வியாழன், 27 ஜூலை, 2023

டேராடூன் பயணம் - பகுதி ஐந்து - ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


OPPORTUNITIES IN LIFE ARE LIKE SUNRISE; IF YOU MISS IT, YOU WON’T BE ABLE TO SEE IT AGAIN ON THE SAME DAY.  YOU HAVE TO WAIT UNTIL NEXT DAY. SO GRAB THE RIGHT OPPORTUNITY COMING YOUR WAY.


******





டேராடூன் பயணத்தில் இது வரை நான்கு பகுதிகளாக உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படித்திருக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன். இணைப்பில் சொடுக்கி ஒவ்வொரு பகுதியாக படித்துவிடலாம்! 


டேராடூன் பயணம் - பகுதி ஒன்று - அடாது மழைபெய்தாலும்


டேராடூன் பயணம் - பகுதி இரண்டு - இயற்கையும் நாமும்


டேராடூன் பயணம் - பகுதி மூன்று - நீச்சல் குளம்


டேராடூன் பயணம் - பகுதி நான்கு - டப்கேஷ்வர் மந்திர் 



இந்தப் பயணத் தொடரின் சென்ற பகுதியில் டப்கேஷ்வர் மந்திர் குறித்துப் பார்த்தோம் என்றால் இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பதும் ஒரு சிவன் கோயில் தான். ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர் என்று அழைக்கப்படும் இக்கோயில் டேராடூன் நகரிலிருந்து மசோரி செல்லும் பிரதான சாலையில் Bபகவந்த்பூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.  சாலையிலிருந்து பார்க்கும்போதே தெரியும் இந்தக் கோயிலுக்கு நிறைய கோபுரங்கள்.  சின்னச் சின்னதாய் நிறைய கோபுரங்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோயில், வெளிப்பார்வைக்கு கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது.  இந்தக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் முன்னரே எங்கள் ஓட்டுனர் தினேஷ் குமார் இந்தக் கோயிலில் எந்தவிதமான (ch)ச்ச(da)டாவா-வும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று சொன்னார்.  அதாவது பக்தர்களிடமிருந்து எந்தவித கட்டணமும், அன்பளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்டியல் கிடையாது. பிறகு எப்படி இந்தக் கோயிலை நிர்வகிக்கிறார்கள் என்று யோசனையாக இருந்தது.  இத்தனைக்கும் இந்தக் கோயில் மாநில அரசின் கீழ் செயல்படும் கோயில் இல்லை! சரி என்ன தான் கோயிலில் நடக்கிறது என்று சென்று பார்க்கலாம் என ஓட்டுனரிடம் அதிக விவரங்கள் கேட்கவில்லை.  


இந்த முறை அமைந்த ஓட்டுனர் தினேஷ் குமார் அதிகம் பேசுபவர் - ஆனால் பெரும்பாலும் எங்களிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பதற்காகவே பேசுபவர்.  பொதுவாக எங்களது பயணங்களில் நாங்கள் அமர்த்திய வாகனம், வாகன ஓட்டி என்றால் நாங்கள் காசு கொடுப்பதற்கு கவலைப்படுவதில்லை. இது மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம். அதில் எல்லா விஷயங்களுமே மாநில அரசுடன் தான் பேசிக் கொள்ள வேண்டும். எங்களிடம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை என்பதை அவரிடம் பல முறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. அதனால் அவருடன் பேசுவதை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதுவும் அல்லாது நாங்கள் அலுவலக ரீதியாக, எங்களுக்குள் எதையாவது பேசினாலும் அவர் அந்த சம்பாஷணைகளிலும் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.  அதனால் நாங்கள் வாகனத்தில் பயணிக்கும்போது பேசுவதை தவிர்க்க வேண்டியிருந்தது! சில விஷயங்கள் அவருக்குச் சம்மந்தம் இல்லாதபோது அதில் தனது கருத்தினைச் சொல்ல வேண்டியதில்லை என்பதை அவருக்கு யார் புரிய வைப்பது! சரி அவரைக் குறித்து அதிகம் பேசுவதில் பயனில்லை. அதனால் இந்தப் பகுதியில் பார்க்க வேண்டிய கோயில் குறித்துப் பார்த்துவிடலாம்! 



கோயில் வளாகம் சாலையோரத்தில் இருப்பதால் வாகனங்களையும் கோயிலுக்கு எதிரேயுள்ள பகுதியில் தான் நிறுத்துகிறார்கள்.  தொடர்ந்து வாகனங்கள் வந்த வண்ணம் இருப்பதால் கோயில் நிர்வாகத்தினர் வாகனங்களை சரியாக நிறுத்தி வைக்கும்படி தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் வாகனமும் சாலையோரம் நிறுத்தினார் வாகன ஓட்டி தினேஷ்.  காலையில் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்தால் இரவு ஒன்பது மணி வரை திறந்தே இருக்கிறது என்பதால் நாள் முழுவதும் பக்தர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோதும் பக்தர்கள் அதிக அளவில் இருந்தார்கள் என்றாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்ததால் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது.  வாயிலில் காலணிகளைக் கழற்றி விட்டு, கால்களையும் கைகளையும் சுத்தம் செய்து கொண்டு உள்ளே நுழைந்தால், எல்லா வட இந்திய கோயில்கள் போலவே உள்ளே நுழைந்ததும் ஒரு மரமும் அதன் கீழே இருக்கும் ஷிவ் பரிவார் - அதாவது சிவனின் குடும்பம்.  எல்லோருமே இந்த சிவ லிங்கத்தினை வணங்கி, பூஜித்து, தண்ணீர் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.



இந்தக் கோயிலில் நாங்கள் பார்த்த மூன்று சிவலிங்கங்கள் ஸ்படிகத்தினால் ஆனது. அதிலும் இரண்டு ஸ்படிக லிங்கங்கள் மிகப் பெரியது! பொதுவாக ஸ்படிக லிங்கம் சிறியதாகவே பார்த்திருக்கிறேன். இவ்வளவு பெரிய ஸ்படிக லிங்கத்தினை நான் பார்த்தது இல்லை. அதிலும் ஒரே இடத்தில் இரண்டு பெரிய ஸ்படிக லிங்கங்கள் இருந்தன.  ஸ்படிகத்திற்கு நிறைய சிறப்பான குணங்கள் உண்டு என்று சொல்வார்கள். எனது அம்மாவின் அத்தை (அவரைப் பற்றியும் ஒரு பதிவு - ருக்கு அத்தை - எழுதி இருக்கிறேன்) ஒரு ஸ்படிக மாலை அணிந்திருப்பார். அது அவருக்கு மிகவும் பிடித்தமான மாலை. பல வருடங்களுக்குப் பிறகும் வெள்ளியில் கட்டி அணிந்து இருப்பார்.  இப்போது கூட அந்த மாலை அம்மாவிடமோ, பெரியம்மாவிடமோ இருக்கிறது. நல்ல ஸ்படிக மாலை அணிய வேண்டும் என்பது எனது ஆசையும் கூட. இதுவரை வாங்குவதற்கு ஏனோ கைவரவில்லை.  அது மட்டுமல்லாது கிடைக்கும் ஸ்படிக மாலை உண்மையாகவே ஸ்படிக மாலை தானா என்ற சந்தேகமும் வந்துவிடுவதால் வாங்கவேயில்லை. 



இந்தக் கோயிலில் எந்தவித கட்டணமோ, பணமோ வாங்குவதில்லை என்று சொன்னேன் அல்லவா? இந்த கோயிலை நிர்வகிப்பது ஒரு குழு. தனியார் கோயில்.  ஆனாலும் தொடர்ந்து கோயிலில் அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது. வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  நாங்கள் சென்ற போது புலாவ் போன்ற ஏதோ ஒரு சாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது தவிர அங்கே கோயிலின் அருகே இருக்கும் இடத்தில் அருமையான தேனீர் வினியோகம் நடந்து கொண்டிருக்கிறது. நான் ஜனவரி 23 முதல் காப்பி மற்றும் தேனீர் அருந்துவதை விட்டுவிட்டதால் சுவைக்கவில்லை. என்னுடன் வந்திருந்த நண்பர்கள் அங்கே தேனீர் வாங்கி சுவைத்தார்கள். மிகவும் சுவையாக இருப்பதாகச் சொல்லி இரண்டாம் முறை வாங்கிக் கொண்டார்கள்.  வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதமும் தேனீரும் கொடுத்துக் கொண்டே இருப்பதும் நல்லவிஷயம் தான்.  இத்தனைக்கும் பணம் எங்கே இருந்து கிடைக்கிறது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், இப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு மனம் இருக்கிறதே, அந்த நல்ல மனதை வாழ்த்தவும் தோன்றியது.  கோயிலில் பல இடங்களில் வாசகங்கள் எழுதி இருந்தது - அதில் ஒன்று “ஆண்டவன் தான் நமக்கு பணம் தருகிறார்! அவருக்கே பணம் தர நாம் யார்?” - இந்த வாசகம் மனதைக் கவர்ந்தது.


கோயில் வளாகத்தில் சில கடைகளும் இருந்தன. நிறைய விதங்களில் மணி மாலைகள் போன்ற விஷயங்கள் கிடைத்தன. ஆனால் விலை தான் கொஞ்சம் அதிகம் என்று தோன்றியது. ஏதோ கற்களால் ஆன மாலை ஒன்றினைப் பார்த்து எவ்வளவு விலை என்று கேட்டபோது 1300 ரூபாய் சொன்னார்கள். அதே அளவு, அதே டிசைனில் தில்லியில் மாலைகள் முன்னூறிலிருந்து நானூறு ரூபாய் விலைக்குக் கிடைக்கிறது. அதனால் நான் வேடிக்கை பார்த்ததோடு சரி. என்னுடன் வந்தவர்கள் கைகளில் அணியும் ப்ரேஸ்லெட் ஒன்று - சின்னச் சின்னதாக ருத்ராக்ஷம் போன்ற மணிகளால் செய்யப்பட்டது - வாங்கினார்கள். ஒன்று நூறு ரூபாய்க்கு வாங்கினார்கள். கோயிலில் சுமார் முக்கால் மணி நேரம் இருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாக எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


7 கருத்துகள்:

  1. தினேஷ்குமார் போல சில கேரக்டர்களை நாம் எல்லோருமே சிலரையாவது சந்திப்போம்!

    ஸ்படிக மாலை...   என்னென்ன செய்யும்?  குளிர்ச்சி?  அப்புறம்?

    கோவிலில் உள்ள பணம் பற்றிய வாசகம் மிகக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  2. “ஆண்டவன் தான் நமக்கு பணம் தருகிறார்! அவருக்கே பணம் தர நாம் யார்?” - வாசகம் நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க! கோவிலை பராமரிப்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கோயிலில் நாங்கள் பார்த்த மூன்று சிவலிங்கங்கள் ஸ்படிகத்தினால் ஆனது ...இரண்டு ஸ்படிக லிங்கங்கள் மிகப் பெரியது... ஆஹா மிக சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. “ஆண்டவன் தான் நமக்கு பணம் தருகிறார்! அவருக்கே பணம் தர நாம் யார்?” - இந்த வாசகம் மனதைக் கவர்ந்தது.//

    +1. நிஜமாகவே கோயிலை நிர்வகிப்பவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எளிதல்லவே. அதுவும் அன்னதானம், தேநீர்!

    ஸ்படிக லிங்கம் - அழகாக இருக்கு. ஆமாம் ஸ்படிக மாலை போட்டுக்குவாங்க. Crystal quartz என்று சொல்வாங்களே அதுதானே? கண்ணாடி பாசி மணி போலவே இருக்கும்.

    கோயில் பற்றிய விவரங்கள் நன்று. முகப்பே வித்தியாசமாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மஹாதேவ் மந்திர் கோவில் படங்கள் அந்த கோவிலை பற்றிய விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....