சனி, 3 ஜூன், 2023

காஃபி வித் கிட்டு - 172 - கிரிக்கெட் வெறி - செம்மொழி விரைவு வண்டி - Eyes On the road - CHIMBORAZO DAY - அப்பா - மூப்பு - Pindaari Glacier


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நாதுலா பாஸ் - சீன எல்லையில்…  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : கிரிக்கெட் வெறி


சில வருடங்களாகவே நான் கிரிக்கெட் பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது. முன்பு கூட அத்தனை ஈடுபாடு இல்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது.  போட்டித் தொடர் முடியும் சமயத்தில் இணையத்தில் அந்த போட்டிகளின் முடிவு பற்றி பார்ப்பதுண்டு - அது கூட, இணையத்தில் உலா வரும்போது பார்ப்பது தான்.  ஆனால் இன்னமும் இந்தப் போட்டிகள் மீதான ஆர்வம் பலருக்கும் குறையவே இல்லை.  சமீபத்தில் நடந்து முடிந்த IPL 2023 குறித்த ஒரு காணொளி - அதுவும் இறுதிப் போட்டியின் இறுதி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்ற சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது! எத்தனை ஈடுபாடு இந்த இளைஞருக்கு கிரிக்கெட் மீது! ஈடுபாடு என்று சொல்வதை விட வெறி என்பது தான் சரியான சொல்லாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்த காணொளி நீங்களும் பார்க்க வசதியாக இங்கே இணைத்திருக்கிறேன். 



******


பழைய நினைப்புடா பேராண்டி : செம்மொழி விரைவு வண்டி


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட் – 165 - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


செம்மொழி விரைவு வண்டி – கோவையிலிருந்து மன்னார்குடி வரை செல்லும் ரயில் – இரவு 12.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுகிறது. இந்த நேரம் முன்பதிவு செய்யும் பலருக்கும் குழப்பத்தையும் தேவையில்லாத அவஸ்தைகளையும் தருகிறது.  கோவையிலிருந்து திருச்சி பயணிக்கும் போது ஓர் இரவு பார்த்த காட்சி – ஒரு கூட்டுக் குடும்பம் – 7 பேர் கொண்டது. தத்கால் மூலம் ஏழு பேருக்கும் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.


கைகளில் பயணச்சீட்டை வைத்துக் கொண்டு பேர் பட்டியலில் பார்த்தால் அவர்கள் யாருடைய பெயரும் இல்லை.  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வேறு யாருடைய பெயரோ இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சரிபார்த்து மேலே இருக்கும் தேதியைப் பார்த்தால் வித்தியாசம்.  தத்கால் டிக்கெட் ஒன்றின் கட்டணம் 315 ரூபாய்....  7 பேருக்கும் சேர்த்து ரூபாய் 2205/- நஷ்டம். 


இத்தனைக்கும் கோவையிலிருந்து தான் புறப்படுகிறது.  திருச்சியிலிருந்து வரும் வண்டி காலையிலேயே கோவைக்கு வந்து விடுகிறது என்பதால் அன்றைய இரவு 12.15க்கு புறப்படுவதற்கு பதிலாக கொஞ்சம் முன்னே நேரத்தை மாற்றினால் இந்தக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். வேறிடத்திலிருந்து வரும் ரயில் என்றால் இந்த மாற்றம் செய்யவியலாது. அங்கிருந்தே புறப்படுகிறது என்பதால் இந்த மாற்றம் செய்வதில் ரயில்வேக்கு எந்த சிரமமும் இல்லை.


முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Eyes On the Road 


சாலைகளில் விபத்துகள் நடப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது அலைபேசி என்று சொன்னால் அதை நீங்களும் ஒப்புக்கொள்ளலாம்.  சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னரே ஒரு விளம்பரம் இது குறித்து வந்திருக்கிறது என்று சொன்னால் வியப்பாகவே இருக்கும் அல்லவா? ஆனால் எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட இதே அலைபேசி பல விபத்துகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம் மக்கள் இதன் விபரீதத்தினை இன்னும் உணர்ந்து கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும்.  பாருங்களேன். 



மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே! 


[OFFICIAL] Volkswagen: Eyes On The Road - VW AD - YouTube


******


இந்த நாளின் தகவல் - CHIMBORAZO DAY :  



ஒவ்வொரு வருடமும் ஜூன் 3-ஆம் தேதியை CHIMBORAZO DAY என்ற பெயரில் கொண்டாடுகிறார்களாம்! அது என்ன வாயில் நுழையாத ஒரு பெயராக இருக்கிறதே என்று தோன்றுகிறதல்லவா?  பூமிப் பந்தின் உச்சப் புள்ளி இந்த CHIMBORAZO என்கிற மலை என்று சொல்கிறார்கள்.  இது ஒரு எரிமலை என்றாலும் தற்போது எரிமலையின் ஒரு பண்புகளும் இல்லை! ஆங்கிலத்தில் சொன்னால் Inactive! தற்போதும் இந்த மலைபகுதியில் நிறைய பேர் மலையேற்றம் செய்கிறார்களாம். எங்கே இருக்கிறது இந்த எரிமலை என்று கேட்டால், அதற்கு பதில் தென் அமெரிக்காவில் இருக்கும் ECUADOR என்ற நாட்டில் இருக்கிறது! இந்த இடம் பற்றியும், எதற்காக ஜூன் 3-ஆம் தேதி CHIMBORAZO DAY என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது போன்ற கூடுதல் தகவல்கள் வேண்டுமெனில் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம். 


CHIMBORAZO DAY - June 3, 2023 - National Today


******


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - அப்பா : 



ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள் செய்யும் தியாகங்கள் குறித்து நிறையவே பேசப்பட்டாலும், அப்பாக்களின் தியாகம் குறித்து பொதுவாக அதிகம் பேசப்படுவதில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் இது நடப்பது தான்.  சமீபத்தில் பார்த்த ஒரு நிழற்படம் அப்பாக்கள் தங்களது குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக செய்யும் தியாகம் குறித்துச் சொன்னது.  பாருங்களேன்.  படம் மற்றும் எண்ணங்கள் குறித்த உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாமே! 


*****


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - மூப்பு : 



இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக ஆங்கிலத்தில் கவிதை ஒன்று.  மூப்பு குறித்த இந்தக் கவிதையும், அதற்காக பயன்படுத்தப்பட்ட மூதாட்டியின் படமும் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கலாம். படித்துப் பாருங்களேன்.  ராமலக்ஷ்மி, எங்கள் பிளாக் ஸ்ரீராம், கீதா ரெங்கன், துரை செல்வராஜூ போன்ற நண்பர்கள் முடிந்தால் கவிதையை அழகிய தமிழில், மொழிமாற்றம் செய்யலாமே!


No one tells the oceans

or the trees

or the mountains that they're too old.

They talk of how powerful,

how grounded,

how awesome they are. 

Imagine if we thought the same way about ourselves as we got older.

Maybe we'd realise how spectacular we are.~


~    Becky Hemsley


******


இந்த வாரத்தின் பயணம் - Pபிண்டாரி க்ளேசியர் : 



உத்திராக்கண்ட் மாநிலத்தில் Pபிண்டாரி க்ளேசியர் (Pindari Glacier) என்று ஒரு மலைப்பகுதி உண்டு.  இங்கே Trekking செய்ய மலையேற்றப்பிரியர்கள் பலரும் செல்வது வழக்கம்.  சென்ற மாதத்தின் (மே 2023) முதல் வாரத்தில் நண்பர் Pப்ரேம் Bபிஷ்ட் அவர்கள் தனது நண்பர்களுடன் ஆறு நாள் பயணமாக இந்த மலையேற்றத்திற்கு சென்று வந்தார்.  என்னையும் அழைத்தார் என்றாலும் மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால் இந்தப் பயணத்தினை தவிர்க்க வேண்டியிருந்தது. இந்தப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள மனம் விரும்பினாலும், ஏற்கனவே தொடர்ந்து மூன்று மாதம் விடுமுறை எடுத்துவிட்டதால், இப்படி அடிக்கடி விடுமுறை எடுக்க இயலாது போனது.  ஆனால் நண்பர் Pப்ரேம் அவரது வேறு சில நண்பர்களுடன் இந்த மலையேற்றப் பயணத்திற்கு சென்று வந்தார்.  அவர் சென்று வந்த பின்னர் அவரது YOUTUBE பக்கத்தில் பயணம் குறித்த ஒரு காணொளியும் சேர்த்திருக்கிறார்.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் சற்றே பெரிய அந்த காணொளியை கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Pindari Glacier Trek May 2023 - YouTube


******

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

42 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் வித்தியாசமாக இருந்தது. மூதாட்டியின் படம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. கிரிக்கெட் காணொளி - இதெல்லாம் புனையப்பட்ட காணொளிகள்.  நிஜமில்லை.

    மொபைல் - விளம்பரம் திடுக்கிட வைக்கிறது.

    அப்பா நிழற்படம் ரசிக்க வைக்கிறது.

    மூதாட்டி கவிதை நெகிழ வைக்கிறது.  தமிழ்ப் படுத்த அல்லது தனியாகவே எழுத முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனையப்பட்ட காணொளி - இருக்கலாம். ஆனாலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஶ்ரீராம்.

      விளம்பரம் - சில வினாடிகளில் நடந்திவிடுவதை அப்பட்டமாக காண்பிக்கிறது அல்லவா.....

      அப்பா நிழற்படம்..... ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. வயதாகிவிட்டது 
    என்று கடலை யாரும் 
    ஒதுக்குவதில்லை  
    மரங்களுக்கும் மலைகளுக்கும் 
    கூட
    வயது ஏற ஏற தான் மதிப்பு. 
    மூப்பு -
    முதிர்ச்சியில் கடல் 
    அனுபவங்களில் ஆரண்யம் 
    "வாழுகின்ற மக்களுக்கு 
    வாழ்ந்தவர்கள் பாடமடி..."
    மனித உயிர்களுக்கும்
    இதேபோல 
    மதிப்பு கூட்டுவோம் 
    வாழ்ந்து காட்டுவோம் 
    வானளவு உயர்வோம் 
    வனம் போல் படர்வோம் 
    பயன் அளிப்போம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான கவிதை சார்.
      வெங்கட் சார் குறிப்பிட்ட ஏனையோரும் கவிதை எழுத காத்திருக்கிறோம்.

      நீக்கு
    2. ஆஹா...... நல்லதொரு மொழியாக்கம் ஶ்ரீராம். பாராட்டுகளும் நன்றிகளும்.

      நீக்கு
    3. ஶ்ரீராம் அவர்கள் எழுதிய கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
    4. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி அரவிந்த். இன்னும் வேறு யாரெல்லாம் கவிதை எழுதுவார்கள் என்று நானும் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    5. ஸ்ரீராம் ரொம்ப நல்ல மொழியாக்கம்.....

      கீதா

      நீக்கு
    6. தங்கள் பாராட்டுக்களுக்கு ஶ்ரீராம் சார்பிலும் என் சார்பிலும் நன்றி கீதா ஜி.

      நீக்கு
    7. நன்றி வெங்கட், நன்றி கீதா. நான் செய்திருப்பது மொழியாக்கம் என்று சொல்ல முடியாது!

      நீக்கு
    8. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஸ்ரீராம்ஜி சொல்வதுபோல் அது புனையப்பட்டது என்றாலும்கூட இப்படி செய்வது இவர்களுக்கு வெட்கமாக இல்லையா ?

    நாட்டில் இப்படி நிறைய சகடைகள் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நிறைய சகடைகள்....... உண்மை தான் கில்லர்ஜி. நாளுக்கு நாள் இப்படியானவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான கதம்பம் சார்.
    மொபைல் பேசி பயணிக்க்ும் ஆபத்து குறித்து படிக்கும்போது நேற்று சிலர் அலட்சியத்தால் பலநூறு உயிர்களைக் குடித்த ரயில் விபத்து மனதில் தோன்றி பெருத்த வேதனையை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். இரயில் விபத்து - வேதனை. எத்தனை உயிரிழப்பும் காயங்களும்...... :(

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதேனும் வெறி....... அதனை அவரவர்கள் ஒப்புக்கொள்ளாவிடினும்!

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. கிரிக்கெட் - அந்தக்காணொளி எனக்கும் வந்தது. அவர் அப்படி நடித்து எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. என்றாலும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள்தான். என் பாட்டி அத்தை இருந்த காலத்தில் வீட்டில் கிரிக்கெட் என்றால் கண்டிப்பாக டிவி ஓடும். பாட்டி கடவுளிடம் வேண்டிக் கொள்வார்...இந்தியா ஜெயிக்கணும் என்று!!! நம் ஆட்கள் அவுட் ஆனால் கோபப்படுவார்!!!

    விளம்பரம் காணொளி நல்ல கருத்து. இன்று கூட வெளியில் சென்ற போது பங்களூரில் முக்கிய சந்திப்பு ஒன்றில் மொபைலில் பேசுவது முக்கியமா உங்கள் உயிர் முக்கியமா என்று கேட்டு ஒரு பலகை சந்திப்பின் நடுவில் ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே காண முடியும் என்பது போல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிக்கெட் காணொளி - இப்படியானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

      விளம்பரம் - தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது கூட.

      தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. ECUADOR - இரு மாதங்களுக்கு முன் தான் என் நெருங்கிய உறவினர் இந்த மலைக்குச் சென்று மலையேற்றம் செய்துவிட்டு வந்தாங்க. கூடவே மற்றொரு கொஞ்சம் active மலைக்கும் சென்று ஏறி 6 கிமீ தூரம் ஏறிச் சென்று அது எரிந்தாலும் இவர்கள் சென்ற பகுதி குளிராகவே இருந்ததாம்...படங்களும் அனுப்பியிருந்தார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..... உங்கள் உறவினர் இந்தப் பகுதிக்குச் சென்று வந்தாரா? படங்கள் பகிர்ந்து கொள்ள முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. CHIMBORAZO DAY - இதுபற்றியும் சொன்னார்கள்.

      கீதா

      நீக்கு
    3. ஆஹா... தகவலுக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
    4. பகிர்ந்துகொள்கிறேன். ஜி. அவர்கள் இப்பகுதிக்குச் சென்ற படங்கள் அவரிடம் கேட்கிறேன். என்னிடம் இருந்தவை அழிந்துவிட்டன. அவர் எனக்கு கூகுள் படங்கள் பகுதியில் கோர்த்து அனுப்பியிருந்தார். பார்க்கிறேன் தரவிறக்கம் செய்ய முடிகிறதா என்று. அவர்கள் இருப்பது அமெரிக்காவில். அவர்கள் Guatemala வுக்கும் சென்று வந்தார்கள். அங்குதான் active one. எனக்கும் ஆர்வம் உண்டு என்பதால் அதைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நிறை விதம் விதமான பறவைகள் படங்களும் எடுத்திருந்தார். அவருக்கும் புகைப்படக் கலை ஆர்வம் உண்டு. பல light photography யும் செய்திருக்கிறார். என் கணவரின் அக்கா மகன். எனக்குதான் ஆர்வங்கள் நிறையவாச்சே...அதையும் இங்கு வந்திருந்த போது நிறைய காட்டினார். அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தார் அவரிடம் கேட்டுவிட்டு எல்லாப்படங்களையும் பகிர நினைத்துள்ளேன். பார்ப்போம் ஜி.

      மிக்க நன்றி ஜி

      கீதா

      அது போல என் தங்கை மகள் தரம்ஷாலா சென்று வந்த படங்களும் பகிர நினைத்துள்ளேன். எனக்குப் பிடித்த இடமும் கூட. அவள் எழுதுகிறேன் என்றால். மலையாளம், ஆங்கிலம் என்றால் அவளுக்கு வந்துவிடும் தமிழில் எழுதத் தெரியாது. எனவே நான் அவள் சார்பின் எழுத வேண்டும் என்றால் நேரம் ஒதுக்க வேண்டும். அவளுக்கு

      நீக்கு
    5. அது போல என் தங்கை மகள் தரம்ஷாலா சென்று வந்த படங்களும் பகிர நினைத்துள்ளேன். எனக்குப் பிடித்த இடமும் கூட. அவள் எழுதுகிறேன் என்றால். மலையாளம், ஆங்கிலம் என்றால் அவளுக்கு வந்துவிடும் தமிழில் எழுதத் தெரியாது. எனவே நான் அவள் சார்பின் எழுத வேண்டும் என்றால் நேரம் ஒதுக்க வேண்டும். அவளுக்கு இரு சின்னக் குழந்தைகள் இருப்பதால் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கிறது...

      கீதா

      நீக்கு
    6. முடிந்தபோது படங்களையும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் போக முடியாத இடங்களுக்கு மற்றவர்கள் சென்று வந்து பகிர்ந்து கொள்வதை படித்தும் பார்த்ததும் மகிழ்ச்சி அடைவது நல்லதே.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
    7. தரம்ஷாலா - ஆஹா...... எனக்கு பிடித்த இடம். அருகே நிறையவே இடங்கள் உண்டு பார்ப்பதற்கு. முடிந்தபோது தரம்ஷாலா குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள் கீதா ஜி.

      நீக்கு
  9. கவிதையை மிகவும் ரசித்தேன் ஜி. அழகான கவிதை...உத்வேகம் கொடுக்கும் கவிதை!

    என்னையும் கோர்த்து விட்டிட்டீங்களா!!!!!!!! ஹாஹாஹா...கவிதை எல்லாம் மொழி பெயர்ப்பானாலும் எழுத வராதே!!!! சரி முயற்சி செய்கிறேன் காலையிலேயே பார்த்துவிட்டு எழுதி வைத்து அதன் பின் வெளியில் போய் வந்து கவிதையை தட்டி கொட்டி...

    கடலையும்
    மரங்களையும் மலையையும்
    வயதாகிவிட்டதென்று சொல்வதில்லை!
    அவை தங்கள்
    சக்தியையும், இருப்பினையும்
    அற்புதங்களையும்
    பேச வைப்பதாலோ!
    கற்க வேண்டிய பாடம்
    நாமும்!
    மரணத்திற்குப் பின்னும்
    வாழ்வதற்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலக் கவிதைக்கான உங்கள் மொழியாக்கம் நன்று. பாராட்டுகளும் நன்றிகளும்.

      நீக்கு
    2. சபாஷ் கீதா..மரணத்துக்குப் பின்னும் வாழ்வதைவிட வாழும்போதும் மூப்பின், முதிர்ச்சியின் மதிப்புடன் வாழலாம்!

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. சிறப்பான தொகுப்பு.

    மூப்பு கவிதை நன்று. எனது தமிழாக்கத்தையும் பகிருகிறேன். முதியவர்கள் பலரையும் படமாக்கியுள்ளேன் என்றாலும் இந்தப் படம் நினைவுக்கு வந்தது:
    https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/16353732287/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. நீங்கள் உங்களது ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் படமும் பார்த்தேன் - மிகவும் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. சமுத்திரங்களுக்கோ
    அல்லது மரங்களுக்கோ
    அல்லது மலைகளுக்கோ
    மிகவும் வயதாகி விட்டதாக
    எவரும் சொல்வதில்லை.
    அவை எத்துணை சக்தி வாய்ந்தவை
    எத்துணை உறுதியானவை,
    எத்துணை அற்புதமானவை
    என்பதையே பேசுகிறார்கள்.
    கற்பனை செய்து பாருங்கள்
    நமக்கு வயதாகும் போது
    நாமும் இதே போன்று
    நினைப்போமேயானால்
    எவ்வாறாக இருக்குமென்று.
    அப்போது நாம் உணரக் கூடும்
    எவ்வளவு பிரமிக்கத் தக்கவராக
    நாம் இருக்கிறோமென்று.
    *

    _ Becky Hemsley

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அததற்கு ஸ்பெஷலிஸ்ட் வந்தால்தான் சிறப்பு!  

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம் 🙂!

      நீக்கு
    3. ஆஹா... சிறப்பான தமிழாக்கம் ராமலக்ஷ்மி. மிகவும் ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. ராமலக்ஷ்மி அவர்களின் கவிதையை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமல்க்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....