ஞாயிறு, 11 ஜூன், 2023

வாசிப்பனுபவம் - ரங்கா Vs ரங்கா பாகம் 2 - அஜுத்யா காந்தன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் அஜுத்யா காந்தன் அவர்கள் எழுதிய “ரங்கா Vs ரங்கா பாகம் - 2” எனும் மின்னூல். மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 367

விலை: ரூபாய் 240/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


ரங்கா vs ரங்கா: பாகம் - 2 (Tamil Edition) eBook : Kanthan, Ajudhya: Amazon.in: Kindle Store


******* 



பாகம்-2 என்று சொல்லும் போதே இந்தக் கதைக்கு பாகம் ஒன்றும் உண்டு என்பது உங்களுக்கு விளங்கும்.  இப்படி பாகங்கள் கொண்ட நூலினை வாசிப்பதில் ஒரு சிக்கல்! தொடர்ந்து வாசிக்க வேண்டியிருக்கும் - இந்த மாதம் முதல் பாகத்தினை வாசித்து விட்டு அடுத்த மாதம் இரண்டாம் பாகம் வாசித்தால், முதல் பாகத்தில் படித்த சில விஷயங்களை நாம் மறந்து விடக் கூடும்.  இரண்டு பாகங்களுக்கே இப்படி என்றால், போட்டியில் உள்ள ஒரு நூலுக்கு மொத்தம் நான்கு பாகம்! மாதம் ஒரு பாகம் என்றால், நான்கு மாதங்கள் வரை அந்தக் கதையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்! மறதி இருப்பவர்களுக்கு இது கொஞ்சம் கடினமான விஷயம் என்பதை இங்கே பதிவு செய்து விட்டு, இன்றைக்கு பார்க்கப் போகும் நூலினை குறித்து எழுதத் தொடங்குகிறேன். 


இரண்டாவது பாகம் என்பதால் முதல் வேலையாக, நூலின் முதல் பாகத்தினை வாசித்தேன் (சென்ற மாதப் போட்டியில் இருந்தாலும், வாசிக்க இயலவில்லை!) முதல் பாகம் குறித்து சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். நூலில் இரண்டு ரங்காக்கள் - ரங்கா எனும் மூதாட்டி - அவரது வளர்ப்பில் வளரும் பேத்தி ரங்கா!  வீட்டுச் சூழல்கள், பேத்தி ரங்கா பார்க்கும் பல குடும்பங்களில் இருக்கும் ஆண்களின் நடவடிக்கைகள் அவளை ஆண்களை வெறுப்பவளாக மாற்றி விடுகிறது.  அவளுடனேயே பாட்டி வீட்டில் வளரும் வாசு - பாட்டி ரங்கா, வாசுவையும் வளர்க்கிறார் - வாசுவின் பெற்றோர் காலமாகிவிட, அவனுக்கென்று யாரும் இல்லை என்பதால்! வாசு மட்டுமே பேத்தி ரங்காவினைப் பொறுத்த வரை நல்லதொரு தோழன், சகோதரன். மற்ற ஆண்கள் அனைவரின் மேலும் ஒரு வெறுப்பு. தனக்குப் பிறகு பேத்தி ரங்காவிற்கு யாருமே இல்லாமல் போய்விடுமோ என்று அவளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் பாட்டி ரங்கா. ஆனால் பேத்தி ரங்கா எடுத்த முடிவு கொஞ்சம் வித்தியாசமானது - நம் நாட்டின் சூழலுக்கு சரியில்லாதது!  அப்படி எடுத்த முடிவு - திருமணம் செய்து கொள்ளாமல், Test Tube Baby முறையில் யாராவது ஒரு டோனர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவு.  அவளுக்கு இரட்டை குழந்தைகள் - ஆண் ஒன்று, பெண் ஒன்று இப்படி பிறக்கிறது.  தகப்பன் யார் என்று தெரியாமல், தாய் மட்டுமே இரண்டு குழந்தைகளை வளர்ப்பது இந்த சமுதாயத்தில் சாத்தியமா?  அவளுக்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பதெல்லாம் சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார் முதல் பாகத்தில்! 


சரி இரண்டாம் பாகத்திற்கு வருவோம். பேத்தி ரங்கா குழந்தை பெற்றுக் கொள்வது, பாட்டி ரங்காவின் பால்ய கால நண்பரும், மருத்துவருமான சேதுராம் அவர்களின் மருத்துவமனையில்! மருத்துவர் சேதுராம் அவர்களின் பேரன் உபேந்திரா - அவர் ஒரு வக்கீல்.  பேத்தி ரங்காவும் ஒரு வக்கீல்.  எப்போது சந்தித்தாலும் உபேந்திரா மற்றும் ரங்கா ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  அதிலும் ரங்கா, உபேந்திராவினை இரண்டு வழக்குகளில் வென்றுவிட, இருவரும் பாம்பும் கீரியும் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  திருமணமே ஆகாமல், குழந்தை பெற்றுக் கொண்ட ரங்கா மீது அப்படி ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை உபேந்திராவிற்கு! ஆனால் அவனுக்கு தெரியாத ஒரு விஷயம் - அந்த இரண்டு குழந்தைகளுக்கான விந்தணு அவனிடமிருந்து எடுக்கப்பட்டது என்பதும், அதனால் அக்குழந்தைகளின் தகப்பன் அவனே என்பதும்.  மருத்துவமனை அவர்களுடையது என்பதால் ஒரு சோதனைக்காக விந்தணுக்களைக் கொடுத்திருக்க, கல்யாணமே வேண்டாம் என்று சுற்றிக் கொண்டிருந்த அவனையும், அதே எண்ணத்தில் ஆண்கள் மீது வெறுப்பாக இருந்த ரங்காவையும் முடிச்சுப் போட்டிருக்கிறார்கள் - இருவருக்குமே தெரியாமல். 


தனது குழந்தைகள் என்று தெரிந்ததும், உரிமை கோரி வழக்கு போடுகிறான் உபேந்திரா.  தீர்ப்பு அவனுக்கு சாதகமாகி விட, அதன் பிறகு என்ன நடக்கிறது. தந்தை யாரென்று தெரியாமல் குழந்தைகள் வளர்ப்பதில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகிறது, சமுதாயத்தில் அவளுக்குக் கிடைத்த வேதனைகள், தீர்வு தான் என்ன என்பதையெல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார் கதாசிரியர் அஜுத்யா காந்தன்.  உபேந்திரா - ரங்கா ஆகியோர் திருமணம் புரிந்து கொண்டார்களா? அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள நூலாசிரியரின் ரங்கா Vs ரங்கா மின்னூலை வாசிக்கலாம்.  


வித்தியாசமான ஒரு கதைக்கருவினை எடுத்து, அதில் உள்ள பிரச்சனைகளையும் நாட்டு நடப்பையும் சொல்லி இருக்கும் நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  இன்றைக்கு சமுதாயத்தில் இப்படியான சில Single Parent-கள் இருந்தாலும் அவர்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளை இந்த நூல் வழி பார்க்கலாம்!


*******


எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்ரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…. 

16 கருத்துகள்:

  1. கதையின் முடிச்சை தெரிந்து கொண்டேன்.  இப்படி பெரிய நாவல்கள் எல்லாம் எழுதுவது சிரமம்.  செயற்கை முறையில் குழந்தை பெறும்போது விந்தணு யாருடையது என்று தெரியாமல்தான் கொடுப்பார்கள்.   பின்னர் அது யாருடையது என்று தெரிந்தால் அது சட்டப்படி தவறு.  அப்படி இருக்கையில் உபேந்திரா எப்படி வழக்கில் வெற்றிபெற முடியும்?  என்னவோ...  அது சரி, 240 ரூபாய் கொடுத்ததெல்லாம் கிண்டிலில் நூல்கள் படிப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 240 ரூபாய் அல்ல அதற்கு மேலும் கொடுத்து நூல் வாங்குபவர்கள் உண்டு. அதை விட இம்மாதிரி நூல்களை மாதாமாதம் Kindle membership தந்து படிப்பவர்கள் தான் அதிகம் ஶ்ரீராம். நான் கூட அப்படி படித்த நூல்கள் தான் அதிகம். தற்போது membership இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. வித்தியாசமான கதைக்களம் போல இருக்கிறது.

    நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கதைக்களம் தான் கில்லர்ஜி.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    கதை விமர்சன பதிவு அருமை கதை வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரம் நம்நாட்டில் இல்லை யென்றால், இப்போதுள்ள உலக விரிததில் விஞ்ஞான வளர்ச்சியில் ஆங்காங்கே நடப்பதுவோ எனவும் எண்ண வைக்கிறது. இருவரும் திருமணம் என்ற பந்தத்தில் இன்னமும் சிக்காததினால் முடிவு சுபமாகத்தான் அமைந்திருக்குமெனவும் நினைக்கிறேன். கதாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசிப்பனுபவம் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் அட்டகாசம்...ரொம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நம் நாட்டின் சூழலுக்கு சரியில்லாதது! அப்படி எடுத்த முடிவு - திருமணம் செய்து கொள்ளாமல், Test Tube Baby முறையில் யாராவது ஒரு டோனர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவு. //

    இப்போது பரவலாக இருக்கிறது ஜி. இது பற்றி ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் வாசிக்க நேர்ந்தது. அதை அடிப்படையாக வைத்து...நான் ஒரு பெரிய கதை எழுதத் தொடங்கி...அது அப்படியே இருக்க...அதன் அடிப்படையில் ஆனால் கொஞ்சம் வேறு வகையில் எஉதி முடித்தும் விட்டேன்...தட்டிக் கொட்ட வேண்டும்...,..என்னவொ அதை மேம்படுத்த மனம் இல்லாமல் இருக்கிறது.

    இப்போது நம் நாட்டுச் சூழல் நிறையவே மாறி விட்டது ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எழுத்தில் ஒரு கதை - வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். முடிந்த போது எழுதி வெளியிடுங்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வித்தியாசமான கரு...நானும் இதன் அடிப்படையில் எழுதியிருப்பதால் அது கொஞ்சம் வேறு டைப் கரு....அதற்குச் சட்டம் எதூம் எதிரல்ல என்றாலும் தெரிந்து கொள்ள தேடிய பொது அதற்காக நிறைய தெரிந்துகொள்ள நேர்ந்தது. எனவே சில கேள்விகள் எழுகின்றன.....ஒரு வேளை கதையை முழுவதும் வாசித்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கதையையும் வாசிக்க ஆவல். இந்த நூலும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள் கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. விமர்சனம் நன்று. வித்தியாசமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....