சனி, 24 ஜூன், 2023

காஃபி வித் கிட்டு - 175 - INTI RAYMI - வெண்பனி மலரே - ஓவியம் - உதவும் கரம் - தாயும் மகளும் - சூடா ஒரு கப் டீ - அத்ரிமுனி அருவி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று பதிவினை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


இந்த நாள் இனிய நாள் : INTI RAYMI - கொண்டாட்டம் 



பெரு நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 24-ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே INTI RAYMI - அதாவது சூரியப் பண்டிகை.  பெரு நாட்டின் சூரியக் கடவுளான INTI-ஐ வழிபடுவதும் அவர்களது புத்தாண்டையும் கொண்டாடுவது அவர்கள் வழக்கமாக இருக்கிறது.  பெரு நாட்டின் CUSCO நகரத்தில் தான் அதிகமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.  அது சமயத்தில் பலவித கலாச்சார விழாக்களும் கொண்டாட்டங்களும் இங்கே நடத்தபடுகிறதாம்.  முதன் முதலாக 1430-களில் இந்தப் பண்டிகை கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று தெரிகிறது.  இந்த நாளில் தான் புவியிலிருந்து அதிக தொலைவில் சூரியன் இருக்கும் நாள் என்பதால் குளிர்கால சங்கராந்தியாகவும் இந்த நாளை கொண்டாடுவதாகத் தெரிகிறது.  வண்ண வண்ண உடைகள் அணிந்து பாடல்களைப் பாடியும், நடனமாடியும் சூரியனுக்கு தங்களது காணிக்கைகளையும் செலுத்துவார்களாம்.  இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் அவர்களது நெருங்கிய பந்தங்களுக்கும், பக்கத்து வீட்டு நபர்களுக்கும் உணவு தயாரித்து வழங்கி தங்களது கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்வார்களாம்.  


இந்தப் பண்டிகை சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறு காணொளி உங்கள் பார்வைக்கு!

******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்: வெண்பனி மலரே…


சில வருடங்களுக்கு முன்னர் வந்த பவர் பாண்டி படத்தினை இணையத்தில் பார்த்தேன்.  எனக்கு படம் பிடித்திருந்தது.  அந்தப் படத்திலிருந்து வெண்பனி மலரே எனும் இந்தப் பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக…  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  பாருங்களேன்!

மேலே உள்ள காணொளியைக் காண முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


The Romance Of Power Paandi - Venpani Malare (Official Video) | Power Paandi | Rajkiran | Dhanush - YouTube


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் : ஜுகல் சர்க்கார்…



இந்த வாரத்தின் ரசித்த ஓவியமாக, ஓவியர் ஜுகல் சர்க்கார் அவர்களின் சிவன் - பார்வதி ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! எத்தனை அழகு இந்த ஓவியம். உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். 


******


பழைய நினைப்புடா பேராண்டி : உதவும் கரம்


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - உதவும் கரம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


தில்லியில் உள்ள Bபாபா KHகரக் சிங் சாலையில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் பேரங்காடிகள் அமைந்துள்ளன.  இந்த அங்காடிகளில் அந்தந்த மாநிலங்களின் சிறப்பு அம்சங்களாக, கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணிகள் ஆகியவை பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருக்கும். தில்லியில் நிறைய மக்கள் சில அற்புதமான பரிசுப் பொருட்கள் வாங்க விரும்பி நாடுவது இந்த அங்காடிகளைத் தான். 


அந்தந்த மாநிலங்களின் அங்காடிகள் தவிர பொதுவாக Rajiv Gandhi Handicrafts Bhawan என்ற ஒரு அரங்கமும் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது.  வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மாநிலத்தினை மையக் கருவாய் வைத்து சில நாட்கள் ”ஷில்பி ஹாட்” என்ற பெயரில் கண்காட்சியும் நடத்துவார்கள். 

  

தற்போது அங்கே மேற்கு வங்காள மாநிலத்தினை மையமாய்க் கொண்ட "ஷில்பி ஹாட்" நடைபெறுகிறது.  வீட்டுக்கு அருகில் இருப்பதால் சென்ற ஞாயிறன்று இந்த கண்காட்சிக்கு சென்றோம்.  பெயர் மட்டும் தான் ஷில்பி என்று இருக்கிறதே தவிர, அங்கே சிற்பங்களை விட மற்ற கைவினைப் பொருட்கள் தான் அதிகம் இருந்தன.  


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : தாயும் மகளும்… 


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக எனது நெய்வேலி நகர வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் இருந்த தோழி ஸ்ரீமதி அவர்களின் ஆக்கத்தில் வெளியான ஒரு கவிதை.  2017-ஆம் ஆண்டு அவரால் எழுதப்பட்ட கவிதை இது.  உங்களுக்கும் பிடிக்கலாம். படித்து தான் பாருங்களேன்!


தாயும் ... மகளும் 

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹



யாரும் இல்லாத பச்சை வெளியில் 

வெள்ளைப் பறவைகள் சகிதம் 

தன் இல்லப் பசுக்களை மேய்க்கிறாள் 

எளிய வாழ்வை ஏற்றுக்கொண்டவள்

மேலைவானம் சிவக்கும் நேரம் 

மேய்ச்சல் முடிந்ததென 

பசுக்கள் அவளை வீடழைக்கும் நேரம் 

தன் கனவின் மிச்சத்தை

கருங்கூந்தலில் முடிந்து 

நான்கு சுவர்களில் அடைபட

நடைபோடுவாள் 

நாளை மீண்டும் 

இறுகிய இதயத்தை இளக்க 

பசும்வெளிகளுக்கு மீளுவாள் 

அவள் வரவை எதிர் நோக்கி 

விளக்கேற்றிக் காத்திருக்கும் 

அவள் அன்னையும் 

ஒரு காலத்தில் கனவில் மிதந்தவள்தான் 

ஆதுரமும் அன்பும் கொண்டு 

தன் தலைகோதும் அன்னையின் மடிசாய்ந்து 

கனவுகளை அசைபோடும் 

மகளுக்குத் தெரியாது 

அன்னையின் கனவுகள் என்னவென்று 

ஆனால் துயரங்களைச் சுமக்கும் அன்னை 

சொல்லாமலே அறிவாள் 

பொன்னும் பூவும் செதுக்கும் 

மகளின் மென்இதயத்தை 

©® ஶ்ரீ 

SREEMATHI RAVI

16th JUNE 2017


******


இந்த வாரத்தின் மின்புத்தக அறிமுகம் - சோழிகள் மற்றும் சூடா ஒரு கப் டீ :  


நண்பர் ரிஷபன் அவர்களின் கதைகள் ஒவ்வொன்றுமே மனதைத் தொடும் விதமாகவே இருக்கும்.  அவரது பல கதைகளை படித்திருந்தாலும், இன்னும் படிக்காதவை நிறையவே உண்டு.  ஒவ்வொரு கதையும் படிக்கும் நம்மை அந்த சூழலை நம் கண் முன்னே கொண்டு வருபவை.  சமீபத்தில் அவரது இரண்டு சிறுகதை தொகுப்புகளை புஸ்தகா தளம் மூலம் வெளியிட்டு இருக்கிறார்.  சோழிகள் மற்றும் சூடா ஒரு கப் டீ ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ள அவரது சிறுகதைத் தொகுப்புகளை புஸ்தகா தளத்தில் உங்களால் படிக்க முடியும்.  புஸ்தகா தளத்தில் சந்தா கட்டி படிக்க வேண்டியிருக்கும் என்பதையும் சொல்லி விடுகிறேன்.  இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுக்கான சுட்டி கீழே!


Sooda Oru Cup Tea | Tamil | eBooks online | Rishaban (pustaka.co.in)


Chozhigal | Tamil | eBooks online | Rishaban (pustaka.co.in)


******


இந்த வாரத்தின் பயணம் - அத்ரிமுனி அருவி, உத்திராகண்ட் : 


நண்பர் ப்ரேம் பிஷ்ட் அவர்கள் இந்த மாதம் (10-13 தேதிகளில்) உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள அத்ரிமுனி அருவிக்கும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்கும் மலையேற்றம் செய்து வந்தார்.  அது குறித்த காணொளியை அவரது ய்ட்யூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  இந்த அருவி இருக்கும் இடத்திற்குச் செல்வது சாகசப் பயணம் போலதான்.  மலையேற்றப் பாதையில் Literally ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும் என்று சொல்லி இருந்தார்.  காணொளியில் உங்களால் அந்தக் காட்சிகளைக் காண முடியும்.  பத்து நிமிடத்திற்கும் மேலான காணொளி என்றாலும் நேரம் எடுத்து நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி! பாருங்களேன். 


Anusuya Devi Temple and Attri Muni Cave & Waterfall - YouTube


*****


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

  1. சூரிய பண்டிகை காணொலி கண்டு ரசித்தேன்.  வெண்பனி மலரே இதுவரை கேட்டதில்லை.  இனிதான் கேட்கவேண்டும்.  ஓவியம் ஓகே.  மென்சோகம் சொல்லும் கவிதை ரசனை. ரிஷபன் ஜி அவர்கள் புத்தகம் பற்றி அறிவிப்பு பேஸ்புக்கில் படித்த நினைவு.  ​நண்பர் பிரேம் அவர்களின் காணொலியை அவசியம் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம். நண்பர் ப்ரேம் பிஷ்ட் அவர்களின் காணொளியை முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. கதம்ப செய்திகள் அனைத்தும் அருமை ஜி
    கவிதை சிறப்பு
    முதல் காணொளி கண்டேன் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கதம்ப செய்திகள் அனைத்தும் எப்போதும் போல!..
    கவிதை அழகு..

    காணொளிகளைஅப்புறம் தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. காணொளிகளை முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் மிகவும் பிடித்தது

    பெரு நாட்டின் சூரிய பண்டிகை - Inti Raymi - காணொளி மிகவும் ரசித்தேன் ஜி.

    அப்போது யுட்யூப் இல்லாத காலம் என்பதால் அது அப்போதைய காணொளி. ஒரு நூலகத் திரையில். மகன் படித்த போது உலகநாடுகளின் கலாச்சாரம், நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் என்று Social science ல் அவன் project. அப்படி அறிந்த ஒன்று. வீடு மாறிய போது மகன் செய்த charts எல்லாம் பார்த்ததும் அட இதைப் பதிவா எழுதலாமே என்று தோன்ற மனதில் நினைத்ததோடு சரி. அவை எல்லாம் பரணில் ஏறிவிட்டதால் அப்படியே என் எண்ணமும் கிடப்பில்...

    நானும் பவர் பாண்டி படம் இணையத்தில் பார்த்தேன் daily motion ல் எனக்கும் பிடித்தது படம். இந்தப் பாடலும் மீண்டும் இப்போது கேட்டேன் ஜி. பாடல் காட்சி நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      யூட்யூப் இல்லாத காலகட்டங்களில் தொலைக்காட்சி பெட்டிகளில் சில நிகழ்ச்சிகள் வழி இப்படியான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது இல்லையா கீதா ஜி. இப்போது விவரங்கள் அனைத்தும் விரல் நுனியில் - அலைபேசி வாயிலாக வந்து விடுகிறது!

      பவர் பாண்டி - கொஞ்சம் வித்தியாசமான ஆனால் நல்ல படம். எனக்கும் பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. அத்ரி முனி நீர்வீழ்ச்சி அந்தக் குகை அடியில் ஊர்ந்து செல்வதையும் காணொளி அன்றே பார்த்துவிட்டேன்.

    கவிதை நன்று. ஜுகல் சர்க்கார் அவர்களின் சிவன் - பார்வதி ஓவியம் அழகு.

    உதவிக்கரம் - இந்தக் கைவினைக்கலைஞர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ன அற்புதமான பொருட்கள்..மிகவும் ரசித்துப் பார்த்தேன் அதுவும் தூக்கணாங்குருவிக் கூடு, பெரிய மான்கள், பொம்மைகள், அழகுப் பொருட்கள் என்று அத்தனையும் அருமையோ அருமை.

    ரிஷபன் அண்ணாவின் கதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனை அருமையாக இருக்கும். வெளியீடு பற்றி சொல்லியதற்கு மிக்க நன்றி, ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்ரி முனி அருவி - நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் தான் - காணொளி வழியேனும் பார்க்க முடிந்ததே என்பதில் மகிழ்ச்சி எனக்கும்.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. சிவன் பார்வதி ஓவியம் மிக அருமை. எதனால் பெண் என்றால் வெளுத்த, சிவந்த நிறமாக இருக்கவேண்டும் என்பது பொதுப் புத்தியாக உள்ளது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண் என்றால் வெளுத்த, சிவந்த நிறமாக இருக்க வேண்டும் என்பது பொதுப்புத்தியாக உள்ளது?// நல்ல கேள்வி. அழகு என்பது நிறத்தில் இல்லை என்பது பலருக்கும் புரிவதில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அனைத்து பகுதிகளும் அருமை.
    ரிஷபன் அவர்கள் நான் பொறாமைப்படும் எழுத்தாளர்களில் ஒருவர்! அவரின் சிறுகதைகள் அனைத்தும் மனதை தொடுபவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பத்மநாபன் அண்ணாச்சி. ரிஷபன் ஜி கதைகள் பிரமிக்க வைப்பதோடு மனதைத் தொடுபவையே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பண்டிகை , ஓவியம் ,கவிதை ,பாடல் ,கைவினைப் பொருட்கள் என அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....