திங்கள், 19 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் - தொடர்ச்சி - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஆதி மஹோத்சவ் 2024 - நிழற்பட உலா  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இத்தொடரில் இதுவரை ஆறு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


சென்ற பகுதியில் சொன்னது போல, இப்பகுதியில் தொடர்ந்து லான்ஸ்(d)டௌன் பகுதியில் பார்க்க வேண்டிய மேலும் சில இடங்கள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.


பீமனின் பகோடா, லான்ஸ்(d)டௌன்





நகர் பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் நடைப்பயணத்தில், வனப்பகுதியில் இருக்கும் ஒரு சுற்றுலாத் தலம் பீம் பகோடா(ரா)!  கொஞ்சம் கடினமான பாதை தான். மஹாபாரதத்தில் வரும் பீமன் இங்கே எப்படி வந்தார் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.  பாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்தப் பகுதியில் சற்று நேரம் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டார்கள் என்றும் அந்தப் பகுதியில் இருக்கும் போது பீமன் இரண்டு பெரிய பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தான் என்றும், இன்று வரைக்கும் மேலே இருக்கும் பாறையை இரண்டு விரல்களால் தொட்டு அசைக்க முடியும் என்றாலும் கீழே விழாமல் இருக்கும் என்பது இந்த இடத்தின் முக்கியத்துவம்! இரண்டு பாறைகளின் அமைப்பு பார்க்க பகோடா போல இருப்பதால் இந்த இடத்திற்கு பீமனின் பகோடா என்றே வைத்து விட்டார்கள். பொதுவாக இங்கே செல்பவர்கள் அப்படி பாறையைத் தொட்டு அசைத்துப் பார்ப்பதோடு சில பல நிழற்படங்களையும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  வனப்பாதையில் செல்வதில் எங்கள் குழுவினருக்கு விருப்பம் இருக்கவில்லை! ஒரு வேளை நான் தனியாகச் சென்றிருந்தால் அந்த இடத்திற்கும் சென்று சிறிது நேரம் உலா வந்திருப்பேன்! குழுவாக பயணிக்கும் நேரங்களில் எல்லோருடைய வசதிகளையும் கவனிக்க வேண்டும் என்பது தானே சரி!


பயணத்தில் எங்களது குழுவினர்:


இந்த இடத்தில், இந்த முறை என்னுடன் பயணித்த நண்பர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி விடலாம்!  இந்தப் பயணத்தில் நாங்கள் மொத்தம் 10 நபர்கள்! அதில் நான்கு பேர் அறுபதைக் கடந்தவர்கள்! மற்றவர்கள் ஐம்பதைக் கடந்தவர்கள் - என்னையும் சேர்த்து! நான்கு ஜோடிகள் மற்றும் இரண்டு ஒற்றையர்கள்! எங்கள் பயணத்திற்கான முக்கிய காரணமாக இருந்தது, தலைநகரின் கூட்டம், சூழல் போன்றவற்றிலிருந்து ஒரு நாளேனும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தங்குவது என்பது தான்.  அதனால் பெரிதாக சுற்றிப் பார்க்க ஒருவருக்கும் விருப்பம் இருக்கவில்லை. அது தவிர, பயணத்திற்காக அதிக நாட்கள் எங்களிடம் இல்லை என்பதால் மிகக் குறைவான இடத்திற்கே சென்று வந்தோம்.  தங்கிய இடத்தின் அருகே இருந்த நதிக்கரையில் தான் அதிக நேரம் செலவழித்தோம்.  இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், வம்பிழுப்பதும் எப்போதும் நடப்பது. குழுவில் இருக்கும் அனைவருமே இப்படி அவ்வப்போது பயணங்கள் செய்வதும் வழக்கம்.  அதனால் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கிண்டல் செய்து கும்மாளம் அடிப்பதும் வழக்கமே!  தொடர்ந்து பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து பார்க்கலாம்.


லான்ஸ்(d)டௌன் - பனிச்சிகரங்கள் ஒரு பார்வை மற்றும் ஹவா(G)கர்



Snow View Point-லிருந்து பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் மரங்களும்...


ஹவா(G)கர் 

ஸ்னோ வியூபாயிண்ட் லான்ஸ்டவுன் என்பது மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் அழகிய பசுமையான காடுகள் மற்றும் பள்ளத்தாக்கினை  பறவையின் பார்வையில் பார்க்க ஏதுவான ஒரு இடம்.  சுற்றியுள்ள மலைகளின் பரந்த காட்சிகளுடன் இயற்கை எழிலையும், பனிபடர்ந்த மலைச்சிகரங்களையும் பார்க்கவும், அந்த இடத்தில் சிறிது நேரம் இருந்து இயற்கையான காற்றினை ஸ்வாசிக்கவும் ஏற்ற இடம்.  ஆனால் இந்தப் பகுதிக்குச் செல்ல குறைந்த பட்சம் மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும் என்பது ஒரு தடங்கல்.  மலையேற்றம் என்பது அனைவராலும் செய்துவிடக்கூடிய விஷயம் அல்ல. அதிலும் மூட்டு வலி உள்ளவர்களால் இப்படியான மலையேற்றங்கள் - சிறிய அளவுடையதாக இருந்தாலும் - மலையேற்றம் கடினமே. உள்ளூர்வாசிகளின் பிரதான பொழுது போக்கு இடமாக இந்த ஸ்னோ வியூபாயிண்ட் இருக்கிறது.  இந்த இடத்திற்கு அருகிலேயே இன்னுமொரு பார்க்க வேண்டிய இடமாக ஹவா(G)கர் என்ற இடமும் உண்டு. ஹிந்தி மொழியில் ஹவா என்றால் காற்று. (G)கர் என்றால் வீடு - ஹவா(G)கர் என்ற ஹிந்திச் சொல்லுக்கு காற்றின் வீடு என்று தமிழில் அர்த்தம் கொள்ளலாம்! முற்றிலும் சுற்றுச்சூழல் இரசிகர்கள் சென்று பார்க்க வேண்டிய இடம் என்பதோடு, இந்தப் பகுதியிலிருந்து பலவித மலையேற்றங்கள் தொடர்கின்றன என்பதும் கூடுதல் தகவல். குறிப்பாக பனிக்காலங்களில் இங்கே சென்றால் பனிபடர்ந்த மலைச்சிகரங்களையும், பனிபடர்ந்த மரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.  அப்படியான சில காட்சிகளை நீங்கள் பார்த்து ரசிக்க இணையத்திலிருந்து எடுத்த படங்களைச் சேர்த்திருக்கிறேன். 


லான்ஸ்(d)டௌன் - Darwan Singh Regimental Museum




லான்ஸ்டவுன் பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களில் பிரபலமான இன்னும் ஒரு இடம் Darwan Singh Regimental Museum என்று அழைக்கப்படும் ஒரு அருங்காட்சியகம்.  Garhwal Rifles எனப்படும் இராணுவப் பிரிவின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். 1983-ஆம் ஆண்டு Garhwal Rifles இராணுவப்பிரிவினரால் தங்களது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காகவும், மக்களுக்கு காட்சிப்படுத்தவும் தொடங்கப்பட்டது.  


முதலாம் உலகப் போரின்போது பிரித்தானிய இந்திய இராணுவத்தின் முதலாம் Bபட்டாலியன், 39-வது Gகட்(ர்)வால் ரைபிள்ஸில் நாயக் பதவியில் பணிபுரிந்த Darwan Singh Negi எந்தவித அச்சமுமின்றி போராடி தனது அசாதரணமான பணியினால் அனைவரையும் கவர்ந்ததோடு, ஆங்கிலேயர்கள் அளிக்கும் விருதான Victoria Cross-ஐயும் பெற்றார். அவரின் பெயரிலேயே இந்த அருங்காட்சியம் இயங்கிவருகிறது.  இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களிலிருந்து போர் காட்சிகள், வீரர்களின் படங்கள், அவர்களது சாதனைகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் சமயத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள், போர் கோப்பைகள், பழங்கால பொருட்கள், ஆடைகள், பதக்கங்கள் என பலதும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  இந்த அருங்காட்சியகத்திற்கு நுழைவுக்கட்டணமாக ரூபாய் ஐம்பது வாங்குகிறார்கள்.  வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயமாக இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். 



மேலும் பார்க்கவேண்டிய இடங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை வரும் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. இடங்களும் சுவாரஸ்யம், படங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இடங்கள் அனைத்தையும் ரசித்தேன். பனிபடர்ந்த மலைகள்... ஆஹா... எவ்வளவு அருமையான இடம் என மனதில் தோன்ற வைத்தது. மகன் பஸ் பயணத்தின்போது சாலை ஓரங்களைக் காண்பித்தான், பனியுடன் வென்மையான மணல் போல் இருந்தது (யூரோப்).

    இந்தப் படங்களைப் பார்க்கும்போது இந்த வருடத்தின் இறுதியில் முக்திநாத் செல்லும் ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படி சாலையோரங்களில் பனித்துகளை பார்க்க முடியும். பனிபடர்ந்த மலைச்சிகரங்களை சற்றே தொலைவிலிருந்து பார்த்தாலும், அதன் மீது ஏறிச் செல்லும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை - ஒரு முறை தவிர.

      தங்களது ஆசை -முக்திநாத் செல்லும் ஆசை - நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. அனைத்தும் அழகே அழகு. பனி படர்ந்த மலைகள் இறைவனின் கொடை, படங்கள் மனதைக் கவர்கின்றன..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பனி படர்ந்த மலைகள் இறைவனின் கொடை// - நூற்றுக்கு நூறு உண்மை.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. பனிச்சிகரங்கள் ,மரங்களில் படிந்திருக்கும் பனி படம் மிகுந்த அழகு.
    அருங்காட்சியகம் இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வெங்கட்ஜி, இடங்களையும் தகவல்களையும் பார்த்துக் கொண்டேன். இடங்களை குறித்துக் கொண்டேன். பனி அடர்ந்த மலைச் சிகரங்கள் ஆஹா! இயற்கை நமக்கு என்னவெல்ல்லாம் பொக்கிஷங்களைத் தருகிறது இல்லையா?

    மலைகள் இதோ நீங்கள் சென்ற இடம் எல்லாம்...அருமையான ஒரு இடம். கொஞ்சம் நம்மை தினசரி அலுவல்களில் இருந்து நகர்த்தி வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். நல்ல விஷயம் இது முக்கியமும் கூட. Energy Tonic!

    //வனப்பாதையில் செல்வதில் எங்கள் குழுவினருக்கு விருப்பம் இருக்கவில்லை! ஒரு வேளை நான் தனியாகச் சென்றிருந்தால் அந்த இடத்திற்கும் சென்று சிறிது நேரம் உலா வந்திருப்பேன்! குழுவாக பயணிக்கும் நேரங்களில் எல்லோருடைய வசதிகளையும் கவனிக்க வேண்டும் என்பது தானே சரி!//

    ஆமாம் சில சமயம் குழுவாகச் செல்லும் போது சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டி வருகிறதுதான் மற்றவங்களின் வசதியையும் அபிப்ராயத்தையும் கருத்தில் கொண்டு. அனுசரிக்கவும் வேண்டும்தான்.

    தகவல்கள் படங்கள் எல்லாமே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள்/படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. காலையில் விட்டுப் போன கருத்து பீமன் பக்கோடா - பெயரே சொல்கிறது மஹாபாரதம் என்று. பின்னணிக் கதை சுவாரசியம். அசைத்தால் விழாமல் இருப்பது அதிசயம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களுக்கும் ஏதோ ஒரு கதை - அதுவும் ஸ்வாரஸ்யம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. படங்களும், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்களும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    வெண்பனி மூடிய மலைகள் நேரில் காண ஆசை உண்டு. பீமனின் பகோடா என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. வாசித்த பிறகுதான் புரிந்தது. இதற்கு இருக்கும் கதை.

    மற்ற தகவல்களும் படங்களும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. வாசகம் அருமை.
    பயண விவரங்கள், இணையம் தந்த படங்கள் எல்லாம் அருமை.
    பீமனின் பகோடா மிக அருமை.
    அருங்காட்சியகம் , மற்றும் பனி படந்த சிகரம். எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள், படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. ஆஹா... அந்த ஹவாகர் அட்டகாசம் ! நண்பர்கள் சேர்ந்து போகும் பயணங்களில் அனைவருக்கும் நகைச்சுவை உணர்வு இருந்தால் பயண நேரம் அருமை. முசுடு யாராவது வந்துட்டால் கஷ்டம். நல்ல நண்பர்கள் வாய்ப்பதும் கொடுப்பினைதான் ! என்னாலும் இப்பெல்லாம் ஏற்றத்தில் ஏற முடிவதில்லை. ப்ச்...

    துளசிகோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் மட்டுமல்ல எல்லா சமயங்களிலும் நல்ல நண்பர்கள் தேவை. மலையேற்றம் - முடிந்தவரை ஏறிவிடலாம் என்று தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....