திங்கள், 19 ஜூன், 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


நேற்று வெளியிட்ட குவாரி பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


******

எனது இந்த வருடத்தின் ஆரம்பத்தின் தமிழகப் பயணத்தில், சற்றே இடைவெளிக்குப் பிறகு, 18 மார்ச் 2023 அன்று இரவு, ஒரு குறும்பயணம் தொடங்கினேன். எங்கே இந்தப் பயணம்? ஒரு அற்புதமான ஆன்மீகப் பயணமாக அமைந்தது இந்தப் பயணம். இந்த சதுரகிரி குறித்து சில இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களில் படித்து இருக்கிறேன். அவர் எழுதிய தகவல்கள் என்னை பிரமிக்க வைப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாது நான்கு வருடங்களுக்கும் முன்னர் இருக்கலாம்….. எனது ஒரு தமிழகப் பயணத்தில், வலையுலக நண்பரும், மிகச்சிறந்த எழுத்தாளரும் ஆன திரு ரிஷபன் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் அவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம், அவர் சென்று வந்த சதுரகிரி மலைப்பயணம் குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சென்று வந்த அந்த மலைப்பயணம் குறித்து மிகவும் ஸ்லாகித்து பேசியபோதே, அவரிடம் விரைவில் நானும் நீங்களும் சேர்ந்து அங்கே பயணிக்க வேண்டும் என்று எனது ஆசையைச் சொல்லி இருந்தேன்.



ஆனால் அந்த ஆசை நிறைவேறாத ஒரு ஆசையாகவே இருந்துவிட்டது. மார்ச் மாத ஆரம்பத்தில், நான் பெயருக்கு உறுப்பினராக இருக்கும் மத்யமர் முகநூல் குழுவில் இருக்கும் திரு சரவணன் மா.பா. அவர்கள் அங்கே பதிவு செய்திருந்த இடுகை ஒன்று என்னை மீண்டும் அங்கே செல்லத் தூண்டியது. ஃபிப்ரவரி மாதக் கடைசியில் பிரதோஷ சமயத்தில் அவரும் மற்ற சில நண்பர்களும் சென்று வந்த சதுரகிரி பயணம் குறித்து எழுதிய இடுகையைப் பார்த்த உடனே அவருக்கு உள்பெட்டியில் தகவல் அனுப்பினேன். அடுத்த பிரதோஷத்திற்கு பயணம் செய்ய ஆசை இருப்பதை அவருக்குத் தெரியப்படுத்த உடனே அவரது அலைபேசி எண்ணை அனுப்பி வைத்தார். அவருடன் பேசி 18 மார்ச் 2023 சதுரகிரி பயணம் செய்ய முடிவு செய்தோம். அவரால் முகநூல் நட்புகள் புடைசூழ சதுரகிரிக்கு ஒரு பயணம் சாத்தியமானது. இத்தனைக்கும் பயணம் செய்யப்போகும் குழுவில் இருப்பவர்களை நான் இதுவரை சந்தித்தது இல்லை என்பதுவும் இங்கே சொல்ல வேண்டிய ஸ்வாரஸ்யமான உண்மை. இந்தப் பயணம் எப்படி இருக்கப் போகிறது, என்ன அனுபவங்கள் கிடைக்கப் போகின்றன என எதுவும் தெரியாமல் தொடங்கியது இந்தப் பயணம்……

அன்பு சூழ் உலகு…

இரவு 10.10 மணிக்கு இல்லாளிடமும் மகளிடமும் சொல்லிக்கொண்டு வீட்டில் இருந்து பொடிநடையாக திருவரங்கம் பேருந்து நிலையம் நோக்கி ஒரு நடை. வழியில் இரண்டு ஆட்டோ ஓட்டுனர் அவரவர் வண்டியை நிறுத்தி "எங்க சார் போகணும்? ஆட்டோ வேணுமா?" என பாசத்துடன் கேட்டார்கள். பொதுவாக நடக்கவே அதிகம் விரும்புவேன் என்பதால், அவர்களுக்கு நன்றியுடன் மறுதலித்து தொடர்ந்து நடந்தேன்.

அதன் பிறகு இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் "அண்ணே எங்கேயும் ட்ராப் செய்யணுமா?" என்று அவர்கள் வாகனத்தை நிறுத்தி கேட்க, அவர்களிடமும் அதே புன்னகையுடன் மறுத்து நடையைத் தொடர்ந்தேன். என்றைக்கு இப்படியான உதவிகள் தேவையோ அன்றைக்கு இவர்கள் யாரும் வருவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்படியான அன்பு சூழ் உலகில் இருப்பது நல்ல விஷயம் என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

பேருந்து அனுபவங்கள்:

திருவரங்கம் ராஜ கோபுரம் அருகே இருக்கும் பேருந்து நிலையம் வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. 11.00 மணிக்கு ஒரு பேருந்து கிடைத்தது - அதுவும் சத்திரம் பேருந்து நிலையம் வரை மட்டுமே செல்லும். சரி இதுவும் நல்லதற்கே! சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து night charges (இரட்டைக் கட்டணம்) கொடுத்து Central Bus Stand வந்தாயிற்று. அங்கே கேவலமான ஒரு rest Room இல் ஐந்து ரூபாயும் கொடுத்து, கொஞ்சம் இலகுவானேன். 11.40 மணிக்கு 1 to 1 மதுரை பேருந்தில் புறப்பட்டாயிற்று.

மணி 12.45 இருக்கலாம். ஸக பயணி ஒருவரின் அலைபேசி ஒலித்தது. தூக்கத்தில் இருந்தவர் எழுந்து, அவரது கைலிக்குள் கையை விட்டுத் துழாவி, தனது அலைபேசியை பட்டாப்பட்டியிலிருந்து எடுக்கிறார்! அவரது அலைபேசியின் Caller Tune கேட்டதற்கும் இந்தச் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. வைக்க வேறு இடம் கிடைக்கவில்லையா என்ன? அப்படி என்ன Caller Tune? "ஓம் நமச்சிவாய: ஓம் நமச்சிவாய:" என்பதே அவரது Caller Tune… :(


மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது….. வழியில் மழை என்றால் கவலை இல்லை…. மலையேற்றத்தின் போது மழை பெய்தால்? மலையேற்றத்தில் வழுக்குப்பாறை வழியே செல்ல வேண்டுமே, மழை பெய்தால் எப்படி மலையேற்றம் செய்ய முடியும் என்றெல்லாம் யோசித்தபடியே பயணிக்கிறேன். உறக்கமும் வரவில்லை…… எதுவாயிருந்தாலும் சதுரகிரி உறையும் சந்தன/சுந்தர மகாலிங்கம் துணை இருப்பான் என அவன் மேல் பாரத்தைப் போட்டு கண்களை மூடிக் கொண்டேன்.

உறக்கம் வருவதற்குள் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, "ஐந்து நிமிடம் நிக்குங்க, டீ காப்பி குடிக்கறவங்க, பாத்ரூம் போறவங்க போங்க!" என்று சொல்ல சில நிமிடங்கள் பேருந்து நின்ற இடம் வைகை டீ and காப்பி Bபார்….. பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் வண்டியை விட்டு இறங்கவே இல்லை. ஓட்டுநர் நல்லவர் போலும்….. காசு கொடுத்து டீ குடித்தார்….. கடை ஓனர் அவர் ஓட்டுநர் என்று தெரிந்த பின் டீ காசை திருப்பிக்கொடுத்து விட்டார் - இத்தனைக்கும் அவருக்கு ஆன மொத்த வியாபாரம் ஐம்பதைத் தாண்டி இருக்காது….. அவரும் நல்லவர்! என்னதான் ஸ்வச் Bபாரத் குறித்த பல விஷயங்களை அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும், எங்களது பேருந்து நிறுத்திய சாலையோர உணவகங்கள் போன்றவற்றில் சரியான வசதிகள் இருப்பதில்லை. அந்த இடத்தில் பேருந்திலிருந்து இறங்கிய அனைவருமே சாலையோரத்தில் தான் தங்களை இலகுவாக்கிக் கொண்டார்கள். தொடர்ந்து பயணம் எப்படி இருந்தது? பயணத்திலும் அதற்கு மேலும் கிடைத்த அனுபவங்கள் என்ன, போன்ற தகவல்களை, இத்தொடரின் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

******

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்



வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

24 கருத்துகள்:

  1. சதுரகிரிக்கு அருகிலேயே நான் பணி செய்திருந்தாலும் அங்கு சென்றதில்லை. அப்போதெல்லாம் அதன் சிறப்பு மனதில் பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்திலேயே இருக்கும் சமயத்தில் இப்படிச் செல்லத் தோன்றுவதில்லை! எனக்கும் அப்படி சில இடங்கள் உண்டு. முடிந்தால் இந்தப் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. ரிங்டோன் விடயம் ரசிக்க வைத்தது ஜி

    ஆம் டவுசருக்குள் அலைபேசியை வைப்பவர்களுக்கு வேறு தனியாக ரிங்டோன் இருந்தால் நல்லதுதான்.

    தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிங்டோன் - பல சமயங்களில் இது ஒரு தொல்லையாகவே இருக்கிறது கில்லர்ஜி. தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. 1977 களில் தொடர்ந்து சதுரகிரிக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார் எங்கள் ஊர்க்காரர் ஒருவர்..

    பதிவு அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்தில் என்னுடன் வந்த திரு சரவணன் மா.பா. அவர்களும் தொடர்ந்து சதுரகிரிக்குச் சென்று வருகிறார் துரை செல்வராஜூ ஐயா. பதிவு தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஓம் நமச்சிவாய.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. சதுரகிரியைப் பற்றிப் படித்திருக்கிறேன். செல்லும் வாய்ப்பு வந்ததில்லை.

    நல்ல தொடர் ஆரம்பம்..... ஓம் நமசிவாய காலர் ட்யூன் அருமை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுரகிரி பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. பலர் இந்த இடத்திற்குச் சென்று வருகிறார்கள் நெல்லைத் தமிழன். உங்களுக்கும் வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சதுரகிரி பயணம் வேறு படித்திருக்கிறேன்.

    உங்கள் பயணத்தில் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிக அழகான ஆரம்பம்... கீதா அங்கு போய் வந்திருக்கிறாவோ? பதிவு படிச்ச நினைவாக இருக்கிறது.

    இவ்ளோ சாமத்திலா பயணத்தை ஆரம்பிக்கிறார்கள், தூர இருந்து வருவோர் எனில் கஸ்டம்தானே.
    சிலசமயம் நாம் சந்திக்கும் மக்கள், சம்பவங்கள் எல்லாமே அழகாக இருக்கும், அப்படித்தான் இப்பயண ஆரம்பமே உங்கள் கண்ணுக்கு எல்லோரும் அழகாகத் தெரிகிறார்கள்.. நல்ல விசயம்தானே இக்காலத்தில் இப்படியும் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ஜி அங்கே சென்று வந்ததாகத் தெரியவில்லை அதிரா. பயணத்தினை சரியான நேரத்தில் தொடங்குவதே நல்லது. ஒவ்வொரு பயணமும் புதுப்புது அனுபவங்களைத் தரவே செய்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. 'சதுர'கிரிக்கு என்னை அழைத்துச் செல்லாததால் நான் என் பழைய பள்ளி நண்பருடன் கன்னியாகுமரி அருகிலுள்ள 'வட்ட'க்கோட்டைக்கு சென்று வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் சதுரகிரிக்கு ஒரு பயணம் சென்று வருவோம் பத்மநாபன் அண்ணாச்சி. சதுரத்திற்கு பதில் வட்டம் - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான தொடக்கம்.
    தொட்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆஹா! வெங்கட்ஜி அழகான சதுரகிரி பயணம்...எனக்கு மனதில் இருக்கும் ஒன்று. ஏனென்றால் கிட்ட போய் பாதியில் நின்றது அது. இதன் வழிகள் மிக அருமையாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை.
    பர்வதமலை முன்னர் பர்வதமலை ஏறி வந்தோம் பதிவும் போட்டிருந்தேன். அதுவுமே கடினமான மலை ஏற்றம்.

    ஆனால் அருமையான மலை ஏற்றம் பாதியில் நின்ற சதுரகிரிக்கு ஏறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் வழி போய் தேர்ந்தெடுத்திருந்தோம், என் அத்தை மகள் குடும்பம் போய்விட்டு வந்துவிட்டனர்.

    ஆவலுடன் உள்ளேன் உங்கள் பயணம் குறித்து அறிய...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா. அருகே வரை சென்றும் உங்களால் பயணிக்க முடியாமல் போனதே! அது சரி - எல்லாம் நல்லதற்கே என நினைத்துக் கொள்வோம் கீதா ஜி. விரைவில் உங்களுக்கு இங்கே ஒரு பயணம் அமைய ஈசன் அருள் புரியட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. ரிங்டோன் - இப்படியும் சிலர்! ஒன்றும் செய்வதற்கில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. முகநூலில் தங்களின் இந்த பயணபதிவை வாசித்தேன் ..இங்கும் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....