செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

கதம்பம் - நேர்காணல் - ரத சப்தமி - கேசரி - Seeds Laddu


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - புலிகள் நடமாட்டம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 



*******


ரோஷ்ணி கார்னர் - நேர்காணல் - 15 ஃபிப்ரவரி 2024:




மகள் கல்லூரிப்படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆறு மாத டிப்ளமோ கோர்ஸாக Diploma in journalism பயின்று வருகிறாள்! அதில் இந்த வார Assignmentக்காக அக்கம்பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவரிடம் 5 கேள்விகளைக் கேட்டு Interview பண்ண வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். 


உடனே அவள் 'அம்மா உங்கிட்ட தான் எனக்கு Comfortableஆ இருக்கும்! நான் கேள்வியெல்லாம் ரெடி பண்ணிக்கறேன்! நீ பதில் சொல்லணும்! என்ன?” என்று சொல்லி விட்டாள். அவளின் முதல் Interview இது! 


இதோ அவள் என்னிடம் கேட்ட கேள்விகளும் என் பதில்களும்...🙂


திருமதி ஆதிலக்ஷ்மி ஒரு சராசரி  குடும்பத் தலைவி! கல்லூரிப் படிப்புக்கு பின் திருமணம், குழந்தை என்று இவரின் வாழ்க்கைப் பயணம் அமைந்து விட்டது! குடும்பச் சூழலால் அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை எனினும் தன் திறமைகளை எப்படியாவது வெளிக்காட்ட நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்! அதன் பின்  கடந்த 13 வருடங்களாக ‘ஆதி வெங்கட்’ என்ற புனைப்பெயரில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்! 


இவரின் எழுத்துப்பயணம் blog, facebook, youtube என்று சமூக வலைத்தளங்களில் சிறுகதைகள், தொடர்கள், வாசிப்பனுபவங்கள், சமையல் ரெசிபிகள் என்று பகிர்ந்து கொண்டு வருகிறார். Amazonல் இதுவரை பத்து மின்னூல்களை (Ebook) வெளியிட்டிருக்கிறார்.


1)உங்களின் லட்சியம் என்னவாக இருந்தது?


சிறுவயதில் குழந்தைகளின் கனவுகள் மாறிக் கொண்டே இருக்கும்! அதுபோல் தான் எனக்கும் முதலில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்றும் பின்பு மருத்துவராக பணியாற்றி சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம்  லட்சியங்கள் இருந்தது! கால ஓட்டத்தில் வாழ்க்கை வேறுமாதிரி என்னை பயணிக்க வைத்திருக்கிறது!


2)எழுத்தில் தங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது?


2009ஆம் ஆண்டில் என் கணவர் தனக்காக ஒரு வலைப்பூ (blog) ஒன்றைத் துவங்கி எழுத ஆரம்பித்தார். அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வரவே என்னையும் எழுதச் சொன்னார். அப்படி 2010ல் துவங்கியது தான் என் எழுத்து! 


3)சூழ்நிலை ஒரு எழுத்தாளரை முடக்கி விடுமா?


ஆமாம் என்று தான் நான் சொல்வேன்! ஏனென்றால் மனதில் அமைதியும், உற்சாகமும், உத்வேகமும் இருக்குமானால் பார்க்கும் காட்சிகள் மனதில் பதிந்து அவை எழுதுவதற்கு உண்டான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தரும்! சூழ்நிலை சரியில்லாத போது அந்த எழுத்து உயிரோட்டத்துடன் இருக்காது என்பது என் கருத்து!


4)எழுத்தை எவ்வாறு ரசிக்க வேண்டும்?


அமைதியான சூழலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை புரட்டி வாசிக்கும் போது அதில் உள்ள ஒவ்வொரு வரியும் நம்மை அசை போட வைக்கும்! அந்தக் காட்சியை மனதில் ஓட்டி பார்த்து பதற வைக்கும்! மகிழ வைக்கும்! இதுவே எழுத்தை நாம் ரசிக்கும் விதம்!


5)தங்கள் எழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நிச்சயம் ஒவ்வொரு பதிவையும் எழுதும் போதும் அதை இன்னும் மெருகேற்றிச் செல்லணும் என்று தான் நினைக்கிறேன்! எழுதுவதற்கு எனக்கு பிடித்திருக்கிறது! என் உணர்வுகளையும் திறமைகளையும் வெளிப்படுத்த எழுத்து எனக்கு ஒரு வடிகாலாய் அமைந்துள்ளதாக நினைக்கிறேன்!


இதுவரை நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அழகாக பதில் தந்த என் அம்மா ஆதி வெங்கட்டிற்கு மிக்க நன்றி! 


ரோஷ்ணி வெங்கட்.


*******


ரத சப்தமி - கேசரி - Seeds Laddu - 16 ஃபிப்ரவரி 2024:



ரத சப்தமி!


உலக உயிர்கள் அனைத்திற்கும் சூரிய ஒளியும் அவன் கிரணங்களால் ஏற்படும் வெப்பமும் மிகவும் அவசியமானது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வரும் சூர்யபகவானை வழிபடும் நாள் இன்று! இன்றைய நாளில் வாசலில் தேர்க் கோலமிடுவர்.


கேசரி!


மகளின் கல்லூரித் தோழிக்கு இன்று பிறந்தநாள் என்று சொல்லவும் ஒரு டிபன் பாக்சில் சுடச்சுட கேசரி கிளறி கொடுத்து விட்டேன். அந்தத் தோழி வெளியூரிலிருந்து வந்து இங்கு ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்! பிறந்தநாளன்று பெற்றோருடன் இருக்க முடியாமல் ஹாஸ்டலில் இருப்பதைப் பற்றிய தவிப்பு அவளிடம் இருக்குமில்லையா?? அதனால் வீட்டிலிருந்து செய்து கொடுக்கும் உணவாக இருக்கட்டும் என்று நினைத்தேன்! 


Seeds laddoo...!


இந்த லட்டுவை பற்றி சில நாட்களுக்கு முன்பு கூட எழுதி பகிர்ந்திருந்தேன்! தாவர விதைகளான சூர்யகாந்தி விதை, ஆளி விதை, பரங்கி விதை, வெள்ளரி விதை போன்றவற்றில் உடலுக்கு நன்மை தரக்கூடிய  ஏராளமான சத்துகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது!


விதைகளுடன், உலர் பருப்புகளையும்  சேர்த்துக் கொண்டு வறுத்து பொடியாக்கி வெல்லப்பாகு வைத்து உருண்டை பிடித்திருக்கிறேன். தினமும் ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்ளலாம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


13 கருத்துகள்:

  1. ஒரு பண்பட்ட பத்திரிகையாளர் உருவாகிறார் என்று தெரிகிறது.  வலைப்பக்க அனுபவம் கைகொடுக்கும்! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஜர்னலிசம்.... இன்னொரு தகுதி மகளுக்கு. சிறப்பாக வளரட்டும். கல்லூரிப் படிப்புக் காலங்களில் அவர்களின் உலக அறிவு சட்டென் மிக அதிகரிக்கும். பெற்றோரைத் தவிர உலக விஷயங்கள் அதிகமுண்டு எனப் புரிந்துகொள்ளும் காலம். நம் கையில் இருந்த சிட்டுக்குருவியா என நாமே அதிசயிப்பதுபோல அறிவில் எண்ணத்தில் வளர்வார்கள், அவர்களுக்கென ஸ்டிராங்கான எண்ணவோட்டம் வளரும் வயது அது. எல்லாம் நல்லபடியாக வரும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை. முகநூலில் படித்தேன். ரோஷ்ணி திறமைகள் வளர்ந்து கொண்டே போகிறது நேர்காணல் மிக அருமை. ஜர்னலிசம் படிப்பது மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    கோலம் , லட்டு எல்லாம் அருமை. மகளின் தோழிக்கு கேசரி செய்து கொடுத்தது அருமை, அவர் மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. தற்போதைய சில இளைஞர்களை காணும் போது எதிர்கால உலகை பற்றி ஒரு நம்பிக்கையின்மை தோன்றி மறையும். ஆனால் ரோஷ்ணி போன்ற சரியான திசையில் செல்லும் திறமைசாலிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
    அம்மாவின் பதில்கள் அனைத்தும் அருமை. அதிலும் எழுத்துக்களை ரசிக்கும் முறை சொல்லியது தெளிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சி.... நம்ம அப்பாவும் நம் பதின்ம வயதில் நம்மைப் பார்த்து இப்படித்தான் மனதில் எண்ணியிருப்பார்கள்னு தோணித்து.

      நீக்கு
  5. ஆதி 3 வது கேள்விக்கு உங்கள் பதிலை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன். கை கொடுங்க நான் அடிக்கடி நினைப்பது....டிட்டோ டிட்டோ....

    4 வதுக்கும் உங்கள் பதில் சூப்பரோ சூப்பர். மிக அருமை

    ரோஷ்ணி!!! குடோஸ்!!! வாழ்த்துகள். ஆதி நீங்க முன்னரே சொல்லியிருந்த நினைவு. Journalism கூட மேற்படிப்பு லிஸ்டில் இருக்குன்னு...வாழ்த்துகள் ரோஷ்ணி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. 5 வதிற்கும் ஹைஃபைவ்! ஆதி.

    ரோஷ்ணிக்கு மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள். நல்ல ஒரு ஊடவியலாளர் உருவாகுகிறார். யுவ யுவதிகள் தங்கள் எதிர்காலத்தை அழகாக வடிவமைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணிப்பது மிகச் சிறந்த விஷயம். அதற்குப் பக்க துணையாகப் பெற்றோர். இது ரொம்ப முக்கியம். அது இருக்கும் போது ரோஷ்ணி நன்றாக வருவார்! நிச்சயமாக!

    சந்தோஷமாக இருக்கிறது இப்படியான குழந்தைகளைப் பார்க்கும் போது,

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ரோஷினியின் தோழிக்கு கேசரி அனுப்பியது மகிழ்வான விஷயம். என் மகன் படித்துக் கொண்டிருந்த போது வீட்டிற்கு வரும் விடுதியில் தங்கியிருந்த நட்புகளும், உள்ளூர் நட்புகளும் நம் வீட்டிற்கு வந்து வீட்டில் அவர்கள் முழு நேரமும் இருந்து சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, விளையாடியது, போட்டிகளுக்குப் பயிற்சி செய்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. பாண்டிச்சேரி வாழ்க்கை பொற்காலம்!

    நினைவிருக்கு விதைகள் லட்டு முன்னர் சொல்லியிருந்தீங்க, நன்றாக இருக்கிறது இப்போது செய்து போட்டிருக்கும் படமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. செல்வி ரோஷ்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. பாராட்டுகள்..

    பதிவு சிறப்பு..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  9. உண்மையாக சிறந்த கேள்விகள். அதற்கேற்ற உண்மையான பதில்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. அருமையான கேள்விகளுக்கு தெளிவான அழகான பதில்கள். .seeds லட்டுவை விடl இனிமையான கேசரி நிகழ்வு மனதை இணிக்க வைத்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரி

    கதம்ப பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது

    தங்கள் மகளின் கல்லூரி படிப்பு சம்பந்தமாக தங்களிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு தாங்கள் அளித்த பதில்களும் வெகு சிறப்பாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன். அருமையாக கேள்விகள் கேட்ட தங்கள் மகளுக்கும், அதற்கு தக்க முறையில் பதில்களை தந்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

    தங்கள் மகளின் தோழியின் பிறந்த நாளுக்காக நீங்கள் கேசரி கிளறி தந்தது ரொம்பவும் நன்று. அன்றைய தினத்தில் அவரும் அதை விரும்பி சாப்பிட்டு மகிழ்ச்சியடைந்திருப்பார்.

    ரதசப்தமி கோலமும், அதன் விபரங்களும், சக்தி மிக்க விதைகளின் லட்டு உருண்டைகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ரோஷிணியின் திறமைக்கு வாழ்த்துகள். தொடரட்டும் அவரின் படிப்புகள்.
    கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....