சனி, 17 ஜூன், 2023

காஃபி வித் கிட்டு - 174 - கங்கை உருவாகிறாள் - ECHO - பால்கனிப் பாவை - நானும் மரங்களும் - சுவாசமே - நட்பு - பயணம் (சிறுகதை)


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


நேற்று வெளியிட்ட திருவண்ணாமலை பயணம் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******

இந்த வாரத்தின் தகவல் : கங்கை உருவாகிறாள்


நண்பர் LK அவர்களின் பாகீரதி தளத்தில் எனது கைவண்ணத்தில் ஒரு பயணத் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. பஞ்ச் ப்ரயாக் என்று அழைக்கப்படும் ஐந்து சங்கமங்களில் இரண்டு சங்கமங்கள் சென்று வந்தது தொடர்பான பயணக் கட்டுரைகள் தற்போது அவரது தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எனது பக்கத்தில் பிறகு வெளியிடுவேன். விருப்பம் இருப்பவர்கள் நண்பரின் தளத்தில் இந்த பயணக் கட்டுரைகளை படிக்கலாம். இதுவரை வெளியான கட்டுரைகளின் தொகுப்பிற்கான சுட்டி கீழே…


******

இந்த வாரத்தின் ரசித்த துணுக்கு : ECHO

இந்த வாரத்தின் ரசித்த ஒரு துணுக்கு - ஆங்கிலத்தில்!

A son and his father were walking on the mountains. Suddenly, his son falls, hurts himself and screams out in pain. To his surprise, he hears the voice repeating, somewhere in the mountain. Curious, he yells: “Who are you?” He receives the answer: “Who are you?” Angered at the response, he screams: “Coward!” He receives the answer: “Coward!” He looks to his father and asks: “What’s going on?”

The father smiles and says: “My son, pay attention.” And then he screams to the mountain: “I admire you!” The voice answers: “I admire you!” Again the man screams: “You are a champion!” The voice answers: “You are a champion!” The boy is surprised, but does not understand.

Then the father explains: “People call this ECHO, but really this is LIFE. It gives you back everything you say or do. Our life is simply a reflection of our actions. If you want more love in the world, create more love in your heart. Moral of the Story: If you want more competence in your team, improve your competence. This relationship applies to everything, in all aspects of life; Life will give you back everything you have given to it.”

******

இந்த வாரத்தின் எண்ணங்கள் : பால்கனிப் பாவை…

பால்கனிப் பாவை என்று நண்பரால் பெயரிடப்பட்ட பெண்மணி இப்போது இல்லை. எண்பத்தி எட்டு வயது வரை இருந்தவர், மூன்று வருடத்திற்கும் மேலாக எமனுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர் தனது மூச்சினை சமீபத்தில் மொத்தமாக மறந்தார். எண்பத்து எட்டு வயது வரை அவர் வாழ்க்கையில் கண்ட போராட்டங்கள் பலப்பல. அதிகாலை எழுந்து பகுதியில் இருக்கும் இரண்டு கோவில்களுக்கும் சென்று தொழுது வருவார். அதன் பின்னர் அவர் பெரும்பாலும் இருப்பது அவரது வீட்டின் பால்கனியில் தான். ஆனாலும் அங்கே இருந்த படியே நடப்பவை பலவற்றையும் பார்த்துவிடுவார். பலமுறை அவர் அங்கேயிருப்பது தெரியவே தெரியாது. ஆனாலும் அவர் அங்கே இருந்து யார் அந்த வழியே நடந்து போனாலும் பார்த்து விடுவதோடு, சரியாக நினைவு வைத்து அடுத்த முறை அவரை நேரடியாகப் பார்க்கும்போது, “அன்னிக்கு காலையிலேயே எங்கேயோ போனியே” என கேட்கும்போது தான் அவர் நம்மை கவனித்துக் கொண்டிருந்ததே நமக்குத் தெரியும். எப்போது வீட்டிற்குச் சென்றாலும், பாசத்துடன் விசாரிப்பார். நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும் கேட்டுத் தெரிந்து கொள்வார். சென்ற முறை அவரை பார்த்தபோது நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் என்னுடன் பேசினார். படுத்தபடுக்கையாக இருந்ததால் பல விஷயங்கள் பேசமுடியவில்லை என்று மனக்குறை அவருக்கு. ஒரு வழியாக ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறச் சென்று விட்டார் அந்த பால்கனிப்பாவை.

******

பழைய நினைப்புடா பேராண்டி : நானும் மரங்களும்

2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நானும் மரங்களும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

எல்லா மரம்-செடிகளுக்கும் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது, தோட்ட வேலை செய்வது என்று எங்களையும் ஈடுபடுத்துவார் அம்மா. அப்போதெல்லாம் ”நீ ரொம்ப நல்ல மரம்.. எவ்வளோ பழம் கொடுக்கற, நிறைய உனக்குத் தண்ணீரும், உரமும் போடுறோம்” என்றெல்லாம் மரம் செடிகளோடு பேசுவோம்.

ஒரு நாள் என் கையில் ஒரு அருவாளைக் கொடுத்து, பலா மரத்தின் பக்கத்தில் அழைத்துச் சென்றார் என் அம்மா.

அந்த மரத்திடம் அம்மா சொல்லிக் கொடுத்து நான் பேசியது “நானும் உன்னைப் பார்த்துட்டே இருக்கேன், நிறைய தண்ணி ஊத்துறேன், உரம் போடறேன். ஆனாலும் நீ பழமே கொடுக்க மாட்டேங்கிற, உன்னை என்ன பண்ணலாம்? ...ம். இந்த வருஷம் பார்ப்பேன்… பழம் கொடுக்கலைன்னா உன்னை இந்த அருவாளாலே இப்படி வெட்டிடறேன் பாருன்னு” இரண்டு மூன்று இடங்களில் வெட்டினேன்!

எனக்கும் சகோதரிகளுக்கும் அதன் பிறகு தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையே அந்த பலா மரத்தை அண்ணாந்து பார்த்து ஏதாவது பூ வைத்திருக்கிறதா என்று பார்ப்பது தான். என்ன ஓர் ஆச்சரியம் – அந்த வருடம் அந்த மரத்தில் 10-15 பூக்கள் மலர்ந்து பிஞ்சாகி பின்னர் பெரிய காய்களானது.

பலாப் பிஞ்சுகள் வந்த அன்றே பார்த்து, மரத்தினை ஆரத் தழுவி, “அட உன்னை வெட்டிடலாம்னு சொல்லிட்டேனே, நீ நல்ல மரம், உன்னை இன்னும் கவனமா பார்த்துக்கிறேன்” என்று சொல்லவும் சொன்னார்.

முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******

இந்த வாரத்தின் ரசித்த பாடல் : சுவாசமே…

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு மலையாள மொழிப் பாடல். சந்தோசம் என்ற திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் இங்கே! பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


******

இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - நட்பு :


******

இந்த வாரத்தின் ரசித்த கதை - பயணம் :

Dementia குறித்த ஒரு கதை - கல்கி இணைய இதழில் வெளிவந்த இந்த கதையிலிருந்து சில வரிகள் இங்கே…

ருக்மணிப் பாட்டி காலை முதல் அமைதியாகத் திருமலைத் தாத்தாவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் ஒரு தெளிவு. சாந்தம் குடிகொண்டிருந்தது.

நெற்றியில் பூசிய திருதீறு. கழுத்து வரை போர்த்திய கோடி வேட்டி. கண்களை மூடியபடித் தூங்குவதைப் போலக் கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் திருமலைத் தாத்தாவுக்கு வயது எண்பத்தி ஏழு! ருக்மணியின் கையால் ஒரு டம்ளர் பால் வாங்கிக் குடித்துப் படுத்தவர், காலையில் எழுந்திருக்கவே இல்லை.

பெரிய கிரிமினல் லாயர் ஶ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதனிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பல வருடங்கள் வேலை செய்ததில் திருமலைக்கு சட்டப்புத்தகங்களின் பக்கங்கள் அத்தனையும் அத்துப்படி. வாஞ்சியின் வாதப் பிரதிவாதங்களின் கூர்மைக்கு, திருமலை தரும் சரியான தரவுகளின் பங்கு கணிசமானது. ‘திருமலை சொன்னா எல்லாம் சரியாகத்தான் இருக்கும்; திரும்பவும் அதை சரிபார்க்கத் தேவையில்லை’ என்ற நம்பிக்கை வாஞ்சிக்கு. வழக்கு வியாஜ்ஜியங்களுடன் வருபவர்கள், திருமலையைப் பார்த்த பிறகே, அவரது அனுமதியுடன் வாஞ்சியைப் பார்த்த சம்பவங்களும் உண்டு!

ஜெ. பாஸ்கரன் அவர்களின் எழுத்தில் உருவான முழுக்கதையும் கல்கி பக்கத்தில் படிக்கலாமே! படிக்க சுட்டி கீழே!


*****

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்



வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

  1. பாகீரதி தளத்தில் உங்கள் பயணக்கட்டுரைக்கு பாராட்டுகள்..

    அப்பா மகன் வாழ்க்கைப்பாடம் அருமை.

    88 வயது பெண்மணியை பாவை என்றழைப்பது என்மனத்துக்கு பொருந்தவில்லை!!
    மலையாளமொழிப் பாடல் பின்னர் கேட்கவேண்டும்.  சுவாசமே என்றதும் எனக்கு தெனாலி பாடல் நினைவுக்கு வருகிறது!

    நட்பின் வாசகம் நன்று.

    கல்கி பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    மரத்திடம் பேசுவது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பயணப் பதிவைப் படித்து ரசிக்கிறேன். படங்கள் இல்லாத்து பெரும் குறை. நான் எழுதும்போது நிறைய படங்களைப் பகிர்வேன். உங்கள் பயணம் வித்தியாசமானது (கிடைத்த பேருந்து, 12-14 கிமீ நடை என).... நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகீரதி தளத்தில் பயணக் கட்டுரைகளை வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி. படங்கள் அங்கே பகிரவில்லை. எனது பக்கத்தில் வெளியிடும்போது படங்கள் மற்றும் காணொளிகளுடன் வெளியிடுகிறேன். உங்கள் பதிவினையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. சமீபத்தில் ஆயிரம் பலாப்பழங்கள் கொடுக்கும் மரம் பற்றிப் படித்தேன். இந்த வருடம்தான் பலாப்பழம் வாங்கி கட் பண்ணலை. பலாச்சுளைகள் வாங்குகிறேன்.

    நிறைய காய்க்க இத்தகைய தெக்கினிக்குகள் படித்திருக்கிறேன். மரங்களுக்கும் பார்வை உண்டு நாம் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியும் என்னும்போது, தனிமையான இடம் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் பழங்கள் கொடுக்கும் மரம் - ஆஹா. இந்த வருடம் நான் இன்னும் பலா சுவைக்கவில்லை. சென்ற தமிழகப் பயணத்தின் போதும் சுவைக்க இயலவில்லை - கடைகளில் கிடைத்தாலும் ஏனோ வாங்கத் தோன்றவில்லை.

      //நாம் பேசுவதை புரிந்து கொள்ள முடியும் என்னும்போது, தனிமையான இடம் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?” ஹாஹா நல்ல சந்தேகம். அப்படியே கேட்டாலும் அவை நம்மிடம் பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் தனிமை கிடைத்து விடும் என்று நம்பலாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பால்கனிபாவை பாட்டியின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டும் - அதுவே நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. வாழ்க்கை பாடம் அருமை.

    பாடல் கேட்கிறேன்.

    பாட்டி எங்கள் நினைவுகளிலும் நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பாகீரதி தளத்தில் உங்கள் பயணக் கட்டுரையை வாசிக்கிறேன் ஜி. படங்கள் அங்கு போட முடியவில்லையா? படங்களே இல்லாமல் என்னவோ போல் இருக்கு. அங்கு கருத்தும் இட முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். ப்ளாகர் ஐடி யிலிருந்து. இதுவரை மூன்று பகுதியும் வாசித்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகீரதி தளத்தில் பயணக்கட்டுரைகள் வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. படங்கள் சேர்ப்பதில் சிறு குழப்பம். எனது பக்கத்தில் வெளியிடும்போது படங்கள் மற்றும் காணொளிகளுடன் வெளியிடுவேன். மொத்தம் நான்கு பகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஜி! ஆஹா! இரு தினங்களுக்கு முன் தான் இந்தக் க்தையை - எதிரொலி - கதையை என் தங்கை பேரன் பேத்திக்குக் குரல் பதிவாக அனுப்பினேன். சின்ன குழந்தைகள். முதலில் ஆங்கிலத்திலும் அப்புறம் தமிழிலுமாக...

    பால்கனிப்பாவை - நல்ல பெயர். இப்படியான பாட்டிகள் உண்டு எனக்கும் அனுபவம் உண்டு சிறு வயதில். அதன் பின் கொஞ்சம் வருடங்கள் அப்புறம் நகரவாழ்க்கைக்கு வந்த பிறகு Missing!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகர வாழ்க்கையில் இப்படியான பாட்டிகள் குறைவு - உண்மை.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நானும் மரங்களும் பதிவை மிகவும் ரசித்து வாசித்தேன் ஜி. வாசிக்கும் போதே ஆஹா நானும் இப்படிப் பேசுவதுண்டே மரங்களுடன் செடிகளுடன்....உண்மை அதுங்களோட நாம தொட்டுக் கட்டிக் கொண்டு பேசினால் அதுங்களும்மும் உணர்வு உண்டு என்பது உண்மை எனக்கும் அனுபவம் உண்டு. தட்டிக்கொட்டாம நானும் இதைச் சார்ந்த ஒரு கதை எழுதி வைத்திருப்பது இந்தப் பதிவை வாசித்ததும் நினைவுக்கு வந்தது. முதலில் அதை எடுத்து திருத்த வேண்டும். இப்போதைய மன நிலையில் அதை வாசித்துப் பார்க்க வேண்டும்!!

    //மனிதனுக்குத் தான் ஆறறிவு என்றில்லை, மரங்களும் மிருகங்களும் நம்மை போலவே உணர்ச்சிகள் மிக்கவை என்பதை ஏனோ நாம் உணர்ந்து கொள்ள தவறிவிடுகிறோம்.//

    உண்மை உண்மை

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மரங்களும் என்ற தலைப்பில் வெளியிட்ட முந்தைய பதிவினை ரசித்து வாசித்தமைக்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. சுவாசமே இப்போதுதான் கேட்கிறேன் ஜி. நல்லாருக்கு!! இசை ஆரம்பம் மென்மையாக இருந்தது ஸ்வாசமோ மேல் சுருதிக்குப் போகும் போது இசை கொஞ்சம் கூடுகிறதோ ...ஆனால் பிடித்தது. இசை...

    கல்கி கதை ஏற்கனவே வாசித்துவிட்டேன்...கல்கி ஆன்லைன் அவ்வப்போது வாசிக்கிறேன்....நேரம் கிடைக்கும் போது...வாசிக்கும் ஆர்வம், எழுதவும் ஆர்வம் நிறைய இருக்கு இருந்தாலும் பல வேலைகள் எல்லாம் செய்ய பல சமயங்களில் முடிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கியில் அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது.

      கீதா

      நீக்கு
    2. ரசித்த பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இனிமையான பாடல்கள் தான் அதிகம் பிடிக்கிறது. அதிரடி பாடல்கள் கேட்கப் பிடிப்பதில்லை கீதா ஜி.

      கல்கியில் கதை வாசித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. கல்கியில் படித்த கதை உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. நட்பு - வாசகம் அருமை...உண்மை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவில் வெளியிட்ட வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....