வியாழன், 22 ஜூன், 2023

தினம் தினம் தில்லி - புதிய தொடக்கம் - பகுதி ஒன்று

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


******

நான் கடந்த 32 வருடங்களாக வசித்து வரும் இந்தியத் தலைநகர் தில்லி குறித்து நிறைய தகவல்களை இந்த வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் என்றாலும் எழுதாமல் விட்ட தகவல்கள் நிறையவே உண்டு. இதில் சில தகவல்களை சென்ற வருடத்தில் முகநூல் பக்கத்தில் எழுதி இருந்தேன் என்றாலும் இங்கே வெளியிட வில்லை. இந்தத் தகவல்களும் இன்னும் வெளியிடப்படாத தகவல்களையும் ஒவ்வொரு வியாழனும் வெளியிடலாமா என்று ஒரு யோசனை தோன்ற இதோ, இந்த வியாழனில் தொடங்கி விட்டேன் - “தினம் தினம் தில்லி” என்ற தலைப்பில் இந்த தில்லி குறித்த தகவல்கள் இன்னும் சில வாரங்களுக்கேனும் வருவதற்கு தயாராக இருக்கிறது. இந்த வாரம் தலைநகர் தில்லி குறித்த இரு தகவல்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வாருங்கள் தலைநகர் தில்லி குறித்த தகவல்களை பார்க்கலாம்!

ஷக்கர் கந்தி:



சர்க்கரை வள்ளிக்கிழங்கு உங்களுக்குத் தெரிந்தது தான். அதைத்தான் வடக்கே “ஷக்கர் கந்தி” என்று அழைக்கிறார்கள். நெய்வேலியில் இருந்தவரை அம்மா எப்போதாவது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வாங்கி, வேகவைத்து பொரியலாகவோ அல்லது வெல்லம் சேர்த்து இனிப்பாகவோ சாப்பிடத் தருவார்கள். வீதிகளில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து மசாலா சேர்த்து விற்பதை நீங்கள் நம் ஊரில் பார்த்தது உண்டா? நிச்சயம் பார்த்து இருக்க முடியாது.

வடக்கே இந்தக் கிழங்கை வேக வைத்து/தணலில் வாட்டி, தோலெடுத்து, சிறு துண்டங்களாக்கி ஒரு தொன்னையில் வைத்து மேலே மசாலாப் பொடிகள் தூவி விற்பனை செய்வார்கள். இதற்குப் பெயர் ஷக்கர் கந்தி சாட் (Chaat)! பலரும் இதனை வாங்கி உண்பார்கள். இதற்கென்றே சில ரசிகர்களும் உண்டு. ஒரு பசி நேரத்தில் இந்த ஷக்கர் கந்தி சாட் சுவைத்தது உண்டு. என்னதான் புதிய சுவையாக இருந்தாலும் அம்மா செய்து கொடுத்த வெல்லம் சேர்த்த சர்க்கரைக் கிழங்கின் சுவைக்கு ஈடுகொடுக்கவில்லை அந்த புதிய சுவை. அப்படிச் சுவைத்து வருடங்கள் முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. அடுத்த முறை தமிழகம் வந்தால் சுவைக்க வேண்டும் என மனதில் முடிச்சு போட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன்.

வெளியே இப்படி சுவைப்பது தவிர வடக்கிந்தியர்கள் சப்பாத்திக்கு தொட்டுக்கையாக்கவும் இதனை சமைப்பது உண்டு. சப்பாத்தி அதிகமாக உண்பதால் தினம் தினம் வேறு வேறு தொட்டுக்கை தேவைப்படுவதால் எல்லா காய்கறிகளும் இப்படி சப்ஜி என்ற பெயரில் சமைப்பது வழக்கம். பெரும்பாலான சப்ஜி தயாரிப்பு முறை ஒன்றாகவே இருக்கும். வெங்காயம் தக்காளி எல்லாவற்றிலும் பயன்படுத்துவதே வழக்கம். இந்த ஷக்கர் கந்தி சப்ஜியும் அப்படியே. இணையத்தில் இதற்கான செய்முறைகள் கிடைக்கும் என்பதால் இங்கே எழுதப் போவதில்லை! 🙂

சமீபத்தில் காய்கறி வாங்கச் சென்ற போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு பார்த்ததும் அரை கிலோ வாங்கினேன். வேக வைத்து சாப்பிடலாம் என. ஒரு நாள் மாலையில் சாப்பிட்டேன் - அம்மா செய்து கொடுத்த வெல்லம் சேர்த்த சர்க்கரைக் கிழங்கின் சுவையை நினைத்துக் கொண்டே….

*&*&*&*&*&*&

CHசோலியா (Choliya)




குளிர் காலம் முடிந்து ஹோலி பண்டிகை வரும் சமயத்தில் தில்லி நகரில் மட்டுமல்லாது வடக்கில் உள்ள பல இடங்களில் கிடைக்கும் ஒரு விஷயம் இன்று நாம் பார்க்கப் போகும் CHசோலியா எனும் பொருள். இது நம் ஊரில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு தான். அது என்ன CHசோலியா? கருப்பு கொண்டைக்கடலை பார்த்து இருக்கலாம்…. பச்சையாக, நிலத்தில் இருந்து எடுத்த உடன் பார்த்ததுண்டா? அப்படி பச்சையாக நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பச்சைக் கொண்டைக்கடலை தான் CHசோலியா.

சின்னச் சின்ன செடிகளில் கொத்துக் கொத்தாக இருக்கும் CHசோலியாவை அப்படியே செடியாகவே வேறுடன் பிடுங்கி விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். கட்டுகட்டாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வரும் இவை விற்கப்படுவது கிலோ கணக்கில். இந்த வருடம் கிலோ நாற்பது ரூபாய்… செடியில் காய்த்து இருக்கும் CHசோலியா-வை தனியாக எடுத்து மேலே இருக்கும் தோலை உரித்து ஒவ்வொன்றாக சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ செடியுடன் வாங்கினால் சுமார் 200 கிராம் பச்சை கொண்டைக்கடலை கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்க வாய்ப்புண்டு.

சல்லியம் பிடித்த வேலை அதாவது நச்சுப்பிடித்த வேலை என்பதால் பொதுவாக இதை நான் வாங்குவதில்லை. சரி வாங்கி என்ன செய்யலாம்? அப்படியே பச்சையாக சாப்பிடலாம், அல்லது ஊற வைத்து முளைவிட்டபின்னர் (Sprouted) சாப்பிடலாம், இல்லை வேகவைத்து சாப்பிடலாம், இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது - எல்லாவற்றிலும் சேர்ந்து கொள்ளும் ஆலு எனும் உருளைக் கிழங்கு! அதனுடன் சேர்த்து சப்ஜியாக சமைத்து சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்….. சுவையாக இருக்கும் என்பதோடு, ஹோலி பண்டிகை நாட்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் அந்தச் சமயத்தில் பலரும் இதனை வாங்குவது வழக்கம்.

என்ன இதைச் சாப்பிட்டால் அதிகமாக வாயுத்தொல்லை இருக்கும் என்று சொல்வதுண்டு…. பக்கத்தில் வர தெரிந்தவர் பலரும் அஞ்சக்கூடும்! :) நான் வாங்கி சப்ஜி செய்தததில்லை என்றாலும் பச்சையாகவும் சப்ஜியாகவும் சுவைத்ததுண்டு. சுவை நன்றாகவே இருக்கும் என்பதால் வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சுவைத்துப் பாருங்களேன்….

******

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

30 கருத்துகள்:

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சுவை அதிகம் என்னைக் கவர்ந்ததில்லை.  டெல்லி செய்திகள் சுவையானது.  தொடருங்கள்.  பச்சை கொண்டைக் கடலைச் செய்தியில் இரண்டாவது படம் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் சில சுவைகள் பிடிப்பதில்லை. டெல்லி செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். இரண்டாவது படம் வருகிறதே... கொத்தாக செடியுடன் கடலை இருக்கும் படம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பூனாவில் இருந்தபோது இந்தப் பச்சை கடலையை சின்னக் கொத்தாக ஒரு கைப்பிடி அளவில் 50 பைசாவுக்கு விற்பதை வாங்கி கடலையை மட்டும் உரித்து வாயில் போட்டுக்கொண்டே நடந்து போவோம். கடலை தீர்ந்தவுடன் செடிக் கொத்தைத் தெருவில் நட்டநடுவில் உக்கார்ந்திருக்கும் ஸ்பீட் ப்ரேக்கர் பசுக்களுக்குத் தின்னக் கொடுத்தால் ஆச்சு! புண்ணியம் வரவு ! காலம் 1977 என்பதால் 50 பைசாவுக்கு மதிப்பு இருந்தது.
    ஆட்டோவில் போனால் 60 பைசாதான் ஆரம்பம் !
    இந்த அநாமதேயம் துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐம்பது பைசாவிற்கு ஒரு கைப்பிடி - அது அந்தக் காலம் இல்லையா... நான் தலைநகர் தில்லி 1991-இல் வந்த போது பேருந்து கட்டணம் ஆரம்பம் 1 ரூபாய்! இப்போதும் குறைந்த பட்ச கட்டணம் ஐந்து ரூபாய் தான்! உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசி டீச்சர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. மாலையில் அலுவலகம் முடிந்து 89-ம் எண் (உத்யோக்பவன் to கரோல்பாக்) பேருந்தில் ஒரு கூட்டமாக பயணம் செய்தது இன்னும் நினைவில் உள்ளது.

      நீக்கு
    3. மறக்க முடியாத நினைவுகள் தான் பத்மநாபன் அண்ணாச்சி. மொத்தமாக 10-15 பேர் தமிழில் உரையாடியபடி அந்த தில்லி பேருந்தில் சென்றது மறக்கமுடியுமா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சக்கரை வள்ளி கிழங்கு நானும் சாப்பிட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்திற்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. தில்லி விஷயங்கள் சுவாரசியம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஆமாம் இது வடக்கில் செய்யப்படுவது பற்றி நம் வீட்டில் வடக்கில் இருப்பவர்க: கூடுதலாச்சே...இப்போது உங்கள் வழியும் தெரிந்து கொண்டேன்..

    பெயரில் சர்க்கரை என்று இருந்தாலும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. நான் சில நாட்களில் வேறு உணவுக்குப் பதில் இது மட்டும் அதுவும் அளவோடு உணவாகவே எடுத்துக் கொள்கிறேன். உருளைக்கிழங்கிற்குப் பதில் அது சேர்க்கப்படும் பதார்த்தங்களில் இதைச் சேர்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளைக்கு பதிலாக சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்துக் கொள்வது இங்கேயும் வழக்கம். தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. பச்சைக் கடலை இங்கு நிறையவே விற்கப்பட்டது. இங்கு வந்த பிறகுதான் இப்படிப் பச்சைக் கடலை அதுவும் செடியுடன் ....ஒரு முறை வாங்கி உரித்து சப்ஜி செய்து சாப்பிட்டோம். உரிப்பதுதான் நச்சுபிச்சு வேலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரிப்பது நச்சுப்பிச்சு வேலை - ஹாஹா... அதே தான். அதனாலேயே நானும் இங்கே வாங்குவதில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவையான சக்கரை வள்ளி கிழங்கு நினைவுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. 20 நாட்கள் முடிந்து டெல்லியில் இருந்து இன்றுதான் மதுரை வந்து சேர்ந்தேன்.அவர்கள் உணவு முறையில் சிலவற்றை சாப்பிட்டுப்பார்த்தேன்..எல்லாமும் கொஞ்சம் கேஸ் டிரபிள் தருவதாகத்தான் இருந்தது..ஒருவேளை உடல் வாகும் வயதும் கூட காரணமாய் இருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு பழக்கமும் இல்லை என்பதால் கொஞ்சம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம் ரமணி ஜி. மதுரை திரும்பியாயிற்றா? நானும் உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். அடுத்த தில்லி பயணத்தில் முடிந்தால் சந்திப்போம் ரமணி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சர்க்கரை வள்ளிக்கிழங்கு எனக்கு சிருவயதில் பிடிக்காது சார்.
    அதில் அவ்வப்போது வரும் நார் எரிச்சலை கொடுத்ததுண்டு.
    கடந்த மூன்று ஆண்டுகளாக அதை விரும்பி உண்ணும் மனநிலையை வளர்த்துக்கொண்டேன்.
    இப்போது சுவையாகவே உள்ளது.
    வட இந்திய ஸ்டைல் வகையைச் செய்து பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் நார் - இங்கே அதிகம் இருப்பதில்லை அரவிந்த். முடிந்தால் இந்த முறையில் செய்து பாருங்கள். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஆஹா நீங்கள் சொல்லியிருக்கும் சக்கரைவள்ளி மற்றி சோலியா இரண்டையும் டெல்லியில் நான் பார்க்கவில்லையே.. சீஸன் முடிந்திருந்ததுபோலும்.. நான் போனபோது நாவற்பழம், கொய்யா, மாம்பழம்.. குவிந்து குவிந்து இருந்தது... அதனுடன் சோளனும்...

    இந்தச் சோலியா:) தான் நான் இப்போ எங்கட கார்டினில் போட்டு பிங்கலரில நிறையப் பூக்கள் வந்துவிட்டன.. ஹா ஹா ஹா காய்க்கட்டும் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோலியா பொதுவாக ஹோலி சமயத்தில் தான் கிடைக்கும். சக்கரைவள்ளி வருடம் முழுவதும் கிடைக்கும் அதிரா. நீங்கள் வந்திருந்தபோது பார்க்க முடியவில்லை போலும். உங்கள் வீட்டில் காய்த்தபிறகு சுவைத்துப் பாருங்கள். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் ஒருதடவை கூட இந்த சோலியாவை வாங்கியதில்லை. பின்னே அதை உரிப்பது பெரிய நச்சு பிடிச்ச சோலில்லா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்னாபன் அண்ணாச்சி.... அனுபவத்தை எழுதறதும் நச்சுப் பிடிச்ச சோலில்லான்னு நினைச்சுட்டீங்களோ? ரொம்ப மாதங்களாச்சே நீங்க எழுதி.

      நீக்கு
    2. சோலியா உரிப்பது நச்சு வேலை - உண்மை. அதனால்தான் நானும் பொதுவாக வாங்குவதில்லை பத்மநாபன் அண்ணாச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. பத்மநாபன் அண்ணாச்சியிடம் நிறைய முறை கேட்டுவிட்டேன். ஏதோ ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைக்கும் சொல்லி விடுகிறேன் ஒரு முறை பதிவு எழுதி அனுப்பும்படி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. சுட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு (தணல் அடுப்பில்) சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். கயா சென்றபின் இதனை விட்டுவிட்டேன்.

    பெங்களூரில் பச்சை கொண்டைக்கடலை கிடைக்கும் (உரித்து வைத்திருப்பார்கள், செடிபோன்று நீங்கள் காண்பித்துள்ளதுபோலவும் கிடைக்கும்). நான் வாங்கி சப்பாத்திக்கான சப்ஜி செய்துதரச்சொல்லிச் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு மொச்சை, துவரை போன்றவையும் கிடைக்கும். (சென்னைல பார்த்ததே இல்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கயாவில் விட்டு விட்டீர்களா? நெய்வேலியில் இருந்தவரை குமுட்டி அடுப்பில் சுட்டு சாப்பிட்டது உண்டு.

      பெங்களூரில் பச்சைக்கடலை கிடைக்கும் என்று கீதா ஜியும் சொல்லி இருக்கிறார். சென்னை/தமிழகத்தில் இப்படி செடியுடனோ, தனியாக உரித்தோ பார்த்ததில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை எங்கள் இடங்களில் "சீனிக்கிழங்கு" என்று சொல்லுவார்கள். எத்தனை கிழங்குகள் இருந்தாலும் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவைக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை...

    கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வெள்ளை கொண்டைக்கடலையை பார்த்திருக்கின்றேன்... ஆனால் "பச்சை கொண்டை கடலை"யை இதுவரையில் பார்த்ததில்லை. பச்சை கொண்டைக்கடலையை தங்கள் தயவால் இன்றுதான் பார்க்கின்றேன்... நன்றி!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனிக்கிழங்கு - புதிய தகவலை அறிந்து கொண்டேன் நாஞ்சில் சிவா. பச்சை கொண்டைக்கடலை நம் ஊரில் நானும் பார்த்ததில்லை. இங்கே வந்த பிறகு தான் பார்த்தேன் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சக்கரை வள்ளிக்கிழங்கு நாங்கள் வத்தாளைக் கிழங்கு என்போம் .
    அவித்து ,சிப்ஸ் செய்து சாப்பிடுவோம்.
    சிங்கள மக்கள் காரக்குழம்பு மசாலாப் பொருட்கள்சேர்த்து செய்வார்கள் நானும் இடையிடையே செய்திருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் அனைத்தும் நன்று. பதிவு தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....