வியாழன், 1 ஜூன், 2023

கதம்பம் - சென்னை பயணம் - சில சிந்தனைகள் - தம்பதியர் தினம் - நிச்சயதார்த்தம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சென்னை பயணம் - சில சிந்தனைகள் - 29 May 2023:



நான்கு நாட்கள் உறவுகளுடன் கூடி மகிழ்ந்து, இனிமையான கதைகளைப் பேசி நேரத்தை கடத்தி விட்டு இதோ இந்தத் தருணத்தில் கூட்டை நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்!


ஒரு சுபநிகழ்வில் கலந்து கொண்டதால் அங்கு நிறைய உறவினர்களையும், குடும்ப நட்புகளையும் பார்க்க முடிந்ததில் மனதுக்கு நிறைவாக இருந்தது! 


நீங்க ரொம்ப அழகா எழுதறீங்க அக்கா! நான் தொடர்ந்து படிச்சுட்டு வரேன்!


புவனா! நீ அன்னைக்கு எழுதியிருந்தியே ஒரு கதை! அதுல கொஞ்சம் மாத்தியிருக்கலாமோன்னு நினைச்சேன்!


ஆமாண்டி புவனா! நானும் அப்படி தான் நினைச்சேன்!


டெல்லிக்கு போயிட்டு வந்தீங்க தான! உங்க அப்டேட்ஸ் எல்லாத்தையும் பார்க்கிறேனே!


நீங்க அவங்களோட அக்கா பொண்ணு தான? சின்ன பொண்ணா பார்த்தது! பாலிடெக்னிக்ல கூட படிச்சீங்களே! 


இப்படி கிடைத்த பாராட்டுகளும், கருத்துகளும் மனதிற்கான மகிழ்ச்சியைத் தந்தாலும் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது!


இப்படியான விழாக்களில் கலந்து கொள்ளும் போது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், திட்டமிடல்கள் என்று பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது! 


92 வயதான தாத்தா ஆசை ஆசையாக தேங்காய் பர்ஃபி கிளறிக் கொட்டினார்!  பழங்கதைகளை பேசிக் கொண்டு பொழுதை கடத்தாமல் இன்றைய தலைமுறையினருக்கு ஈடு கொடுத்து துடிப்புடன் உதவுவதைப் பார்க்கும் போது நமக்கான உத்வேகமாக தோன்றியது நிஜம்!


இனிமை நிறைந்த நாட்களுக்குப் பின் மீண்டும் வீட்டில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு அறையை நோக்கிய பயணம்...🙂 நான்கு நாட்களாக அந்த அறைக்கு விடுமுறையாக இருந்தது...:))


******


தம்பதியர் தினம் - 29 May 2023:



என்னவர்: உன்ன மாதிரியே எல்லாரும் perfection ஓட இருப்பாங்களா! எவ்வளவு தடவ தான் சொல்றது! ............!!!


நான்: நான் சாதாரணமா தானே சொன்னேன்! அதுக்கு Answer தெரிஞ்சா சொல்லுங்கோ! அதுக்கு இவ்வளவு நேரம் சொல்லணுமா! 


என்னவர்: அதான் நானும் சொல்றேன்! இவ்வளவு வருஷமா சொல்லியும் நீ  கேட்க மாட்டேங்கிறியே!!


ஹா...ஹா..ஹா..!


இன்னிக்கு தம்பதியர் தினமாம்! உங்க வீட்டிலும் இப்படித்தானா...🙂


******


சென்னை ட்ரிப்! - நிச்சயதார்த்தம் - 30 May 2023:



இம்முறை சென்னைக்குச் சென்றது நெருங்கிய உறவில் ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக! இதை நிச்சயத் தாம்பூலம் என்றும் சொல்வதுண்டு! 


பெண் பார்க்கும் நிகழ்விற்குப் பின் திருமணம் எந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருவீட்டாரின் ஒப்புதலுடன் அதை பத்திரிக்கையாக எழுதி தாம்பூலத்துடன் மாற்றிக் கொள்வது! அதற்கு ஒப்பந்தம் செய்து கொள்வது என்று சொல்லலாம்! 


முதல்முறையாக மாப்பிள்ளையும் பெண்ணும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு மாலையிட்டு நலுங்கு வைத்து ஆரத்தி எடுத்தல் என்று சடங்குகள் நடைபெறும்! பெண்ணுக்கு மாப்பிள்ளையின் சகோதரி தான் நலுங்கு வைத்து மாலை அணிவிப்பார்! அதே போன்று மாப்பிள்ளைக்கு பெண்ணின் உடன்பிறந்தவன் இதே சடங்குகளை செய்வார்!


மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்வது திருமணத்தில் தான்! திருமணத்திற்கு முதல் நாளான மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்பும் நினைவூட்டலுக்காக இதே பத்திரிக்கையை தாம்பூலத்துடன் மாற்றிக் கொண்டு நிச்சயத் தாம்பூலம் செய்து கொள்வார்கள்! அதன் பின்பே ஜானவாஸம் என்று சொல்லப்படுகிற மாப்பிள்ளை அழைப்பு நிகழும்!


எங்கள் குடும்பங்களில் இப்படியாக நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெறுவது காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கம்! ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவரின் வசதிக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு இந்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன! 


அதே போன்று இந்த நிச்சயதார்த்த நிகழ்வு என்பது மாப்பிள்ளை ஊரில் அவரது வீட்டில் தான்! திருமணம் பெண்ணுடைய ஊரில்! சீமந்தம் மாப்பிள்ளை வீட்டில்! இப்படியாகத் தான் சம்பிரதாயங்கள் இதுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன! இந்நாட்களில் மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு ஊரும் உறவுகளும் கூடி திருமண நிகழ்வுக்கு இணையாக ஆடம்பரமாக செய்யப்படும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன!


'அவரும் நானும்' தொடர் எழுதிய போது அதில் என் திருமண நிகழ்வில் திருவரங்கத்தில் நடைபெற்ற எங்கள் நிச்சயதார்த்தத்தைப் பற்றி எழுதியிருந்தேன்! நிகழ்வு நடைபெற்றது அவரது வீட்டில்! இருவீட்டாரும் சேர்த்து மொத்தம் 50 பேர் இருக்கலாம்! அனைவருக்கும் வீட்டிலேயே சமைத்த உணவு தான்! மாப்பிள்ளைக்கு நாங்களும், பெண்ணுக்கு அவர்களும் உடை எடுத்திருந்தார்கள்! 


அவரது வீட்டின் கீழேயே இருந்த ஒரு காலியான வீட்டில் எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டது! என் கணவரே எனக்கு பரிமாறினார்..🙂 இதுவே 20 வருடத்துக்கு முந்தைய எங்கள் நிச்சயத் தாம்பூலம்! அந்நாளில் இந்த நிகழ்வுக்காக செலவு செய்யப்பட்ட தொகை 5000 ஆக இருக்கலாம்!


இதை விட 92 வயது தாத்தா என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது! எங்கள் குடும்பங்களில் 'பருப்புத் தேங்காய் என்று சொல்லப்படும் கோன் போன்ற இனிப்பில்லாமல் எந்த சடங்கும் நிகழ்ந்ததில்லை! பெண் பார்க்க வந்த போது சட்டென்று முடிவான திருமணமாம்! பருப்புத் தேங்காய்க்கு எங்கே செல்வது?? வெல்லப்பாகு வைத்து கிளறுவதற்கெல்லாம் நேரமில்லை!


சைக்கிளை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் கடைக்குச் சென்று இரு சர்க்கரை பொட்டலங்களை வாங்கி வந்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ சுற்றி மனையில் வைத்தாராம்! எத்தனை எளிமையாக சம்பிரதாயத்தை நிகழ்த்தி விட்டார்! ஆக எப்படியும் வாழலாம் என்பது போல எப்படியும் சடங்குகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்  

20 கருத்துகள்:

  1. நீங்கள் மறுபடி சென்னை வந்தததும் மழையும் வந்ததே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ஆனாலும் புழுக்கமும் இருந்ததே சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. உறவுகளுடன் கூடி இருப்பதும் பேசிச் சிரிப்பதும் எப்போதும் ஆனந்தம்.  அதிலும் நம்மைப் பற்றி பேச, அக்கறை கொள்ள சிலர் அந்தக் குழுமத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் இன்னும் ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. சர்க்கரை பொட்டலங்களை வாங்கி வந்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ சுற்றி மனையில் வைத்தாராம்! எத்தனை எளிமையாக சம்பிரதாயத்தை நிகழ்த்தி விட்டார்!//

    அருமை. சடங்குகள் இப்போது வெகு ஆடம்பரமாக மாறி வரும் நாளில் அந்தக்கால எளிமை மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா சொன்னது என்னையும் மிகவும் கவர்ந்தது அம்மா!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கோமதிம்மா.

      நீக்கு
  4. சடங்குகளில் எளிமைதான் நன்று. இப்போ கான்டிராக்ட்ல விட்டு ஷோ காட்டறது வழக்கமாகி வருவது வருத்தத்துக்குரியது.

    நிச்சயத்துல சடங்குதான் முக்கியம். சாதாரண வீட்டுச் சாப்பாடே நிறைவைத் தரும். நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் நெல்லை சார்.

      நீக்கு
  5. உற்வுகளுடன் கூடிய இனிய தருணங்கள், ஆதி அதுவும் நீங்கள் எழுதுவை அன்போடு பாராட்டி அக்கறையோடு சொல்வது என்பது மிக மிக மகிழ்வான விஷயங்கள். God Bless!

    உங்கள் - வெங்கட்ஜி நிச்சயதார்த்தம் தான் அருமை. அதுதான் மனதிற்குப் பிடித்திருக்கிறது. பல குடும்பங்களில் நிச்சயதார்த்தம் என்று செய்யாமல் சும்மா வெத்தலை பாக்கு மாற்றிக்கொண்டு கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் செய்வதுண்டு.

    இப்போதையவை ரொம்ப ஆடம்பரமாகிவிட்டது. Status Symbol ஆக்வும் மாறி வருகிறது.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  6. 92 வயது தாத்தா - சூப்பர்.

    அதுவும் சர்க்கரை பொட்டலம் கூம்பாக!!! நல்ல ஐடியா இல்லையா? அந்த சமயத்துக்குத் தேவையான சமயோசித முடிவு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தாவின் அனுபவம் என்னைக் கவர்ந்தது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆம்! எளிமை தான் நம் சேமிப்பு.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  8. கதம்பம் அருமை மேடம்.
    பதிவுகளை பிந்தொடர்பவர்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி.
    எங்கள் குடும்பத்திலெல்லாம் வாசிப்பவர்களே இல்லை.
    திருமண சடங்குகளை நேற்று நங்கநல்லூரில் ஒரு பிராமின் குடும்ப திருமண விழாவில் கண்டேன்.
    அனைத்தும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் அரவிந்த் சகோ.

      நீக்கு
  9. கதம்பம் அருமை. தம்பதியர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ராமசாமி ஜி.

      நீக்கு
    2. ஆம் திருமணம் எல்லாம் என் மனைவி இருந்த தெருவில் இருந்த கொஞ்சம் பெரிய வீட்டில்தான் நடந்தது...அது சிறப்பாகத்தான் இருந்தது...சிறப்பாகப் பதிவு செய்துள்ளது பழைய நிகழ்வுகளை நினைவூட்டிப் போனது..

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....