புதன், 12 ஜூலை, 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஏழு

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி எட்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்பது


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


தொடரின் சென்ற பகுதியில் சதுரகிரி குறித்த சில கதைகளையும் நம்பிக்கைகளையும் பார்த்தோம். இந்தப் பதிவில் மலையிலிருந்து நாங்கள் கீழே இறங்கி வந்த போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  வாருங்கள் அந்த அனுபவங்களைக் குறித்துப் பார்க்கலாம். 


காலை நேரம் சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் சன்னதிகளில் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு மனம் குளிர்ந்த பிறகு அங்கிருந்து மலையடிவாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  மலையேற்றத்தின் போது இருந்த மற்ற நண்பர்கள் எல்லோரும் முதல் நாளே இறங்கிச் சென்று விட, மலையில் தங்கியது நான், திரு சரவணன் மற்றும் சென்னையிலிருந்து வந்திருந்த மற்றொரு சரவணன் ஆகியோர் மட்டுமே. நாங்கள் மூவரும் மலையிலிருந்து இறங்க ஆரம்பித்த போது காலை நேரம் தான். மதிய வெய்யிலுக்குள் கீழே இறங்கிவிட்டால் மதுரை சென்று அங்கிருந்து அவரவர் வழி ஊருக்குத் திரும்ப திட்டம் இருந்தது. மலையேற்றத்தினை விட மலையிலிருந்து இறங்குவது சுலபமாக இருக்கும் என்று சிலர் சொல்வதுண்டு! ஆனால் அப்படி சுலபமாக இருக்கும் என்று நினைத்தாலும் மலையிலிருந்து இறங்குவதும் கடினமாகவே இருந்தது.  கொஞ்சம் தவறினாலோ, கால்களை வைக்கும்போது வழுக்கிவிட்டாலோ கீழே விழுந்து விட வாய்ப்புண்டு என்பதால் கால்களை நன்கு ஊன்றி வைக்க வேண்டியிருந்தது.  நாங்கள் பார்த்துப் பார்த்து பொறுமையாகவே இறங்கிக் கொண்டிருந்தோம்.  மலையேற்றத்தின் போதும் எங்கள் உடன் வந்தவர்களில் சிலரால் தொடர்ந்து ஏறமுடியாமல் சிரமப்பட, அவர்களுக்கு உதவியபடியே மலையேறினோம்.  மலையிலிருந்து இறங்கும்போது நாம் மட்டும் என்பதால் விரைவாக இறங்கிவிடலாம் என எங்களுக்குத் தோன்றியது. 


நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறு ஒரு திட்டத்தினை நமக்காக வைத்திருப்பார் என்பதை நாங்கள் மலையிலிருந்து இறங்கும்போது கண்டுகொண்டோம். நாங்கள் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த சமயம் எங்களைப் போலவே மலையில் இரவில் தங்கிய ஒரு குழுவினரில் இரண்டு பெண்கள் தங்கள் குடும்பத்தினரை விட்டு தனித்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருமே மலையிறக்கத்தின் போது தடுமாறி, கீழே தவறி விழ இருந்தார்கள்.  அவர்களை நாங்கள் பிடித்து நிறுத்தி கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்தினோம்.  அப்படித் தடுமாறியதில் அவர்கள் இருவருக்குமே அதிக பயம் வந்து விட்டது.  எங்களை மலையடிவாரம் வரை கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கேட்க, நாங்களும் அவர்களுடன் பொறுமையாக நடக்க ஆரம்பித்தோம். பல இடங்களில் அவர்களை கையைப்பிடித்து அழைத்து வர வேண்டியிருந்தது. அல்லது அவர்கள் எங்களில் ஒருவரின் தோளைப் பிடித்துக் கொள்ள மிகவும் பொறுமையாகவே மலையிலிருந்து இறங்க வேண்டியிருந்தது.  அவர்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாக சொல்லிக் கொண்டு வந்தார்கள்.  அவர்களுடன் வந்தவர்களில் ஒருவரின் மாமியார் பின்னால் மற்றொரு குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.  இவர்களுக்கே இறங்குவது சிரமமாக இருக்க அந்த மாமியார் எப்படி இறங்குவாரோ என்று புலம்பிக்கொண்டே இருந்தார் எங்களுடன் வந்த அந்தப் பெண்மணி. எங்களைப் போலவே அவருடனும் ஏதேனும் ஒருவரை அனுப்பி வைத்திருப்பார் எல்லாம் வல்ல சதுரகிரி ஈசன் என்று சொல்லி அவரைத் தேற்றினோம். 


மலையிறக்கத்தின் போதும் பொறுமையாக நின்று நிதானித்து ஆங்காங்கே அவர்களுக்கு ஓய்வு கொடுத்ததோடு நாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஆங்காங்கே கிடைத்த மோர் போன்ற நீர் ஆகாரமும் தேவையாக இருந்தது.  மலையிறக்கத்தின் போது சமவெளிப்பாதை வரை அவர்களை அழைத்து வந்த பிறகு அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காகக் காத்திருக்க நாங்கள் மேலே நடந்து மலையடிவாரத்தில் நுழைவாயிலுக்கு அருகே இருந்த கடைக்கு வந்து சேர்ந்தோம்.  அங்கே என்னுடன் வந்த இரண்டு நண்பர்களும் தங்களின் உடமைகளை வைத்துவிட்டு வந்திருந்தார்கள். அதனால் கடையில் சிறிது நேரம் அமர்ந்து அங்கே பேசிக் கொண்டிருந்த பிறகு வீடு நோக்கி புறப்படுவதாக திட்டம்.  மலையேற்றம் மற்றும் மலையிலிருந்து இறங்கிய சமயத்தில் வழியில் பார்த்த சில நபர்களும் அங்கே கடைக்கு வெளியே அமர்ந்திருந்தார்கள்.  பக்கத்தில் இருந்த ஒரு அன்னதானக் கூடத்தில் மதிய உணவினை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  எனக்கு காலையில் சாப்பிட்ட உணவே போதும் என்று தோன்றியதால் சாபிடவில்லை. மற்றவர்கள் சாப்பிடும் வரை அங்கே நடக்கும் விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். உணவு தேவையான அளவு மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாலும் பலர் அதிகம் வாங்கிக் கொண்டு வீணாக்குவதை பார்த்தபோது மனம் பதறியது. 


எத்தனை கஷ்டப்பட்டு தானியங்களை விவசாயம் செய்கிறார்கள், அந்த அன்னதானக் கூடம் வரை கொண்டு சேர்க்கிறார்கள், சமைக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்துப் பார்த்தால் இப்படி உணவை வீணடிப்பது தவறு என்று வீணடிப்பவர்களுக்குப் புரியும்.  ஆனால் அவர்கள் இதனை யோசிப்பதே இல்லை என்று தான் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இப்படி வீணடிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.  எத்தனை எத்தனை மனிதர்கள் அடுத்த வேளை உணவுக்கு வழி தெரியாமல் இருக்கிறார்கள் இந்த உலகத்தில் எனும்போது, கிடைத்த உணவை வீணடிப்பது என்பது பாபங்களிலேயே பெரிய பாவம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.  பொதுவாக நான் தலைநகர் தில்லியில் விழாக்களை ஏற்பாடு செய்யும் போது உணவு வழங்குவதும் எனது பணிகளில் ஒன்றாக இருக்கும். அப்படி உணவு வழங்கும்போது, எப்போதும் சொல்லும் ஒரு விஷயம் “எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக் கொண்டபின்னர் வீணடிக்கக்கூடாது!” என்பதே! சதுரகிரி மலைப்பிரயாணத்தில் இப்படி வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பார்த்தபோது மனதில் அப்படி ஒரு கிலேசம்! இவர்களை யார் திருத்துவது - அந்த ஆண்டவன் மட்டுமே திருத்த வேண்டும்! வேறு என்ன சொல்ல?


அதன் பிறகு தாணிப்பாறை என்கிற அந்த மலையடிவாரத்திலிருந்து புறப்பட்டு ஒரு பேருந்தில் வத்ராப் எனும் வத்திராயிருப்பு வரை பயணித்தோம்.  அங்கே மத்யமர் குழுவில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தோம்.  அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வரை ஒரு பேருந்து. மதுரை செல்லும் வழியில் நண்பர் மா.பா. சரவணன் இறங்கிக் கொள்ள நானும் மற்ற சரவணனும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து வரை ஒன்றாகச் சென்றோம்.  அவருக்கு இரவு தான் மதுரையிலிருந்து சென்னைக்கான ரயில்! அவரை ரயில் நிலையத்திற்கு அனுப்பிவிட்டு நான் திருச்சி நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்றில் புறப்பட்டேன்.  பேருந்தில் பெரிதாக நிகழ்வுகள் ஒன்றும் இல்லை. குளிரூட்டப்பட்ட பேருந்து என்பதால் நல்ல உறக்கம் வந்தது. உறங்கி எழுந்த போது திருச்சி நகருக்குள் வந்திருந்தது பேருந்து.  மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி திருவரங்கம் நோக்கி மற்றொரு நகரப் பேருந்து. இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்து விட்டேன்.  முதல் முறையாக இப்படி ஒரு பயணம் - தமிழகத்தில் மலையேற்றப் பயணம்!  மிகச் சிறப்பாகவே அமைந்தது என்பதில் மகிழ்ச்சி.  இந்த முறை சிறப்பாக அனுபவங்கள் கிடைத்தது என்றாலும் மீண்டும் ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் இருக்கிறது.  பார்க்கலாம் சதுரகிரி உறையும் ஈசன் அழைப்பு வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் சென்று வருவேன். 


இந்த சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணமும் பயணம் குறித்த பதிவுகளும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பயணம் குறித்த தகவல்களுடன் சந்திக்கிறேன். 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….



12 கருத்துகள்:

  1. உணவை வீணாக்குவது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.  மனிதனின் பேராசை!  பயணம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.  வத்ராப்ப்பில் மூன்றே தெருக்கள்தான் இருந்திருக்கும்!  பஸ் ஸ்டாண்டை அடையும் முன் சில தெருக்கள் இருக்கும்.  பஸ் ஸ்டாண்டில் இன்னும் அந்த மேடை அங்கு இருக்கிறதா? 

    பதிலளிநீக்கு
  2. மலையேற்றத்தைவிட மலையிலிருந்து இறங்குவது மிக்க்கடினம். இது படிகளுடன் கூடிய மலையேற்றத்துக்குப் பொருந்தாது.

    உணவை வீண்டிப்பது.... வாழ்வில் பசியை அனுபவித்தவர்களுக்கு உணவை வீண்டிக்கும் எண்ணம் வராது.

    பதிலளிநீக்கு
  3. இறையருள் நிறைந்த மனநிறைவான பயணம். வாழ்த்துக்கள். மலையேறுவதை விட இறங்குவதில் அதிக கவனம் தேவைப்படும். மலைக் கோவில்களில் யானை வேகமாக மலை ஏறிவிடும். ஆனால் இறங்கும் போது மிகக் கவனமாக அடியெடுத்து வைக்கும்.

    பதிலளிநீக்கு
  4. //சதுரகிரி உறையும் ஈசன் அழைப்பு வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் சென்று வருவேன். ..
    இந்த மன உறுதியே உங்களை மீண்டும் சதுரகிரி அழைத்து செல்லும். ஈசன் வழி வகுப்பார்.

    பயணம் அனுபவங்கள் நன்றாக இருந்தது. இறங்கும் போது படங்கள் எடுத்து இருக்கலாம்.கடினம் என்றாலும் எங்காவது நின்று எடுத்து பதிவு செய்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. /// எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக் கொண்டபின்னர் வீணடிக்கக்கூடாது..///

    நம் மக்கள் இதையெல்லாம் கேட்கவே மாட்டார்கள்.. நானும் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்.. மன்னிக்க முடியாத குற்றம் இது..

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பயணக் கட்டுரை..

    அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. மலையில் இறங்குவதுதான் மிகவும் கடினம், ஜி. அதுவும் ஏறும் போது நாம் கால் தூக்கி வைத்து ஏறுவதற்கும் இறங்கும் போது காலைக் கீழே வைத்து இறங்கும் போதும் உள்ளதற்கும் வித்தியாசம் உண்டு அதுவும் கால் ஏறும் போது முட்டி டக்கென்று மடங்கிச் சரியாது ஆனால் மலையேற்றத்தினால் மலையேறி முடித்ததும் தொடைகள், மற்றும் ஆடுகால் சதைகள் (பயிற்சி இல்லாததால்) ஒரு வித அயற்சிக்கு உட்படும்...அதனால் இறங்கும் போது முட்டி மடங்கி டக்கென்று மடங்கி நாம் நிதானமாகக் கீழே வைக்கும் முன் மடங்கி நாம் சரிந்து உட்கார்ந்து விடும் அபாயம் உண்டு. அதன் பின் யாருடைய கைப்பிடித் துணையும் இன்றி இறங்குவது கடினம். பிடித்துக் கொண்டு ஒரு காலைக் கீழே வைத்து ஊன்றி அதன் பின் அடுத்த காலைக் கீழே வைத்தல் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. என்னைப் பொறுத்தவரை இப்படி வீணடிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.//

    அதேதான். மன்னிக்க முடியாத குற்றம். என்னால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் - பாரதிதான் நினைவுக்கு வருவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சதுரகிரி மலைப்பயணம் சிறப்பாக நிறைவுற்றதற்கு மகிழ்ச்சி. ஜி, பர்வதமலை அடுத்து திட்டம் வைச்சுக்கோங்க. ஆனால் டிசம்பரில் அல்லது ஜனுவரி பொங்கலுக்கு முன் போங்க. வெயில் இல்லாதப்ப. ஆனால் போகும் வழியில் வெயில் இருக்காது நிழலாகத்தான் இருக்கும் காட்டின் வழிதான் பயணம் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆம் மலையேற்றத்தைவிட மலையிறக்கம் கவனமாக விடயம்.

    தங்களது பயணம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான பயணக் கட்டுரை

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....