வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

கோயில் உலா - ஒரே நாளில் மூன்று சிவன் கோயில்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட டேராடூன் பயணம் - பார்க்க வேண்டிய இடங்கள் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



 

*******


 

“காலை கடம்பர், மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார்” என்று ஒரு வாசகம் உண்டு.  அதாவது ஒரே நாளில் மூன்று சிவன் கோயில்களில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்வார்கள். அந்த மூன்று கோயில்கள் - குளித்தலையில் இருக்கும் கடம்பவனேஸ்வரரை காலையிலும், அய்யர் மலை உறையும் இரெத்தினகிரீஸ்வரர்-ஐ மதியத்திலும் அந்தி வேளையில் ஈங்கோய்மலை உறையும் மரகதாசலேசுவரர்-ஐயும் தரிசிக்க வேண்டும் என்பது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம்.  ஒரே நாளில் இந்த மூன்று சிவன் கோயில்களிலும் தரிசித்தால் நல்லது நடக்கும் என்று நம்புவதுண்டு.  இந்த இரண்டில் நான், ஒரே நாளில் முதல் இரண்டு கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன் என்றாலும் அந்தி வேளையில் தரிசிக்க வேண்டிய ஸ்ரீ மரகதாசலேசுவரர்-ஐ மட்டும் இதுவரை தரிசித்ததில்லை.  இந்த மூன்று கோயில்களும் ஒரே நாளில் சென்று விடலாம் என்றாலும் இரண்டு கோயில்களுக்கு மலைகளில் படி ஏறிச் செல்ல வேண்டும் - அதுவும் அதிகமான படிகள்.  அய்யர் மலை குறித்து முன்னர் எழுதிய பதிவுகள் (பதிவு- ஒன்று, பதிவு -  இரண்டு, பதிவு - மூன்று) உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 


 

நம்மால் இப்படி போக முடிகிறதோ இல்லையோ அந்தக் காலத்தில் - அதுவும் இப்போது போல போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் பலரும் மூன்று கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்று இறைவனை தரிசித்து இருக்கிறார்கள்.  அப்படி தரிசித்த ஒருவர் முத்தரசு என்கிற குறுநில மன்னர். ஒவ்வொரு நாளும் குதிரையில் ஏறிக்கொண்டு குளித்தலை காலையில் கடம்பரை தரிசித்து, மதியத்திற்குள் அய்யர் மலை சென்று இரெத்தினகிரீஸ்வரர்-ஐயும் தரிசித்து மாலைக்குள் முசிறியை அடுத்த  ஈங்கோய்மலை சென்று மரகதாசலேசுவரர்-ஐயும் தரிசித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இளமைப் பருவத்தில் இப்படியெல்லாம் தரிசிக்க முடிந்த அவரால் வயோதிகக் காலத்தில்  இப்படி ஒரே நாளில் மூன்று இடங்களுக்கும் சென்று பிரியமான சிவபெருமானை தரிசிக்க முடியாமல் போனதே என்று கவலையில் மூழ்கி இருந்தாராம்.  இப்படி தனக்குள் மருகிக்கொண்டிருந்த அரசருக்கு ஒரு நாள் கனவு வருகிறது.  அந்தக் கனவு என்ன? பார்க்கலாம் வாருங்கள். 

 

குறுநில மன்னர் முத்தரசு கண்ட கனவு:


 

இது நாள் வரை ஒரே நாளில் மூன்று கோயில்களிலும் சிவபெருமானை தரிசித்து வந்த என்னால், இப்போது தள்ளாமையால் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே ஈசனே என்று மருகிய அரசருக்கு ஒரு கனவு.  அந்தக் கனவில் தோன்றிய ஈசன் இக்கோயில் தற்போது அமைந்துள்ள பகுதியில் இருக்கும் வன்னி மரத்தின் அடியில் தோண்டிப் பார்க்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்தாராம்.  அங்கே அவருக்கு மூன்று சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன.  குறுநில மன்னனின் கனவில் வந்த ஈசன்,  ஒரே நாளில் தரிசிக்க முடியவில்லை என்று ஏங்கியதால், இதே இடத்தில் மூன்று கோயில்களில் உறையும் ஈசனின் உருவங்களை தரிசிக்க ஏதுவாக தந்தருளியிருக்கிறோம் என்று அரசருக்கு உணர்த்திவிட்டாராம்.  உடனே குறுநில மன்னனாகிய முத்தரசு அதே இடத்தில் மூன்று சிவலிங்களையும் கூடவே அவரவருக்கான அம்பிகையையும் வணங்க ஏதுவாக கோயில் கட்டி வழிபட்டாராம்.  

 

மூன்று சிவலிங்கங்கள் - மூன்று அம்பிகைகள்:





 

மேலே சொன்னபடி மூன்று சிவலிங்கங்களை மட்டுமல்லாது மூன்று அம்பிகை சிலைகளையும் அமைத்து இங்கே கோயில் கட்டி இருக்கிறார் இராஜா முத்தரசு.  அய்யர் மலையில் இருக்கும் ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் போலவே இங்கேயும் பிரதான கோயிலாக ஸ்ரீ ஆராளகேஸ்வரி சமேத ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர்  கோயில் இருக்கிறது. இருவருக்கும் தனித்தனி சன்னதி அமைந்து இருக்கிறது. பிரகாரத்தில் ஒரு புறம் ஸ்ரீ பால குஜாம்பிகை சமேத ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் சன்னதிகளும், மற்றொரு புறம் ஸ்ரீ மரகதவல்லி சமேத திரு ஈங்கோய்நாதர் சன்னதிகளும் அமைந்து இருக்கின்றன.  தவிர கோயில் வளாகத்தில் தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூல கணபதி, வள்ளி, தேவசேனை சமேத ஆறுமுகன், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன், லிங்கோத்பவர் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் இருக்கின்றன.  எல்லா சிலைகளும் அழகு என்றாலும், குறிப்பாக வள்ளி, தேவசேனை சமேத முருகப்பெருமானும், நவகிரங்களும் அழகு.  நவகிரஹ சிலைகள் பெரிய அளவில் - அதிலும் குறிப்பாக சூரியனின் ஏழு குதிரைகளும் நன்கு தெரியும்படியான சிலைகள் மிகவும் பிடித்தன. 




 

கோயில் வளாகத்தில் ஸ்தல விருக்ஷமான வன்னியும் இருக்கிறது.  கோயில் அமைந்திருக்கும் இடம் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முத்தரசநல்லூர் (குறுநில மன்னர் முத்தரசு அவர்களின் பெயரால் இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று வழங்கப்படுகிறது) என்கிற இடத்தில் இருக்கிறது.  முத்தரசநல்லூர் இரயில் நிலையம் அருகே பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டால் சுமார் 750 மீட்டர் நடந்து சென்றால் கோயில் இருக்கும் இடத்தினை அடைந்துவிடலாம். பெரிதாக தகவல் பலகைகள் ஏதும் இந்தக் கோயில் குறித்து இல்லை. ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டு சென்று விடலாம். கோயில் செல்லும் வழியில் ஒரு அழகிய தாமரை தடாகமும் இருக்கிறது. தற்போது இதே ஊரில் வேறு ஒரு புதிய கோயில் அமைத்து இருக்கிறார்கள் - அந்தக் கோயில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது - அக்கோயில் குறித்து தனிப்பதிவாக எழுத இருக்கிறேன். அந்தக் கோயில் செல்லும் வழி என நிறைய பதாகைகள் இருக்கின்றன.  





 

நேற்று (01-02-2024) நான் இந்த பழமையான சிவன் கோயிலுக்கு (ஸ்ரீ ஆராளகேஸ்வரி சமேத ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோயில் என்று உள்ளூரில் சொல்கிறார்கள்) அன்று சென்று வந்தேன். எப்படியும் சில நூறு ஆண்டுகள் பழமையான கோயில் என்று தெரிகிறது. தற்போது இருக்கும் நபர்களுக்கு எத்தனை பழமையானது போன்ற விவரங்கள் தெரியவில்லை.  தற்போது இருக்கும் கோயில் 2019-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கு முன்னர் 2003-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததாகவும் தகவல் பலகைகள் கோயிலில் இருக்கின்றன. மிகவும் அமைதியான சூழலில் அமைந்து இருக்கிறது கோயில்.  நான் சென்ற போது என்னைத் தவிர வேறு பக்தர்கள் இல்லை. கோயிலில் பூஜை செய்யும் ஒருவரும் வேறு ஒரு நபரும் மட்டுமே இருந்தார்கள்.  ஈசனுக்கு முன்னர் அமைதியாக அமர்ந்து தியானிக்க முடிந்தது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.  கோயிலைச் சுற்றி வந்து சில படங்களும் எடுத்துக் கொண்டேன் - பகிர்வில் தந்திருக்கும் படங்கள் நான் எடுத்தவையே.  நிம்மதியான தரிசனம் கண்டு அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் புதிய கோயிலுக்கும் சென்று வந்தேன். அந்தக் கோயில் குறித்து பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.  கோயில் குறித்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  திருச்சி வரும் வாய்ப்பு இருந்தால் இந்தக் கோயிலுக்குச் சென்று “காலை கடம்பர், மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார்” என்ற வாக்கின் படி - ஒரே நாளில் மூன்று பேரையும் தரிசித்த பலனை அடையலாமே!

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து.

14 கருத்துகள்:

  1. ரத்தினகிரி பெயரைப் படித்ததும் "ரத்தினகிரி வாழும் தத்துவமே பொன் அம்பலமே எனக்கு உன் பலமே" என்கிற பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

    தகவல்கள் சுவாரஸ்யம்.  அந்தப் பக்கம் வந்து ஒரு சுற்று சுற்றவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுக்கு வந்த பாடல் - நன்று.

      பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      //அந்தப் பக்கம் வந்து ஒரு சுற்று சுற்றவேண்டும்// - வாருங்கள் சுற்றுவோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மூன்று சிவன் கோயில்கள் ஒரே நாளில் தரிசனம்... இதுவரை அறியாத செய்தி.

    முத்தரசநல்லூரில் அமைதியான தரிசனம் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூன்று சிவன் கோயில்கள் ஒரே நாளில் தரிசனம்... இதுவரை அறியாத செய்தி// - புதியதொரு தகவலை உங்களுக்குத் தர முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. முத்தரசநல்லூர் ஊரின் பெயர் கேள்விப்பட்டதுண்டு. முத்தரசநல்லூர் கோயில் என்றும் கேட்டதுண்டு இன்று உங்கள் பதிவின் மூலம் அதன் புராணக் கதையும் கோயிலைப் பற்றியும் படங்களுடன் தெரிந்து கொள்ள முடிந்தது. முத்தரசர் ராஜா என்பது உட்பட!

    அய்யர் மலை முறித்து நீங்கள் எழுதியது மிக நன்றாக நினைவிருக்கிறது,ஜி.

    ஒரே நாளில் மூன்று சிவன் கோயில்களில் அதுவும் அடக்கம் என்பது தகவல். மூன்றையும் ஒரே நாளில் செய்ய முடியுமா என்ற கேள்வி (அதுவும் படிகள் இருக்கிறதே இரண்டிற்கு) எழுந்தாலும், சென்றுதான் முயற்சித்துப் பார்க்கலாமே என்ற ஆவலும் எழுகிறது.

    முத்தரசநல்லூரில் கூட்டமில்லாமல் ஏகாந்த தரிசனம் கிடைத்தது நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வாசகம் அருமை. உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு


  5. இன்றைய வாசகம் அருமை.


    //குளித்தலையில் இருக்கும் கடம்பவனேஸ்வரரை காலையிலும், அய்யர் மலை உறையும் இரெத்தினகிரீஸ்வரர்-ஐ மதியத்திலும் அந்தி வேளையில் ஈங்கோய்மலை உறையும் மரகதாசலேசுவரர்-ஐயும் தரிசிக்க வேண்டும் //

    அய்யர் மலை சென்று இரெத்தினகிரீஸ்வரர் வாட்போக்கி ஐயன் கோவில் படிகளே நிறைய ஏறி போய் பார்த்து வந்து இருக்கிறேன் 18 வருடங்களுக்குமுன். நீங்கள் இந்த கோவில் போய் வந்து பதிவு போட்ட போது சொல்லி இருக்கிறேன், உங்கள் பதிவில்.

    என் கணவர், என் தங்கை, தம்பி எல்லாம் மூன்று கோவிலையும் ஒரே நாளில் பார்த்து இருக்கிறார்கள். எனக்கு அந்த சமயம் போக முடியவில்லை. அதன் பின் தனி தனியாக பார்த்து இருக்கிறேன்.


    //காலை கடம்பர், மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார்” என்ற வாக்கின் படி - ஒரே நாளில் மூன்று பேரையும் தரிசித்த பலனை அடையலாமே!//

    உங்கள் பதிவின் மூலம் மூன்று கோவில்களையும் தரிசனம் செய்து விட்டேன்.
    நன்றி உங்களுக்கு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    நான் அய்யர்மலை இரண்டு முறைகள் சென்று இருக்கிறேன் ஆனால் மலை ஏறக்கூடாத சூழலில் போனதால் மலை ஏற முடியவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. அய்யர் மலை நீங்களும் சென்றிருந்தாலும் கோயில் போக முடியாத சூழல் என்பதில் வருத்தம். விரைவில் உங்களுக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. ஒரே நாளில் மூன்று சிவன் கோயில்கள் தரிசனம் என்பது புதியதாகத் தெரிந்து கொள்கிறேன் என்பதோடு அதைப் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி.

    முத்தரசநல்லூர் பெயர்க்காரணம், முத்தரசர் கதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அரசரினால் ஒரே இடத்தில் அந்த மூன்று கோயில்களின் இறைவனும் இருப்பதும் சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. புதிய சில தகவல்களை உங்களுக்கும் தர முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....