சனி, 8 ஜூலை, 2023

கோமரத்தாடி! - பகுதி இரண்டு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கோமரத்தாடி - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நேற்று பத்மநாபன் அண்ணாச்சி அவர்களின் பதிவாக கோமரத்தாடி பகுதி ஒன்று பதிவினைப் படித்து இருப்பீர்கள்.  ஸ்வாரஸ்யமான கோமரத்தாடி கதை குறித்து இன்றைக்கு இந்த இரண்டாம் பகுதியில் பார்க்கலாம் வாருங்கள் - Over to பத்மநாபன் அண்ணாச்சி - வெங்கட் நாகராஜ் - புது தில்லி. 


*&*&*&*&*&*&


கோமரத்தாடி - பகுதி இரண்டு


கோமரத்தாடி குறித்த தகவல்களை சென்ற பகுதியில் பகிர்ந்து கொண்டதை நீங்கள் அனைவரும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவினை படித்து கருத்துரைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த இரண்டாம் பகுதியில் கோமரத்தாடி குறித்து எனக்கு என் அப்பா சொன்ன கதையைப் பார்க்கலாம் வாருங்கள். 


கோமரத்தாடியின் பெற்றோருக்கு திருமணமாகி ரொம்ப நாளா குழந்தை பேறு இல்லையாம். அப்போது கோமரத்தாடியாக இருந்தவர் வைராடி போத்தி என்பவர். அவருடைய சாமியாட்டத்தையும் பெருமையையும் என் அப்பா சொல்லும் போது புல்லரித்து ப் போய்விடுவார்.  ஒரு ஊர் கொடைவிழாவின் போது வைராடிப் போத்தி சாமியாடிக் கொண்டிருந்தார். அப்போ இந்த அம்மா கோவிலில் வந்து மனதார முத்தாரம்மனையும் முத்துவைரவரையும் வேண்டி குழந்தை வரம் கேட்கிறார். சாமியாட்டத்தின் போது வைராடிப் போத்தி ஒரு கட்டத்தில் பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் கொடுப்பார். அப்போது அம்மனை நம்பி மனதார வேண்டுபவர்களுக்கு  அருள் வாக்கும் சொல்வார். அப்படி திருநீறு கொடுக்கும் போது இந்த அம்மாவை கைகாட்டி அழைத்து திருநீறு கொடுத்து "போ! சந்தோஷமா வீட்டுக்கு போ" என்கிறார். அதற்குப் பின் அடுத்த வருட கொடை விழாவிற்கு முன்னதாகவே அந்த அம்மா ஒரு அழகான குழந்தைக்கு தாயானார். அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் வைராடிப் போத்தியின் காலம் முடிந்து வேறொருவர் சாமியாடுகிறார். இந்த கதையெல்லாம் எங்க அப்பாவோ வேறு பெரியவர்களே சொல்லும் போது ஆ...ன்னு வாயைப் பொளந்து கேட்டுக்கொண்டு இப்போ அந்த கதையெல்லாம் மறந்துகிட்டு நிக்கேன். எனக்கும் வயசாகுல்லா.


 

சரி, நாம் கதைக்கு வருவோம். அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அதோடு கூடவே அவனுக்குள்ளே அம்மன் பக்தியும்  வளருது. அவனோட அம்மை எப்பவும் அம்மனை நன்றியோட நினைச்சுக்கிட்டு இருந்தவள்ளா. புள்ளைக்கு பக்தி வராமலா போகும்.


அப்போ கோவில் கொடை விழா வருது. அப்போ சாமியாடுனவருக்கும் வயசாகிகிட்டு வருது.  விழாவில கோமரத்தாடி சாமியாட்டத்துக்கு தயாராகிறாரு. நாதஸ்வரமும் தவுலும் ரெட்டை மேளமும் காதை பொளக்குது. கோமரத்தாடி முன்னால பூப்படை, அதான் வேப்பம் தழைகளும், மலர்களும், கம்பம்பூவும் நிறைந்த பூப்படை குவிச்சு வச்சுருக்கு. கோமரத்தாடிக்கு அம்மன் வந்ததுக்கு அறிகுறியா கொஞ்சம் கொஞ்சமா உடம்பு அதிருது. அதே சமயம் அந்த இளைஞனுக்கும் அம்மன் அருள் வருது. இதை முன்கூட்டியே உணர்ந்த அவன் தந்தை அவனை வீட்டில் ஒரு அறையில் அடைத்து  கதவை கொண்டி போட்டு விடுகிறார். வீடு கோவிலுக்கு பக்கம்தான்.


இங்கே கோயிலில் கொட்டுமேளம் சூடு பிடிக்குது. அங்க வீட்டுல அவனால இருக்க முடியல்ல. எப்போ வீட்டுக் கதவ உடச்சான், எப்போ கோவிலுக்கு வந்தான்னு தெரியல்ல.   இங்க கோமரத்தாடி பூப்படை எடுக்க தயாராகிறார். இந்த இளைஞன்  கூட்டத்தை பொளந்துக்கிட்டு ஓஓ.....னு சத்தம் போட்டுக்கிட்டு ஓடி வந்து பூப்படைக்கு மேல் விழுந்து பூப்படையை தூக்க முயலுகான். பின்னாடியே ஓடி வந்த அவனுடைய தந்தையும் ஊர்க்காரர்களும் அவனை கட்டுப்படுத்த கோமரத்தாடி விபூதியை அள்ளி அவன் தலையிலடித்து சாந்தப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன்பின் கோமரத்தாடி வழக்கம்போல பூப்படை எடுத்து ஆடி ஆட்டத்தை தொடர்ந்தார். அப்போது ஒரு ஓரமாக நின்ற ஒரு பெரியவர் சொன்னாராம், அடுத்த கொடைக்கு இந்த கோமரத்தாடி பூப்படை எடுக்க மாட்டாரு. அவன்தான் எடுப்பான்னு. அதே போலவே அடுத்த கொடைக்கு முன்னதாகவே அவர் இயற்கை எய்தி விட்டார். அடுத்த கோமரத்தாடி யார்னு சொல்லவா வேணும். 


அதன் பின் நான் ஊரிலிருந்து தில்லி வரும் வரை அவரே கோமரத்தாடி. இவரைப் பற்றி ஒரு கதை உண்டு. இவர் அரசுப் பணியில் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா.  கோவில் கொடை விழா வரும்போது விடுப்பு எடுத்து விடுவார். ஒருமுறை கொடைவிழா சமயம் இவர் எங்கள் ஊரில் இருந்து ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தக்கலை என்ற ஊரில் பணியில் இருந்தார். ஒரு புதிய அதிகாரி சென்னையிலிருந்து மாற்றலாகி இவருடைய அதிகாரியாக வருகிறார். அவருக்கு இவர் கோமரத்தாடி என்பதோ கோவில் கொடைவிழா சமயம் இவர் விடுப்பு எடுப்பார் என்பதோ தெரியாது. இவர் அதிகாரியிடம் சென்று 'சார்! நாளைக்கு ஊர் கோவில்கொடை. மூன்று நான்கு நாட்கள் லீவ் வேணும்'னு கேட்கிறார். ஆனால் அந்த அதிகாரி 'நாளை மதியம் மூணு மணிக்கு கண்டிப்பாக ஒரு இன்ஸ்பெக்ஷன் போகணும். நீங்கள் கண்டிப்பாக என்னுடன் இருக்க வேண்டும். கோவிலில் சாமியை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்' என்று லீவு தர மறுத்ததுடன் இவரின் விளக்கத்தையும் கேட்க தயாராகவில்லை. வேறு வழியில்லாமல் இவரும் மறுநாள் அம்மன் மேல் பாரத்தை போட்டு விட்டு தக்கலைக்கு பணிக்குச் சென்று விட்டார். 


இங்கே கோவில் திருவிழா ஆரம்பிக்கிறது. மதியம் இரண்டு மணிக்கு சாமிக்கு பூப்படை போடவேண்டும். அதன்பின் கோமரத்தாடி தீப்பந்தம் எடுத்து ஆடுவார். ஒரு மணிக்கெல்லாம் கொட்டுமேளமும் வில்லுப்பாட்டுக்கார்களும் தயாராகி விட்டார்கள். பூப்படையும் தயார். ஆனால் கோமரத்தாடி இன்னும் வரவில்லை. ஊரே கோவிலில் ஆட்டம் காண நிற்கிறது. அங்கே அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இங்கே அடிக்கும் மேளச்சத்தமும் வில்லுப்பாட்டும் அங்கே தக்கலையில் அவரின் காதில் படீர் படீர் என்று ஒலிக்கிறது.  வேலையை மறந்தார். எங்கிருக்கிறார் என்பதை மறந்தார். போட்டது போட்டபடி கிடக்க அலுவலகத்திலிருந்து கிளம்பி ஊரைப் பார்த்து நடக்க ஆரம்பித்து விட்டார். பஸ்ஸையும் பார்க்கவில்லை, காரையும் பார்க்கவில்லை. எப்போது கோவிலுக்கு  வந்தார் என்றே தெரியவில்லை. தக்கலையிலிருந்து ஓடியும் நடந்தும் ஊர் வந்து நேரே கோவிலில் நுழைந்து பூப்படை முன் நின்றதுவரை என்ன நடந்தது என்றே அறியவில்லை. அதன்பின் கோமரத்தாடி உடைமாற்றி வழக்கம்போல சாமியாட்டம் ஆட தொடங்கி விட்டார்.


அங்கே அலுவலகத்தில் அதிகாரிக்கு மதியத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வயறு  மந்தம் பிடித்து ஊத ஆரம்பித்து மிகுந்த அசௌகரியம் ஆக உணர்கிறார். அதிகாரி படும் அவஸ்தையை பார்த்த ஒரு பழைய ஊழியர், இவர் கோமரத்தாடி என்பதைச் சொல்லி உடனே ராஜாக்கமங்கலம் சென்று இவரை பார்க்க சொல்கிறார். அவரும் உடனே அலுவலக ஜீப்பை எடுத்துக் கொண்டு ராஜாக்கமங்கலம் வந்து கோவில் வாசலில் நிற்கிறார். கோவிலில் மும்முரமான சாமியாட்டம் நடக்கிறது. தீப்பந்தத்தை அடித்து கொழுந்து விட்டெரியச் செய்து கோமரத்தாடி ஆக்ரோஷமாய் ஆடிக்கொண்டிருக்கிறார். அதிகாரி வெலவெலத்துப் போய் கைகூப்பி நிற்கிறார். இவரோ அவரைக்  கண்டும் காணாமல் ஆட்டத்தை தீவிரப்படுத்தி ஆடுகிறார். சற்று நேரம் கழித்து ஆட்டத்தை நிறுத்தி அதிகாரியை அருகே அழைத்து திருநீறை கைநிறைய அள்ளி அவரின் தலையிலும் வயிற்றிலும் தடவி 'போ. பயப்படாதே!.' என்று சொல்லி சாமியின் ஒரு வெள்ளை நேரீது  வஸ்திரத்தை பூசாரியிடம் வாங்கி அதை தீப்பந்தத்தில் நுழைக்க அது ஒன்றும் ஆகவில்லை. அதை வெளியே எடுத்து அம்மன் தன்மேல் இருப்பதை காட்டி அந்த வஸ்திரத்தை அதிகாரியின் தோளில் போட்டு அவரை சிறப்பித்து அனுப்பினார். சற்று நேரத்தில் அதிகாரியின் உடல் அவதி கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போலவே காணாமல் போயிற்று.  அதன்பிறகு கோமரத்தாடிக்கு கோவில் விழாவின் போது விடுமுறை மறுக்கப் படவே இல்லை. 


இந்த கோமரத்தாடிக்கும் கொஞ்சம் வயதாகி உடம்பு தளரத் தொடங்கிய சமயம் அம்மன் இவருடைய தம்பியையே அடுத்த கோமரத்தாடியாக அடையாளம் காட்டினார். இந்த தம்பியின் மகனே இப்போது கோமரத்தாடியாக இருக்கிறார். இவருடைய சாமியாட்டத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிட்டவில்லை எனினும் அவற்றை முகப்புத்தகத்தில் காணும் போது பழைய நினைவுகளில் மனம் மகிழ்ந்து போகிறேன். உங்களுக்கும் இந்த கோமரத்தாடி கதையும், கோமரத்தாடி குறித்த நினைவுகளும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!  மீண்டும் வேறு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, நட்புடன்…


பத்மநாபன்


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

  1. ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள். உள்ளூர்வாசி நீங்களே இன்னும் நேரில் பார்க்கவில்லை என்றீர்கள் என்றால் எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களாக வெளியூர்வாசி. இப்போதும் இந்த விழா நடக்கும் ஊரிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கிறார் பத்மநாபன் அண்ணாச்சி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மிகவும் ரசித,துப்படித்தேன்.

    சமீபத்தில் பார்த்த பயங்கர ஹிட் கன்னடப் படம் நினைவுக்கு வந்தது.

    கிராமத்துத் தெய்வங்கள், பூசாரிகள் என நினைவு எங்கெங்கோ அலைபாய்கிறது.

    பத்னாபன் அண்ணாச்சி காந்தாரா படம் பார்த்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தங்களது சிந்தனையைத் தூண்டியிருப்பது அறிந்து மகிழ்ச்சி. அண்ணாச்சி காந்தாரா படம் பார்த்ததாகச் சொல்லவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. // திருநீறை கைநிறைய அள்ளி அவரின் தலையிலும் வயிற்றிலும் தடவி 'போ. பயப்படாதே!.' என்று...//

    மெய் சிலிர்க்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. கிராம தெய்வங்கள், தேவதைகள் வழிபாடுகள் பல கதைகளின் பின்னணியில் ஏத்தனை சுவாரசியமான கதைகள்! ரசித்து வாசித்தேன். அதுவும் தக்கலையில் இருப்பவருக்கு அந்தச் சமயத்தில் அங்கு செல்ல வைக்கும் உத்வேகம்....அதன் பின் வந்த கோமரத்தாடி....பப்பு அண்ணாச்சி ஒரு முறையாச்சும் போய் பார்த்துட்டு வந்து எழுதுங்க...

    இப்படியானவை சுவாரசியமாக இருக்கும். எனக்கு இப்படியான சாமியாடி நிகழ்வு கொடை திருவிழா எல்லாம் வள்ளியூரில் அறிமுகமானது. 5 ஆம் வகுப்பு 6 வகுப்பு படித்த இரு வருடங்களில்...நான் பயந்தாலும் கொடை விழா என்றால் போய் வேடிக்கைப் பார்த்ததுண்டு. அதன் பின் என் கிராமத்தில் அது வேறு விதமாக.....

    இந்த அனுபவங்களை எழுதினேன்....அந்த ஃபைல் பழைய Hard disk ல் மாட்டிக் கொண்டுவிட்டது அது இன்னும் retrieve பண்ணவெ இல்லை. மீண்டும் எழுத வேண்டும் என்பதால் யோசனையாக இருக்கு. நிறைய பதிவுகள் அதில் சிக்கிக் கொண்டுவிட்டன. Of course எல்லாம் பாதியில் நிற்பவைதான்!!!!!

    இப்போது பப்பு அண்ணாச்சியின் பதிவு நினைவுபடுத்திவிட்டது. பார்க்கிறேன் எழுத முடிகிறதா என்று.

    கேரளத்திலும் கிராமங்களில் உண்டு. வித்தியாசமாகவும் இருக்கும் அந்தக் கலாச்சாரப்படி.

    ரசித்து வாசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துக்களையும் தங்களது அனுபவங்களையும் இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி கீதா ஜி. உங்கள் அனுபவங்களையும் பதிவாக எழுதி வெளியிடுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. சாமியாடிக் கதை பரிவை சே குமார் எழுதிய ஒரு கதையும் நினைவுக்கு வருகிறது.

    துரை அண்ணாவும் எழுதியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமரத்தாடி என்ற பெயரிலேயே கூட இணையத்தில் ஒரு கதை இருக்கிறது. படத்திற்காகத் தேடியபோது பார்த்தேன். கதை இன்னும் படிக்கவில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  8. நிர்மலா ரெங்கராஜன்8 ஜூலை, 2023 அன்று 3:53 PM

    அருமை 👍
    காந்தாரா திரைப்படம் நினைவு வருகிறது.
    பத்து சாரின் சுவாரஸ்யமான பதிவுகள் தொடர வேண்டும் 🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரெங்கராஜன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  10. இந்த கோமரத்தாடி கதையும், கோமரத்தாடி குறித்த நினைவுகளும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்! மீண்டும் வேறு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, நட்புடன்…//

    வாருங்கள் அடிக்கடி இப்படி அருமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    கோமரத்தாட்டி படித்தபோது அப்படியே கண்முன் காண்பது போல இருந்தது .
    காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா. பத்மநாபன் அண்ணாச்சியிடம் அவ்வப்போது பதிவுகள் எழுதும்படி நானும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....