ஞாயிறு, 23 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - தில்லி கேட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தில்லி கேட்



இண்டியா கேட் - தலைநகர் தில்லியின் ராஜ பாட்டையின் ஒரு புறம் இருக்கும் இந்த இண்டியா கேட் உங்களில் பலரும் அறிந்த ஒரு இடம்.  ஒவ்வொரு தினமும் இங்கே ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது தில்லிவாசிகளும் வந்து செல்லும் இடம்.  எத்தனை எத்தனை நிழற்படங்கள் இங்கே எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது அந்த இண்டியா கேட் மீது பதிக்கப்பட்டிருக்கும் 13,516 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களோ அல்லது  உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்திற்காகப் போராடி உயிர்நீத்த 70,000 இந்திய வீரர்களோ நிச்சயம் அறிந்திருக்க முடியாது! நானும் யோசிக்கக் கூட முடியாத எண்ணிக்கை அது! சரி இண்டியா கேட் பற்றி எத்தனையோ விஷயங்கள் உண்டு - அது குறித்து பிறிதொரு சமயம் பார்க்கலாம்!  உங்களில் சிலருக்கேனும் தெரிந்திருக்காத ஒரு விஷயம் குறித்து இன்றைக்குப் பார்க்கலாம்! 


1917-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த இண்டியா கேட் வருவதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தலைநகர் தில்லியில் மொத்தம் 14 நுழைவாயில்கள் இருந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?  செங்கோட்டையை ஏற்படுத்திய ஷாஜஹான் கோட்டையைச் சுற்றிலும் 14 நுழைவாயில்களை ஏற்படுத்தியதோடு 16 சிறிய கதவுகள்/ஜன்னல்கள் போன்ற அமைப்பையும் ஏற்படுத்தினார் - அவை நகரை விட்டு வெளியேறும் வழிகளாக இருந்தன.  அந்த நாட்களில் 14 நுழைவாயில்கள் இருந்தாலும் இன்று அவற்றில் பல இருந்த சுவடுகளே இல்லை என்பதும் வருந்தத் தக்க விஷயம் - எத்தனை எத்தனை படையெடுப்புகள்? எத்தனை எத்தனை உயிரிழப்புகள்?  தில்லி கேட் தவிர துர்க்மான் கேட், அஜ்மேரி கேட் (இன்றைய புது தில்லி இரயில் நிலையத்தின் ஒரு நுழைவாயிலை இந்தப் பெயரில் தான் அழைக்கிறார்கள்), காஷ்மீரி கேட் (இந்தப் பெயரில் மெட்ரோ இரயில் நிலையம் உண்டு!), நிகம்போத் கேட் (தில்லியின் பிரதான சுடுகாடு இங்கே தான் - நிகம்போத் Gகாட் என்ற பெயரில் இன்றைக்கும் இருக்கிறது), மோரி கேட் போன்ற பல நுழைவாயில்கள் உண்டு.


இப்படி அமைக்கப்பட்ட 14 நுழைவாயில்களில் ஒன்று தான் தில்லி கேட் என அழைக்கப்படும் நுழைவாயில். செங்கோட்டையின் தெற்குப் பகுதியில் அமைந்த இந்த நுழைவாயில் தற்போது புது தில்லியை பழைய தில்லியுடன் இணைக்கும் பகுதியாக, தற்போதைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையின் ஆரம்பமாக இருக்கிறது.  அந்தக் காலத்தில் இந்தப் பாதையின் இரு மருங்கிலும் மரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்க அப்படி ஒரு குளிர்ச்சியாக இருக்குமாம்… அதனால் இந்தப் பாதை டண்டி சடக் (thandi sarak) அதாவது குளிர்ச்சியான சாலை என்று அழைக்கப்பட்டதாம்!  ஆனால் அந்தோ பரிதாபம் - இன்றைக்கு இரு மருங்கிலும் மரங்கள் என்ன, செடிகள் கூட கிடையாது!  இரு மருங்கிலும் எண்ணற்ற கடைகள் இருக்கின்றன.  


இந்தச் சாலையில், இசைக்கருவிகள் விற்கும் கடைகள், மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள், பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கான உபகரணங்கள் விற்கும் கடைகள், பழச்சாறு பிழியும் இயந்திரங்கள், அசைவ உணவகங்கள் என பல கடைகள் இருக்கின்றன.  தில்லியின் பல பகுதிகளிலிருந்தும் இங்கே வந்து பொருட்களை வாங்கிச் செல்பவர்கள் வருவார்கள் என்றாலும், வெளி மாநிலங்கள், ஊர்களிலிருந்தும் இங்கே இவற்றை வாங்க வருபவர்கள் உண்டு.  இங்கிருந்து தான் பல மாநிலங்களுக்கு இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.  இங்கேயிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் உண்டு.  தவிர இந்த தில்லி கேட்-லிருந்து தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் தான் ஒவ்வொரு ஞாயிறும் பழைய புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  மாணவர்கள், ஆராய்ச்சி செய்யும் நபர்கள் என பலரும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் புத்தக சந்தைக்கு வருவது வழக்கம்.  நானும் ஆரம்ப நாட்களில் இங்கே பல ஆங்கில புத்தகங்களை வாங்கியதுண்டு.  


முன் காலத்தில் சிறப்பான ஒரு பகுதியாக இருந்த தில்லி கேட் பல சிறப்புகளை இழந்திருந்தாலும் இன்னமும் பலவித சிறப்பான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது. தில்லி வரும் வாய்ப்பு இருந்தால், இந்தப் பகுதிக்கும் ஒரு முறை சென்று வரலாம்! தில்லி குறித்த வேறு ஒரு தகவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்..


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


10 கருத்துகள்:

  1. காலம் மாற மாற, மக்கள் கூட்டம் பெருகி, வரலாற்றின் தடங்கள் மறைகின்றன. மதுரையைச் சுற்றியிருந்த கோட்டைச் சுவர்களும் கரைந்தது இப்படித்தான். தில்லி அரசர்கள் வரலாற்றைப் படித்தபோது, தலைநகரில் வாழ்ந்த பெருமை இருந்தாலும் படையெடுப்புகளின்போது கடும் துன்பங்களையும் இழப்பையும் சந்தித்த போர் நினைவுகள் (தில்லி நகரத்தில் நடந்த) நினைவுக்கு வந்தன

    பதிலளிநீக்கு
  2. முன்பெல்லாம் ரேடியோம் ரேப் ரெக்கார்டர் போன்ற சில, ,டெல்லி செட், என்ற பெயரில் பிரபலம்.  விலை, மற்ற பிராண்டட் செட்களோடு கம்பேர் செய்யும்போது ரொம்ப சீப்.  ஆனால் எவ்வளவு நாள் உழைக்கும் என்று தெரியாது!  அதேபோல பெரிய ரிப்பன் போன்ற அகலமான கெட்டி நைலான் மெடீரிலில் பின்னப்பட்ட கட்டிலும் பேமஸ்.  என் அப்பா அலுவலக விஷயமாக டெல்லி வந்து திரும்பியபோது (அந்தப் பயணத்தில் அவர் இந்திரா காந்தியுடன் கைகுலுக்கினார்) ஒரு கட்டில் வாங்கி வந்திருந்தார்.  ரொம்ப நாள் வீட்டில் இருந்தது அது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை தில்லி இண்டியா கேட் பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன். தில்லி பொருட்கள் சிலவும் பற்றி கேள்வி பட்டுள்ளேன். பெரும்பான்மை பற்றி இப்போது அறிந்து கொண்டேன். காலங்கள் மாற மாற ஓரு இடத்தின் அடையாளங்களும் மாறித்தான் விடுகின்றன. இன்னமும் அங்கு வர வாய்ப்பு கிட்டவில்லை. கிடைத்தால் நீங்கள் கூறும் இவ்விடங்களை பார்த்து வரலாம். ஆண்டவன் கட்டளை எதுவோ அதன்படிதானே எல்லாமும் கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  4. முன்பு இந்த இடங்களுக்கு வந்து சுற்றிப்பார்த்து பொருட்கள் வாங்கி வந்த நினைவுகள் மனதில் வந்து போகிறது. காலங்கள் மாற்றங்களை கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. டெல்லியை பற்றிய பல தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  6. இந்தியா கேட் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன். 1991-92 சமயத்தில் வந்த போது பார்த்ததற்கும், 2008ல் பார்த்ததற்குமே நிறைய மாற்றங்கள். அதன் பின் தில்லி வந்து குருகிராமம்சென்றாலும் தில்லிக்குள் வந்தாலும், பழைய தில்லிப் பகுதிக்குச் சென்றிருந்தாலும் கடந்த பகுதியாகவே...நீங்கள் சொல்லியிருக்கும் கேட் பகுதிகள் மெட்ரோவில் சென்ற போது கவனித்ததுண்டு. சாந்தினி சௌக், காஷ்மீரி கேட்...மஞ்சள் லைன் என்று நினைவு.

    வகசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  7. டில்லிகேட் பற்றிய தகவல்கள் சிறப்பு! அருமையான பதிவு! வாழ்த்துகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு( தளிர்சுரேஷ்)

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள் சார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....