திங்கள், 26 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஆதி மஹோத்சவ் 2024 - நிழற்பட உலா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இத்தொடரில் இதுவரை ஒன்பது பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு


லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது





சென்ற பகுதியில் எங்கள் தங்குமிடத்தின் அருகே இருந்த நயார் ஆற்றின் கரைக்குச் சென்று நிலவொளியில் மின்னிய ஆற்றையும் அங்கே இருந்த சூழலையும் ரசித்து வந்தது பற்றி எழுதி இருந்தேன்.  ஆற்றங்கரையிலிருந்து வெளியேறி தங்குமிடத்திற்கு வருவதற்கு எங்களில் ஒருவருக்கும் மனதில்லை. என்றாலும் இரவு நேரத்தில் அங்கே இருப்பது சரியல்ல என்று முடிவெடுத்து ஆற்றிலிருந்து தங்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  அப்படி அங்கிருந்து விலகி வந்ததும் நல்லதற்கே என்று சிறிது நேரத்தில் புரிந்தது.  ஆற்றின் கரையில் இருந்த இடங்களில் ஒரு சில வீடுகள் இருந்தன. ஒரு வீட்டில் இருந்த நபர்களிடம் சிறிது நேரம் அளவளாவினோம்.  அங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் விளையாடிக்கொண்டிருந்தன.  அன்றைக்கு தான் அந்த ஆட்டுக்குட்டிகள் பிறந்தனவாம். ஆட்டுக்குட்டிகள் பார்க்கவே அத்தனை அழகு. அவற்றை தூக்கிக் கொண்டு கொஞ்சும் அளவிற்கு இருந்தன - எங்கள் குழுவில் இருந்த சிலர் ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிக் கொண்டார்கள்.  அந்த வீட்டில் இருந்த பெண்மணி, அவரது மகள், பெண்மணியின் கணவர் என சிலரிடம் பேசிக் கொண்டிருந்தோம். 



வீட்டின் அருகிலேயே சின்னதாய் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு இருந்தார்கள். இதைத்தவிர கொஞ்சமாக நிலமும் இருக்கிறது. அந்த நிலத்தில் தங்களுக்குத் தேவையான தானியங்களை பயிரிட்டுக்கொள்கிறார்கள் என்று தெரிந்தது.  அழகான கிராமியப் பகுதியில் சிறிய வீடு, வீட்டின் அருகே தோட்டம், இயற்கை எழில், பக்கத்திலேயே ஒரு ஆறு என ரம்மியமான இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பது நமக்கு சொர்க்கம் போலத் தெரிந்தாலும், அங்கேயும் சில பிரச்சனைகள் உண்டு என்பதை அவர்களிடம் பேசியபோது தெரிந்து கொள்ள முடிந்தது. குளிர்காலங்களில் அதீத குளிர் இருந்தாலும், இப்பகுதிகளில் பனிப்பொழிவு இருப்பது இல்லை என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதைப் போலவே மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு என்பதால் அவசர சிகிச்சை தேவைப்படும் காலங்களில் மாவட்டத் தலைநகர் அல்லது ரிஷிகேஷ் வரை கிடைத்த வாகனங்களில் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.  பட்டப் படிப்பு படிப்பதற்கும் வெளியே செல்ல வேண்டியிருக்கிறது என்றும் தெரிந்தது.  



அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு தங்குமிடத்திற்கு வந்து எங்களுக்குத் தேவையான இரவு உணவை தங்குமிட உரிமையாளர் கொடுத்த அலைபேசி எண்ணை அழைத்து சப்பாத்தி, தால், சப்ஜி என அனைத்தும் சொன்னோம்.  அரை மணி நேரத்திற்குப் பிறகு சுடச் சுட உணவு வந்து சேர்ந்தது. எங்கள் குழுவில் இருந்த 10 பேர் தவிர ஓட்டுநர் அனில் திவாரி சேர்த்து மொத்தமாக 11 பேர் இரவு உணவு சாப்பிடுவதற்கு எங்களுக்கு ஆன செலவு 1530/- மட்டுமே. உணவு சுவையாகவும் இருந்தது, அதிக செலவும் இல்லை. எல்லா பயணங்களிலும் இரவு உணவுக்குப் பிறகு, தங்குமிடத்திலிருந்து அப்படியே ஒரு நடை நடந்து நகர்வலம் வருவது எனக்கு பழக்கம்.  அது போலவே இந்த இடத்திலும் வெளியே செல்லலாம் என கீழே இறங்கிய போது, தங்குமிட உரிமையாளர் அதிக தூரம் செல்ல வேண்டாம், விளக்கு இருக்கும் இடம் வரை மட்டுமே செல்லுங்கள் என்று சொன்னதோடு, திரும்பிய பிறகு என்னிடம் சொல்லுங்கள், வெளிக்கதவை நான் பூட்ட வேண்டும் என்று சொல்லிச் சென்றார்.  எதற்காக அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று சொன்னார் என நாங்கள் கேள்வி கேட்கவில்லை. எங்கள் வாகன ஓட்டிக்கும் அறை இருக்கிறது என்று சொன்னாலும் அவர் வண்டியில் தான் படுத்துக் கொள்வேன் என்று சொல்லி இருந்தார். அவரும் எங்களிடம் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். 



நானும் நண்பர்களுமாக அப்படியே நடக்க ஆரம்பித்தோம்.  சாலையில் விளக்கொளி இருக்கும் வரை சென்று திரும்புவது - இப்படியாக இரண்டு அல்லது மூன்று முறை நடந்திருப்போம்.  குளிர்காற்றும் இருந்தது - அதுமட்டுமல்லாது எங்களைத் தவிர சாலையில் வேறு நடமாட்டம் இல்லை. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அந்தப் பாதையில் அவ்வப்போது வந்து போனது.  அப்படி நடந்து கொண்டிருந்தபோது ஒரு வாகனத்தில் சில உள்ளூர்வாசிகள் வந்து எங்கள் தங்குமிடம் அருகே வாகனத்தினை நிறுத்தி, ஊரில் நிறைய ஹோம்ஸ்டே போன்ற தங்குமிடங்கள் வந்திருக்கிறது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களிடமும் இங்கே தங்கியிருக்கிறீர்களா எனக் கேட்டு, அதிக நேரம் இந்த இருட்டில் உலா வருவது நல்லதல்ல என்று சொன்னதோடு, அதிர்ச்சியான ஒரு விஷயத்தினையும் சொன்னார்.  மலைப்பகுதி என்பதால் இந்தப் பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உண்டு என்றும் சில நேரங்களில் மலைப்பகுதியிலிருந்து இறங்கி வந்து ஆற்றில் நீர் அருந்துவதற்கு விலங்குகள் செல்லும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  சில சமயங்களில் புலிகள் கூட வந்திருக்கின்றன என்றும் சொல்ல, சரி சரி தங்குமிடம் திரும்புவோம் என அவர்களுக்கு நன்றி சொல்லி புறப்பட்டோம். 


இது போன்ற இடங்களில் உள்ளூர்வாசிகள் சொல்வதைக் கேட்பது நல்லதே. நமக்குத் தெரியாத இடத்தில், அதிக பழக்கம் இல்லாத இடங்களில் இப்படியெல்லாம் செய்வது ஆபத்தில் கூட முடியலாம். நாங்கள் திரும்பியதும் தங்குமிட உரிமையாளர் வெளிக்கதவை மூடி, பூட்டும் போட்டார்.  அவரிடமும் இந்தப் பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் உண்டா என்று கேட்டபோது, உண்டு - அதனால் தான் அதிக தூரம் நடக்கவேண்டாம் என்று சொன்னேன் என்றும் சொன்னார்.  அப்போது தான் ஆற்றங்கரையில் பார்த்த விலங்குகளின் எலும்புக்கூடுகள் நினைவுக்கு வந்தது - ஒரு வேளை புலிகள் இப்படி விலங்குகளை அடித்துச் சாப்பிட்டு எலும்புக்கூடுகளை மட்டும் விட்டுச் சென்று இருக்குமோ என்றும் சந்தேகமும் வந்தது. எது என்னவோ, நல்லபடியாக தங்குமிடம் திரும்பி அவரவர்களுக்கான அறைகளில் தஞ்சம் அடைந்தோம்.  இரவில் சாதரணமாகவே அமைதியாக இருக்கும் - இந்தப் பகுதியில் வாகனங்களின் ஓட்டமும் குறைவு என்பதால் சுமார் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் ஆற்று நீரின் சலசலப்பு எங்கள் அறை வரை கேட்டது. 


இனிமையான உறக்கம், அன்றைய தினத்தின் பயண அலுப்பினை போக்கும் விதத்தில் அமைந்தது. அடுத்த நாள் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன, பார்த்த இடங்கள் என்ன போன்றவற்றை அடுத்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. இனிமையான அனுபவம் திகிலான அனுபவமாக மாறி விட்டது..  திகிலான சம்பவம் ஏதோ நடந்திருக்கிறது என்றே படித்து வந்தேன்.  நல்லவேளை.. 

    அழகு என்றாலே ஆபத்துதான் போல!  இரவின் அமைதியில் அவ்வளவு தள்ளி இருக்கும் ஆற்று நீரின் சலசலப்பு கேட்பதே கூட சற்று திகிலாக இருந்திருக்கும் - படங்களில் வருவது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் தெரிந்த போது எங்களுக்கும் திகில் தான். ஆனாலும் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான அனுபவம். நல்ல இடத்தில் ஒரு இரவுப் பொழுது. ரிஷிகேசின் அருகிலா?

    உணவு சொல்லும்போது ஆளுக்கு இத்தனை சப்பாத்தி என்று வரவழைப்பீர்களா இல்லை அவங்களே இத்தனை பேருக்கு இரவு உணவு என்றால் இவ்வளவு சப்பாத்தி எனத் தயாரிப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷிகேஷ் அருகில் அல்ல! கோட்த்வார் அருகில். தங்கிய இடத்திலிருந்து தேவ் பிரயாக் சுமார் 40 கிலோமீட்டர். தேவ் பிரயாகிலிருந்து ரிஷிகேஷ் 70 கிலோமீட்டர்.

      பொதுவாக ஆளுக்கு இரண்டு (அ) மூன்று என கணக்கிட்டு வரவழைப்போம். உணவகத்தில் சென்று சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அப்போதைக்கு அப்போது வரவழைப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    நயார் ஆற்றின் கரை பக்கம் குடி இருப்பவர்கள் வீட்டை பற்றி சொன்னது அருமை.இயற்கையோடு வாழ்வதில் சுகமும், கஷ்டமும் இருக்கிறது. மருத்துவ வசதிக்கும் உயர் படிப்பு படிக்க வெகு தூரம் போக வேண்டி இருக்கே.
    ஆட்டுக்குட்டி அழகு காணொளி அருமை.
    இரவு உலாவில் ஆபத்து இருப்பது அறிந்து திகில் தான்.
    பதிவும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள், படங்கள் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. ஆபத்தான அனுபவமாக இருக்கிறது ஜி.

    தெரியாத இடத்தில் கவனமாக நடந்து கொள்வது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெரியாத இடத்தில் கவனமாக நடந்து கொள்வது நன்று// - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. இயற்கையுடன் வாழும் மனிதர்கள் வீடுகள்,வாழ்க்கை சில சிரமங்கள் என அறியத் தந்துள்ளீர்கள்.

    ஆட்டுக் குட்டி அழகு.

    இரவு உலாவில் ஆபத்துக்கள் உண்டு என அவர்கள் எச்சரித்தது நன்று தெரியாத இடத்தில் ஆபத்துக்கள் வரலாம்.

    நாங்களும் சில வருடங்களுக்கு முன் 'யால 'காட்டுப்பகுதிக்குள் உள்ள விடுதியில் தங்கி இருந்த போது பகலிலேயே நிறைய காட்டுப் பன்றிகள் சர்வசாதாரணமாக திரிந்தன..இரவானால் சிறுத்தை,யானை என்பனவும் வரும் என நமக்கு எச்சரித்து இருந்தனர்.
    இரவு உணவுக்கு சொல்லும்போது நாங்கள் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் காவலர்கள் இரண்டு மூன்று பேர்கள் துவக்கு லைட்டுகளுடன் வந்து அழைத்துச் சென்று மீண்டும் கூட்டிவந்து விடுதியில் விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு. இப்படியான அனுபவங்கள் ஒவ்வொருக்கும் தேவையான விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  6. ஆஹா, அருமயான இனிமையான அனுபவம். வாசித்து வரும் போது ஏதோ நடந்ததோ....நீங்களும் புலியைப் பார்த்திருப்பீங்களோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே வந்தேன்....அது திகிலாக இருந்திருக்கும். பயமாகவும்.

    ராத்திரி ஆற்றின் நீர் சலசலப்போடு உறங்கியது இனிமை. ராத்திரி ஆற்றில் நீர் அருந்த விலங்குகள் வந்திருந்தாலும் தெரிந்திருக்காது இல்லையா?.

    நாங்கள் மனாலியில், பியாஸ் நதிக்கரையில் அதன் சலசலப்போடு உறங்கியது நினைவுக்கு வருகிறது. அருமையான இடம் அது. அருகில் என்றால் மிக அருகில்...ஆறு செம இனிய சத்தம்

    அப்படியான இடங்களில் வாழ்வது ஒரு சுகம் என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் படிப்பு, மருத்துவம் என்று வெளியூர் சென்றுதான் ஆக வேண்டும்.

    இப்படி எப்போதேனும் போய் தங்கிவிட்டு மனதிற்கு உற்சாக டானிக் கொடுத்துக் கொண்டு வரலாம்.

    ஆட்டுக்குட்டி அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள், தகவல்கள் குறித்த உங்கள் எண்ணங்களையும், உங்கள் அனுபவங்களையும் இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    ஆற்று நீரின் இனிமையான சலசலப்பு இசையை நீங்கள் ரசித்துக் கூறியதையும், வர்ணம் வழியில் நீங்கள் ரசித்து எடுத்த அழகான ஆட்டு குட்டிகளின் காணொளியையும் நானும் ரசித்தேன்.

    காடுகள் இருக்கும் பகுதி அதுவும் இரவு நேரம் என்பதால், வன விலங்குகளின் நடமாட்டம் அங்கு உண்டென சுற்றியிருப்பவர்கள் முதலிலேயே எச்சரித்தது நன்மையாக போயிற்று. படிக்கும் போதே திகிலாக இருந்தது. அங்கு குடியிருப்பவர்களும் எச்சரிக்கையுடன்தான் இருப்பார்கள் அல்லவா!? நல்லவேளை..! நீங்களும் நீண்ட தொலைவு நடந்து செல்லாமல் திரும்பி வந்துள்ளீர்கள். அடுத்த நாள் எங்கு சென்றீர்கள்..! பயணம் எவ்வாறு இருந்தது என அறிய ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும், பதிவு வழி பகிர்ந்து கொண்ட வாசகம் மற்றும் தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....