நாள் வாடகை இருவருக்கு (ஒரு அறை) 2800.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான தங்குமிடங்கள் நல்லதாகவே இருக்கின்றன. சில இடங்களில் வீட்டின் ஒரு பகுதியில் இருப்பவர்கள் தங்களது வீட்டில் சமைத்தும் தந்து விடுகிறார்கள். சில இடங்களில் தங்கியபோது நன்றாகவே உணர்ந்தேன்.

      உங்கள் வீட்டின் அருகே இருக்கும் வசதி குறித்தும் இங்கே தகவல் தந்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. வாசக வரிகள் மிக அருமை எல்லோருக்கும் தெரிய வேண்டிய ஒன்று. ஆரோக்கியம்.

    தங்குமிடம் பற்றி மிக விரிவாக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

    சில சமயங்களில் ஆன்லைன் புக்கிங்க் ஏமாற்றத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசக வரிகள் குறித்த தங்களது கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டியதே.

      ஆன்லைன் புக்கிங் - சமயங்களில் ஏமாற்றிவிடும் என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. மிக அருமையான வாசகம், உண்மையை சொல்லும் வாசகம்.
    பயண விவரங்கள், தங்குமிடம் பற்றி விரிவான தகவல் பயனுள்ளது.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமையாக உள்ளது.

    பயணத்தில் தங்குமிடத்தின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்குமிடங்களின் பல தகவல்களும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    பின் நீங்கள் சென்று பார்த்த அனைத்து சுற்றுலா பகுதிகளையும் அறிய ஆவலாக உள்ளேன். மேலும் தங்களின் பயணத்துடன் உடன் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. தங்குமிட தகவல்கள் படங்கள் அருமை. பலருக்கும் உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. பரண் அறை பார்க்கவே ஆசையா இருக்கு ! பயணங்களில் தங்குமிடங்களைத் தேர்வு செய்வது ரொம்பவே முக்கியம். நீங்கள் சொன்ன GMVN எனக்குப் புதுத்தகவல். SHIVALIKனு பார்த்ததும் சண்டிகருக்குப் போயிட்டேன். ஷிவாலிக் குன்றுகள்தான் ஊரைச் சுத்தி !

    துளசிகோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷிவாலிக் குன்றுகள் - ஒவ்வொரு இடத்திலும் இப்படியான பெயர்கள் - மறக்க முடியாதவை தான்.

      GMVN கட்வால் பகுதியில் என்றால் KMVN குமாவ்ன் பகுதியில். அரசு நிர்வகிக்கும் தங்குமிடங்கள் என்றாலும் நன்றாகவே இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....