செவ்வாய், 6 ஜூன், 2023

கதம்பம் - சென்னை ட்ரிப் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பாபா ஹர்பஜன் சிங் கோவில்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


சென்னை ட்ரிப் - சில சிந்தனைகள் - 01 June 2023:



ஊர் கூடி தேரை இழுத்தால் தான் நிலையிலிருந்து கிளம்பும்! அது போல் ஒரு திருவிழா என்றாலும் சரி! திருமணம் என்றாலும் சரி! தனியொருவரால் எதையும் செய்ய இயலாது! உறவுகள் கூடி ஒத்துழைப்பு கொடுத்து உதவினால் தான் நிகழ்வும் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும்!


பெரிதாக திட்டங்கள் ஏதுமின்றி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டுமே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்! எங்கு சென்றாலும் அங்கு நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளை செய்து தந்தால் அவர்களுக்கும் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்! இது எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!


உறவுகளுடன் இனிமையாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் நிகழ்வில் பங்கேற்று சுவையான விருந்தினை ரசித்து உண்டு என்று இரண்டு நாட்கள் சென்றன! நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த உறவுகள் ஒவ்வொருவராக கிளம்ப நாங்கள் அங்கேயே இருந்து விட்டோம்! மகளுக்கு கல்லூரி துவங்கி விட்டால் இனி இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிதாகி விடுமே!


அதே ஏரியாவிலிருந்த தோழி ஒருவரை முடிந்தால் பார்த்து விட்டு வர வேண்டும் என்று நினைத்திருந்தேன்! டெல்லியிலிருந்து தொடரும் நட்பு! அன்று இருந்த நட்புவட்டத்தில் தற்சமயம் ஆளுக்கொரு புறமாக இருக்கின்றனர்! அவரது வீட்டின் அருகில் சோழர் காலத்து கோவில் ஒன்று அமைந்துள்ளது!


தர்மலிங்கேஸ்வரர் கோவில் போகணும்! என்று ஆட்டோ ட்ரைவர் ஒருவரிடம் கேட்க, 80 ரூ ஆகும்மா! என்றார்!


இதே ஏரியா தானே! 60 ரூ தான்! 


கட்டாதும்மா! என்று சொல்லவும் நகர்ந்தேன்!


அடுத்து வந்த ஆட்டோவில் கேட்டதும், அந்தக் கோவில் எங்கே இருக்குன்னு தெரியாதும்மா! நீங்களே வழி சொல்லுங்க! என்றார் ட்ரைவர்.


எனக்கும் தெரியாது! நானும் இந்த ஏரியாவுக்கு புதுசு! நீங்க மேப்ப பார்த்துக்கோங்க! ஆனா நான் 60 தான் தருவேன்! என்று சொல்லி அமர்ந்து கொண்டேன்…:)


'தன்மீச்வரம்' என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தக் கோவிலில் தர்மலிங்கேஸ்வரராக ஈசனும், 'சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த'' என்று வேத மந்திரத்தில் சொல்லப்படுவதில் சர்வமங்கள மங்களாம்பிகையாக அம்பாளும் இங்கு அருள்பாலிக்கின்றனர்! சிறிய கோவில் தான்! சென்ற ஆண்டு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது!


வெளிப்பிரகாரத்தில் புராணக் கதைகளை பறைசாற்றும் விதமாக நிறைய ஓவியங்கள் காணப்பட்டன! சிவ பக்தியில் மிஞ்சிய நாயன்மார்களுக்கென தனிச் சன்னிதிகளும் இங்கே உள்ளது! நாங்கள் உள்ளே சென்ற சமயம் சில பெண்மணிகள் கூடி அங்கே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருக்க நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன்!


மனதுக்கான நிறைவையும், நிம்மதியையும் பெற்ற பின் தோழியையும் சந்தித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்! 


தோழி வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு வண்டி நிறைய கேரிபேக்களில் சிறிய மூட்டை போல் கட்டப்பட்டிருந்த எலுமிச்சம்பழங்களை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார் ஒரு வியாபாரி! 16 பழங்கள் சேர்ந்த மூட்டையின் விலை 20 ரூ! சிறிய பழம் தான் என்றாலும் நன்றாக இருந்தது! வாங்கி handbagல் பத்திரப்படுத்திக்  கொண்டேன்..🙂


வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் இந்த தன்மீச்வரக் கோவிலுக்கு சென்று வரலாம்! வீட்டுக்குத் திரும்பும் வழியில் 'வரசித்தி' விநாயகர் கோவிலுக்கும் சென்று தரிசித்துக் கொண்டேன்! இப்படியாக இந்த முறை சென்னைப் பயணம் மனதுக்கு இணக்கமான பயணமாக அமைந்தது!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

12 கருத்துகள்:

  1. செல்கின்ற இடங்களில் நம்மாலான உதவிகளை செய்வது சிறப்பு.  நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் போங்க என்று சிபாரிசு செய்திருக்கிறீர்கள் சரி, ஆனால் எந்த ஏரியா என்றே சொல்லவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோவில் நங்கநல்லூரில் அமைந்துள்ளது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. காலையில் இனிய தரிசனம்..

    சர்வ மங்கலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. எங்கு சென்றாலும் அங்கு நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளை செய்து தந்தால் அவர்களுக்கும் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்!//

    ஆமாம் அதே அதே...இது ஒரு நல்ல விஷயம்.

    அட! நங்கநல்லூர் கோயில், சென்னையில் இருந்தப்ப சென்றிறுக்கிறேன். ஆஞ்சு கோயில் செல்லும் போதெல்லாம் இதுவும் சேர்ந்து கொள்ளும்.

    நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியிலிருந்து தோராயமாக 2 கிமீ தூரத்தில் இருக்கிறது.

    கோயில் பற்றிய விவரணம், அனுபவங்கள் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. கோயில் குறித்த விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....