திங்கள், 12 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று  பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான், அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும், குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன - ஓஷோ.

******* 

இத்தொடரில் இதுவரை மூன்று பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  

 

இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று

 

இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு

 

இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 

 

தொடர்ந்து இந்தப் பயணம் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

வழியெங்கும் கரும்பு: 

காலை உணவிற்குப் பிறகு எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. தில்லியிலிருந்து செல்லும் போது கதோலி (Khatauli) தாண்டியதிலிருந்தே வழி நெடுக கரும்புத் தோட்டங்கள் தான்.  எங்கே பார்த்தாலும் கரும்பு விளைந்திருந்தது.  சில இடங்களில் கரும்பு வெட்டி வயலிலேயே போட்டு வைத்திருந்தார்கள்.  ஆங்காங்கே இருந்த Sugar Factory-கள் வாயிலிலும் குவியல் குவியலாக கரும்பு போட்டு வைத்திருப்பதோடு, சாலைகளிலும் டன் கணக்கில் கரும்புடன் செல்லும் பல வித வாகனங்களையும் காண முடிந்தது.  ஆங்காங்கே சில இடங்களில் கரும்பைக் காய்ச்சி வெல்லம் எடுக்கும் இடங்களையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக மவானா எனும் இடத்தில் பெரிய அளவில் சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பார்க்க முடிந்தது. Mawana Sugar Mill எனும் பிரபலமான சர்க்கரை தொழிற்சாலை குறித்து உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அந்த தொழிற்சாலை இந்த மவானா நகரில் தான் அமைந்துள்ளது. தொழிற்சாலை கடக்கும் போதெல்லாம் ஒரு வித துர்நாற்றம் (Molasses).  வெல்லம் தயாரிக்கும் இடங்களிலும் இப்படியான துர்நாற்றம் வீசியது.  வெள்ளம் தயாரிக்கும் இடத்தில் வெல்லம் வாங்கினால் நன்றாக இருக்கும் - ஹிமாச்சலில் இப்படி வாங்கி இருக்கிறோம் - இங்கேயும் வாங்கலாம் என ஒரு இடத்திற்குச் சென்றபோது, அந்த இடத்தைப் பார்த்ததுமே, வெல்லம் வாங்கத் தோன்றவில்லை. 


 

வடக்கில் வெல்லம் காய்ச்சும் போது, வெல்லம் வெள்ளையாக வருவதெற்கென அதிலே சில பொருட்களைச் சேர்த்து விடுவதுண்டு.  அப்படிச் சேர்த்த வெல்லத்தை, மசாலா சேர்த்த வெல்லம் எனச் சொல்வதுண்டு. நான் பார்த்த இடத்திலும் இப்படியான மசாலா சேர்த்த வெல்லம் தான் கிடைத்தது.  பெரிய பெரிய தட்டுகளில் ஊற்றி பாளம் பாளமாக வைத்திருந்தார்கள்.  பொதுவாக நாம் பார்க்கும் வண்ணத்தில் மட்டுமல்லாது அந்த இடத்தில் பார்த்த வெல்லம், பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்திலும் இருந்தது.  அங்கே சென்று மசாலா இல்லாத வெல்லம் கேட்டதற்கு அசிரத்தையாகவே பதில் சொன்னார் அந்த இடத்தின் உரிமையாளர்.  மேலும் ஏதோ ஒருவித கோபத்துடனேயே பதில் சொன்னார் என்பதால் என்னால் அங்கே படங்கள் எடுக்க முடியவில்லை.  இல்லை என்றால் பச்சை மற்றும் சிவப்பு வண்ண வெல்லக் கட்டிகளை படம் எடுத்து வந்திருப்பேன்.  அது மட்டுமல்லாது அந்த இடத்தில் வெல்லம் தயாரிப்பதையும் ஒரு காணொளியாக எடுத்திருக்கலாம்! முகத்தை உர்ர்ரென்று வைத்துக்கொண்டு “வந்துட்டான் வெல்லம் வாங்க!” என்ற Bபாவத்துடன் அந்த இடத்தின் உரிமையாளர் இருக்கவே, ”போய்யா நீயும் உன் வெல்லமும்!” என நானும் அங்கிருந்து அகன்று விட்டேன்.  


 

இன்னும் ஒரு விஷயமும் சொல்ல வேண்டும்.  நம் ஊர் போல இங்கே கிடைக்கும் கரும்பு, கருப்பு நிறத்தில் இருக்காது. எல்லாமே வெள்ளை நிறம் தான்.  ஆனால் உத்திரப் பிரதேசம் முழுவதும் நான் பார்த்த கரும்பு எல்லாமே மண் நிறத்தில் தான் இருந்தது.  அதாவது சாலையிலிருந்து கிளம்பும் புழுதி மண் அனைத்தும் கரும்புத் தோட்டத்திலும் கரும்புகள் மீதும் படர்ந்து அழுக்காகவே காட்சியளித்தது.  அத்தனை கரும்புகளையும் அப்படியே வெட்டி வண்டிகளில் ஏற்றி தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வதைப் பார்க்கும்போது அப்படியே மண்ணோடு மண்ணாக கரும்பை சக்கையாகப் பிழிந்து சர்க்கரை எடுப்பார்களே, இதையா நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. எந்த இடத்திலும் சுத்தமான கரும்பையே பார்க்க முடியவில்லை என்பது வேதனையான உண்மை.  கரும்புத் தோட்டங்கள் நிறையவே இருந்தாலும், இப்படி அழுக்காக இருந்த கரும்புத் தோட்டத்தினை படம் எடுக்க எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை.  என்ன ஒரு அழுக்கு! அப்பப்பா! ஆங்காங்கே கரும்பைப் பிழிந்து சாறும் விற்றுக் கொண்டிருந்தார்கள் என்றாலும் கரும்புச் சாறு பிடிக்கும் என்றாலும், அந்த அழுக்கான கரும்பை சுத்தம் செய்யாமல் சாறு எடுப்பார்களோ என்ற காரணத்தினாலேயே எங்கேயும் கரும்புச் சாறு சாப்பிடவில்லை. 

 

மோசமான சாலைகள்: நாங்கள் சென்ற சமயம் பார்த்த மலைச்சரிவு…

 

உத்திரப் பிரதேசத்தில் உள்ள நஜீபாபாத் (Najeebabad) தாண்டிய சில கிலோ மீட்டர் தூரத்தில் உத்திராகண்ட் எல்லை ஆரம்பித்து விடுகிறது.  உத்திராகண்ட் ஆரம்பித்த பிற்கு மலைப்பகுதியும் ஆரம்பித்து விடுகிறது. உத்திரப்பிரதேசத்தில் மீரட் நகரைத் தாண்டிய பிறகு இருக்கும் சாலை பெரும்பாலும் மோசமான நிலையிலேயே இருக்கிறது. ஆங்காங்கே பள்ளங்கள், பெரும்பாலான இடங்களில் மண் சாலைகள் போலவே இருக்கிறது. காலை 11 மணிக்கு காலை உணவாக பராட்டா சாப்பிட்டு புறப்பட்ட எங்களுக்கு, சுமார் 72 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க சற்றேறக்குறைய மூன்று மணி நேரம் எடுத்தது! இத்தனைக்கும் மலைப்பிரதேசம் குறைவு தான். உத்திராகண்ட் எல்லையைத் தொட்டபிறகே மலைப்பகுதி! மலைப்பகுதியிலும் சாலைகள் பழுதுபட, பழுதுபட சரி செய்து கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் கோட்த்வார் பகுதியில் மட்டும் 14 முறை மேக வெடிப்புகள் (Cloud Burst) ஏற்பட்டு இருக்கின்றன! (சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விடக் குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாக பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு.) 

 

அப்படி ஏற்பட்ட மேகவெடிப்புகள் காரணமாக நிறைய இடங்களில் மலைச்சரிவுகளும், சாலைகளில் பெரிய வெடிப்புகளும் ஏற்பட்டு விட, அவற்றை தொடர்ந்து சரிசெய்து வருகிறார்கள்.  ஆனாலும், இயற்கையின் சக்திக்கு முன்னால் மனித சக்தி எம்மாத்திரம்! இயற்கை சில நிமிடங்களில் பேரழிவை ஏற்படுத்தி விட, அதனை மனித சக்தி, இயந்திர சக்தியின் துணை கொண்டு சீராக்குவதற்கு பல நாட்கள் ஆகின்றன.  நாங்கள் சென்ற சாலைகளிலும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த அப்படியான பல மலைச்சரிவுகளை பார்க்க முடிந்தது.  அப்படியான இடங்களில் மிக மிக மெதுவாகவே வாகனங்கள் கடந்தது - அதனால் மலைச்சாலைகளில் நீண்ட காத்திருப்பு வரிசையும் இருந்தது.  சில இடங்களில் இப்படியான சூழல்களைக் கடந்தே நாங்கள் பயணித்தோம்.  

 

தொடர்ந்த எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன, போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

 1. கருப்பு ஆலை , கருப்பு தயாரிக்கும் முறை எல்லாம் பார்த்தபின் சாப்பிட பிடிக்காது .
  எங்கும் தூசி புழுதி அதுவும் வெல்லம் மேல்.

  டெல்லியில் வெல்லம் நல்லா இருக்காது. தமிழகத்திலிருந்து சில கடைகளில் வாங்கி விற்பார்கள் அதை தான் வாங்குவோம். அல்லது இங்கிருந்து தூக்கி கொண்டு போவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக வடக்கில் குளிர் காலங்களில் தினமும் கொஞ்சமாவது வெல்லம் சாப்பிடுவார்கள் - குளிர் நாட்களில் உடலுக்கு சூடு தரும் என்பதற்காக. அதற்காக ஹிமாச்சல பிரதேசம்/பஞ்சாப் நண்பர்களிடம் சொல்லி வைத்து அவர்கள் ஊரிலிருந்து வரும்போது சுத்தமான/மசாலா கலக்காத வெல்லம் வாங்கி வரச் சொல்வோம்.

   புழுதி படிந்த கரும்பு, மற்றும் தயாரிக்கும் முறை பார்க்கப் பிடிக்காது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 2. இயற்கையின் சக்திக்கு முன்னால் மனித சக்தி எம்மாத்திரம்! //

  ஆமாம்.
  வாசகம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இயற்கைக்கு முன் மனித சக்தி ஒன்றுமே இல்லை - ஆனாலும் அது நம்மில் பலருக்கும் புரிவதே இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. பொதுவாக நம் நாட்டில் உணவு தயாரிப்புகளை நேரில் பார்த்தால் சாப்பிட மனசு வராது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். பார்த்தால் சாப்பிடப் பிடிக்காமல் போய்விடுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. கரும்புத்தோட்டம் பார்க்க அழகாக இருந்திருக்கும்.

  கரும்பு சுத்தமில்லாமல் செய்வது பார்க்கவே எப்படி வாங்க மனம் வரும் ? ஏன்தான் இப்படி தயாரிக்கிறார்களோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரும்புத்தோட்டம் அழகு தான் - ஆனால் சாலைகள் மோசமாக இருப்பதால் அதன் ஓரங்களில் இருக்கும் தோட்டங்களில் கரும்பு முழுவதும் புழுதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 5. (Molasses) - ஆமாம் ஒரு வ்கையான துர்நாற்றம் அடிக்கும். இங்கும் மாண்டியா பகுதியில் வெல்லம் தயாரிக்கறாங்க சுண்ணாம்பு அனுமதிக்கப்படும் ஆனால் கூடுதலாக பல ரசாயனங்களை சேர்க்கிறார்கள் வெல்லம் வெள்ளையாக இருக்க. அதைக் குறித்த விழிப்புணர்வு கட்டுரை The bitter truth of Karnataka's jaggery என்று வந்தது. எழுதுவதற்காக இந்தச் சுட்டியை எடுத்து வைத்திருந்தேன் இங்கு உங்கள் பதிவில் பார்த்ததும் இதை இங்கு கொடுத்தேன்.

  பொதுவாக வெல்லம் நல்ல dark brown நிறத்தில் இருப்பவை நல்லது என்பார்கள். பார்த்துதான் வாங்குகிறோம் நாங்கள்.

  கரும்புச் சார் எல்லாம் குடிப்பது கவனமாக இருக்க வேண்டும்.

  தமிழகத்தின் பகுதிகளில் பரவாயில்லை நன்றாக இருக்கும். தில்லியில் நன்றாக இருப்பதில்லை. பேசாமல் Parys வெல்லப்பொடியை வாங்கிக்கலாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரும்புச் சாறு சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை - வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு - ஒரு வேளை இப்படியான கரும்புகள் சுத்தமானவையாக இல்லாமல் இருக்கலாம். விழிப்புணர்வு கட்டுரை - படித்துப் பார்க்கிறேன்.

   பஞ்சாப் பகுதிகளில் கிடைக்கும் வெல்லம் நன்றாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 6. ஆமாம் இயற்கையின் சக்திக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை. மேக வெடிப்புகள் இயற்கை நிகழ்வு. ஒன்றும் செய்ய முடியாது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடக்கின் மலைப்பகுதிகளில், குறிப்பாக உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலில் இப்படியான மேகவெடிப்புகள் அதிகம் நடப்பதுண்டு - இயற்கை மீண்டும் மீண்டும் தனது அபார சக்தியை மனிதர்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 7. இப்படியெல்லாம் நீங்கள் கோபப்படக் கூடாது.  அப்புறம் எப்படி எங்களுக்கு அந்தப் படம் எல்லாம் காணக்கிடைக்கும்?!!  அழுக்காக இருந்தாலும் அழகாக இருந்தாலும் கரும்பு கரும்புதானே ஜி?  மேலும் அக்கரும்புச்சாறு பிழிய கரும்பின் மேல்தோலை சீவி விடுவார்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் - ஹாஹா... படம் அடுத்த முறை பார்த்தால் எடுத்துவிடுவோம்!

   அழுக்காக இருந்தாலும் கரும்பு கரும்பு தானே! அது சரி!

   கரும்பின் மேல் தோலை இங்கெல்லாம் சீவுவதில்லை. ஈரப்பதம் உள்ள துணியால் ஒன்றிரண்டு முறை துடைப்பார்கள் - அவ்வளவு தான். அந்தத் துணியை பார்த்தால், இதுக்கு துடைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றிவிடும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. தயாரிக்கும் இடத்திற்குச் சென்று பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியும். சில மாதங்களுக்கு முன் சந்தித்த ஓய்வுபெற்ற பேராசிரியர், கவ்லூரி மூலமாக சீனி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முப்பது வருடங்களுக்குமுன் சென்று பார்த்து அதுபற்றி விளக்கமாக மாணவர்களுக்காக நோட்ஸ் எடுத்தபிறகு வீட்டில் சீனி வாங்குவதை நிறுத்திவிட்டதாகச் சொன்னார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சந்தித்த பேராசியரின் அனுபவம் குறித்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 9. பெங்களூரில் கிடைக்கும் கரும்புச்சாறு மிகவும் சுத்தமான முறையில் எடுப்பாங்க. கரும்பு வளர்க்க நிறைய கெமிக்கல் உரங்கள் பயன்படுத்தப்படலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியில் ஒரு சில இடங்களில் கரும்புச் சாறு மிகவும் சுத்தமாக கிடைக்கிறது. அதில் கூட சில ஃப்ளேவர்கள் - சாக்லேட் பொடி கலந்த சாறு போன்றவை கிடைக்கின்றன. அது குறித்து முன்பு ஒரு முறை எழுதிய நினைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 10. கரும்புச் சாறு குடிப்பது அபூர்வம். வெல்லம் தயாரிக்கும் இடத்தை எடுத்துப் போட்டிருக்கலாம் வெங்கட்ஜி. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் எடுத்துப் போடுங்கள். பொதுவாகவே வெல்லம், சர்க்கரை எல்லாமே கலப்படமாகக் கிடைக்கின்றன. கடைகளில் வருவனவற்றில் நமக்கு எப்படித் தெரியும் என்ன கலந்திருக்கிறார்கள் என்பதெல்லாம்.

  மேகவெடிப்பு - தமிழில் மேகவெடிப்பு இல்லையா? ஆமாம் வடக்குப் பகுதிகளி இப்படியான இயற்கைச் சீற்றங்கள் நிகழ்வதும் கற்கள் புரள்வதும் இயல்புதான் இல்லையா செய்திகளில் பார்ப்பதுண்டே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....