செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

கோயில் உலா - ஸ்ரீ காந்திமதி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயில், உறையூர், திருச்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே; உனக்குத் துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்.

 

*******


மதம் பிடித்த யானையை கோழி கொத்தும் காட்சி…


கோயில் நுழைவாயில்…


சில மாதங்களுக்கு முன்னர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் குறித்து எழுத ஆரம்பித்தேன். தமிழகத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சென்று அங்கே கிடைக்கும் அனுபவங்களையும், அந்த ஸ்தலங்கள் குறித்தும் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று பதிவுகள் இந்த வரிசையில் எழுதினாலும் அதற்குப் பிறகு எழுதுவதில் நீண்ட இடைவெளி.  எந்தவித பதிவுகளும் எழுதவில்லையே! தமிழகம் வரும்போதெல்லாம், குறைந்த பட்சம் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கேனும் சென்று வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  சென்ற வருடத்தில் ஒவ்வொரு முறை இங்கே வந்த போதும் அப்படியான கோயில்களுக்குச் சென்றதுண்டு என்றாலும் இங்கே எழுதவில்லை.  இந்தப் பயணத்திலும் அப்படி ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்திற்குச் சென்றேன்.  திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 13 என்று விக்கிபீடியா தளம் தகவல் சொல்கிறது.  அந்தப் பட்டியலில் இருந்த கோயில்கள் குறித்து பார்க்கும்போது, இந்தப் பயணத்தில் திருச்சி மாவட்டத்தில் பார்க்க விடுபட்ட ஆறு கோயில்களில் ஒரு கோயிலுக்கேனும் சென்று வரலாம் என்று முடிவெடுத்தேன்.  அப்படிச் சென்று பார்த்த கோயில் குறித்து தான் இன்றைய கோயில் உலாவில் நாம் பார்க்கப் போகிறோம்.

 

திருச்சி உறையூரில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்:



 

திருச்சியில் இருக்கும் உறையூர் என்ற பெயர் சொன்னவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நாச்சியார் கோயில், அழகிய மணவாளப் பெருமாள் கோயில், திருக்கோழி என்ற பெயர்களில் வழங்கப்பெறும் திவ்யதேசம் தான்.  இது தவிர மேற்கூரையே இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ வெக்காளி அம்மன் கோயில்.  ஆனால் அதே உறையூரில் பாடல் பெற்ற ஸ்தலம் ஒன்றும் இருக்கிறது என்பதை இது வரை நான் அறிந்ததில்லை.  இணையத்தில் பார்த்து தெரிந்தவுடன், திருவரங்கத்திலிருந்து உறையூர் செல்வது சுலபம் என்பதால் உறையூரில் இருக்கும் ஸ்ரீ காந்திமதி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல முடிவெடுத்தேன். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தில்லை நகர், உறையூர் வழி மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் ஒன்பதாம் எண் பேருந்தில் ஆறு ரூபாய் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு உறையூர் சென்றுவிடலாம்.  வாலாஜா சாலைக்கு எதிரே ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சாலை என்று இருக்கிறது - அதில் தான் இக்கோயில் இருக்கிறது. 




 

வெளியே ஒரு பெரிய நுழைவாயில். மண்டபத்தினைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய வளாகத்திற்குள் நுழைந்து விடுகிறோம்.  கோயிலுக்குள் நுழைந்தபிறகு தான் அடடா இத்தனை பழமையான கோயில் இதுவரைக்கும் நமக்குத் தெரியாமல் போனதே என்று தோன்றியது. சில நாட்களுக்கு முன்னர் இங்கே செல்லலாம் என வீட்டிலிருந்து ஒன்பதரை மணிக்கு புறப்பட்டேன்.  அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையும், மாலையில் 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில்  திறந்திருக்கும் என்று தெரியவர, வெளியிலிருந்தே கோயிலைப் பார்த்துவிட்டு திரும்ப வேண்டியதாயிற்று.  சரி ஈசன் விரும்பினால் மீண்டும் இங்கே வருவோம் என வீடு திரும்பினேன்.  அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் இக்கோயிலுக்குச் சென்றேன். இம்முறை காலை 07.45 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டேன்.  கோயிலுக்குள் நுழைந்தபோது மணி 08.50.  நின்று நிதானித்து இறைவனை தரிசிக்கலாம் என உள்ளே நுழைந்தேன்.  

 

தனியே தன்னந்தனியே




 

நான் சென்றபோது ஒரு சில பக்தர்கள் இருந்தாலும், கோயில் பூஜை செய்யும் குருக்கள் இல்லை.  அதனால் முதலில் தெற்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ காந்திமதி அம்மன் சன்னதியில் நின்று தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்தேன். பிறகு கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலுக்குள் மகாமண்டபத்தில் நுழைந்து அங்கே இறைவனைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டு பத்து நிமிடத்திற்கும் மேல் எனக்குத் தெரிந்த மந்திரங்களை சொல்லி மனம் முழுக்க நிம்மதியுடன் சிவபெருமானுடன் One to One உரையாடல். அதன் பிறகு பிரகாரத்தில் வலம்வரும்போது தேவாரப்பாடல்களை இரண்டு அடியார்கள் மனமுருகப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.  கோயில் வளாகத்தில் திருப்பணிகள் நடைபெறுவதால் பிரதக்ஷிணம் வருவதில் கொஞ்சம் சிக்கல்களுண்டு. ஆனாலும் நான் சுற்றி வந்தேன்.  ஆஹா. தூண்களில் எத்தனை எத்தனை சிற்பங்கள் - ஒவ்வொன்றும் பார்க்கப்பார்க்க அழகு.  





 

பொறுமையாக சிற்பங்களை பார்த்தபடியே கோயில் பிரகாரத்தில் சுற்றி வந்தேன்.  ஒவ்வொரு தூணிலும் நான்கு புறமும் விதம் விதமான சிற்பங்கள். இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. கோயிலை பிரகாரத்தில் சுற்றி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பெரியவரிடம் சிற்பங்கள் குறித்து கேட்டபோது, அந்தக்காலத்திலேயே சைக்கிள் இருந்திருக்கிறது என்பதைக் காட்டும் வண்ணம் ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டும் சிலை கூட ஒன்று இருக்கிறது என்று காண்பித்தார். கோயில் உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம் உள்ளது. இந்த சிற்பத்திற்கான காரணம் கோயில் குறித்த ஒரு கதை அந்தக் கதை கீழே.

 

மதம்பிடித்த யானையும், மதத்தை அடக்கிய கோழியும்:




 

சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான், தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது பட்டத்து யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. மன்னனுடன் வந்திருந்த படை வீரர்களாலோ, பாகனாலோ, அல்லது மன்னனாலோ பட்டத்து யானையை அடக்க முடியாமல் அனைவரும் திகிலடைந்தனர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் மனமுருகி பிரார்த்தனை செய்ய சிவபெருமானும் கருணை கூர்ந்து அப்பகுதியில் இருந்த தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியதாம். கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் விடாமல் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயத்தினை எழுப்பினான் என்றும் இத்தலம் கோழியூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது என்றும் கதை!  திவ்யதேசம் பற்றிக் கூறும்போதும், இத்தலம் திருக்கோழியூர் என்று அழைக்கப்பட்டதற்கும் இந்தக் கதை காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

 

ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் - பெயர்க்காரணம்:

 

பஞ்ச பூத ஸ்தலங்கள் ஒரே இடத்தில்:



 

பிரம்மா இத்தலத்தில் வந்து சிவபெருமானை வணங்கிய சமயம் சிவபெருமான் ஐந்து நிறங்களை - பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிகப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) - தன்னிடமிருந்து வெளிப்படுத்தினாராம். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து நீரும், செம்மை நிறத்திலிருந்து நெருப்பும், கருமை நிறத்திலிருந்து காற்றும், புகைமை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்றும் பிரம்மாவிடம் சிவபெருமான் சொல்லியதாக ஒரு கதை.  பஞ்ச பூத ஸ்தலங்களான காஞ்சிபுரம் (மண்), திருவானைக்கோயில் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று) மற்றும் சிதம்பரம் (ஆகாயம்) என அந்த ஐந்து இடங்களிலும் காட்சி அளித்து அருள்பாலிக்கும் சிவபெருமான் இந்த தலத்தில் ஐந்து பூதங்களையும் ஒன்றாக உள்ளடக்கி இங்கே காட்சி தந்ததால், இந்த ஊருக்கு உறையூர் என்ற பெயரும் இங்கே அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டதாக ஒரு கதை. 

 

உதங்க முனிவரும் ஐந்து வர்ணங்களும்:



 

உதங்க முனிவர் இத்திருத்தலத்தில் சிவபெருமானை தரிசித்தபோது அவருக்கு ஐந்து ஜாமங்களில் ஐந்து வர்ணங்களைக் காண்பித்ததாகவும் ஒரு கதை இருக்கிறது.  அந்தக் கதையையும் பார்க்கலாம். வேதங்கள் அனைத்தும் கற்றுணர்ந்த உதங்க முனிவர் அவரது மனைவியுடன் கங்கையில் நீராடிய போது அவரது மனைவியை முதலை ஒன்று இழுத்துச் சென்றுவிட, என்னதான் கற்றுணர்ந்த முனிவராக இருந்தாலும், தனது மனைவியின் இழப்பைத் தாங்க முடியாத துயரத்தில் உதங்க முனிவர் இருந்தார்.  அமைதியில்லாமல் தத்தளித்து பல தலங்களுக்கும் சென்று பக்தியில் ஆழ்ந்து வந்தார். அப்படிப் பார்த்த தலங்களில் ஒன்றாக இந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலும் ஒன்று என்று தகவல் சொல்கிறது இக்கோயில் பற்றிய குறிப்புகள். இக்கோயிலுக்கு உதங்க முனிவர் வந்த போது அவருக்கு இறைவன் ஐந்து வர்ணமுடைய தனது திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினாராம். காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். இப்படியான காட்சியைக் கண்டு உதங்க முனிவர் மனது நிம்மதி அடைந்தது என்றும், இந்தக் காட்சி கண்ட நாள் ஆடி மாத பூர நாள் என்றும், அந்த நாளில் உறையூர் உறையும் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரரை தரிசிப்பது நல்லது என்றும் சொல்கிறார்கள்.  இப்போதும் பிரகாரத்தில் உதங்க முனிவருக்கும் ஒரு சிலை இருக்கிறது. 




 

பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரைத் தவிர இறைவனுக்கு தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் (இதற்கான கதை ஒன்றும் சொல்கிறார்கள் - அந்தக் கதையும் கீழே தருகிறேன்) திருமுக்கீச்சுரத்தடிகள் என்ற பெயரும் உண்டு. கோயிலின் ஸ்தல விருக்ஷம் வில்வம். இரண்டு தீர்த்தங்கள் - சிவ தீர்த்தம் மற்றும் நாக தீர்த்தம் என்று சொல்கிறார்கள் - நான் பார்த்தது ஒரே ஒரு தீர்த்தம் மட்டுமே - அதுவும் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்க் கிடந்தது. வில்வமரத்தடியில் சிவபெருமான் அமர்ந்த நிலையில் ஒரு சிலை இருக்கிறது.  அச்சிலையும் அழகு.  சிவன் சுயம்பு உருவம் என்பது மட்டுமல்லாது மிகச் சிறிய உருவமும் கூட.  கொடிமரத்தினையும், மகாமண்டபத்தினையும் தாண்டி வெளியே ஒரு பெரிய நந்தி சிலையும் உண்டு.  

 

தான்தோன்றீஸ்வரர் - பெயர்க்காரணம்:




 

உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஆனால் அப்படி தினம் தினம் வழிபாடு செய்து வந்ததில் ஒரு தடை ஏற்படுகிறது. ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்துவிட, தனது தொடர் இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாளாம். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார் என்கிறது இன்னுமொரு கதை. பல கதைகள் இப்படி இருக்கின்றன என்பதும், இப்படியான கதைகள் நிஜத்தில் நடந்தனவா என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதில் பலனில்லை. கோயிலின் சிறப்பையும், அங்கே இருக்கும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மன நிம்மதிக்கான வழிகள் போன்றவற்றை மட்டுமே நாம் கவனித்தால் நல்லது. 

 

ஸ்தலம் குறித்த பாடல் ஒன்று:

 

இத்தலம் குறித்து சம்பந்தர் எழுதிய தேவாரப்  பாடல் ஒன்று உங்கள் பார்வைக்கு. 

 

நீருளாரும் மலர்மேல் உறைவான்நெடு மாலுமாய்ச்

சீருளாருங் கழல்தேட மெய்த்தீத்திர ளாயினான்

சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பியன் வில்லவன்

சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. 

 

கோயிலில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் பிரகாரத்தில் இருக்கும் மற்ற சன்னதிகளை நின்று நிதானித்து பார்க்க முடியவில்லை. அங்கே பூஜைகள் எதுவும் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, அடுத்த தமிழகப் பயணங்களில் மீண்டும் ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என மனதில் முடித்து வைத்துக் கொண்டேன். இக்கோயில் குறித்த தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  அடுத்த முறை திருச்சி வந்தால் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ காந்திமதி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்து வருவீர்களாக. 

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

புது தில்லியிலிருந்து

16 கருத்துகள்:

  1. பஞ்சவர்ணேஸ்வரர் என்னும் பெயரைப் பார்க்கும்போது நான் இந்த கோவிலைப் பார்த்த ஞாபகமாகவும் இருக்கிறது.  சுவாரஸ்யமான விவரங்கள், படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. கோயில் நீங்களும் பார்த்திருப்பது நல்லதே. உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டிருந்தால் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான பதிவு. உறையூர் அம்மையப்பன் தரிசனம். பிற பெயர்கள், பெயர்க்காரணங்கள் என்று மட்டுமல்ல சிற்பங்கள், அதில் குதிரைச் சிற்பம் நம் சிற்பிகள் கவிகளோ என்று எண்ண வைக்கிறது. எனக்கும் கேரளாவிலுள்ள சிவனின் தலங்கள் சென்று எழுதவும் காணொளிகள் குரலுடன் மூலமும் பதிய ஆசை. இறை அருள் கிடைக்க வேண்டுமே.

    பகிர்விற்கு மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்திலுள்ள சிவனின் தலங்கள் சென்று வர ஈசன் அருள் புரியட்டும். எங்களுக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதில் மகிழ்ச்சியே.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  3. கோயில் சிற்பங்கள் எல்லாமே மிக அருமை. அதுவும் சைக்கிளில் செல்லும் சிறுவன் சிற்பம் ஆச்சரியமேற்படுத்தியது. அதுவும் கோயிலுக்குள்! கோயில் சிற்பங்களில் கூட அந்தாக்கால வாழ்க்கை முறையைச் சொல்ல விழைந்திருக்கிறார்கள் சிற்பிகள் என்று தோன்றியது. சிறுவன் கோயிலுக்குச் சைக்கிளில் வருவான் போலும். தவறாமல். அப்படி என்றால் சைக்கிள் வந்த பிறகான சமயத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிள் சிற்பம் - ஆச்சரியம் தான். வாழ்க்கை முறையும் கோயில் சிற்பங்களில் பார்த்து வியப்பு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. //
    ஆமாம் ஜி அது அவர்களின் கற்பனைத்திறன் கைத்திறனையும் வெளிப்படுத்துகிறது இல்லையா!.

    //யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. //

    விசித்திரமான சிற்பம் என்பதோடு, அதில் சில வெளிப்பாடுகள் இருக்கும் என்று தோன்றுகிறது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் ஆச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. கோயில் பற்றிய கதைகள் எவ்வளவு இருக்கின்றன! நீங்க சொல்வது போல், அவை இருக்கட்டும் ஒரு புறம். சுவாரசியமானவைதான். நாம் கோயிலையும் சிற்பங்களையும் ரசித்து, தரித்துவிட்டுப் போவோம். அதுதானே முக்கியம்!

    படங்களும் பதிவும் சிறப்பு, வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் குறித்த கதைகள் நிறையவே இருக்கின்றன. அவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் கோயிலில் இருக்கும் சிற்பங்களை ரசிப்பதிலேயே கவனம் இருக்க வேண்டும். ஆனாலும், சிற்பங்கள் குறித்த தகவல்கள், கதைகள் போன்றவற்றையும் தெரிந்து கொள்வது நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. உறையூர் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர். கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கோவில் சம்மந்தபட்ட கதைகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஒரு கோவில் என்றிருந்தால் அதன் தலபுராணமாகவும், மற்றும் அந்தக் கோவிலைப் பற்றிய சிறப்புகளாகவும் எத்தனை கதைகள் உள்ளன. நீங்கள் மீண்டும் மறுதடவை சீக்கிரமாகவே சென்று இறைவனையும், காந்திமதி அன்னையையும் வழிபட்டிருப்பது சிறப்பு. எனக்கும் காந்திமதி அன்னை என்றதும் திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி தாயார் நினைவுக்கு வர கடவுளார்கள் அனைவரையும் மானசீகமாக வழிபாட்டுக் கொண்டேன். உங்களால் இன்று அம்மையப்பனை தரிசித்துக் கொண்டேன். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. காந்திமதி என்றவுடன் எனக்கும் நெல்லையப்பர் கோயில் தான் நினைவுக்கு வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கோயில் தலவரலாறுகள் எல்லாம் அருமை. கோவில் தூண்களில் உள்ள சிற்பங்கள் அழகு.


    சிறுவன் சைக்கிள் ஓட்டும் சிலை மனம் கவர்ந்தது. பல வருடங்களுக்கு முன் பார்த்த கோயில் மறந்து விட்டது. இப்போது நினைவு படுத்தி கொள்கிறேன்.
    சம்பந்தர் தேவாரம் பாடி ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நீங்களும் இக்கோயிலுக்குச் சென்று இருப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. கோவில் சிற்பங்கள் மிகுந்த அழகு அவை பற்றி விரிவாக வர்ணித்துள்ளார்.

    பஞ்ச வர்ணேஸ்வரர் அறிந்து வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....