வெள்ளி, 30 ஜூன், 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - Pபெஹல்வான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


மலையேற்றம் - பகுதி நான்கு - பிலாவடி கருப்பு கோயில் முதல் சுந்தர/சந்தன மஹாலிங்கம் கோயில் வரை


பிலாவடி கருப்பர் கோயிலில் வணங்கிய பிறகு தொடர்ந்து நடந்தால் நாம் சுந்தர மஹாலிங்கம் கோயிலை அடைந்து விடலாம்.  அதிலிருந்து இன்னும் சிறிது மேலே நடந்தால் சந்தன மஹாலிங்கம் கோயில் வந்து விடும். வழியில் வனதுர்க்கை அம்மன் கோயிலும் உண்டு.  வழியில் இருக்கும் எல்லா கோயில்களிலும் வழிபட்டுக்கொண்டே நடந்து வருவது நல்லது.  நடுநடுவே இருக்கும் கோயில்களில் வழிபடும் நேரம் நாம் கொஞ்சம் ஒய்வு எடுத்தது போலவும் ஆகுமே! ஒரு வழியாக கடினமான பாதைகளைக் கடந்து நாங்கள் அனைவரும் சுந்தர மஹாலிங்கம் கோயில் அருகே வந்து சேர்ந்து விட்டோம்.  கோயில் அருகே நிறைய கடைகள் இருக்கின்றன.  அங்கே உங்களுக்கு பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன.   கீழே இருந்து நாம் சுமந்து வரத் தேவையில்லை என்பது ஒரு விதத்தில் வசதி.  ஆனால் மேலே இருக்கும் அந்த கடைக்காரர்கள் பொருட்களை எல்லாம் கீழே இருந்து மூட்டைகளில் ஆட்களை வைத்து தான் சுமந்து வர வேண்டியிருக்கும் என்பதால் பொருட்களின் விலை கொஞ்சம் அதிகம் இருக்கலாம். பொதுவாக ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் வரை தூக்கு கூலி வாங்குகிறார்கள் என்று தெரிகிறது.  அப்படி தூக்கிக் கொண்டு வருபவர்களும் மூட்டையை தலையில் சுமந்து கொண்டு வருவதோடு, நாம் கடந்து வந்த அதே கடினமான பாதையில் தானே நடந்து வருகிறார்கள்.  அதனால் 500 ரூபாய் கூட, அவர்களது உழைப்புக்கு நிகராக இல்லை - குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது.  


சுமை தூக்கிகளும் டோலி சுமப்பவர்களும்:


கடினமான இந்த மலைப்பாதையில் நாம் நடப்பதே சுலபம் அல்ல. ஆனாலும் எம்பெருமானின் ஈசனின் மீது இருக்கும் பக்தியாலும், நம்பிக்கையாலும், நம்மால் முடியும் என்ற மன உறுதியுடன் நடக்க ஆரம்பித்து விடுகிறோம்.  ஆனால் இது போல நடப்பது அனைவராலும் முடியாத விஷயம் - குறிப்பாக உடல் நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள், முதியவர்கள் போன்றவர்களால் இந்த மலையேற்றத்தில் பங்கு கொள்வது என்பது இன்னும் அதீத கடினமானது.  ஆனாலும் அவர்களுக்கும் இங்கே சென்று, சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் சன்னதிகளில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு, இறைவனின் அருளைப் பெற ஆசை இருக்கத்தானே செய்யும்.  அப்படியானவர்களின் வசதிக்காக இங்கே டோலி சுமப்பவர்களும் இருக்கிறார்கள்.  தூக்கிக் கொண்டு செல்லப்படும் நபர்களின் எடைக்கு ஏற்ப கட்டணம் வாங்குகிறார்கள்.  நான் வடக்கில் பல இடங்களிலும், தெற்கே சபரிமலையிலும் இப்படி மனிதர்களைச் சுமந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  பெரும்பாலும் இரண்டு மூங்கில் கம்புகளுக்கு இடையே ஒரு தொட்டில் போல அமைப்பில் மனிதர்களை உட்கார வைத்து நான்கு பேர் அல்லது இரண்டு பேர் தூக்கிச் செல்லும் அமைப்பாகவே இருக்கும்.  இல்லை என்றால் ஒரு நாற்காலி இரண்டு மூங்கில்களுக்கு நடுவே கட்டப்பட்டு அதில் தூக்கிச் செல்ல வேண்டியவரை உட்கார வைத்து தூக்கிச் செல்வார்கள்.  ஆனால் இந்த சதுரகிரி மலையில் டோலி என்பது இப்படி இல்லை. 


வித்தியாசமான தூளி:   



படம்: நன்றி முகநூல் நட்பான கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்...

இந்த சதுரகிரி மலைப்பாதையில் இருக்கும் டோலி, தூளியைப் போன்றது. ஒரு பெரிய போர்வையினை ஒரு மூங்கிலில் கட்டி அந்த தூளியில் தூக்கிச் செல்லவேண்டியவரை படுக்க வைத்து இரண்டு பேர் தூக்கிச் செல்கிறார்கள்.  தூக்கிச் செல்லப்படும் நபர் தூளிக்குள் இருப்பதால் வெளியே இருக்கும் காட்சிகளை ஒன்றுமே பார்க்க முடியாது.  என்னதான் சிறு வயதில் தூளியில் படுத்துக் கொண்டிருந்த அனுபவம் இருந்தாலும் இந்த தூளி போன்ற அமைப்பு மிகவும் வித்தியாசமானது.  இரண்டு பேர் மட்டுமே தூக்கிச் செல்வார்கள் என்றாலும், அப்படித் தூக்கும் நபர்கள் நடுநடுவே மாறுவார்கள்.  தூக்கிச் செல்லப்படும் மனிதரின் எடையைப் பொறுத்து ஆறு பேர் அல்லது எட்டு பேர் ஒரு குழுவாக இயங்குவது இங்கே வழக்கமாக இருக்கிறது.  மலையடிவாரத்திலிருந்து சமதளப் பாதை வரை நடந்து செல்ல வேண்டியிருக்கும். அதன் பின்னர் தான் மலைப்பாதையில் தூளியில் தூக்கிச் செல்வார்கள்.  மலையேற்றம் முடிந்து திரும்பும்போதும் இதே வழி தான்.  


கீழேயிருந்து மேலே சென்று மீண்டும் கீழே தூக்கிக் கொண்டு வர வேண்டும்.  சிலர் காலையில் புறப்பட்டு இரவுக்குள் திரும்பி வந்து விடுவார்கள். சிலர் இரவு அங்கே தங்கியிருந்து அடுத்த நாள் காலை திரும்புவார்கள்.  தூக்கிச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இவர்கள் கட்டணம் வசூலிக்கிறார்கள்.  இந்தக் கட்டணம் தூக்கிச் செல்லப்படுபவரின் எடையைப் பொறுத்து தான்.  எப்படியும் 12000 ரூபாய்க்கு மேல் ஆகும்.  அதிக எடை உள்ளவர்களிடம் ரூபாய் 20000 வரை வாங்குவதுண்டு. கட்டணம் அதிகம் அல்லது குறைவு என்ற யோசனையே எனக்கு வரவில்லை - ஏனெனில் சாதாரணமாக மலையேற்றமே கடினமான ஒன்றாக இருக்கும்போது அந்த மலையேற்றத்தில் சராசரியாக 75 கிலோ உள்ள ஒரு மனிதரை தூக்கிச் சுமந்தபடியே மலையேற்றம் செய்வது மிகவும் கடினமான வேலை அல்லவா? ஒரேயடியாக தூக்கிக் கொண்டு நடப்பதும் சிரமமான காரியம் என்பதால் நடுநடுவே கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டபடியே தான் அவர்கள் நடப்பார்கள்.   நாங்கள் சென்ற தினத்தில் எங்களால் இப்படி டோலியில் சென்ற ஒருவரையும் சந்திக்க முடியவில்லை.  எல்லோருமே நடந்து மலையேறியவர்கள் தான் என்றாலும் எங்களுடன் வந்த திரு சரவணன், அதற்கடுத்த பிரதோஷ தினத்தன்று வரப்போகும் ஒரு முகநூல் நட்பிறகாக டோலி குறித்த தகவல்களைச் சேகரித்த போது நாங்களும் இருந்ததால் இத்தனை தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 



மலைப்பகுதியில்...


சுந்தரமகாலிங்கம் கோயில் நுழைவாயில்...


சந்தனமகாலிங்கம் கோயில் நுழைவாயில்...


மூலிகைப் பொருட்கள் விற்பனை...

மலையேற்றத்தில் வரிசையாக வரும் இடங்களை எல்லாம் பார்த்து முடித்து நாங்கள் நேரடியாக சந்தன மகாலிங்கம் சன்னதி அருகே சென்று விட்டோம்.  சன்னதியில் நேரடியாகச் சென்று தரிசனம் முடிந்த பிறகு மதிய உணவிற்காக அங்கே இருந்த சமையல் கூடத்திற்குச் சென்று சுவையான உணவினைச் சாப்பிட்டோம். அங்கே இருந்த சமையல் கலைஞர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதை அவரது பேசும் மொழியிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.  அவரிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபிறகு கொஞ்சம் நேரம் கோயில் வளாகத்திலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம்.  பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.  சிலர் தரிசனம் முடித்து மீண்டும் கீழ் நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள்.  ஆனால் நாங்கள் மாலை வரை அங்கே இருந்து பிரதோஷ பூஜையையும் பார்க்க இருந்ததால் அங்கேயே தங்கினோம்.  கொஞ்சம் கொஞமாக பிரதோஷ பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கான வேலைகள் தொடங்கினார்கள்.  நானும் என்னால் முடிந்த உதவிகளை - அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்பது, எலுமிச்சம் பழங்களைப் பிழிவது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.  அபிஷேகம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சன்னதியில் அமர்ந்து இறைவனிடம் மன அமைதியையும் நிறைவையும் தர வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.  அபிஷேகம் எப்படி இருந்தது, எங்களுக்கு அந்தச் சமயம் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. இரண்டு கோவில்களும் ஒரே இடத்தில் அடுத்தடுத்தா?  இல்லை இன்னும் கொஞ்சம் மேலே ஏற வேண்டும் என்பது போலவா?  டோலி குறித்த விவரங்கள் சுவாரஸ்யம்.  டோலியில் செல்பவர் இயற்கைக் காட்சிகளைக் காண முடியாது என்பது மைனஸ்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தடுத்து இல்லை ஸ்ரீராம். சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து இன்னும் கொஞ்சம் தொலைவு மலையேற்றம் செய்தால் வருவது சந்தன மகாலிங்கம் கோயில். அதற்கு மேலும் சில இடங்கள் உண்டு என்றாலும் தற்போது அங்கே செல்வதற்கு அனுமதியில்லை. அந்த இடங்கள் செல்வதும் கடினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. தூளி போன்ற டோலி தகவல் புதியதாக இருக்கிறது.

    சபரிமலையில் பார்த்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபரி மலையில் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. அந்த வகை டோலி இன்னும் சில வட இந்திய தலங்களில் உண்டு கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை. பயண விவரங்கள், படங்கள் எல்லாம் அருமை.
    இறைபணியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டது மகிழ்ச்சி.


    /இறைவனிடம் மன அமைதியையும் நிறைவையும் தர வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். //

    நல்ல பிரார்த்தனை.

    துளி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

    வேடிக்கை பார்க்க முடியாது , எவ்வளவு நேரம் இப்படி படுத்து இருக்க முடியும்!
    கேதார் நாத்திலும் உடல் எடைக்கு ஏற்ப காசு வாங்குவார்கள் டோலி தூக்குபவர்கள்.
    அதில் நாற்காலி போன்ற அமைப்பு வேடிக்கை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. டோலியில் நானுமே பயணம் செஞ்சுருக்கேன், அஜாந்தா, ஷோளிங்கர் மலைகளில். ஆனால் அவை நீங்கள் சொன்னதைப்போல் நாற்காலி, கயிற்றுகட்டில் போல பின்னிய இருக்கை இப்படி. ஆனால் அந்தத் தூளி வகையை அஹோபிலத்தில் பார்த்து பயந்தே போனேன். துணி கிழிஞ்சு போனால் நம்ம கதி ? ஐயோ..... நான் துளசிகோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களும் சிறப்பு. இந்த வகை தூளிகள் கொஞ்சம் அல்ல அதிகமாகவே பயம் தருபவை தான் துளசி டீச்சர். அது மட்டுமன்றி வேடிக்கையும் பார்க்க முடியாது என்பது கூடுதல் மைனஸ்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பயணிப்போர்க்கு ஏதுவாக பயனுள்ள செய்திகளுடன் சிறப்பான பதிவு..

    சந்தன மகாலிங்கம் போற்றி..
    சுந்தர மகாலிங்கம் போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தால் மகிழ்ச்சியே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. தூளி என்ற வார்த்தை தான் டோலி என்று ஆயிற்று..

    என்றாலும் கடினமான மலைப் பாதையில் சுமையைத் தூக்கிக் கொண்டு நடப்பது என்பது சிலிர்க்கின்றது..

    இங்கே சிறு பிரச்னை ஏற்பட்டாலும் இதைக் குலைத்து விடுவதற்கு சில அமைப்புகள் தயாராக உள்ளன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோலி/தூளியில் தூக்கிச் செல்வது கடினமான பணி தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கோயில்களை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி மேம்படுத்தியிருப்பது தெரிகிறது. குறிப்பாக சந்தனமகாலிங்கம் கோயில். நம் உறவினர் சென்று வந்த புகைப்படம் கொஞ்சம் வருடங்கள் முன்பு ...

    ஜி, ஒரு சந்தேகம் வருகிறது. சதுரகிரி பொதுவாக மக்கள் சுந்தரமஹாலிங்கம் கோயிலோடு முடித்துக் கொள்கிறார்களோ?

    பிரதோஷ பூஜை இரு கோயில்களிலும் ந்டை பெறுகிறதோ? அல்லது சந்தானமஹாலிங்க கோயிலிலா? சுந்தரமஹாலிங்க கோயில்தான் பூஜை என்று போன சிலர் சொன்னாங்க.

    இந்த இரண்டிற்கும் மேல் பெரிய மஹாலிங்கம் கோயில் இருக்கிறது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சுந்தர மஹாலிங்கம் கோயிலோடு முடித்துக் கொள்கிறார்களோ?/ இல்லை கீதா ஜி. இரண்டு கோயில்களுக்கும் சென்று வருவதே வழக்கம். பிரதோஷ பூஜையும் இரண்டு கோயில்களிலும் நடக்கிறது. பெரிய மஹாலிங்கம் கோயில் என்று இருப்பதாகத் தெரியவில்லை. சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு மேலே நவகிரகக் கோயில் என்ற பெயரில் பெரிய பெரிய பாறைகள் உள்ள இடம் ஒன்று உண்டு - ஒன்பது பாறைகள் அங்கே இருக்கின்றன எனத் தெரிகிறது. ஆனால் அங்கே இப்போது யாரையும் அனுமதிப்பது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. டோலியில் செல்பவர்களைக் கண்டதுண்டு. ஆனால் இது புதுவகையாக இருக்கிறது. இப்படிப் பார்த்ததில்லை. தகவல்கள் அருமை.

    ஆமாம் நீங்க சொல்வது போல் டோலிக்கான செலவை விட இப்படித் தூக்கிக் கொண்டு போவது பற்றித்தான் யோசனை வருகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான டோலி தான். இப்படித் தூக்கிச் செல்வது ஏனோ வித்தியாசமாகவே படுகிறது. மற்ற இடங்களில் நான் பார்த்த டோலிகள் பரவாயில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. டூளி குறித்த தகவல்கள் அருமை சார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....