வியாழன், 8 ஜூன், 2023

ஆரண்ய நிவாஸ் - அறுசுவை இன்னிதழ் - வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சோம்கோ லேக் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள் வலைப்பூ நாட்களிலிருந்தே பழக்கம்.  நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த அதே 2009-ஆம் ஆண்டில் அவரும் "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி என்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் 2017-ஆம் வருடத்திற்குப் பிறகு அவரது வலைப்பூவில் எதுவும் எழுதுவது இல்லை.  இந்த வலைப்பூவில் மொத்தம் 339 பதிவுகள்! அதில் கவிதைகள் 88, சிறுகதைகள் 73! நல்லதொரு எழுத்தாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர், இப்படி பல திறமைகள் அவரிடத்தில் உண்டு.  இளைஞராக இருந்தபோதே கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தியவர் என்று அவரது பக்கங்களில் படித்ததுண்டு.   அவரது சகோதரர் எல்லென் அவர்களும் நல்ல ஓவியர்.  அவரும் எல்லென் என்று ஒரு வலைப்பூ வைத்திருந்தார்.  தற்போது அவரும் வலைப்பூவில் எழுதுவதில்லை என்பதில் எனக்கு வருத்தமே. பிறகு இவர்கள் இருவருமே வலைப்பூவினை விட்டு முகநூல் பக்கம் சென்று விட்டார்கள்.  அதிலும் நண்பர் மூவார் முத்து என்று பதிவர் மோகன் ஜி அவர்களால் அழைக்கப்பட்ட ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் மொத்தமாக முகநூலில் மட்டுமே இயங்குகிறார்.  



சமீப மாதங்களில் இந்த சகோதரர்கள் இருவருமாக சேர்ந்து, ஆரண்யநிவாஸ் என்ற பெயரிலேயே ஒரு அச்சு இதழை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல புதிய எழுத்தாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு வாய்ப்பு தருவதோடு, தற்போதைய வார/மாத இதழ்கள் போல சினிமா மற்றும் அரசியலுக்கு முக்கியத்துவம் தராமல் இலக்கியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த அச்சு இதழை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  40 பக்கங்கள் கொண்ட வண்ண இதழை தற்போது 130 ரூபாய்க்கு தருகிறார்கள்.  விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றினாலும், குறைவான Circulation கொண்ட ஒரு அச்சு இதழை இதைவிட குறைவான விலையில் தருவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஒரு இதழினை வெளியிடும்போது, மாதா மாதம் தங்கள் கைக்காசு போட்டு இதழ் வெளியிடுவது அவ்வளவு எளிதல்ல! - அதுவும் எந்தவித விளம்பரங்களும் இல்லாமல்! தற்போதைக்கு சந்தாதாரர்கள் சிலர் இருந்தாலும் தொடர்ந்து இதழை நடத்துவதற்கு அனைவரும் உதவி நல்க வேண்டியிருக்கும் - குறிப்பாக அவரது இதழுக்கு வருடாந்திர சந்தா அளிப்பதன் மூலம்.  


சமீபத்தில் வெளியான வைகாசி மாதத்தின் ஆரண்யநிவாஸ் இதழ் படித்தேன்.  முதல் பக்கம் மற்றும் கடைசி பக்கம் (முன் மற்றும் பின் அட்டைகள்) இரண்டிலும் இருந்த நகைச்சுவை துணுக்குகள் நம்மை ரசிக்க வைத்தன என்றால் உள்ளே இருந்த கட்டுரைகள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள் என அனைத்துமே மிகவும் சிறப்பாக இருந்தது. தேவா என்பவர் ஆரம்ப நிலை ஓவியம் வரைய சொல்லிக் கொடுப்பது மிகவும் சிறப்பு - அட இவ்வளவு சுலபமாக ஒரு ஓவியம் வரைந்து விட முடியுமா என்று எண்ண வைத்தது.  ஹர்ஷிதா பாஸ்கர் பரத்வாஜ் - சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஹர்ஷிதா கொரோனா காலகட்டத்தில் வரைந்த ஓவியங்கள் என பகிர்ந்து இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக புத்தகத்தில் இருக்கும் அனைத்தையும் நம் வீட்டில் உள்ள எல்லோராலும் - குழந்தைகள் உட்பட - படிக்க முடியும் அளவு கண்ணியத்துடன் இருக்கிறது என்பதை இங்கே அழுந்தச் சொல்ல வேண்டும்.  விளிம்பு நிலை ஜீவன்கள் என்கிற சிறுகதை - வான்மதி கண்ணன் அவர்களின் எழுத்தாக்கத்தில், ஒரு விளிம்பு நிலை ஜீவனான முனியம்மா, தான் பட்டினியாக இருந்தாலும், சக உயிரினங்களிடம் காட்டும் பரிவும் அவர்களது வாழ்க்கை நிலையும் சொல்லிப் போகும்போது நம் மனதையும் தொட்டுப் போகிறது!  


கானப்ரியன் கவிதைகள் என்ற தலைப்பில் இருந்த கவிதைகளில் கன்றுக்குட்டியின் குரலாக சொல்லப்பட்ட கவிதை என்னை மிகவும் பாதித்தது என்று சொல்லலாம் - நாம் அருந்தும் பால் அந்த கன்றுக்குட்டியிடமிருந்து பறிக்கப்பட்டது என்ற உணர்வை உண்டாக்கியது. அந்தக் கவிதை கீழே! 


உரிமை(யாளர்) குரல்


எப்போது பாலருந்தினாலும்  

அதில் தன் பங்கைக் கேட்டபடி 

வந்து மிதக்கிறது 

ஒரு கன்றின் 

சோகமுகம்!! 


சுஸ்ரீ அவர்களின் வாழையடி வாழை கதையும், அதற்காக ஓவியர் அருண் வரைந்த ஓவியங்களும் மிகவும் நன்றாகவே இருந்தது.  வாழையடி வாழையாக அம்மாக்கள் தனது குழந்தைகளுக்காகச் செய்யும் தியாகம்,  மனிதப் பிறவி என்பது குறித்து இப்படிச் சொல்லும் விஷயம் எனக்கு பிடித்தது - “இந்த அழகான உலகத்தைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப்பயணிகள் நாம், ஒரு நாள் திரும்பியே ஆகணும். ஆனா என்னிக்கின்றது மட்டும் புரியாத ரகசியம்” என்பது நூற்றுக்கு நூறு உண்மையான சங்கதி.


லவ் 2023 என்கிற தலைப்பில் உள்ள சிறுகதை இந்தக் காலத்து காதல் குறித்துச் சொல்லிப் போகிறது.  எழுத்தாளர் நமக்கு மிகவும் தெரிந்தவர், பிரபல எழுத்தாளர், வலைப்பூவிலும் தற்போதும் எழுதிக் கொண்டிருப்பவர் - திரு கே.பி. ஜனார்த்தனன் அவர்கள்! 


சூப் செய்யலாமா என்கிற தலைப்பில் சரோஜ் சௌரஜ்  அவர்கள் எழுதிய நகைச்சுவைக் கதையும் நன்றாகவே இருக்கிறது. சூப் செய்கிறேன் பேர்வழி என ஒரு ஆண்மகன் கிச்சனுக்குள் நுழைந்து களேபரம் உண்டாக்கி அவரது இல்லத்தரசியிடம் மாட்டிக்கொண்டதை நகைச்சுவை ததும்ப எழுதி இருக்கிறார்.  நகைச்சுவைக் கதைகள் எழுதுவது சுலபம் அல்ல என்பதோடு தற்போது நகைச்சுவை கதைகள் எழுதும் நபர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  


இதைத் தவிர கொட்டாவி பிசாசு மர்மம் என்கிற தலைப்பில் கே.வி. கணேஷ் என்பவர் எழுதிய மர்மக் கதை, திலோ என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கதை, நாய் வளர்ப்பது குறித்த எண்ணங்கள், இந்தக் கால இளைஞர்களுக்கு அந்தக் கால நட்சத்திரங்கள் குறித்த அறிமுகம், வருமான வரி குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஆடிட்டர் பதில்கள், என பல விஷயங்கள் இந்த மாதத்தின் இதழில் இருக்கிறது.  இந்த இதழில் இருக்கும் இன்னும் இரண்டு விஷயங்கள் குறித்தும் இங்கே சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.  முதலாவது, நண்பர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் ஈழத்து மஹாகவி குறித்த கட்டுரை.  இரண்டாவது எங்கள் இல்லத்திலிருந்து வெளியான ஒரு படைப்பு குறித்து - எங்கள் மகள் ரோஷ்ணி வரைந்த மண்டலா ஓவியங்கள் நான்கும் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது என்பதையும் இங்கே மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன்.  நமது படைப்புகள் வெளியானால் ஒரு அச்சிதழை இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். மாத சந்தா, வருட சந்தா எவ்வளவு என்று தானே அடுத்து நீங்கள் கேட்கப் போகிறீர்கள்? அதற்கு பதில் கீழே படமாக.  முடிந்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகலாம்.  சந்தா கட்டுபவர்களுக்கு அவர்களது படைப்புகள் வெளியிட முன்னுரிமை உண்டு! மேலதிகத் தகவல்கள் விரும்புபவர்கள், நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களை WhatsApp வழி (94433 99777) தொடர்பு கொள்ளலாம். 



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

12 கருத்துகள்:

  1. ஆம்.  நல்ல முயற்சி, உழைப்பு.  வியந்து பார்க்க வைக்கிறது.  இப்போது ஆரண்யநிவாஸ் புத்தகத்துக்கு நிறைய படைப்புகள் வர ஆரம்பித்து விட்டன, எனவே உங்கள் படைப்புகள் கொஞ்சம் தாமதமானால் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று ஆராரார் சொல்லி இருக்கிறார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் - நிறைய படைப்புகள் வருவதாக முகநூலில் எழுதி இருந்தார் - நானும் பார்த்தேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அச்சு நூல்கள் தொடர்ந்து வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்தால் நல்லதே! தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பல பதிவர்கள் முகநூல் பக்கம்... வருத்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். வலைப்பூவில் எழுதுபவர்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதில் வருத்தம் உண்டு. முகநூலில் அத்தனை ஈடுபாடு எனக்கு இல்லை.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. ஆஹா!! ஆரண்யநிவாஸ் அச்சு இதழ் அதுவும் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும் இதழ் என்பது அருமையான விஷயம், இதழ் நடத்துவது எளிதல்ல. உழப்பு மிக மிக அவசியம்.

    //நண்பர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் ஈழத்து மஹாகவி குறித்த கட்டுரை. இரண்டாவது எங்கள் இல்லத்திலிருந்து வெளியான ஒரு படைப்பு குறித்து - எங்கள் மகள் ரோஷ்ணி வரைந்த மண்டலா ஓவியங்கள் நான்கும் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது என்பதையும் இங்கே மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன். //

    அட! ஸ்ரீராம் கலக்குங்க...வாழ்த்துகள்! சொல்லவே இல்லையே..

    ரோஷ்ணிக்கும் வாழ்த்துகள்!

    அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு மற்றும் அச்சு இதழ் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. சிறப்பான அச்சு இதழை அரிமுகம் செய்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார். இணைய இதழாகவும் வெளியிட்டால் என் போன்றோரும் சந்தா செலுத்தி படிக்க வழி பிறக்கும். தற்போது, மெட்ராஸ் பேப்பர், நீலி போன்ற இணைய இதழ்களை மட்டுமே வாசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  6. இணைய இதழும் தருகிறோம், அது இலவசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....