புதன், 28 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - நயார் ஆற்றங்கரையில் - பகுதி பதினொன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இத்தொடரில் இதுவரை பத்து பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு


லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது


லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து





சென்ற பகுதி வரை சொன்னது போல, எங்கள் லான்ஸ்(d)டௌன் பயணத்தில் முதல் நாள் நிகழ்வுகள் குறித்தும் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் குறித்தெல்லாம் பார்த்தோம்.  எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகளையும், அனுபவங்களையும் இந்தப் பகுதியிலிருந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்த எங்கள் தங்குமிடத்தில் இரவு நல்ல உறக்கம். அதிகாலை எழுந்து தயாராகி மீண்டும் நயார் ஆற்றங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  முதல் நாள் இரவே அப்பகுதிக்குச் சென்றபோது நிறைய கருவேப்பிலைச் செடிகளை பார்த்தோம்.  மேலே புழுதி படர்ந்திருந்தாலும், அப்படி இல்லாத இடங்களில் கருவேப்பிலைச் செடியிலிருந்து இலைகளை பறித்து எடுத்துச் செல்ல வேண்டும் என முதல் நாளே முடிவு செய்திருந்தனர் குழுவினர்.  தலைநகர் தில்லியில் கருவேப்பிலை சில வீடுகளில் இருக்கின்றன என்றால் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதனால் கிடைக்கும் இடத்தில் எடுத்துக் கொள்ளலாமே என ஒரு திட்டம்.

 



தங்குமிடத்தின் எதிரே இருந்த மலைப்பகுதியில் சிறிது ஏறி நிறைய கருவேப்பிலை பறித்தோம். அங்கே இருந்த சில செடிகள் மற்றும் பூக்கள் வித்தியாசமாக இருந்தன.  சில நிமிடங்கள் கழித்து நயார் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். முதல் நாள் மாலை நேரத்தில் அத்தனை தெளிவாக பார்க்க முடியாத இடங்களை இந்த காலை நேரத்தின் சூரிய ஒளியில் நன்றாக பார்க்க முடிந்தது. வித்தியாசமான செடி,கொடிகளை பார்த்தால் உடனே நின்றுவிடும் இருவர் எங்கள் குழுவில் உண்டு :) என்பதால் ஆங்காங்கே கொஞ்சம் நின்று நின்று சென்று கொண்டிருந்தோம்.  அப்படியே சில பல நிழற்படங்கள், காணொளிகள் என தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக நயார் ஆறு சலசலத்து ஓடும் பகுதிக்குச் சென்று விட்டோம்.  அங்கே பாறைகளின் மீது அமர்ந்தும், நின்றும் படங்கள், காணொளிகள் என தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தோம்.  அவரவர் துணையுடன் விதம் விதமான நிழற்படங்கள் எடுத்ததோடு, குழுவாகவும் பல படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். 




இது ஒரு பக்கம் என்றால், செல்ஃபி எடுப்பது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.  இதைத் தவிர இதயம் போல கைகளால் கணவன் - மனைவியில் ஒருவர் வைத்துக் கொள்ள மற்றவர் அப்புறமாக உட்கார வைத்து சில படங்கள் எடுக்கவும் முடிந்தது. அப்படியான படம் எடுப்பது எப்படி என்பதற்காக மாடல் போல என்னை உட்கார வைத்து படம் எடுத்ததும் நடந்தது! அந்த படம் தான் மேலே உள்ளது - இத்தொடரின் முதல் பகுதியிலும் வெளியிட்டது நினைவில் இருக்கலாம்! இப்படி நிறைய படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.  இயற்கைச் சூழலில் அப்படியே இருந்துவிடுவது நன்றாகவே இருக்கும் என்றாலும் புறப்பட்டுதானே ஆக வேண்டும்.  திரும்பும் வழியில் இருந்த கருவேப்பிலைச் செடிகளில் இருந்து தேவையான அளவு கருவேப்பிலையும் பறித்துக் கொண்டோம். அப்படியே நடந்து வந்து கொண்டிருந்தபோது, முதல் நாள் ஆட்டுக்குட்டி பார்த்த வீட்டில் இப்போதும் நடமாட்டம்.  அவர்கள் தோட்டத்தில் கடாரங்காய் அப்படிக் காய்த்துத் தொங்கியது. 




பார்த்தவுடன் எங்களுக்குள் பேசிக்கொண்டோம் - எவ்வளவு காய் காய்த்திருக்கிறது - தில்லியில் இது கிடைக்காது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு அவர்கள் வீட்டிற்குச் சென்று அங்கே சில படங்களையும் எடுத்ததோடு, வீட்டு உரிமையாளர்களிடம் சில கடாரங்காய் பறித்துத் தருகிறீர்களா? நாங்கள் ஊறுகாய் போடுவோம் எனக் கேட்க அவர்களும் பறித்துத் தந்தார்கள்.  ஐந்து கடாரங்காய் அவர்களிடமிருந்து கிடைத்தது. காசு கொடுக்கிறோம் என்று சொன்ன போது, வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.  எங்கள் குழுவில் இருந்தவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். எனக்கு பிறகு ஒரு நண்பர் வீட்டிலிருந்து கடாரங்காய் ஊறுகாய் கிடைத்தது என்பதையும் இங்கே பதிவு செய்துவிடுகிறேன்! நல்ல சுவையாக இருந்தது அந்த கடாரங்காய் ஊறுகாய். பொதுவாக இங்கே கிடைப்பது அரிது. எப்போதாவது தான் காய்கறி சந்தையில் இப்படியான கடாரங்காய் கிடைக்கும்.  சரி நாம் ஊறுகாய் போடுகிறோம், அந்த வீட்டினர் என்ன செய்வார்கள் என்று கேட்டோம். அதற்கும் பதில் கிடைத்தது. 





கடாரங்காய் இங்கே Galgal, Khatte போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக குளிர் நாட்களில் இவை பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. ஊறுகாய் செய்து சாப்பிடுவதை இவர்கள் அதிகம் விரும்புவதில்லை - பலர் செய்வதுமில்லை.  கடாரங்காயின் மேல் தோலை சீவிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதன் உடன் புதினா, கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை பச்சையாக அரைத்து, கொஞ்சம் வெல்லம்/சர்க்கரை சேர்த்து அந்தக் கலவையை நறுக்கி வைத்த கடாரங்காய் உடன் சேர்த்து ஒரு கலக்கு! அப்படியே சாப்பிட்டு விடுகிறார்கள்! அதற்குப் பெயர் (Kha)கட்டே! அந்தப் புளிப்புடன் சாப்பிடுவதைச் சொல்லும்போதே நமக்கும் பல் கூசுவது போல இருக்கிறதல்லவா?  இவர்கள் எப்படி இந்த (Kha)கட்டே செய்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி செய்முறையைப் பார்க்க முடியும். ஒரே சிக்கல் - காணொளியின் மொழி ஹிந்தி! 🙁மொழி தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சிக்கல் தான்!



இப்படியாக கடாரங்காய், கருவேப்பிலை என எல்லாம் எடுத்துக் கொண்டு தங்குமிடம் திரும்பிய எங்களை தங்குமிடத்தின் உரிமையாளர் வித்தியாசமாகப் பார்த்ததையும் எங்களால் கவனிக்க முடிந்தது! இப்படியான பயணத்திலும் எதை எதையோ கொண்டு வருகிறார்களே என்று தான் பார்த்திருக்க வேண்டும். அவரிடமும் கருவேப்பிலை குறித்த பிரதாபங்கள், கடாரங்காயில் ஊறுகாய் போடுவது என எல்லாவற்றையும் பேசிக் கொண்டே தங்குமிடத்திலிருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.  தங்குமிடம் நட்சத்திர வசதிகள் கொண்டதல்ல, நகரிலிருந்து சற்றே தொலைவில் இருக்கிறது போன்ற சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் தலைநகர் தில்லியின் இரைச்சல், சுற்றுச்சூழல் மாசு போன்ற பல பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு அமைதியான சூழலில் இருக்க மிகவும் தோதான இடமாக இருந்தது என்பதில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும்.  




நண்பரும் தங்குமிட உரிமையாளரும்...

அங்கே இருந்து புறப்பட்டு எங்கே செல்ல வேண்டும், திட்டங்களில் சற்றே மாறுபாடு செய்யலாமா என்றெல்லாம் சில சம்பாஷணைகள் எங்களுக்குள் இருந்தன. காரணம், தங்குமிடத்தின் உரிமையாளர் நாங்கள் புறப்படும்போது, எங்களது அடுத்த திட்டம் என்ன என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.  நாங்கள் தங்கியிருந்த சத்புலி எனும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் பயணித்தால் ஒரு பிரபலமான இடம் உண்டு என்று சொல்லி அங்கே செல்லலாம் என்று சொன்னார்.  அதைத்தவிர இன்னும் சில இடங்களும் சொன்னார்.  ஆனால் அப்படிச் செல்ல வேண்டுமெனில் எங்கள் திட்டத்தில் சில மாறுதல்கள் தேவையாக இருந்திருக்கும்.  நாங்கள் எங்கள் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்தோமா, எங்கே செல்லலாம் என யோசித்தோம் போன்ற தகவல்கள் எல்லாம் வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  அதற்கு முன்னர் அன்றைய தினத்தின் காலை உணவு எங்கே சாப்பிட்டோம், என்ன கிடைத்தது போன்ற தகவல்களை எல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


20 கருத்துகள்:

  1. இந்த கருவேப்பிலை விஷயத்தில் ஏதோ திருப்பம் வரப்போகிறது என்றே படித்து வந்தேன்!  மற்ற விஷயங்களும், படங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் அனுபவம் ரசித்தேன். நானும் தஞ்சையில் கிடைத்த கிடாரங்காயைக் கொண்டுவந்தேன். உபயோகிக்கவில்லை.

    சலசலத்து ஓடும் ஆறு வேகமாக, கால் வைத்தால் இழுக்கும் அளவு ஓடியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடாரங்காய் - தில்லியில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. உத்திராகண்டிலிருந்து கொண்டு வந்தது எங்களுக்குப் பயன்பட்டது.

      நாங்கள் சென்றபோது தண்ணீர் அதிகமில்லை என்றாலும் கால் வைத்து விஷப் பரிக்ஷை செய்ய விரும்பவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. கருவேப்பிலை கிடாரங்காய்... லக்கேஜ் அதிகமாயிருக்கும். ஆற்றின் சலசலப்பு அழகு. வேகம் அதிகமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்கேஜ் அதிகமாயிருக்கும் - தில்லியிலிருந்து வாகனத்தில் சென்றதால் இது பெரிய பிரச்சனை இல்லை.

      ஆற்றில் தண்ணீர் வேகம் இருந்திருக்கலாம் - தண்ணீர் வரத்து குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. வெங்கட்ஜி இன்றைய வாசகம் சூப்பர்...எபி யில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலும் கூட..

    படங்கள் எல்லாம் செம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. வடக்கில் கறிவேப்பிலையின் பயன்பாடு குறைவு என்றே தோன்றுகிறது ஜி. அதனால்தான் இப்படி மரங்கள் விட்டுவைக்கப்பட்டிருக்கின்றன!!!! தென்னகத்தி கறிவேப்பிலை இல்லாமல் சமையலே இல்லையே. இங்கு கறிவேப்பிலை விற்கும் விலை ம்ம்ம்...இப்படி மரங்கள் இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும். நாங்கள் முன்பு இருந்த வீட்டில் கறிவேப்பிலை மரங்கள் இருந்தது. அனுபவித்தோம். எல்லாருக்கும் கொடுத்தோம் பொடி செய்தும்.

    கடாரங்காயும் அங்கு பயன்பாடு குறைவு நம்மைப் போல் ஊறுகாய் போடுவதில்லை என்பதும் தெரிகிறது. Khaகட்டா செய்வதைப் பார்த்துக் கொண்டுவிட்டேன். இந்தச் செய்முறை வித்தியாசமாக நல்லா இருக்கே....செய்து பார்த்துவிட வேண்டும். வெல்லம் தான் யோசிக்க வைக்கிறது பார்க்கிறேன் எப்படி adjust செய்வது என்று.

    இங்கு கடாரங்காய் கிடைக்கிறது. நம் வீட்டில் ஊறுகாய் வீட்டுப் பயன்பாட்டிற்குச் செய்வதில்லை. உறவுகள் நட்புகளுக்குக் கொடுப்பதென்றால் கேட்டால் செய்வதுண்டு.

    அங்கு விளைச்சலும் நன்றாக அதாவது செழுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆறு ஓடுகிறது, மலைப்பகுதி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கில் கருவேப்பிலை பயன்பாடு குறைவு தான். நம் ஊர் போல அதிகம் உபயோகிப்பது இல்லை. வெகு சிலரே இதனை பயன்படுத்துகிறார்கள். கடாரங்காய் பயன்பாடு உண்டு என்றாலும் அதில் ஊறுகாய் போடுவது குறைவு. நிறையவே கிடைக்கிறது. நண்பர் ப்ரேம் பிஷ்ட் ஊருக்குச் சென்று வரும்போதெல்லாம் எடுத்து வருவார் - அதில் ஏதோ மசாலாவெல்லாம் போட்டு சாப்பிடத் தருவார் - புளிப்பும், உரைப்புமாக நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ஆற்றின் படங்கள் எல்லாம் செம அழகு வெங்கட்ஜி. ரொம்ப ரசித்துப் பார்த்தேன். சல சலத்து ஓடும் ஆறு நீங்கள் நிற்கும் பகுதியில் அவ்வளவு ஆழம் இல்லை என்றே தோன்றுகிறது. இப்படியான பகுதிகள் என்னை மிகவும் ஈர்க்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக ஆழம் இல்லாத பகுதி தான் - நாங்கள் சென்றிருந்த சமயம் அத்தனை தண்ணீர் வரத்து இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. விசயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    படங்கள் வழக்கம் போல அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  8. கடாரங்காயின் படம் இட்டது நன்று. காண முடிந்ததே. தில்லியின் மாசுபட்ட சூழலிலிருந்து இது போன்ற இடங்களுக்குச் சென்று தூய்மையான காற்றை சுவாசித்து வருவது ....நல்லது. மனதிற்கும் ஒரு டானிக். படங்கள் எல்லாம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் மற்றும் படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. ஆறும் படங்களும் நன்றாக இருக்கின்றன.

    கடாரங்காய் காய்த்து தொங்குவது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  10. வாசகம் அருமை. படங்கள் எல்லாம் அருமை.
    உங்கள் படங்கள் எல்லாம் பயணத்தில் உங்களின் உற்சாகத்தை சொல்கிறது.
    திருவெண்காட்டில் எல்லோர் வீடுகளிலும் கடாரங்காய் காய்க்க்ய்ம் எல்லோர் வீடுகளில் இருந்து வரும். கார ஊறுகாய், இனிப்பு ஊறுகாய் அவர்களிடம் கற்றுக் கொண்டு செய்வேன்.

    கடராங்காய் மரம் பார்க்கவே அருமை. படங்கள் எல்லாம் இயற்கையின் அழகை பறைசாற்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....