வெள்ளி, 16 ஜூன், 2023

திருவண்ணாமலை பயணம் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


நேற்று வெளியிட்ட ஓர்மை இல்லடா கோந்தே…… பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******

திருவண்ணாமலை பயணம் - பகுதி ஒன்று மற்றும் திருவண்ணாமலை பயணம் - பகுதி இரண்டு பதிவுகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து இந்தப் பயணத்தின் அனுபவங்கள் குறித்து படிக்கலாம் வாருங்கள். திருவண்ணாமலை குறித்து நிறைய விஷயங்கள் நமக்கு படிக்கக் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபம் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறித்து நீங்கள் அனைவருமே அறிந்திருக்கலாம். அது போலவே இங்கே ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலம் செய்வதும் மிகவும் பிரபலமான விஷயம் தான். நானும் இரண்டு முறை கிரிவலம் வந்திருக்கிறேன் என்றாலும் அந்த இரண்டு முறையும் நடந்து சென்ற கிரிவலம் அல்ல! முதல் முறை வாடகை சைக்கிளில் என்றால் இரண்டாம் முறை பணி நிமித்தம் சென்றதால் மாலை மரியாதையுடன் இறைவன்-இறைவி சன்னதிகளில் அருகே அமர்ந்து தரிசனம் முடித்து அலுவலக வாகனத்தில் சென்ற கிரிவலம். இதுவரை ஒரு முறை கூட நடந்து சென்று வர முடியவில்லை. ஒரு நாளேனும் அங்கே தங்கி கிரிவலம் வரவேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பயணத்திலேனும் இப்படிச் செல்ல ஈசன் அருள் புரியவேண்டும். பார்க்கலாம். தொடர்ந்து திருவண்ணாமலையின் சில சிறப்புகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இங்கே எம்பெருமான் சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. இந்த மலையை காந்த மலை என்றும் சொல்வதுண்டு - காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்குமாம்! நானும் இங்கே பல முறை சென்று வந்தாலும் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றுவது வழக்கமாக இருக்கிறது. இந்த மலை வெவ்வேறு காலகட்டத்தில், அதாவது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும் திகழ்ந்த இம்மலை, இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது என்று சொல்கிறார்கள். நல்ல வேளை இந்த மலை இப்போது மாணிக்க மலையாக இல்லை - இருந்திருந்தால் மொத்தமாக சுரண்டி இருப்பார்கள். மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.







இக்கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேசுவரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:- திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜ கோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும். இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவையாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.

இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார். இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக முன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார். கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

இத்தனை சிறப்புகள் உடைய அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் கண்டு மன நிம்மதியுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு வெளியே வந்து இராஜ கோபுரம் எதிரே இருந்த ஒரு உணவகத்தில் நுழைந்தேன். மீல்ஸ் தவிர வேறு என்ன இருக்கிறது என்று கேட்க, அவர் சொன்ன பட்டியலில் சப்பாத்தி மட்டுமே பிடித்ததாக இருந்தது. இரண்டு சப்பாத்தி குருமாவுடன் சாப்பிட்டு அதற்கான ஐம்பது ரூபாய் மற்றும் 10 ரூபாய் டிப்ஸ் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டேன். அடுத்துச் சென்ற இடம் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஷ்ரமம். அங்கே வந்தபோது மணி மதியம் 01.15. நுழைவாயில் மூடி இருந்தது. காலை 05.00 மணி முதல் 11.00 மணி வரையும், பின்னர் மதியம் 02.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்று தெரிய, எதிரே இருக்கும் கடை ஒன்றில் கரும்புச் சாறு (20/-) அருந்தினேன். பிறகு அருகே இருந்த மரத்தடி கீழ் ஒரு பலகையில் அமர்ந்து காத்திருந்தேன். இந்தப் பகுதியில் நிறைய வெளிநாட்டு மக்கள் உலாவுகிறார்கள். அவர்களிடம் யாசகம் கேட்கும் பலரையும் அங்கே பார்க்க முடிந்தது.

அங்கே பார்த்த இன்னுமொரு நபர் உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து வந்து கடந்த ஒன்பது வருடங்களாக இங்கே தங்கி Dடோலக் விற்கும் ஒரு இளைஞர். லக்னோவில் இருந்து வருடா வருடம் Dடோலக் செய்வதற்குத் தேவையான பொருட்கள் எடுத்து வந்து இங்கே தயாரித்து விற்கிராராம். ஏதோ வயிற்றுப் பிழைப்பு ஓடுகிறது என்றார். ஹிந்தியில் அவரிடம் உரையாடிய போது என்னையும் நீங்கள் வட இந்தியரா என்று கேட்க, நான் இருப்பது தலைநகர் தில்லி என்று மட்டும் சொன்னேன். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு வெளிநாட்டவர் அவரிடம் வந்து ஒரு Mango Pulp Juice-உம், ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டும் வாங்கித் தந்தார். கடலைப் பாக்கெட்டைப் பிரித்த Dடோலக் வியாபாரி எனக்கும் கொடுக்கத் தலைப்பட அவருக்கு நன்றி சொல்லி வேண்டாம் என மறுத்தேன். அங்கிருந்து சில நிமிடங்களில் அடுத்த வாடிக்கையாளர் நோக்கி நகரும் முன்னர் என்னிடம் நன்றி சொல்லி புறப்பட்டார்.


சரியாக இரண்டு மணிக்கு ரமணாஷ்ரமம் வாயில் திறக்க, உள்ளே சென்று சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்து இருந்தேன். ஏற்கனவே சில முறை இங்கே வந்தது உண்டு என்றாலும் ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் மனதுக்குள் தோன்றும் அமைதி அலாதியான ஒன்றாக இருக்கும். இம்முறையும் அவ்வாறே மன அமைதி கிடைத்தது. முன்பு சென்றபோது இங்கே மயில்கள் நடமாட்டம் இருந்தது. இம்முறை மயில்கள் காணக்கிடைக்கவில்லை. ஒரு வேளை மதிய நேரம் வெய்யில் என்பதால் மரங்களுள் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டு இருக்கலாம். அங்கே இருக்கும் புத்தக நிலையத்திலும் ஒரு உலா வந்தேன். ரமணர் குறித்த புத்தகங்கள் நிறையவே இருந்தன என்றாலும் எதையும் வாங்கவில்லை. இப்போதெல்லாம் அச்சுப் புத்தகம் வாங்க நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம் பராமரிப்பதில் இருக்கும் சிக்கல்கள். இணையத்தில் நிறைய கிடைப்பதால் அச்சுப் புத்தகம் வாங்குவதை சில வருடங்களாக நிறுத்தி இருக்கிறேன். அச்சுப் புத்தகமாக வாங்குவதில் சில சௌகர்யங்கள் உண்டு என்றாலும் அவற்றை பராமரிக்க முடிவதில்லை. அங்கிருந்து வெளியேறி, நுழைவாயில் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கிடைத்த பேருந்தில் மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். சில நிமிடங்களில் திருச்சி நோக்கி புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் அமர்ந்து கொண்டேன்.



சரியாக மூன்று மணிக்கு பேருந்து புறப்படும் என்றார் ஓட்டுநர். நடத்துநர் வர, அவரிடம் பயணச்சீட்டு (190/-) வாங்கிக்கொண்டு பேருந்து புறப்படக் காத்திருந்தேன். சரியாக மூன்று மணிக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்தில் நிறைய குழந்தைகள் இருந்ததால் சப்தமும் சிரிப்புமாக இருந்தது. காலை வரும்போது போலவே இந்தப் பேருந்தில் கூட பாடல்கள் ஒலித்த வண்ணமே இருந்தது. ஆனால் எல்லா பாடல்களும் இனிமையான பாடல்கள் - 80-90 களில் வந்த பாடல்கள். பாடல்களின் இசையில் மயங்கியபடியே இந்த விவரங்களை எல்லாம் தட்டச்சு செய்து விட்டேன். குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா என் கேட்டுக் கொண்டிருந்தார் பாடகி சித்ரா… திருவண்ணாமலை தொடங்கி திருக்கோவிலூர் வரை சாலை சரியில்லை. அகலப்படுத்தும் பணி நடப்பதால் புழுதி அள்ளி வீசுவதொடு ஒரே பம்பர் குலுக்கல் தான். அந்த சாலையிலும் ஒரு மனிதர் நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார். அவரது தன்னம்பிக்கை பாராட்டக்கூடியது என்றாலும் இந்த மாதிரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணிப்பது சரியல்லவே! நம் ஊரில் எந்தவித பாதுகாப்பு விதிகள் குறித்தும் கவலை கொள்வதே இல்லை என்பது சோகமான உண்மை.



இப்படியாக பயணித்து சுமார் ஐந்தரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு முறை தமிழகம் வரும்aபோதும் திருவண்ணாமலை சென்று வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். சில முறைகளாக செல்லவில்லை. இந்த முறை இல்லத்தரசியே திருவண்ணாமலை சென்று வாருங்களேன் என்று சொல்லி இருக்க, ஒரே நாளில் சென்று திரும்பி வந்து விட்டேன். சிறப்பான தரிசனமும் கிடைக்க மனதில் நிம்மதி. அடுத்த முறை இங்கே பயணித்தால் ஒன்றிரண்டு தினங்கள் தங்கி இருக்க வேண்டும், நடந்து கிரிவலம் வர வேண்டும் என்றெல்லாம் திட்டம் இருக்கிறது. ஈசன் அருள் இருந்தால் இந்த ஆசையும் நிறைவேறும். அந்த சமயத்தில் மீண்டும் அந்த அனுபவங்களை உங்களுடன் பதிவுகள் வழி பகிர்ந்து கொள்வேன். மீண்டும் வேறு ஒரு பயணம் குறித்த தகவல்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… நட்புடன் சொல்லிக் கொள்வது - பயணம் மிகவும் நல்லது. ஆகவே தொடர்ந்து பயணம் செய்வோம்!

******

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….




26 கருத்துகள்:

  1. நானே சென்று வந்த திருப்தி. மலை இப்போது(ம்) மாணிக்க மலையாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நானும் நினைத்தபோது சிரிப்பு வந்து விட்டது. கடவுளாவது வெங்காயமாவது! காசு! காசுதான் பிரதானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு தான் பிரதானம் - பல சமயங்களில் இது தான் நிதர்சனம். பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நிறைய தகவல்கள். நான் சென்றுவந்ததை நினைவுபடுத்தியது.

    முதல்முறை யாசகம் கேட்கும்போது மாத்திரம் வெட்கமாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு உங்கள் கோவில் உலாவினை நினைவு கூர உதவியதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      முதல் முறை யாசகம் கேட்கும்போது வெட்கமாக இருக்குமோ? - தெரியவில்லை! இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. தகவல்கள் அருமை சார்.
    நூல்களைப் பராமரித்தல் கடினமே, அதுவும் பணிமாற்றல் உள்ளவர்களுக்கு மிகவும் கடினம்.
    அப்படியே சொந்த வீட்டில் வைத்தாலும் ரொம்பநாள் உபையோகிக்காவிட்டால் கரையான் ஆபத்து வந்துவிடும். அதனால் மின் நூல்களே சவுகரியமானது. என் கையில் உள்ள பெண்டிரைவில் உள்ள லூல்களை பிரிண்ட் போட்டால் ஒரு நூலகத்தையே உருவாக்கிவிடலாம்.
    சாலைவிதிகளில் ஓரளவு கெடுபிடியான கண்காணிப்பை தற்போதைய அரசாங்கம் தொடங்கியுள்ளது.
    என் அளுவலகத்திலேயே ஐந்துபேர் வாகனங்களின்மீது ஆண்லைன் பெனல்டி கட்டவேண்டியதாக RTO செயலி கூறுகிறது.
    கூடியவிரைவில் நாடு முழுதும் மக்கள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவோம்.
    தாங்கள் விரைவில் கிரிவலம் செல்ல வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நூல்கள் பராமரிப்பு குறித்த தங்கள் எண்ணங்கள் சரியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. தகவல்கள் பயனுள்ளவை ஜி
    எனக்கும் ஒருநாள் சென்று வரும் ஆசை வந்து விட்டது பார்க்கலாம்....

    தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி கில்லர்ஜி. உங்களுக்கும் விரைவில் திருவண்ணாமலை செய்யும் வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருவண்ணாமலை கோவில் பற்றிய தகவல்கள் இனிக் கோவில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் கூறிய விவரம் மிகவும் அருமையாக இருந்தது. ஒன்று விடாமல் நினைவாக விவரித்துள்ளீர்கள். விவரித்த விதம் உங்களுடன் பயணித்த ஒரு எண்ணம் வந்தது. அண்ணாமலையார் அனைவரையும் நலமுடன் சிறப்பாக காலக்கட்டம். பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் செய்திகளும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி! தகவல்கள் அனைத்தும் அருமை. விரிவான அழகான தகவல்கள்.,

    நான் சென்ற போது (ஒரே ஒரு முறைதான்) கோயில் மட்டுமே சென்றேன். ரமணாஸ்ரமம் செல்ல முடியவில்லை. அது போன்று கிரிவலமும். ஆனால் நீங்கள் சொல்லுவது போல் இங்கு இரு நாட்கள் தங்கியிருந்தால் நல்லது...எனக்கும் மிகவும் பிடித்த கோயில் கூடவே அந்த அமைதி!! மனம் விரும்பும் அமைதியான இடம்.

    காணொளி பிரமாதம் ஜி! அங்கு சிற்பங்களை நானும் ரசித்தேன். அப்போதெல்லாம் எடுப்பதற்கு அலைபேசியோ, மூன்றாவது விழியோ கிடையாது. வலைப்பக்கம் வரும் முன்னர் சென்றது!.

    புத்தகங்கள் பராமரிப்பது ரொம்ப சிரமம் ஜி. என் மாமனார், கல்கியில் இருந்து எடுத்துத் தொகுத்த கதைகள் அவரே தைத்து வைத்திருந்தவை என்னிடம்...ஆனால் இப்போது தொட்டால் பொடியும் அளவு. இணையத்தில் வாசிப்பதே நலல்து என்று தோன்றிவிட்டது. அதுவும் நாங்கள் வீடு மாறிக் கொண்டே இருப்பவர்கள்.

    எப்படி ஜி பேருந்துப் பயணத்தில் தட்டச்சுகிறீர்கள்? அலைபேசியிலா? வியப்பு! பாராட்டுகள்! நான் முயன்று முடியாமல் விட்டேன். அதன் பின் ஒரு நோட்புக் வைத்திருப்பேன் அதில் குறித்துக் கொண்டுவிடுவேன். மறந்துவிடுமே... ஆனால் பதிவாக எழுதி வைத்துவிட்டால் நேரம் மிச்சம்தான்....பாராட்டுகள் மீண்டும்!

    படங்களையும் ரசித்தேன் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      அலைபேசியில் Google Docs இருக்கிறது. அதில் தட்டச்சு செய்து விடுவது வழக்கம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இதுவரை அறியாத பல அரிய தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவல்களை உங்களுக்கு இப்பதிவு வழி பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதினைந்து வருடங்களுக்கு முன் இரண்டு முறை கிரிவலம் செய்திருக்கின்றேன்..

    இரண்டு முறையும் மூன்று அமானுஷ்ய அனுபவங்கள்..

    அண்ணாமலை..
    அண்ணாமலை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிவலமும் அமானுஷ்ய அனுபவங்களும் - ஆஹா... மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. /// இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி..///

    தவறு..

    கம்பத்து இளையனார் என்றிருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழையைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா. சரி செய்துவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதிவை படித்ததும் அண்ணாமலையாரை தரிசிக்க ஆசை வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் அண்ணாமலையாரை தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு அமையட்டும் பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மனதுக்கு நிறைவான இனிய தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான தரிசனம் உங்களுக்கும் பதிவு வழி கிடைத்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. விரைவில் அண்ணாமலையார் தரிசனம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அண்ணாமலையார் தரிசனம் விரைவில் கிடைக்கட்டும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....