சனி, 3 பிப்ரவரி, 2024

காஃபி வித் கிட்டு - 181 - காங்க்ரீட் காடுகள் - பொழுது எப்படி போகும்? - பெண் லாரி ஓட்டுநர் - மரணத்தை நேசிப்பவர்கள் - ஓவியம் - கவிதை - முன்னோர்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கோயில் உலா - ஒரே நாளில் மூன்று சிவன் கோயில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் : காங்க்ரீட் காடுகள்

 

ஒரு காலத்தில் தோப்பும் துறவுமாக இருந்த திருவரங்கம் ஏற்கனவே காங்க்ரீட் காடாக மாறிவிட்டது என்றாலும் இன்னும் பல தோப்புகள், காலி நிலங்கள் சமன்படுத்தப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன - அதுவும் மேலூர் சாலை என்று சொல்லக்கூடிய சாலையில் பத்து பதினைந்து  வருடங்களுக்கு முன்னர் கூட நிறைய தோப்புகளைப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்து விட்டன.  இந்த முறை இங்கே வந்திருக்கும்போது வழக்கம் போல மேலூர் வரை நடந்து சென்ற ஒரு நாளில் பார்த்தால் இன்னும் சில இடங்கள் சமன்படுத்தப்பட்டு வீடுகள், அடுக்கு மாடி கட்டிடங்கள் வரப்போகிறது என்கிற தகவல் பதாகைகள் பார்க்க முடிந்தது. இன்னும் சில வருடங்களுக்குள் இந்த சாலை முழுவதுமே வீடுகள் ஆகிவிடும் என்று தோன்றுகிறது. பழமையுடன் இருக்கும் சில வீடுகள் தவிர எல்லாமே நவீனமான வீடுகள் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது. கோயிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் இருந்த அழகான, புராதனமான வீடுகள் கூட இடித்துவிட்டு, புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு வலி.  கூட்டுக்குடும்ப முறை ஒழிந்து தனித்தனியாக வாழ ஆரம்பித்து விட்ட பலரும் இதற்கு காரணமாக இருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கே போய் முடியப்போகிறதோ இந்த காங்க்ரீட் காடுகள் மயமாக்கம் ? ஆண்டவனுக்கே வெளிச்சம். 

 

******

 

திருவரங்கத்தில் பொழுது எப்படி போகும்? 

 

எனக்குத் தெரிந்த சிலர் இங்கே பொழுது போக்க ஒரு விஷயமும் இல்லை என்று அபிப்பிராயம் சொல்கிறார்கள்.  என்னைக் கேட்டால் இங்கே பொழுது போக்க தனியாக ஒரு விஷயமே வேண்டாம். கோயிலுக்குள் சென்று அமர்ந்து கொண்டால், வீதிகளில் ஒரு உலா வந்தால் பொழுது சுலபமாகச் சென்று விடும்.  வீதிகளில் உலா வரும்போது பார்க்கக்கிடைக்கும் விஷயங்கள் தான் எத்தனை எத்தனை. நேற்று கூட வீதி உலா வந்தபோது நிறைய விஷயங்கள் பார்க்க முடிந்தது. சில இங்கே எழுதமுடியாதவை என்றாலும் எழுத வேண்டிய விஷயங்களும் நிறையவே இருக்கின்றன.  ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து ராஜ கோபுரம் வரை உள்ள சாலை குறுகிய ஒன்று.  அதிலே பக்தர்கள் கூட்டம் தவிர நிறைய இரு சக்கர வாகனங்களும் வருகின்றன. ஒரு நொடியில் ஒரு குழந்தை இன்று வாகனம் ஒன்றில் அடிபட்டிருக்கும் -  பார்த்த உள்ளூர் மூதாட்டி ஒருவர் குழந்தையின் அம்மாவை நன்கு திட்டி விட்டார் - “ஏம்மா குழந்தையை பார்த்துக்கோ! குழந்தைக்கு அடிபட்டப்புறம் புலம்பினா பயனிருக்குமா சொல்லு!”.  ஒரு தெலுகு குடும்பம் - நல்ல ஃபில்டர் காபி எங்கே கிடைக்கும் எனக் கேட்க, முரளி காஃபி கடைக்கு அனுப்பி வைத்தேன்!  இப்படியே ஏதேனும் ஒன்று - பொழுது போக வழியா இல்லை! 

 

******

 

இந்த வாரத்தின் அறிமுகம் - PUTHETTU TRAVEL VLOG:


 

சமீபத்தில் பார்த்த ஒரு Youtube Shorts காணொளி, இந்தப் பக்கத்தினை இன்னும் பார்க்கத் தூண்டியது. கேரளத்தைச் சேர்ந்த Jelaja Ratheesh என்பவரின் தளம் இது.  சொந்தமாக லாரி வைத்துக் கொண்டு ஓட்டி வருகிறார்.   இவரது அனுபவங்களை தொடர்ந்து காணொளிகளாக வெளியிட்டு வருகிறார்.  பயணத்தில் இவரது கணவரும் கூடவே செல்கிறார். சில சமயங்களில் மகளும் கூடவே செல்கிறார் போலும். ஒரு சில காணொளிகள், Shorts பார்த்தேன்.  மிகவும் சிறப்பாக தகவல்களைச் சொல்கிறார்.  தொடர்ந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும், பொருட்களை லாரியில் எடுத்துக் கொண்டு  செல்வதால் கிடைக்கும் அனுபவங்களை, பயணத்தில் செய்யும் விஷயங்களை, வழியில் செய்யும் சமையல் பற்றிய தகவல்கள் என நிறைய காணொளிகள் இருக்கின்றன.  நீண்ட காணொளிகள் - அதுவும் ஒவ்வொரு பயணத்தினையும் பல நீண்ட பகுதிகளாக வெளியிட்டு வருகிறார்.  ஒரு சில காணொளிகளை பார்த்து ரசித்தேன். மும்பை பயணத்தின் ஒரு பகுதியை கீழே உள்ள முதல் சுட்டி வழி பார்க்கலாம். நீங்களும் பார்த்து ரசிக்க எதுவாக அவரது பக்கத்திற்கான சுட்டி கீழே தந்திருக்கிறேன்.  சவாலான பணியைச் செய்து வரும் Jelaja அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 

 

മകളുമായുള്ള യാത്രയുടെ രണ്ടാം ദിനം | Mumbai Trip (Maharashtra) | Day-02 | Part -02 | (youtube.com)

 

Puthettu Travel Vlog - YouTube

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : மரணத்தை நேசிப்பவர்கள்

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மரணத்தை நேசிப்பவர்கள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

செங்கல்பட்டு வரை செல்லும் ஒரு தொடர் மின்வண்டி வந்ததும், அந்த பெண் குழந்தை, ”அம்மா வண்டி வந்துடுச்சு, வா கீழே இறங்கி சீக்கிரம் போகலாம் வா” எனச் சொல்ல, ஒரு முறை மறுத்த அம்மா, பெண் மீண்டும் சொல்லவே, மூன்று பேரும் கீழே குதித்து விட்டார்கள்.  அம்மா மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் மேலே ஏறிவிட, அந்தப் பெண்ணும், ஐந்து வயது மகனும் ரயில் பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

அதற்குள் பீச் செல்லும் வண்டி அந்தப் பாதையில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. நடைமேடையில் நின்று கொண்டிருந்த அனைவரும், ”சீக்கிரம், சீக்கிரம் மேலே ஏறு!” என கத்தியபடியே அந்த இடத்திற்கு ஓட, அம்மா தவிக்க, அந்த 10 வயது பெண், மேலே தாவி ஏற முடியாத தனது தம்பியை ஏற்றி விடுகிறார்.  அதற்குள் பீச் செல்லும் ரயில் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது – பெண்ணுக்கும் ரயிலுக்கும் 500 மீட்டர் இடைவெளி மட்டுமே…..

 

அனைவரும் வேகமாக முன்னேறி அந்த பெண்ணுக்கு கையை நீட்ட தட்டுத் தடுமாறி அந்தப் பெண் மேலே தாவி நடைமேடையில் ஏறி உட்காரவும் அந்த மின்சார தொடர்வண்டி அந்த இடத்தினைத் தாண்டி நிற்கவும் சரியாக இருந்தது.  சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட மரணம் சம்பவித்து இருக்கும் அபாயம். அனைவரும் அந்த தாயைத் திட்டிக்கொண்டிருக்க, அவரோ, குழந்தைகளை இழுத்துக் கொண்டு நிலையத்திலிருந்து நகரத் துவங்கிய ரயிலில் தாவிக் கொண்டிருந்தார்.

 

முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் : முதுமை 


 

முகநூலில் நான் இருக்கும் மத்யமர் குழுவில் (இருக்கிறேன் அவ்வளவு தான் - எனது பங்களிப்பு அங்கே ஒன்றுமே இல்லை. ஒரே ஒரு இடுகை மட்டுமே பகிர்ந்தேன்!) பல திறமையாளர்கள் இருக்கிறார்கள்.  அப்படி ஒரு சிறப்பான திறமையாளர் ரவீந்தர் ஊட்டி என்ற பெயரில் இடுகைகள் தரும் நபர். இவர் ஒரு ஓவியர்.  சமீபத்தில் அவர் வெளியிட்ட இடுகையும், ஓவியமும் உங்கள் பார்வைக்கு. 

 

ஒரு பென்சில், ஒரு பேப்பர், இரண்டு வண்ணங்கள் (சிகப்பு மற்றும் கருப்பு), ஏழு தூரிகைகள் மற்றும் ஒரு கப்பில் தண்ணீர் ,இவை போதும் ஓர் ஓவியம் உருவாக...

 

இந்த வாரமும் நீர் வண்ண ஓவியம் தான் ...

 

எப்போதும் நீர் வண்ணங்களையே உபயோகிக்கிறேன்.. ஏனெனில் ஒரே காரணம் மிக விரைவில் உலர்ந்து விடுவதால், தொடர்ந்து வரைந்து கொண்டே இருக்கலாம், மூன்று மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்துவிட்டு, எட்டி நின்று பார்த்து ரசிக்கலாம். ஆனால், இதில் ரிஸ்க் இருக்கிறது. தவறு நேர்ந்து விட்டால், அல்லது தேவை இன்றி அருகில் உள்ள கலருடன் கலந்து விட்டால் திருத்தி அமைக்கவோ, மாற்றவோ முடியாது. மற்றொன்று, வெள்ளை வண்ணமும் உபயோகிக்க கூடாது. வெள்ளை வண்ணம் தேவையான இடங்களுக்கு காகிதத்தின் வெள்ளையை அப்படியே விட்டு வைக்க வேண்டும். இந்த இரண்டும் மிகப் பெரிய சேலஞ்ச் தான்.

 

ஆனால் வரைந்து முடித்தபின் பார்க்கும் பொழுது கிடைக்கும் சந்தோசம், ஐந்து கிலோ மீட்டர் மராத்தானில் மூச்சு வாங்க, நெஞ்சு வெடிக்க, ஓடி  வெற்றிக்கோட்டை 43 நிமிடத்தில் தொடும் போது ஏற்படும் சந்தோஷம், மகிழ்ச்சி, பூரிப்பு வரும் பாருங்கள்.... அதை எழுதித் தீர்க்க முடியாது.

 

தொடர்ந்து உற்சாகமூட்டும் மத்தியமர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வாராவாரம், விமர்சிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பது சந்தோஷமே. மீண்டும் நாளை வேறொரு ஓவியத்துடன் சந்திப்போம். 

 

உங்கள்,

 

ரவீந்தர் ஊட்டி.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை : 

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் கவிதை ஒன்று. 



 

நெடும்பிரிவின்

தொடக்க நொடிகட்கு அருகில்

அம்மாவும் மகனும்

கட்டியணைத்துப்

பொங்கியழுதபடி நின்றதை

வானூர்தி நிலையத்தில்

பார்த்தேன்.

 

இனியந்தப் பிள்ளை

பயிலா நிலத்தில்

மான்குட்டிபோல்

ஒவ்வொரு காலடியாக

எடுத்து வைத்துப் பழகவேண்டும்.

 

நெடும்பிரிவின்

முதிர்நொடிகளின் அருகில்

நாடு திரும்பும் மகளை

வரவேற்கச் சென்றிருந்த எனக்கும்

உள்ளே உறைந்திருந்த

கண்ணீர்க்கட்டிகள்

உருகிச் சொட்டத் தொடங்கியிருந்தன.

 

உறவுகள்

தத்தம் பிரிவு தாளாமல்

ஈர்த்துக்கொண்டேயிருக்கும் ஓரிடத்தில்

ஒரு தரப்பு அன்பினரை

அள்ளியேற்றிக்கொண்டு

வானூர்தியொன்று

ஓடுதளத்தில்

எவ்வளவு விரைவில் தப்பியோடுகிறது, பார். 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் : முன்னோர் 


 

அலுவலகத்தில் உடன் பணிபுரியும் மருத்துவர் கீர்த்தி சஹாரன் அவர்கள் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உள்ளவர்.  நிறைய வித்தியாசமான கோணங்களில், சோதனை முயற்சிகள் செய்வார். அவ்வப்போது என்னிடமும் அவர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்வார்.  அப்படி பகிர்ந்து கொண்ட படம் ஒன்று உங்கள் பார்வைக்கு! 

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

40 கருத்துகள்:

  1. இப்போதைக்கு தனிமையை வேதனையாக நான் நினைத்ததில்லை!

    கான்க்ரீட் காடுகளாக மாற ஜனத்தொகை பெருக்கம் முக்கிய காரணம் அல்லவா?  அழகா வனப்பகுதிகள், தோட்டங்கள், வயல்கள் அபார்ட்மெண்ட்களாக, வணிவ வளாகங்களாக மாறுவது பார்க்க வேதனைதான்.  நான் கூட ஸ்ரீரங்கம் பக்கம் அல்லது தஞ்சைப் பக்கம் வீடு வாங்கி ஒதுங்க ஆசைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் இப்படி எண்ணுவதுண்டு. எனக்கோ தேவைகள் குறைவு. அதனால் எங்குமே சௌகரியமாக இருப்பேன் என்றும் நம்புவேன். ஆனால் நினைத்த இடத்திலெல்லாம் ஒதுங்குவது சாத்தியமா?

      நீக்கு
    2. மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஸ்ரீரங்கம் அல்லது தஞ்சை பக்கம் ஒதுங்க ஆசை - வாங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. செல்லும் இடங்கள் பிடிக்கும் சமயத்தில் எனக்கும் அங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றுவதுண்டு - சமீபத்தில் அப்படித் தோன்றியது - வாரணாசியில். ஆனால் அதெல்லாம் சரி வராது என்பது பிறகு புரிந்துவிடும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. எந்த ஊராயிருந்தாலும் பொழுது போவது அவரவர் மனதைப்பொறுத்தது.    பொழுது போக வழியா இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழுது போவது அவரவர் மனதைப் பொறுத்து - இருக்கலாம். சிலருக்கு வேறு விதமாகவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. லாரியில் சுற்றுலா.  உங்களுக்கு பிடித்த பகுதி.  நிறைய ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  மரணத்தை நேசிப்பவர்கள் என்று சொன்னதைவிட மரணத்தை  யாசிப்பவர்கள் என்று சொல்லலாம் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாரியில் சுற்றுலா - அல்ல! அவர்களது தொழிலே அது தான். லாரியில் பொருட்களை ஒரு ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்வது. அப்படிச் செல்லும் சமயம் கிடைக்கும் அனுபவங்கள், பார்க்கும் விஷயங்கள் என அனைத்தும் காணொளிகளாக பகிர்ந்து வருகிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஓவியம் அருமை. திறமையாளர். பாராட்டுகள். மகுடேஸ்வரன் கவிதை நன்று. புகைப்படத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம், கவிதை, நிழற்படம் போன்ற பகுதிகளும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கூட்டுக்குடும்ப முறை ஒழிந்து தனித்தனியாக வாழ ஆரம்பித்து விட்ட பலரும் இதற்கு காரணமாக இருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.//

    உண்மை. இங்கும் பங்களூரும் அப்படித்தான் ஆகிவருகிறது. நேரில் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன் மனம் வேதனையாக இருக்கு அச்சமாகவும் இருக்கு எதிர்காலத்தை நினைத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பெரிய நகரங்கள் இப்படி காங்க்ரீட் காடுகளாக மாறிவருவது வேதனை தரும் நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பொழுது போவது என்பது நம் மனதில் இல்லையா அது நாம் எங்கு வசித்தாலும். இங்கு மின்சாரம் போகும் போது தெருக்களில் கடை வீதிகளில் சுற்றினாலே போதும். மனதிற்கும் இதமாகிவிடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு, காய்கறி மார்க்கெட்டுக் சென்று நடந்தாலே மனது லேசேகிவிடும்.

      நீக்கு
    2. எங்கு வசித்தாலும் பொழுது போவது என்பது நம் கையில். கடை வீதிகளில் உலா வந்தாலே நிறைய நேரம் செலவாகிவிடும் என்பதும் உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. பச்சைக் காய்கறிகள் பார்த்தாலே மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும் எனக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    4. நெல்லை, வெங்கட்ஜி எனக்கும். காய்கறிகள் கனிகள் இவற்றைப் பார்த்தால் மனசுல மகிழ்ச்சி பொங்கும்.

      கீதா

      நீக்கு
    5. பச்சைக் காய்கறிகள் மனதுக்கு மகிழ்ச்சி தருபவை தான். தங்களுக்கும் அப்படியே என்று தெரிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. PUTHETTU TRAVEL VLOG: நானும் பார்க்கிறேன் ஜி அவ்வப்போது. ரசித்துப் பார்ப்பதுண்டு. அருமையாகச் சொல்கிறார்.

    மரணத்தை நேசிப்பவர்கள் என்பதிய விட இவங்களாக வருவித்துக்
    கொள்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. PUTHETTU TRAVEL VLOG - நீங்களும் பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.

      மரணத்தை வருவித்துக் கொள்பவர்கள் - இப்படியும் சொல்லலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. இன்றைய பகுதிகள் பலவற்றையும் ரசித்தேன். எங்க வளாகத்தில் எங்கள் பில்டிங் பின்புறம் மயில்கள் செம்போத்து கிளிகள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போ அங்கேயும் பில்டிங், செயற்கைப் புல்வெளி போன்றவை உருவாகிக்கொண்டிருக்கின்றன.பிறகு, ஃபார்ம் ஹவுஸ் போலாம் என்று யோசிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுக்கு மாடு குடியிருப்புகள் - தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பச்சைப் பசேலென இருந்த பல இடங்களை தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறார்கள். தில்லியினை அடுத்த NOIDA, Faridabad, Gurugram போன்ற இடங்களில் Farm House விளம்பரங்கள் நிறையவே வர ஆரம்பித்து விட்டன. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் பெண்மணி இப்படி ஒரு Farm House வாங்கி தங்கி இருக்கிறார். பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  9. திருவரங்கம்.... கோவிலின் உள் பகுதியே பல மாறுதல்களைப் பெற்றுக்கொண்டு வருகிறது. 90ல் உள்ளே இடுப்புயர புற்கள் அடர்த்தியாக அமைந்த புல்வெளியை கோவிலுக்குள் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் கோயிலின் உள்பகுதியில் நிறைய மாறுதல்கள் - உண்மை. புல்வெளி பார்த்த நினைவில்லை. வசதி செய்கிறோம் என்கிற பெயரில் இவர்கள் செய்யும் கட்டுமானங்கள் வேதனையை மட்டுமே தருகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  10. கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் மாற்றம் அடைவதை மனது ஏற்கவில்லை. ஆனால் அங்கு தங்குமிடங்கள் வருவது சௌகரியமாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஶ்ரீரங்கத்தில் சுவையான தமிழக உணவு கிடைப்பதுபோலத் தெரியவில்லை. உறையூர் அருகிலுள்ள மடப்பள்ளி தவிர.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் வீதிகளில் ஏற்படும் மாற்றங்கள் - வேதனை தான். சில தங்குமிடங்கள் வந்துவிட்டன என்றாலும் அவை அத்தனை தரமானதாக இல்லை. பழைய கால சத்திரங்கள் இன்னமும் இருக்கின்றன - ஆனால் அவற்றில் இக்கால வசதிகள் இல்லாமையால் பலரும் அதனை விரும்புவதில்லை. நிர்வகிக்கும் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

      உணவகம் - இங்கே பெரிதாக ஒன்றும் நன்றாக இல்லை. மடப்பள்ளி கூட சுமார் ரகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  11. ஓவியம் நன்று. புறக்கணிக்கப்படும், வயதானவர்களும் அவர்களுடைய அப்பா அம்மாவினால் கொஞ்சி வளர்க்கப்பட்டவர்கள்தாமே என்று நினைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் குறித்த தங்களது சிந்தனைகள் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  12. ஓவியம் மிக அழகு! கண்கள் !! அசாத்திய திறமை திரு ரவி அவர்களுக்கு.

    மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை அருமை மனதைத் தொட்டது. என் மகன் வரும்வேளையும் பிரியும் வேளையும்....

    புகைப்படத்தை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம், கவிதை மற்றும் நிழற்படம் உங்ககளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. இன்றைய நிலையில் பொழுது போக்க நிறைய வழிமுறைகள் இருக்கிறது உண்மைதான் ஜி.

    கதம்பம் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பொழுது போக்க நிறையவே வழிகள் இருக்கின்றன என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு

  14. ஒரு இடத்தில் உட்கார்ந்து நம்மை சுற்றி நடப்பவைகளை பார்த்தாலோ அல்லது புத்தகங்களை படித்தாலோ பொழுது நன்றாக போய்விடும் சிறுவயதில் இந்தியாவில் இருக்க்கும் போது எனது பொழுது போக்கு என்பது இதுதான் எவ்வளவு மனிதர்கள் எவ்வளவு விஷயங்கள் அது ஒன்றுமட்டும்தான் இந்தியாவென்றால் நான் மிஸ்ஸிங்க் செய்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழுது போக்க வழிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத்தமிழன்.

      நீக்கு
  15. பொழுதே போதவில்லை எனும் நிலை எனக்கு.

    மரணம் என்பது உலகின் உண்மை. ஆனால் சிலர் தங்களின் மரணத்தை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர் என்றே தோன்றினாலும் அதுவும் விதியோ.

    ஓவியம் அற்புதம்.

    புகைப்படம் மிக நன்றாக இருக்கிறது.

    கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லை என்பதோடு ஒவ்வொருவரும் சொந்த வீடு வாங்குவதோடு மேலும் வீடுகளில் முதலீடு செய்வது என்பதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  16. பெரு நகரங்கள் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளும் கான்க்ரீட் காடுகளாகி வருவது சோகமே. தவிர்க்க முடியாததாகவும் ஆகி வருகிறது. ஒரு குடும்பம் வசித்த இடத்தில் ஒன்பது குடும்பங்களுக்கு நிலத்தடி நீர் போதுமானதாக இருப்பதுமில்லை.

    நீர் வண்ண ஓவியம் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. அடுக்குமாடி வீடுகளாக மாறிவருவது கவலையே. அத்துடன் பல இடங்களில் பெற்ற மக்களே மனங்கள் குறுகி இருப்பதும் வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....