புதன், 28 ஜூன், 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


மலையேற்றம் - பகுதி இரண்டு - கோணத் தலைவாசல் முதல் ரெட்டை லிங்கம் வரை


இதுவரை கடந்து வந்த பாதையே கடினம் என்று நினைத்தால் கோணத் தலைவாசல் முதலான பகுதி இன்னும் கடினமாகவே இருக்கும்.  பாதையும் வளைந்து நெளிந்து செல்லும் பாறைகள் நிறைந்த பகுதி.  இந்தப் பகுதியைக் கடக்கும் சமயம் அவ்வப்போது குடிநீர், தேன் மிட்டாய், கடலை மிட்டாய், க்ளுகோஸ் போன்றவற்றையோ சாப்பிட்டுக் கொள்வது நலம். அது தவிர வழியில் கிராமத்தினர் வைத்திருக்கும் தற்காலிக கடைகளில் விற்கும் நீர் மோர், முடக்கத்தான் சூப் போன்றவற்றையும் நீங்கள் அருந்தலாம்.  இந்த மாதிரி கடைகளில் நெல்லிக்காய், அன்னாசிப்பழம், மாங்காய் போன்றவையும் கிடைக்கின்றன.  இயற்கையாக, சுத்தமாக இருக்கும் இந்தப் பொருட்களை வாங்கி சாப்பிட்டால் நமக்கு சத்து கிடைக்கும் என்பதோடு, இந்தச் சிறு வியாபாரிகளையும் ஆதரித்தது போல இருக்கும்.  என்ன ஒன்று இவற்றை எல்லாம் வாங்கிச் சாப்பிடும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.  கொஞ்சம் ஏமாந்தாலும் குரங்குகள் உங்கள் கைகளிலில் இருந்து இந்த உணவுப் பண்டங்களை பிடிங்கிக் கொள்ளும் அபாயமுண்டு! மலை முழுவதும் நிறைய குரங்குகள்! 


இந்தப் பகுதி மலையேற்றம் கடுமையானது தான் என்றாலும் அங்கே பார்க்கக் கிடைக்கும் இயற்கைக் காட்சிகளும் சூழலும் மனதுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியவை என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் மலையேற்றம் சுகமானதாகவே இருக்கும். நாம் செல்லும் பாதை கரடுமுரடாக இருந்தாலும், நம் வலப்புறம் இயற்கை எழிலும், இடப்புறம் சதுரகிரி மலையேற்றப் பாதையில் நம் உடன் வரும் சதுரகிரி ஓடையும் நமக்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக சதுரகிரி குறித்துப் பேசும்போது அங்கே சென்று திரும்பிய சில நண்பர்கள் அங்கே பார்க்கக் கிடைக்கும் பூக்கள் மற்றும் பறவைகள் குறித்துச் சொன்னதுண்டு.  ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் எங்களால் பறவைகளையோ, இல்லை விதம் விதமான பூக்களையோ காண முடியவில்லை.  அப்படிச் சொல்வதை விட நாங்கள் அதில் அதிக கவனம் செலுத்தாமல் மலையேற்றத்திலேயே அதிக கவனம் வைத்திருந்தோம் என்றும் சொல்லலாம். இந்த மலையேற்றம் எனக்கும் நண்பர் Astro சரவணன் அவர்களுக்கும் முதல் சதுரகிரி மலையேற்றம் என்பதால் அதில் தான் அதிக கவனம் இருந்தது. இந்த மலையேற்றம் முடிந்து வீடு திரும்பியதும், இன்னுமொரு முறை இங்கே பயணிக்க முடிந்தால் இன்னும் நின்று நிதானித்து எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. 


இந்தக் கோணத் தலைவாசல் பகுதியைக் கடந்து சுமார் அரை மணி நேரம் நடந்தால் நாம் அடைவது காராம் பசுத் தடம் என்கிற இடம்.  இந்த இடத்தில் ஒரு பாறையில் காராம் பசுவின் மிகப்பெரிய கால் தடம் இருக்கின்றது. இதற்கும் ஒரு கதை பின்னணியில் உண்டு.  அந்தக் கதையும் சதுரகிரி உறையும் சந்தன/சுந்தர மஹாலிங்கம் குறித்த கதைகளும் இங்கே தொடர்ந்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்! 


காராம் பசுத் தடம் தாண்டிய பிறகு இருக்கும் கடினமானதும், இலகுவானதும் என இரண்டும் கலந்தது. இந்த இடத்தினைத் தாண்டிய நாம் செல்லும் பாதையிலிருந்து இடப்புறம் இருக்கும் சிறு வழி வழியே கீழே பாறைகள் வழி இறங்கினால் நாம் தொடர்ந்து இடப்புறத்தில் கவனித்து வரும் ஓடை பாறைகள் வழி சென்று கொண்டிருக்கிறது.  அந்த ஓடையின் வழி நடந்து கீழே வந்தால் நம் இடப்பக்கம் வருவது ஒரு சிறு குகை! அந்தக் குகைக்குப் பெயர் Gகோரக்கர் குகை.  பதினெட்டு சித்தர்களில் ஒருவரான Gகோரக்கர் கையாலேயே பிரதிஷ்டை செய்யப்பட ஒரு லிங்கம் இந்த குகைக்குள் இருக்கிறது.  நாம் ஒரு குழந்தை போல தவழ்ந்து சென்று தான் இந்த குகைக்குள் உறையும் சிவனை தரிசிக்க முடியும். பாறைகள் வழி இந்த குகைக்குச் செல்லும்போது பாறைகள் வழுக்குகின்றன என்பதால் பார்த்து தான் நடக்க வேண்டியிருந்தது.  பக்தர்கள் ஒரு வழியே சென்று திரும்பினால் பரவாயில்லை - அங்கேயும் ஒரு ஒழுங்கு இல்லாமல் கும்பலாக போட்டிப் போட்டுக்கொண்டு உள்ளே செல்ல தலைப்படுகிறார்கள்.


Gகோரக்கர் குகை உறையும் ஈசனையும் வழிபட்டு மீண்டும் பாறைகள்வழி மேலே இருக்கும் பாதைக்கு வந்து நம் மலையேற்றத்தினைத் துவங்க வேண்டும். தொடர்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் நடந்தால் நாம் வந்து சேரும் இடம் ரெட்டை லிங்கம் கோவில்



கரடு முரடான பாதைகள்...


வழியில் சில பக்தர்கள்...


வித்தியாச வடிவில் ஒரு மரம்...


மரத்தில் ஒரு உருவம்...


நாவல் ஊற்று...


நண்பர்களுடன்...


கோணத்தலைவாசல் அருகே மலையேற்றம்...


வழியில் மலைப்பகுதிகள்...


வித்தியாசமான பூக்களுடன் மரம்...


வனத்துறையினர் கூடாரம் ஒன்று...


ஒரு மரத்தின் சேவை என்னென்ன?



மலையேற்றம் - பகுதி மூன்று - ரெட்டை லிங்கம் கோவில் முதல் பிலாவடி கருப்பு கோவில் வரை


ரெட்டை லிங்கம் கோவிலில் இருக்கும் இரண்டு லிங்கங்களையும் தரிசித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினால் நாம் செல்லும் பாதை கொஞ்சம் இலகுவானதும் கடினமானதும் என சேர்ந்து இருக்கிறது.  இந்தப் பாதையும் அடர்ந்த வனப்பகுதி போல இருப்பதால் நிறைய பறவைகளின் ஒலியை நம்மால் கேட்க முடியும்.  நேரம் எடுத்து, பறவைகளையும் பார்க்க முயன்றிருக்கலாம்! ஆனால் எங்களது இலக்கு நேரடியாக மலை மீது இருக்கும் சுந்தர/சந்தன மஹாலிங்கம் கோவில் சென்று சேர்வதாக இருந்ததால் இப்படி எல்லாம் பறவைகளைக் கண்டு ரசிக்க முடியவில்லை.  நடுவே சில மணித்துளிகள் ஓடையில் நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் குளித்து வந்தோம்.  என்னதான் மலையடிவாரத்தில் குளித்திருந்தாலும் மலையேற்றத்தினால் எங்கள் உடலிலிருந்து வெளியேறிய வியர்வையும் நிறைய நீர் இருந்த ஓடையையும் பார்த்ததும் மீண்டும் குளிக்க ஆசை வந்துவிட்டது.  நாங்கள் வரும் வரை மற்ற நண்பர்கள் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  சில நிமிடங்கள் அந்த குளிர்ந்த நீரில் ஆனந்தமாகக் குளித்து விட்டு மீண்டும் மலையேற்றத்தினை தொடங்கினோம்.   சில நிமிடங்கள் நடந்த பிறகு வந்து சேரும் இடம் சின்ன பசுக் கிடை.


அந்தப் பகுதியையும் கடந்து நாம் நடந்து கொண்டே இருக்கிறோம்.  சில நிமிடங்கள் நடந்த பிறகு நம் வலப்புறம் இருப்பது ஒரு பெரிய நாவல் மரம்.  அந்த நாவல் மரத்திற்குக் கீழே ஒரு ஊற்று இருக்கிறது.  பெயரே நாவல் ஊற்று தான்! நாங்கள் சென்ற போது தண்ணீர் இருந்தது.  இந்த நாவல் ஊற்றில் இருக்கும் தண்ணீர் மருத்துவ குணம் வாய்ந்தது என்றும், இந்த நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம் என்றும் சொல்கிறார்கள்.  அதனால் பலரும் இங்கே இருந்து அவர்கள் கொண்டு வரும் பாட்டில்களில் ஊற்று நீரை எடுத்துச் செல்கிறார்கள்.  நாங்களும் அங்கே தண்ணீர் எடுத்து அருந்தினோம்.  எனது பாட்டிலிலும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து வந்த மலையேற்றத்தில் அந்த நீரையே அருந்தினேன்.  திரும்பி வரும் வழியிலும் ஊற்று நீரை எடுத்துக் கொண்டு வந்து வீட்டினருக்கும் கொடுத்தேன்.  தண்ணீர் அப்படி ஒரு சுவையாக இருந்தது.  இயற்கையான சூழலில் இருக்கும் கலப்படமில்லாத நீர் என்பதால் சுவையாகவே இருந்ததாகத் தோன்றியது.  


தொடர்ந்து நடந்து சென்றால் நாம் சென்று சேரும் இடம் பிலாவடி கருப்பர் கோவில்


பயணத்தில் தொடர்ந்து கிடைத்த அனுபவங்களை வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. படங்களும், விவரங்களும் அருமை.  ஓரளவு பயமுறுத்தாத நல்ல அகலமான பாதை என்றே தெரிகிறது.  குறுகலான பாதை இல்லாமல்... 

    பாறைகளில் ஏறவேண்டும் என்பது சவால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த செய்திகள் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். ஒரு சில இடங்களில் குறுகிய பாதைகளும் இருந்தன. பாறைகளில் ஏறிச் செல்வது சற்றே சவாலான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. மதுரை கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பன் பெயர் பிலாவடியான்.  அது நினைவுக்கு வருகிறது.  வத்ராப், மகாராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சுந்தரமகாலிங்கம், மகாலிங்கம் பெயர்கள் வீட்டுக்கு வீடு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிலாவடியான் - நல்ல பெயர் ஸ்ரீராம். எனது தில்லி நண்பர் ஒருவர் பெயர் கூட மகாலிங்கம் தான். அவர் சென்னையைச் சேர்ந்தவர். ஒரு வேளை அவரது மூதாதையர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ரொம்பவே கடினமான பயணமாக இருக்கே ! நான் கனவில் கூட இங்கெல்லாம் போக முடியாது !! மானசிகமாக பயணத்தில் கூடவே வர்றேன் 🙏 துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே கடினமான பயணம் தான். இங்கே டோலி வசதிகள் உண்டு - சற்றே வித்தியாசமான டோலி! தகவல்கள் வரும் பகுதி ஒன்றில் வரும் துளசி டீச்சர். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. தகவல்கள் சிறப்பு ஜி
    தொடர்ந்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. ஒவ்வொரு விளக்கமான தகவல்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் யதார்த்தம்.

    படங்கள், பயண விவரங்கள் சிறப்பு, வெங்கட்ஜி

    நாவல் ஊற்று - அருமை. ஆமாம் சுவையாக இருந்திருக்கும்.

    இப்படி பல மலைகளிலும் இருக்கும் சுனை, ஊற்று நீரை நாம் குடித்தால் தனிச்சுவையுடன் இருக்கும். இப்படியான பகுதிகளுக்குச் செல்லும் போதெல்லாம் நாங்களும் இப்படிச் செய்வதுண்டு... இது போலவே 32 வருடங்களுக்கு முன் அழகர் மலையில் கோயிலைத் தாண்டி - நூபுர கங்கையைத் தேடி - (இப்போது அது குழாய்கள் எல்லாம் வைத்துக் குளிக்க கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது) நாங்கள் காட்டிற்குள் பாதையில் நடந்து சென்ற போது ஒரு மரத்தின் வேரிலிருந்து தண்ணீர் வந்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் கீழே இறங்கி குளித்துவிட்டு, வேர்ப்பகுதி நீரைக் குடித்தால் அத்தனை சுவை. இனிய நீர் எனலாம். நாங்களும் பாட்டிலில் எடுத்துக் கொண்டோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. படங்களும் பயண விவரங்களும் சிலருக்கேனும் பயன்பட வேண்டும். மலைகளில் இருக்கும் இயற்கையும், அங்கே உள்ள சூழலும் எப்போதும் ரசிக்கக் கூடிய விஷயங்களே. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பாறைகளுக்கு இடையே ஓடிய ஓடைப் படம் எடுக்கவில்லையோ? அப்ப அங்குகுளிக்கலாம் இல்லையா...நோட் செய்து கொண்டுவிட்டேன்.

    வித்தியாசமான மரங்கள், அதில் உருவங்கள், பூ ...

    இந்தப் பாதை பரவாயில்லை போல இருக்கு ஜி. படங்களை வைத்துச் சொல்கிறேன். பர்வதமலை இன்னும் கடினம் என்றே தோன்றுகிறது.

    முடிந்தால், வாய்ப்பு கிடைத்தால் பர்வதமலையும் ஏறிப் பாருங்க ஜி...அது எல்லா நாளும் ஏறலாம். நவம்பர் டிசம்பரில் ஏறினால் வெயில் இல்லாம இதமாக இருக்கும்.

    பயணம் வெகு சுவாரசியம். என் ஆவல்தான் கூடிக் கொண்டே இருக்கு ஏற்கனவே லிஸ்டில் இருக்கும் மலை வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்ற சமயத்தில் ஓடைகளில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது கீதா ஜி. அதுவுமில்லாமல் இயற்கையை ரசிப்பதிலேயே அதிக நாட்டம் இருந்தது - படங்கள் எடுப்பதில் அத்தனை நாட்டம் இல்லாமல் போனது!

      பர்வதமலை குறித்த தகவல்களை சமீப நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த தமிழகப் பயணத்தில் சென்று வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பாறைப்பகுதிதான் கொஞ்சம் கடினமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாறைப்பகுதிகள் கடப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. /// மலை முழுவதும் நிறைய குரங்குகள்!.. ///

    அவர்களுடைய இடம் தானே அது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்களுடைய இடம் தானே அது// - உண்மை. அவர்களைத் தொந்தரவு செய்வது நாமே தான்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  11. கடினமான பாறை வழிப் பாதை மலைப்பாக/அச்சமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் மலையேற்றம் கொஞ்சம் கடினமே துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. இன்னுமொரு முறை இங்கே பயணிக்க முடிந்தால் இன்னும் நின்று நிதானித்து எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. //

    விரைவில் சென்று வந்து விடுங்கள். சுந்தர மகாலிங்கம் உங்களை மீண்டும் அழைக்க வேண்டும்.
    நானும் போய் வர ஆசை பட்டேன். போக முடியவில்லை. இன்று தொலைக்காட்சியில் செய்தி கேட்டேன். 60 வயதுக்கு மேல் மலையேற அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

    உங்கள் வலைத்தளத்தில் படங்களை பார்த்து தரிசனம் செய்து கொண்டேன் மனதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு முறை பயணிக்க வேண்டும் - சுந்தர/சந்தன மகாலிங்கம் மீண்டும் அழைப்பார் என்ற நம்பிக்கை உண்டு கோமதிம்மா. பதிவு வழி நீங்களும் தரிசனம் செய்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. சிறப்பான தகவல்கள் சார்.
    முதன்முறை, மலையேற்றத்தை இவ்வளவு நுனுக்கமாக படித்து ரசிக்கிறேன்.
    மிக்க நன்றி ஐய்யா. என் சொந்த ஊர் சிவகாசி அறுகில் தான் இம்மலை என நினைக்கிறேன். விரைவில் நானும் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....