திங்கள், 12 ஜூன், 2023

திருவண்ணாமலை பயணம் - பகுதி ஒன்று

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.******இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மூன்று மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் இருந்த சமயம் நிறைய கோவில்களுக்குச் சென்று வந்திருந்தேன். அப்படி ஒரு நாள் திருவண்ணாமலை செல்ல முடிவு எடுத்து அதிகாலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். திருவண்ணாமலை சென்று கோவில் தரிசனம் முடித்து ரமண ஆசிரமம் சென்று தரிசனம் கண்டபின்னர் வீடு திரும்பினேன். அந்த பயணம் குறித்து அன்றே எழுதி வைத்தாலும், இது வரை எங்கேயும் வெளியிடவில்லை. அந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு குறுந்தொடராக இங்கே வெளி வரும். வாருங்கள் திருவண்ணாமலை பயணம் குறித்து பார்க்கலாம்!

காலை 04.45 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி 05.45 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டாயிற்று. நேரே No.1 டோல்கேட் வரை ஸ்கூட்டர் பயணம். வழியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பெருமாளுக்கான தீர்த்தம் மூன்று குடங்களில் - இரண்டு குடங்களை இரு நபர்கள் தோளில் சுமந்து வர பின்னாலே ஆண்டாள் யானை மீது வெள்ளிக்குடத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்தம் கொட்டு மேளத்துடன் வருகை…. யானையை நம்மைப் போலவே பழக்கி (மாற்றி) வைத்து இருக்கிறார் பாகன்….. ஒரு பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் பிரித்து ஒன்றை தன் வாயில் போட்டுக்கொண்டு மீதி அனைத்தையும் ஆண்டாளின் தும்பிக்கையில் வைக்க, அப்படியே ஒரு சுழற்று சுழற்ற அனைத்தும் அதன் வாய்க்குள் போனது! ஏனோ "யானைப்பசிக்கு சோளப் பொறி" நினைவுக்கு வந்தது.

கொள்ளிடம் ஆற்றின் மீதான பாலத்தில் பலரும் நடந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலை நேரத்திலும் ஒரு இளம் ஜோடி கடலை வறுத்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. No.1 டோல்கேட் வந்ததும் சென்னை பேருந்து வர, மடப்பட்டு வரை செல்ல வேண்டும் என நடத்துநர் இடம் கேட்டபோது, அவர் ஓட்டுநரின் அனுமதியுடன் பெரிய மனது வைத்து சரி எனச் சொன்னார். அதில் ஏறிக்கொண்டு 140/- ரூபாய் கொடுத்து ticket வாங்கி மடப்பட்டு வரை பயணம்…. அதிகாலை நேரத்திலேயே உரத்த ஒலியில் சினிமா பாட்டுகள் சப்தத்துடன் பயணம்….. பெரும்பாலனவர்கள் அந்த சப்தத்திலும் உறங்க நான் இந்த விஷயங்களை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன்.

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு போன்ற பாடல்களைக் கேட்டபடியே பயணித்து 45 நிமிடங்களில் பெரம்பலூர் வந்து சேர்ந்து விட்டேன். சென்னை வரை செல்லும் பெரும்பாலான பேருந்துகள் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பத்து நிமிடங்கள் போட்டு விடுகிறார்கள். ஊட்டி காப்பி Bபார் என்ற கடைக்கு எதிரே நின்றால் காலையிலேயே சுடச்சுட காபி, வடை என வியாபாரம் சூடு பிடித்திருந்தது. பக்கத்திலேயே ஒரு மூத்திர சந்து! அதிலிருந்து வரும் வீச்சம் வடை வாசனையை விட அதிகம் என்றாலும் பலரும் அங்கே வடைகளை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். வடையும் தேநீரும் பயணத்தின் நடுவே உள்ளே செல்லவில்லை என்றால் பலருக்கும் பயணம் பிடிப்பதில்லை! எத்தனை நேரம் தான் சும்மா பயணிப்பது, இப்படி எதையாவது கொறிப்பதும், குடிப்பதும் தேவையாக இருக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் கவனிக்கும் இன்னுமொரு விஷயம் - இங்கே கைதட்டி அனைத்து பேருந்துகளிலும் ஏறி காசு கேட்கும் திருநங்கைகள்….. எல்லா நாட்களிலும் இப்படியே, மாற்றமே இருந்தது இல்லை - அது மட்டுமின்றி அவ்வப்போது அவர்களுக்குள் சண்டை வேறு நடக்கும்! இந்த முறை அதில் ஒருவர் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் நடனமாடியபடியே அழகிப் போட்டிகளில் நடப்பது போல Ramp Walk செய்து கொண்டிருந்தார். அவர் வாயில் ஒரு பத்து ரூபாய் நோட்டு கவ்விக்கொண்டிருக்க அவ்வப்போது கைதட்டல்களும் தொடர்ந்தது. இப்படியான வாழ்க்கை கடினம் மட்டுமல்ல, வேதனையும் கூட. அவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை என்றாலும் ஆண்டவனின் படைப்பையும் கேள்விக் கேட்கத் தோன்றுகிறது.

எங்கள் பேருந்திலும் ஒரு அட்டா கட்டா என்று ஹிந்தியில் சொல்லப்படும் பலம் பொருந்திய திருநங்கை ஏறிக்கொண்டு காசு கேட்க, பின் இருக்கையில் அமர்ந்து இருந்த இரு பெண்கள் புலம்ப ஆரம்பித்தார்கள் - இவங்களுக்கு பிச்சை போடவே தனியா காசு எடுத்துட்டு வரணும் போல - எங்கப்பார்த்தாலும் பிச்சை கேட்கற கும்பல் அதிகமா இருக்கு என்றார்கள். ரெண்டக்க ரெண்டக்க, சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, போன்ற கருத்தாழமிக்க பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க தொழுதூர், வேப்பூர், உளுந்தூர்பேட்டை என பல இடங்களில் நின்று நின்று பேருந்து பயணித்தது.


வழியே பேருந்தில் ஏறிக்கொண்டு ஒரு டென்ஷன் பார்ட்டி - "ரொம்ப நேரமா பஸ் வரல, தினம் தினம் எப்படா பஸ் வரும், எப்ப போக முடியும்னு இருக்கு, தினம் தினம் நின்னுட்டு வர வேண்டி இருக்கு, முன்னாடி நிறைய பஸ் இருந்துச்சு இப்ப இல்ல", என விதம் விதமாக தொடர்ந்து புலம்பிக் கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. அலைபேசி எடுத்து யாருக்கோ அழைத்து அதிலும் புலம்பல்…. மொத்த வீட்டில் நடக்கும் கதைகள் அனைத்தையும் சக பயணிகளுக்கும் கேட்கும்படி பேசிக்கொண்டே, இல்லை இல்லை புலம்பிக்கொண்டே பயணித்தார் அந்த tension பெண்மணி. இப்படியாக பல கதைகளை கேட்டபடி 08.40 மணிக்கு மடப்பட்டு வந்து சேர்ந்த பேருந்திலிருந்து நான் இறங்கிக் கொண்டேன். அடுத்த காத்திருப்பு தொடர்ந்தது எனக்கு! அங்கே இருந்து திருவண்ணாமலை செல்ல பேருந்திற்காக காத்திருந்தேன். பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன். அதுவரை….

******

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

 1. சில மாதங்களாக திருவண்ணாமலை சென்று வரவேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது.  ஏப்ரலில் நான் விடுப்பு எடுத்தபோதே சென்று வரவேண்டும் என்று நினைத்தேன்.  முடியவில்லை.  இந்த முறையாவது செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  உங்கள் பதிவு அண்ணாமலையான் ஆசி கூறி வரவேற்பது போல இருக்கிறது.  சென்னையிலிருந்து பக்கம்தான்.  பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் திருவண்ணாமலை சென்று வரும் வாய்ப்பு உங்களுக்கும் அமையட்டும் ஸ்ரீராம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. பஸ்ஸில் பயணிப்பதால் பலவித அனுபவங்கள் இல்லையா?  நான் கார் எடுத்துக் கொண்டு சென்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்.  மகனுக்கு ஃப்ரீ டைம் அமைய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பயணத்திலும் நமக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. அதனால் பயணிப்போம். உங்களுக்கும் திருவண்ணாமலை பயணம் விரைவில் அமையட்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. திரு அண்ணாமலை!..

  தொடர்கின்றேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 4. எப்படி மிகச் சரியாக அமைகிறது எனத் தெரியவில்லை.இநௌத வாரம் .காசி..ரிஷிகேஷ் ஹரித்துவார் முடித்து வரும் மாதம் முதல் வாரம் திருவண்ணாமலை போகும் திட்டமிருக்கிறது...மிகச் சரியான திட்டமிடலுக்காக மாதாமாதம் சென்று வரும் என் நண்பர்களில் யாரைத் தொடர்பு கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஆச்சரியப்படுத்தும் விதமாக தங்கள் பதிவு...உண்மையில் இது கூட அருணாசலேசுவரரின் அருளாசியாகவே கருதுதிறேன்..நன்றியுடனும் நல்வாழ்த்துகளுடனும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் திருவண்ணாமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ரமணி ஜி. உங்களுடைய ஹரித்வார் பயணம் நன்றாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன். தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே!

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 5. பயண அணுபவம் சிறப்பாக தொடங்கியிருக்கிறது.
  விதவிதமான மனிதர்களைக் காணலாம்.
  சிலருக்கு புலம்பலும் அவர்களின் மன அழுத்தத்திற்கான இயர்க்கையான மருந்தே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 6. தொடக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது ஜி.

  தொடர்ந்து வருகிறேன்...

  பிறகு ஸ்கூட்டியை எங்கு விட்டீர்கள் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன் கில்லர்ஜி. ஸ்கூட்டியில் என்னை கொண்டுவிட்டது சகோதரியின் கணவன். அதனால் அவரே எடுத்துக் கொண்டு சென்று விட்டார் :)

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. சுவாரசியமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். ரமணாச்ரமத்திற்கு 79ல் போயிருந்தேன். கோவிலுக்கு 94ல் போனதுதான். சென்ற வருடம் கோபுர தரிசனம் மட்டும் கிடைத்தது. நெல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் திருவண்ணாமலை பயணமும் தரிசனமும் உங்களுக்கு அமையட்டும் நெல்லைத்தமிழன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. ஆண்களுக்கு, தனியாகப் பயணம் என்றால் நினைத்தவுடன் கிளம்பிவிட முடிகிறது ! எங்களால் இப்படி முடிவதில்லையே..... இன்னொரு புலம்பல் ! நான் துளசிகோபால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களுக்கென்றே பெண் முகவர்களுடன் வெளிநாட்டுப் பயணங்களையே GT holidays போன்ற நிறுவனங்கள் தற்போது ஏற்பாடு செய்கின்றன மேடம்.

   நீக்கு
  2. நினைத்தவுடன் புறப்படுவது எல்லோருக்கும் சாத்தியமல்ல - ஆணாக இருந்தாலும் பென்ணாக இருந்தாலும்! :)

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
  3. பெண்களுக்கென்றே பெண்களால் நடத்தப்படும் பயணங்கள் - இப்படி தில்லியிலும் வந்து விட்டது அரவிந்த். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. மிக மகிழ்ச்சி .... எங்களுக்கு அண்ணாமலையார் தரிசனம் கடந்த தை மாதம் தான் கிடைத்தது. அதிகாலையில் அற்புத தரிசனம் (காலை 5 மணிக்கு அங்கு வரிசையில் நின்றுவிட்டோம் )..

  ஆனாலும் கிரிவலம் செல்லும் வாய்ப்புக்கு காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்தப் பயணத்தில் சிறப்பான தரிசனம் கிடைத்தது. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனு ப்ரேம் ஜி.

   நீக்கு
 11. இப்படியான வாழ்க்கை கடினம் மட்டுமல்ல, வேதனையும் கூட. அவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை என்றாலும் ஆண்டவனின் படைப்பையும் கேள்விக் கேட்கத் தோன்றுகிறது.//

  உண்மைதான் ஜி. எனக்கும் இந்தக் கேள்வி மனதில் எழும்.

  திருவண்ணாமலி கோயில் பிடித்த கோயில். ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். பாண்டிச்சேரியில் இருந்தப்ப. அதன்பின் போக வாய்ப்பில்லை,

  வாசகம் சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் பிடித்த கோவில் - மகிழ்ச்சி கீதா ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 12. திருவண்ணாமலை சென்று தரிசித்திருக்கிறேன். பிடித்த இடம். ரமணன் ஆச்சிரமம் மிகவும் அமைதியான இடம் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.

  உங்கள் பயணத்தில் மீண்டும் தரிசித்து மகிழ்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இங்கே சென்று வர வாய்ப்பு அமைந்தது அறிந்து மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....