புதன், 21 ஜூன், 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நேற்று வெளியிட்ட காசி விஸ்வநாத ஸ்வாமி கோவில், கும்பகோணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


******

சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


தொடரின் முந்தைய பகுதியை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். எனது சதுரகிரி பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்….




மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது நேரம் 01.50. ஆனால் சென்னையிலிருந்து வரும் பேருந்து வந்து சேரவே 03.30 மணி ஆகிவிடும். அதுவரை வேடிக்கைப் பார்க்க நிறைய விஷயங்கள் அங்கே உண்டு. மதுரை மல்லி, டீ காப்பி குரல்கள் எங்கும் ஒலிக்க பொழுது சுலபமாகச் சென்றது. மதுரை மல்லி அந்த நேரத்திலும் அழகாகக் கட்டி விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருந்தது. ஒரு முதியவர் என்னிடம் “பூ வாங்கிக்க தம்பி!” என்று பாசத்துடன் சொன்னார். எங்களுடன் வர வேண்டிய சிலர் வந்து சேர்ந்து சென்னையிலிருந்து வரும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டாம் என வேறு பேருந்தில் அமர்ந்து கொண்டார்கள். நான் காத்திருந்தேன். அவர்களுக்கு நேரம் அதிகம் இல்லை…. மாலையே அவர்கள் ஊர் திரும்ப வேண்டும் என்பதால் புறப்பட்டு விட்டார்கள்.

நான் செல்ல வேண்டிய பேருந்து 03.50 ஆகியும் வரவில்லை. எல்லாம் நல்லதற்கே என்ற எண்ணம் எனக்கு இருந்ததாலோ என்னவோ எனக்கு ஒரு அவசரமும் இல்லை. அவர்கள் ஏறிய பேருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் எங்களுக்கான பேருந்து வந்து சேர்ந்தது (19 மார்ச் 2023 காலை 04.00 மணி). முகநூலில் இருக்கும் மத்யமர் குழுவில் இருக்கும் Astro Saravanan அவர்களை பேருந்தில் சந்தித்தேன். SETC சொகுசுப் பேருந்து என்பதால் சுகமாக செல்லலாம். 04.15 மணிக்கு பேருந்து மதுரையிலிருந்து புறப்பட்டு விட்டது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கப்பலூர் டோல் Gகேட்டில் மற்றொரு முகநூல் நண்பரும் எனது இந்த சதுரகிரி பயணத்திற்கு மூல காரணமாக இருந்தவரும் ஆன திரு சரவணன் மா.பா. அவர்கள் எங்களது பேருந்தில் ஏறிக்கொண்டார். அவர் திருச்செங்கோட்டிலிருந்து புறப்பட்டு வந்து நாங்கள் சென்ற அதே பேருந்தில் எங்களுடனான பயணத்தினை தொடங்கினார்.

சதுரகிரிக்கு எப்படிச் செல்வது?

மதுரையிலிருந்து சதுரகிரி செல்ல இரண்டு வழிகள் - ஒன்று வத்திராயிருப்பு செல்லும் பேருந்தில் கோவில் அருகே இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு மலையடிவாரம் இருக்கும் தாணிப்பாறை என்ற இடத்திற்கு share auto-வில் பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இராஜபாளையம்/ ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்று கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து share auto-வில் வத்ராப் என்கிற வத்திராயிருப்பு வரையோ, அல்லது அங்கிருந்தே மலையடிவாரமான தாணிப்பாறை வரையோ வந்து விட்டால் அங்கிருந்து மலையேற்றத்தினைத் தொடங்கிவிடலாம். முகநூல் நண்பர் Astro Saravanan அவர்கள் சென்னையிலிருந்து வந்த SETC பேருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வரை செல்லும். அந்தப் பேருந்தில் சென்றால் வத்திராயிருப்பு பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாலை சந்திப்பில் சதுரகிரி கோவில் செல்லும் பக்தர்கள் இறங்கிக் கொள்ளலாம். அங்கே காத்திருக்கும் share auto ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டால் மலையடிவார கிராமமான தாணிப்பாறை வரை உங்களை கொண்டு சேர்த்து விடுவார்கள். மொத்தம் 10 பயணிகளை அவர்கள் ஏற்றிக் கொள்கிறார்கள். ஒரு பயணிக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

புதிய நட்பு வட்டத்துடன் அறிமுகப்படலம்:

சென்னையிலிருந்து குழுவாக வந்த நண்பர்கள் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு கிருஷ்ணன் கோவில் என்ற ஊரில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து நேரடியாக தாணிப்பாறை வரை share auto பேசிக்கொண்டு வந்து விட்டார்கள். எங்களுக்கு முன்னரே புறப்பட்டாலும் நாங்கள் தாணிப்பாறை செல்லும் சமயத்தில் தான் எங்கள் share auto-விற்கு பின்னர் அவர்களது share auto வந்தது. பின்னர் எங்களை முந்திக்கொண்டு அந்த ஆட்டோ சென்று விட, நாங்கள் பின்தொடர்ந்தோம். தாணிப்பாறை வந்து மலையடிவாரத்தில் இறங்கிக் கொண்ட பின்னர் எங்கள் மலையேற்றம் தொடங்க இருந்தது. சென்னையிலிருந்து வந்த மற்ற நண்பர்கள் - திரு பரத்குமார், சந்தோஷ் மற்றும் குழுவினருடன் ஒரு சிறு அறிமுகப்படலம்! முகநூல் இணையமும் பல புதிய நபர்களை ஒருவொருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. சில நட்பு வருடக்கணக்கில் நீடித்திருக்க, ஒரு சில அறிமுகங்கள் அறிமுக அளவிலேயே முடிந்து விடுகின்றன. இந்தப் பயணத்தில் கிடைத்த நட்பு வட்டம் நீடிக்குமா? இல்லை பயணத்திற்குப்பிறகு முடிந்துவிடுமா? எல்லாம் வல்ல ஈசனே அறிவான்!

மலையடிவார வசதிகள்:


இரவு நேரத்தில் பயணித்து அதிகாலை நேரத்தில் மலையடிவாரம் வந்து சேர்ந்த போது சதுரகிரி ஈசனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குழுமி இருந்தது. பிரதோஷம் மட்டுமல்லாது அன்றைய தினம் (19-03-2023) விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதால் அதிக அளவில் கூட்டம் இருப்பதாக, மாதம் ஒருமுறை சதுரகிரி செல்லும் திரு சரவணன் மா.பா. அவர்கள் சொல்லியதோடு, கடந்த மாதத்தின் சிவராத்திரி சமயத்தில் கூட இத்தனை கூட்டம் இல்லை என்றும் சொன்னார். இத்தனை மக்கள் வரும் இடத்தில் சில குளியலறைகளும் ஒரு சில கழிவறைகளும் மட்டுமே இருக்கின்றன. பெண்கள் பக்கமும் ஆண்கள் பக்கமும் நிறையவே காத்திருக்க வேண்டியிருக்கும் படியான வசதிகள் தான். பல ஆண்கள் அங்கே இருக்கும் கடையில் ஒரு 10 ரூபாய் பாட்டில் வாங்கிக்கொண்டு மலைப்பக்கம் ஒதுங்கிவிட்டார்கள் - வேறு எதற்கு? காலைக்கடனுக்காகவே! வேறு வழியில்லை! சிலர் திறந்த வெளியில் குளிக்க, சில குளியலறை செல்ல அவர்கள் Turn வரும்வரை காத்திருந்தார்கள்.

கொஞ்சம் நடந்தால் பெரிய வாகன நிறுத்தும் வசதி, அதன் பக்கத்திலேயே இன்னும் சில குளியலறைகள் மற்றும் பெரிய தொட்டிகளில் நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, திறந்த வெளியில் குளியல் வசதி! நண்பர் தொடர்ந்து இங்கே வருவதால் அங்கே கடை வைத்திருக்கும், அங்கேயே இருக்கும் பலரை தெரிந்து வைத்திருக்கிறார். அப்படி அவருக்குத் தெரிந்த கடை ஒன்றில் எங்கள் உடைமைகளை வைத்து விட்டு நாங்களும் அந்த திறந்த வெளி குளியல் வசதியைப் பயன்படுத்திக் கொண்டோம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு குளியல்! என்னதான் அரசு வசதிகள் செய்திருந்தாலும், இங்கே வரும் பக்தர்கள் கூட்டத்தினைப் பார்க்கும்போது இந்த வசதிகள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் இந்த விஷயங்களைக் கவனித்தால் நல்லது. இதிலும் பல அரசியல் விளையாட்டுகள் இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

மலையடிவாரத்தில் பார்க்கிங் வசதி:

உங்கள் சொந்த வாகனத்தில் சதுரகிரி வருவதாக இருந்தால், மலையடிவாரமான தாணிப்பாறை பகுதியில் உங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ள வசதி இருக்கிறது. இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கிறார்கள் - இது ஒரு நாள் கட்டணம் என்பதை நினைவில் கொள்க! மேலும் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.

******

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்



வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

  1. நான் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் பணி புரிந்திருக்கிறேன், வத்ராப்ப்பிலும் பணி புரிந்திருக்கிறேன். டீ கல்லுப்பட்டி தாண்டியதும் இடதுபுறம் திரும்பாமல் நேராகச் செல்லும் பாதையில் சென்றால் வத்ராப் செல்லும் வழி.  வழியிலேயே மகாலிங்க மலை வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி கல்லுப்பட்டி - இந்த வழி சென்ற போது பெயர் வித்தியாசமாகத் தெரிந்தது. உங்கள் நினைவுகளை இந்தப் பதிவு மீட்க உதவியதில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வத்ராப் என்றும் ஆங்கிலத்தல் WATRAP என்று போர்ட் மாட்டிக் செல்லும் அவ்வூர் வத்திராயிருப்பு என்கிற பேயருடையது.  அந்த சிறு ஊரைத் தாண்டியதும் பிளவக்கல் அணை என்று ஒரு அணை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளவக்கல் அணை குறித்து அறிந்ததில்லை ஸ்ரீராம். வத்திராயிருப்பு - WATRAP இந்த மாற்றம் ஆங்கிலேயர் காலத்திய மாற்றமோ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பொதுமக்களின் வசதிகளை அரசு எங்குமே கவனம் கொள்வதில்லை‌.

    எல்லாம் அவர்களின் உயர்வைப்பற்றிய சிந்தனை மடடுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் உயர்வு மட்டுமே சிந்தனை - வேதனையான நிதர்சனம். பொதுமக்கள் குறித்த சிந்தனை இருந்தால் அவர் அரசியல்வாதியே அல்ல கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல விவரங்கள், வெங்கட்ஜி!
    எனக்கு இப்பகுதி மிகவும் பிடித்த பகுதி. ஸ்ரீவில்லிபுத்தூரில் நெருங்கிய உறவு இருக்கிறார். அங்குள்ள வசதிகள் பற்றியும் நல்ல தகவல்கள். அன்று தொடர முடியாத பயணத்தை எப்படியேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

    தொடர்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீவில்லிபுத்தூரில் நெருங்கிய உறவு - மகிழ்ச்சி. ஆண்டாளை தினம் தினம் தரிசிக்கலாம் என்று தோன்றுகிறது - ஆனால் உள்ளூரில் இருப்பவர்களால் அப்படி தினம் தினம் தரிசிக்க முடிவதில்லை என்பதும் உண்மை. உங்களுக்கும் விரைவில் சதுரகிரி பயணம் வாய்ப்பு அமைய எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எங்குதான் அரசியல் இல்லை!!!? பொதுமக்களைப் பற்றிய சிந்தனை இருந்தால்தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் அரசியல் - எல்லாவற்றிலும் அரசியல். பொதுமக்கள் பற்றிய சிந்தனை இருந்தால் அவர்கள் அரசியல்வாதியே அல்ல கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பயணம் பற்றிய பதிவு அருமை. படங்களும் நன்றாக உள்ளது. சதுரகிரி மலையேற்றம் பற்றிய விபரங்கள் அருமை. செல்லும் வழியில் இயற்கைக்காக பயன்படுத்தும் இடவசதிகள் படிக்கும் போது மனதிற்கு வருத்தமாக உள்ளது. பெண்களுக்கு இன்னமும் சிரமமாக இருக்கும். அப்படியும் பக்தி காரணமாக ஈசனை தரிசிக்க செல்பவர்கள் அதிகந்தான் . அனைவரையும் ஈசன் காக்கட்டும். அவனருள் அனைவருக்கும் துணையாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணம் குறித்த பதிவும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பக்தர்களுக்கான வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் தெரியவேண்டியவர்களுக்குத் தெரியவில்லை என்பது வேதனை. தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நல்ல விவரங்கள்..

    இது வரைக்கும் சென்றதில்லை.. இப்போதிருக்கும் உடல் நிலையில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை..

    கடவுள் துணை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. உங்களுக்கும் சதுரகிரி செல்ல வாய்ப்பு ஈசன் அருளால் அமையட்டும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கோயிலுக்குச் செல்லும் வழியில் மக்களுக்கான மறைவிட வசதிகள் குறைவு என்று படிக்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது..

    பெண்களுக்காக இன்னமும் யாரும் இரக்கப்படவில்லை எனும் போது!????...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலுக்குச் செல்லும் வழியில் மறைவிட வசதிகளை அதிகரிப்பது அத்தியாவசியத் தேவை. இதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. படிச்சிட்டேன், மதுரை மல்லி சூப்பராக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நானும் சதுரகிரி சென்றுள்ளேன்... இயற்கை வளமும், பக்தி மணமும் நிரம்பியிருக்கும் அருமையான மலை இது....
    www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுரகிரிக்கு நீங்களும் சென்று வந்துள்ளீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி சிவா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  12. திரு சரவணன் மா.பா. அவர்களின் பணி மிக சிறப்பானது. எத்தனை பேரை அழைத்து செல்கிறார் ...அவரின் பதிவுகளை படிக்கும் பொழுதே பிரமிப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரவணன் அவர்களின் பணி சிறப்பானதே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....