வியாழன், 29 ஜூன், 2023

தினம் தினம் தில்லி - Pபெஹல்வான் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் தில்லி பதிவுகள் வரிசையில் இன்றைக்கும் இரண்டாம் பகுதியில் நான் கடந்த 32 வருடங்களாக வசித்து வரும் இந்தியத் தலைநகர் குறித்து மேலும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.  இந்தத் தொடரின் முதலாம் பகுதியை நீங்கள் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். வாசிக்காதவர்கள் வசதிக்காக, அந்த முதல் பகுதியின் சுட்டி கீழே!


தினம் தினம் தில்லி - புதிய தொடக்கம் - பகுதி ஒன்று


வாருங்கள் இன்றைய பதிவில் தலைநகர் தில்லி குறித்த வேறு ஒரு விஷயம் பற்றி பார்க்கலாம். 


Pபெஹல்வான்:




தலைநகர் தில்லி மற்றும் NCR என அழைக்கப்படும் National Capital Region பகுதிகளில் - அதாவது தில்லியைத் தொட்டடுத்த மாநிலங்களின் (ஹரியானா, உத்திரப் பிரதேசம்) சில பகுதிகளில் இப்போதும் அகாடா (Akhada) என அழைக்கப்படும் பயிற்சி நிலையங்கள் நிறையவே உண்டு.  மல்யுத்தத்திற்கான பயிற்சி நிலையங்கள் இவை.  பெரும்பாலும் குருகுலம் போலவே செயல்படும் இந்த பயிற்சி நிலையங்களில் மாணாக்கர்கள் சிறு வயதாக இருக்கும்போதே சேர்க்கப்பட்டு, மல்யுத்தம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும்.  இந்த பயிற்சி நிலையங்களில் தினம் தினம் அவர்கள் எடுக்கும் பயிற்சிகள் பார்க்கும்போதே நமக்கு உடல் வலி ஏற்படும் உணர்வு வரும் என்பதில் சந்தேகமில்லை. Guru Hanuman Akhada போன்றவை பிரபலமான பயிற்சி மையங்கள்.  இந்த பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களை Pபெஹல்வான் என அழைப்பது வழக்கம்.  இந்த Pபெஹல்வான் தான் நம் ஊரில் Bபயில்வான் ஆக மருவிவிட்டது போலும்! 


ஒரே ஒரு முறை தலைநகரில் உள்ள ஒரு அகாடாவில் மல்யுத்த வீரர்கள் செய்யும் பயிற்சியையும் அவர்களது இருப்பிடத்தினையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.  மிகவும் கடினமான பயிற்சி செய்கிறார்கள்.  அதிலும் அந்தப் பயிற்சிகள் அனைத்துமே தொன்றுதொட்டு வந்த வழக்கங்களை கடைபிடித்து கொடுக்கப்படும் பயிற்சிகள். பல தலைமுறைகளைக் கடந்து இன்றைக்கும் தொடரப்படும் இந்த பயிற்சி முறைகளைப் பார்க்கும் போது மல்யுத்த வீரராக உருவாவதற்கு அவர்கள் படும் கஷ்டங்கள் புரிய வரலாம்.  உணவு வழக்கங்கள், பயிற்சி முறைகள் என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும்.  ஹரியானா என்றாலே பால் பொருட்கள் தான் அதிகம்.   இந்த மல்யுத்த வீரர்களும் தினம் தினம் நிறைய பால் மற்றும் பால் பொருட்கள் அதிகம் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொளவதும் வழக்கம்.  சாப்பிடும்போது கண் பட்டுவிடும் என்றும் சொல்வதுண்டு - அதனால் அவர்கள் மற்றவர்களுக்கு முன்னர் சாப்பிடுவது இல்லை!


இந்தப் பயிற்சி நிலையங்களில் பயிலும் சமயம் பலருக்கும் பிரச்சனைகள் உண்டாவதுண்டு.  மூட்டுகள் தன்னிடம் விட்டு விலகுவது, தோள்பட்டை இறங்கிவிடுவது என உதாரணத்திற்கு சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுவது தான்.  இந்தப் பிரச்சனைகளுக்கு அவர்கள் மருத்துவர்களை நாடிச் செல்வதில்லை.  அங்கேயே இருக்கும் மூத்த வீரர்கள், குரு போன்றவர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் அளிக்க வல்ல பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  எண்ணெய் தடவி நீவி விடுவது, சின்னச் சின்ன அசைவுகளால் சரி செய்வது என அவர்கள் செய்யும் வைத்தியம் பார்க்கக் கொஞ்சம் பயம் வரச் செய்யும்.  இந்த மாதிரி வைத்தியர்கள் மல்யுத்த வீரர்களுக்கு வைத்தியம் செய்வதோடு மற்றவர்களுக்கும் வைத்தியம் செய்வதுண்டு.  இவர்களது வைத்திய முறைகள் பார்க்கவும், கேட்கவும் கரடு முரடாக இருந்தாலும் பயனுள்ளவை/அதிக செலவில்லாதவை என்று மல்யுத்தம் பயின்ற சில நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு.  


என் வீட்டின் அருகே இருக்கும் ஒரு கடையில் இப்படி ஒரு மல்யுத்தப் பயிற்சி பெற்ற வைத்தியர் ஒருவர் தினம் தினம் வந்து மூட்டு வலி, முதுகுவலி, தோள்பட்டை இறக்கம் போன்ற பல பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு வைத்தியம் பார்க்கிறார்.  அவர் கடையில் ஆண்கள், பெண்கள் என பலரும் வந்து அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள்.  ஒரு நாள் அருகே இருக்கும் கடையில் ஏதோ வாங்கச் சென்றபோது சில நிமிடங்கள் அவர் செய்யும் வைத்தியத்தினை பார்த்துக் கொண்டிருந்தேன் - வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களுக்கு வலித்ததோடு எனக்கும் வலித்த உணர்வு! படக் படக்கென கைகளை திருப்புவதும், முறுக்குவதும் ஓங்கி தட்டுவதும் என அவர் செய்வதைப் பார்த்தபோது “தலைவலி போய் திருகு வலி வந்து விடும்” என்ற மூத்தோர் சொல்வது நினைவுக்கு வந்தது.  


சில பெண்கள் முதுகில் ஓங்கி தட்டுவதும், இரண்டு கைகளாலும் நீவி விடுவதுமாக இருந்த போது அந்தப் பெண்கள் கத்துவதும், பெஹல்வான் கத்தாதே என அதட்டுவதும் பார்த்தபோது, நாம் பார்த்தால் கூட ஒரு தட்டு தட்டிவிடுவாரோ என எண்ணம் வர ”வந்த வேலையைப் பாருடா கைப்புள்ள” என எனக்கு நானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து அகன்றேன்!  


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான புதிய தகவல்.  நம்மூர் புத்தூர் கட்டு எல்லாம் இந்த முறையில்தான் போல..  துப்பாக்கி படத்தில் விஜய் அண்ணா கிளைமேக்சில் தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக்கொண்டு சண்டைக்கு தயாராவார்..  அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் புத்தூர் கட்டு - இதே முறையாகவும் இருக்கலாம் ஸ்ரீராம். விஜய் அண்ணா - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. புதிய தகவல்கள்..

    அவரவர் தலையெழுத்து அவரவர்க்கு!..

    நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான தகவல்கள். நமது ஊர்களிலும் அந்தக் காலம் கைவைத்தியம் என ஒட்டகப்புலம் என்ற இடத்தில் இது மாதிரி வைத்தியர்கள் இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள், பதிவு குறித்த தங்களது கருத்திற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  6. சுவாரசியமான தகவல்கள்.
    மல்யுத்த வீரர்களின் வாழ்வு மிகவும் சவாலானதே.
    வைத்தியமும் முறட்டு வைத்தியமாகவல்லவா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  7. டெல்லியில் இந்த பயிற்சி மையங்களை நான் பார்த்ததில்லை வெங்கட் ஜி. உங்கள் அனுபவங்கள் சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி இராமசாமி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஹிந்தி சொல்லைப் பார்த்ததும், நான் ஹிந்தி கற்ற போது இந்தச் சொல்லின் பொருள் தெரிந்து அட நம்ம Bபயில்வான் என்று சொல்வது இப்படி இதிலிருந்துதான் வந்திருக்குமோ என்றும் நீங்கள் சொல்லியிருப்பது போள் அப்போது தோன்றியது.

    சுவாரசியமான தகவல்கள்.

    இப்படி கேரளத்தில் களரி கற்றுக்கொடுக்கப்படும். ஒரு ஆசிரமம் போலத்தான் செயல்படும் அது. அது ஒட்டிய ஒரு திரைப்படம் கூட உண்டு. பெயர் மறந்து விட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களரி - இன்னும் சிறப்பானது. இந்த மல்யுத்தம் கொஞ்சம் பயமுறுத்தும் விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....