செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கதம்பம் - உடையார் - பாலகுமாரன்! (வாசிப்பில்) - குடும்பம் ஒரு கதம்பம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட தில்லி திரும்புவதில் சிக்கல் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு; மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கில்லை - சத்குரு.  

 

*******

 

உடையார் - பாலகுமாரன்! (வாசிப்பில்) - 19 ஜனவரி 2024:


 

மாமன்னர் ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாறு தான் உடையாரில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களால் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது! Kindleல் நான் வாசிக்கத் துவங்கியிருக்கும் பிரம்மாண்ட சரித்திரத்தின் முதல் பாகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்!

 

நான்கு பனைமர உயரத்தில் ஒரு பிரம்மாண்ட கற்றளி உருவாக வேண்டும் என்றால் சும்மாவா! ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தேர்ந்த வல்லுனர்களை வைத்து உருவாக வேண்டுமே! 

 

அதற்கான வரைபடங்கள், சிற்பங்கள், வேலைப்பாடுகள், நுணுக்கங்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டாமா! காலத்துக்கும் பேர் சொல்லணும்! ஒவ்வொரு கல்லும் கதை சொல்ல வேண்டுமே!

 

காவிரி கரைபுரண்டு ஓடிய நாளில் காஞ்சியிலிருந்து மாட்டுவண்டியில் வந்த வரைபடங்கள் நீரின் போக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் கவிழ்ந்து போகிறது!  இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் போராடி, சிக்கல்களிலிருந்து விடுபட்டு என பல இன்னல்களுக்குப் பின்னர் தான் அந்த பிரம்மாண்டம் என்பது உருவாகிறது...!!

 

முழுவதும் வாசித்த பிறகு வாசிப்பனுபவம் எழுத எண்ணம் உண்டு.

 

*******

 

குடும்பம் ஒரு கதம்பம்! - 1 ஃபிப்ரவரி 2024:

 

பீரோவை சுத்தம் செய்து எந்தெந்த புடவைக்கு ப்ளவுஸ் இருக்கு! இல்லை! என்று பார்த்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்!

 

கண்ணா! இதே மாதிரி பேபி பிங்க்ல ஒரு புடவை கூட என்கிட்ட இருந்ததேடா! என்று மகளிடம் கேட்டதும்…

 

எதும்மா நீ சொல்ற??

 

அட! பொண் பார்க்க வரும் போது கட்டிண்டு இருந்தேனடா!

 

சாரிம்மா! எனக்கு அது தெரிய வாய்ப்பில்ல! நான் அப்போ இல்ல! என்றாள்…:)

 

அவள் சீரியசாக அப்படி பதில் சொன்னதும் தான் எனக்கு புரிந்தது...:))

 

_________

 

அப்பா! இந்த அம்மா இன்னிக்கு என்கிட்ட என்ன கேட்டான்னு தெரியுமா! என்று நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் ...

 

அட! பொண்ணு பார்த்த அன்னிக்கு இவ எங்கிட்ட என்ன சொன்னான்னு தெரியுமாடா செல்லம்! என்று அப்பா சொன்னார்...!

 

என்ன சொன்னா இந்தம்மா???… என்று ஆர்வம் மேலிடக் மகள் கேட்டுக் கொண்டிருந்தாள்!

 

உனக்கு சமைக்கத் தெரியுமான்னு தான் நான் கேட்டேன்!!

 

அதுக்கு உடனே இவ என்ன சொன்னா தெரியுமா??

 

அதான்! உங்களுக்கு சமைக்கத் தெரியுமேன்னு சொல்லிட்டா! கேட்டுப் பாரு அவகிட்ட…:)

 

மகள் என்னிடம் திரும்பி ‘குட்டிப் பொண்ணா உன்ன நினைச்சேனேம்மா! அப்பாவ அப்ப தான் பார்த்திருக்க! அப்பாட்ட எப்படி உன்னால உடனே இப்படியொரு பதில சொல்ல முடிஞ்சது?? ...:))

 

என்னமோ ஒரு அசட்டு தைரியம் கண்ணா…:)

 

அது சரி! அப்படி சொன்னனே தவிர அப்புறம்  சமையல் பண்றது எல்லாம் யாரு சொல்லு..🙂

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

8 கருத்துகள்:

  1. முன்பு உடையார் இரண்டு பாகம் படித்திருந்தேன். அப்புறம் தொடர முடியாமல் விட்டு விட்டேன்! உங்கள் குடும்ப உரையாடல் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. எதிர்பாரா தருணங்களில் நடக்கும் இப்படிப்பட்ட குடும்ப சம்பாஷணைகள் சுவாரஸ்யமானவை.

    Mahesh

    பதிலளிநீக்கு
  3. உடையார் படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டது.

    உங்கள் மகளுடனான சம்பாஷனை ரசித்து சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  4. உடையார் பற்றி சில விமர்சனங்களை வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகம் வாசித்ததில்லை. உங்கள் அனுபவத்தை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குடும்பக் கதம்பம் சுவாரசியம். Colorful மணமாக வீசுகிறது! ரசித்தேன். இப்படியான உரையாடல்கள் எல்லாம்தான் குடும்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உடையார் நானும் படிக்கிறேன், படிக்கிறேன், இன்னும் முடித்த பாடு இல்லை.

    ரோஷ்ணியும், நீங்களும், வெங்கட் பேசியதும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. தஞ்சை பெரிய கோயில் வரலாறு பாலகுமாரன் அவரின் பார்வையில் ஆவலைத் தூண்டுகிறது.

    அம்மா அப்பா மகள் உறவு கடமை அன்பு அரவணைப்பு என்று உறவை பலமாக்கும் உரையாடல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. கதம்பம் சுவாரசியமான உரையாடல்களுடன் .

    நாவல் அறிமுகம் என கதம்பம் சுவை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....