வெள்ளி, 21 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - சாந்த்னி சௌக் ஜலேபி வாலா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட டேராடூன் பயணம் - பகுதி மூன்று - நீச்சல் குளம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


YOU CANNOT ALWAYS WAIT FOR THE PERFECT TIME; SOMETIMES YOU MUST DARE TO JUMP.

******



தலைநகர் தில்லியில் பழைய தில்லி என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள ஒரு இடத்தின் பெயர் சாந்த்னி சௌக்… அங்கே நிறைய கடைகள் உண்டு. அங்கு விற்கப்படும் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது. முகலாயர் காலத்திலிருந்தே இந்தப் பகுதி இருந்தது. இந்தப் பகுதியில் இருக்கும் பிரபலமான சில வழிபாட்டுத் தலங்கள், கடைகள், மற்ற விஷயங்கள் குறித்து பிறிதொரு சமயம் எழுதலாம். இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பிரபலமான, நூறாண்டுகளுக்கும் மேலாக, இயங்கி வரும் ஒரு சிறு இனிப்பகம் குறித்து பார்க்கலாம். தற்போது நான்காம் தலைமுறையினர் நடத்திவரும் இந்த இனிப்பகத்தின் பெயர் Old Famous Jalebi Wala…..  


1884-ஆம் வருடம் தனது மாமனார் கொடுத்த வரதட்சணை பணமான இரண்டு ரூபாயை மூலதனமாகக் கொண்டு லாலா நேம் சந்த் ஜெயின் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கடை, இன்றைக்கு வரை 139 வருடங்கள் ஆன பிறகும் அதே பாரம்பரிய சுவையுடன் ஜலேபி தயாரித்து விற்று வருகிறார்கள். இந்த இனிப்பகத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மொத்தமே நான்கு தான் - ஜலேபி, ரப்டி (Rabdi) , ஆலு சமோசா மற்றும் மட்டர் சமோசா. விலையும் அத்தனை அதிகம் இல்லை. ஜலேபி கிலோ 600 ரூபாய். ரப்டியின் விலையும் கிலோ 600 ரூபாய்.  மட்டர் (பச்சைப் பட்டாணி) சமோசா ஒன்று 25 ரூபாய். ஆலு  எனும் உருளை சமோசா ஒன்று 20 ரூபாய்.



சிலர் ஜலேபி மட்டும் சாப்பிட ஆசைப்படுவது உண்டு என்றால் வேறு சிலர் அந்த ஜலேபி மீது ரப்டி சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் உங்களுக்கு தெரியும் என்றும் சொல்வதுண்டு.  ரப்டி என்பதை என்னவென்று தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இங்கேயே சொல்லி விடுகிறேன். பால் சுண்ட சுண்ட காய்ச்சி வரும் பாலேடுடன் சர்க்கரை, ஏலக்காய் குங்குமப்பூ உலர் பழங்கள் சேர்த்தது தான் ரப்டி. ஒரு சிலர் தனியாகவும் இதை சாப்பிடுவது உண்டு என்றாலும் ஜலேபி மீது கொஞ்சம் ரப்டி சேர்த்து சுவைத்துப் பார்த்தால் நிச்சயம் சொர்க்கம் தான்….. நூல் 100 கிராம் ஜலேபி மீது 50 கிராம் ரப்டி சேர்த்து வாங்கியதோடு ஒரு மட்டர் சமோசாவும் வாங்கி சுவைத்தேன். ஆஹா அதன் சுவையை என்ன சொல்ல….. ஜலேபிக்கான சர்க்கரைப் பாகு தயாரிக்க இவர்கள் பயன்படுத்துவது khandsaari sugar எனப்படும் நாட்டுச் சர்க்கரை மட்டுமே.  


மிகச் சிறிய கடை என்பதால் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு உட்கார்ந்து சாப்பிட இடம் கிடையாது. அதுமட்டுமல்ல வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை சமாளிக்க ஒரு ஆளை குண்டாந்தடியுடன் நிற்கவைத்து, வாடிக்கையாளர்கள் வரிசையில் வர, ஒவ்வொருவராய் வந்து அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்ட பிறகு அடுத்தவரை அனுமதிப்பார்கள். நேற்று நான் சென்றபோது வரிசையில் நின்று வாங்க வேண்டுமா என நினைத்தாலும் வாங்கி சுவைத்த பிறகு அப்படி நிற்பதில் தவறில்லை என்றே தோன்றியது. சனி ஞாயிறுகளில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவதால் வரிசை நீண்டதாக இருக்கும். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கடை இயங்குகிறது. சாந்தினி சவுக் பிரதான சாலையிலிருந்து (Dh)தரீபா(ba) கலான் பகுதிக்கு செல்லும் குறுக்குச்சந்தின் முக்கில் இந்தக் கடை இருக்கிறது. தில்லி வரும் வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கடையில் நிச்சயம் ஜலேபி சுவைக்க வேண்டுகிறேன்…. நாளை தில்லி குறித்த வேறு ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை….


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


6 கருத்துகள்:

  1. சுவைக்கும் ஆவல் வருகிறது.  சென்னையில் சில இடங்களில் இவ்வகை இனிப்பை 'டெல்லிவாலா ஸ்வீட் ஸ்டால்களில்' சுவைத்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  2. ரப்டி விவரணம் படித்ததும் சுவைக்கும் ஆவல் வருகிறது.  ரப்டி என்கிற வார்தையைக் கேட்டதும் எனக்கு மும்மது ஹனீஃபா பாடிய இஸ்லாம் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.  என்ன பாடல் என்று யூகிக்க முடிகிறதா?!!

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இனிப்பு பிடிக்காது ஆனால் தங்களது பதிவு ஆசையை தூண்டி விட்டது ஜி

    பதிலளிநீக்கு
  4. வெங்கட் ஜி!!!! இந்தக் கடை பத்தி கேள்விப்பட்டு சாந்தினி சௌக் போயும், இந்த ஜலேபி வாலா அருகில் வரை போயும் சாப்பிடாமல் வந்து ...அந்த சோகத்தை என்ன சொல்ல!!! அடுத்த முறை தில்லி வந்தா கண்டிப்பா சுவைத்திடணும்....பட்டியல் நிறைய உங்கள் பதிவுலருந்தும் நோட் பண்ணி வைச்சு...அது சரி எத்தனைதான் பட்டியலில் அடக்க முடியும் அதுவும் உடம்பே இனிப்பாக இருக்க!!!

    இது நாவில் நீர் ஊற வைக்கிறது.

    இங்கும் ஜலேபி வாலாக்கள் இருக்காங்க...நிறைய. வட இந்தியர்கள் தான். ஆனால் நாட்டுச்சர்க்கரைப் பாகு இல்லை.

    இங்கு வீட்டருகில் ஒரு அட்டகாசமான பானிபூரி செய்யும் பானிபூரி வாலா. செம டேஸ்ட். படு சுத்தம். தள்ளுவண்டிதான் அவரிடம் அனுமதி கேட்டு புகைப்படம் எடுத்து போட நினைத்திருக்கிறேன். சாப்பிட்டப்ப கைல மொபைலும் இல்லை கேமராவும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ஜிலேபி பிடிக்காது. படமும் தகவல்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....