வியாழன், 1 பிப்ரவரி, 2024

டேராடூன் பயணம் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் - சூடா ஒரு கப் டீ பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******

 

டேராடூன் பயணத்தில் இது வரை ஆறு பகுதிகளாக உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இத்தொடரின் இதற்கு முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படித்திருக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன். இணைப்பில் சொடுக்கி ஒவ்வொரு பகுதியாக படித்துவிடலாம்! 

 

டேராடூன் பயணம் - பகுதி ஒன்று - அடாது மழைபெய்தாலும்

 

டேராடூன் பயணம் - பகுதி இரண்டு - இயற்கையும் நாமும்

 

டேராடூன் பயணம் - பகுதி மூன்று - நீச்சல் குளம்

 

டேராடூன் பயணம் - பகுதி நான்கு - டப்கேஷ்வர் மந்திர் 

 

டேராடூன் பயணம் - பகுதி ஐந்து - ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர்

 

டேராடூன் பயணம் - பகுதி ஆறு - Mindrolling Monastery, Dehradun

 

டேராடூன் பயணம் குறித்து எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லி இருந்தேன் இது அலுவலக வேலை சார்ந்த ஒரு பயணம் என்று. இந்தப் பயணத்தில் டேராடூன் நகரில் நான்கு நாட்கள் இருந்தாலும் கடைசி ஒரு நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் அலுவலகப் பணிகளே காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அழுத்தி எடுத்தது என்றும் சொல்லி இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.  கடைசி ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையாக அமைந்ததால், அன்று மாலை வரை எங்களுக்கு ஊர் சுற்ற கொஞ்சம் நேரம் கிடைத்தது - சனிக்கிழமை மாலை வரை அலுவலக வேலைகள் என்பதால் ஞாயிறு திரும்பும் வகையில் தான் விமானத்திற்கு முன்பதிவு செய்திருந்தேன். ஞாயிறு அன்று கிடைத்த மணித்துளிகளில் பார்த்த சில இடங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  ஆனால், டேராடூன் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில், பார்க்க வேண்டிய இடங்கள் என்று பார்த்தால் சில குறிப்பிட்ட இடங்களைச் சொல்லலாம்.  அந்த இடங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் வாருங்கள். 





Lachiwalla - டேராடூன் - ரிஷிகேஷ் - ஹரித்வார் நெடுஞசாலையில் டேராடூன் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து சற்றே விலகி இருக்கும் ஒரு சுற்றுலாத்தலம் இந்த Lachiwalla.  சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து இருக்க, படிகள் வழி சுஸ்வா என்கிற ஆற்றின் நீர் வழிந்து ஓடும் அழகான காட்சிகளை இந்த இடத்தில் பார்க்க முடியும். இந்த சிறிய ஆறு, டேராடூன் அருகிலேயே உற்பத்தியாகி சில கிலோமீட்டர் ஓடி கங்கையில் கலந்து  விடும். கங்கையில் கலப்பதற்கு முன்னர் வேறு எந்த நீர்நிலையுடனும் கலக்காது நேரடியாக கலப்பதால் இந்த ஆற்றுக்குக் கொஞ்சம் அதிக மதிப்பு! சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்து இருப்பதால் குடும்பத்துடன் சில மணி நேரத்தினைச் செலவழிக்க ஏற்ற இடம் இந்த Lachiwalla. படகுத் துறையும் இருப்பதால் படகு சவாரி, நீச்சல் போன்ற விஷயங்களில் ஈடுபட தோதான இடம் என்பதும் கூடுதல் வசதி.  ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இங்கே சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறார்கள் - திங்கள் அன்று மட்டும் விடுமுறை! பெரியவர்களுக்கு அறுபது ரூபாயும், சிறுவர்களுக்கு முப்பது ரூபாயும் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். 



 

Robber’s Cave: Robber’s Cave - உள்ளூரில் Ghuchhu Paani என்று அழைக்கப்படும் இந்த குகை ஒரு இயற்கையான குகை. குகையின் மொத்த நீளம் அறுநூறு மீட்டர், இது இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குகையின் உள்ளே ஒரு சிறு அருவியும் உண்டு. 1800-களில் பிரிட்டிஷ் காவல்துறையினரிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களை மறைத்து வைக்க, கொள்ளையர்கள் பயன்படுத்திய இடம் தான் இந்த இடம் - அதனால் தான் இந்த இடத்தின் பெயரும் Robber’s Cave. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் சுற்றி வர சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். குகை உள்ளே சுமார் இரண்டு முதல் நான்கு அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும் - அதன் உள்ளே நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் - அதற்குத் தகுந்த உடை அணிந்து செல்ல வேண்டியது அவசியம் என்பதையும் உங்களுக்கு இங்கே சொல்லி விடுகிறேன். போலவே மழைக்காலங்களில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். தினமும் காலை 07.00 மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்த இடம் திறந்திருக்கும்.  குகைக்குள் செல்ல நபர் ஒருவருக்கு ரூபாய் 35/- கட்டணம் உண்டு. 



 

ஸஹஸ்த்ரதாரா: மேலே சொன்ன Robber’s Cave அருகே இருக்கும் இன்னுமொரு இடம் ஸஹஸ்த்ரதாரா.  கந்தகப் பாறைகள் நிறைந்த இடம் வழியே Baldi ஆற்றின் தண்ணீர் வருவதால் இந்த நீருக்கு கந்தகத் தன்மை அதிகம். இந்த இடங்களில் குளித்தால் சருமப் பிரச்சனைகள் தீரும் என்பதும், அருந்தினால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தீரும் என்பதும் ஒருவித நம்பிக்கை.  இதற்கு முன்னர் டேராடூன் நகருக்குச் சென்ற சமயங்களில் ஒன்றிரண்டு முறை இங்கே குளித்திருக்கிறேன்.  இந்தப் பயணத்தில் அங்கே செல்லவில்லை.  சமீப காலங்களில் இங்கே ஒரு Ropeway வசதியும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 200/- ரூபாய் கட்டணம் கொடுத்து, உடன் கட்டோலா என்று ஹிந்தியில் அழைக்கப்படும் இந்த Ropeway-வில் பயணித்து இயற்கை எழிலை ரசிப்பதோடு இப்பகுதியில் இருக்கும் Step Farming அழகினையும், ஆற்றின் அழகையும் ரசிக்கலாம்.  காலை 09.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை இந்த Ropeway இயங்குகிறது. 



Clouds End...


Kempty Falls

இது தவிர சில வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன.  FRID என்று சுருக்கமாக அழைக்கப்படும் Forest Research Institute, Dehradun சென்றால் வனம் மற்றும் இயற்கை குறித்த பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். விருப்பம் இருந்தால் இந்த இடத்திற்கும் சென்று வரலாம்.  அதைத் தவிர டேராடூன் நகரிலிருந்து வெகு அருகில் (35 கிலோ மீட்டர்) இருக்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் மஸோரி என்று அழைக்கப்படும் இடம்.  தில்லியிலிருந்து பலரும் சென்று வரும் இடம் இந்த மசோரி.  அங்கே பார்க்கவென்று இருப்பது கெம்ப்டி அருவி (Kempty Falls), Gun Hill, Camel Back Road, Mall Road, Mussorie Lake, Jharipani Falls, Lal Tibba, Bhatta Falls, Clouds End போன்ற சில இடங்கள்.  இவை தவிர, சில வழிபாட்டுத் தலங்களும் இங்கே உண்டு.  மூன்றிலிருந்து நான்கு நாட்கள் இருந்தால் டேராடூன் மற்றும் மசோரி சென்று இயற்கை எழிலை ரசித்து வரலாம்.   டேராடூன் வரை விமானம் மற்றும் இரயில் வசதிகள் உண்டு. இந்தியத் தலைநகரிலிருந்து சாலை வழியாகவும் இங்கே பயணிக்க முடியும். 

 

எங்களது பயணம் குறித்த மேலும் சில தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள்.  குறுகிய நீரோட்டம்.  அதற்கும் ஆறு என்றுதான் பெயர்.  அதற்கும் தனிப் பெருமைகள் எல்லாமே சுவாரஸ்யம்.  சாண்டில்யன் இந்த திருடர் குகையைப் பார்த்திருந்தால் எதாவது கதையில் நுழைத்திருப்பார்!  அடர்த்தியான மேகக் கூட்டங்களை பார்க்கும்போது நம்மை மறந்து அதன் மேல் நடக்க முயற்சித்து விடுவோமோ என்கிற பயம் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடர்த்தியான மேகக் கூட்டங்களை பார்க்கும்போது நம்மை மறந்து அதன் மேல் நடக்க முயற்சித்து விடுவோமோ என்கிற பயம் வருகிறது!// ஆமாம் படத்தில் பார்க்கும்போதே அங்கே நடக்கத் தோன்றுவது உண்மை.

      பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நிர்மலா ரெங்கராஜன்1 பிப்ரவரி, 2024 அன்று 9:09 AM

    இன்றைய வாசகம் அருமை 👍
    படங்கள் அழகு.
    பயனுள்ள தகவல்கள் 👏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  3. அருமையான அழகான இடங்களைப் பற்றி அரிய தகவல்கள்.

    Robbers' cave அரை கிலோமீட்டர் இருக்கும் இல்லையா. பட்ங்கள் எல்லாம் அந்த இடங்களின் அழகைச் சொல்கின்றன. புதிய இடங்களைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. அழகான இடங்கள் நிறையவே இங்கே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் மிகவும் பிடித்தது. அருமை.

    பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்துக் கொண்டேன் ஜி. சுஸ்வா ஆறும் படங்களும். Lachiwalla பகுதியும் ஈர்க்கின்றன. அடுத்த Robber's cave மனதைக் கட்டிப் போட்டுவிட்டது. குகையும் உள்ளே அருவியும். நீரில் நடந்து செல்லும் வழியும் அதன் அருகில் உள்ள ஸஹஸ்த்ரதாரா வும் வெகு அழகு. ஆவலை ரொம்பவே தூண்டுகின்றன.

    மசோரி. அங்கே பார்க்கவென்று இருப்பது கெம்ப்டி அருவி (Kempty Falls), Gun Hill, Camel Back Road, Mall Road, Mussorie Lake, Jharipani Falls, Lal Tibba, Bhatta Falls, Clouds End போன்ற சில இடங்கள்// குறித்துக் கொண்டு விட்டேன்.

    Clouds end அந்த மேகக் கூட்டம் படம் செம அழகு. விமானத்தில் போகும் போது இப்படிப் பார்ப்பதில் நடக்க வேண்டும் போலத் தோன்றும்! அப்படி இருக்கு இந்தப் படமும்.

    ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    படங்கள் எல்லாம் மிக அருமை. அதுவும் அந்த மேக கூட்டங்கள் அழகு.

    டேராடூன் பயண செய்திகள் மிக அருமை.

    Ghuchhu Paani என்று அழைக்கப்படும் இந்த குகை ஒரு இயற்கையான குகை. கவனமாக செல்ல வேண்டிய குறிப்புகள் எல்லாம் பயனுள்ள தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த தகவல்கள் சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்து தெள்ளத் தெளிவாக இருக்கிறது. பஞ்சுப் பொதி போன்ற வானத்தின் படம் மிக அருமை. மேலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிய அருவிகள் படங்களும், குகை பற்றிய படங்களும், ,அதன் விபரங்களும் நன்றாக உள்ளது. சுவாரஸ்யமான இந்த பயணப்பதிவை தொடர்கிறேன்.

    இதன் முந்தைய பகுதிகளை படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவில் பகிர்ந்து கொண்ட வாசகம், தகவல்கள் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முந்தைய பகுதிகளையும் முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....