புதன், 31 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Only mountains can feel the frozen warmth of the sun through snow’s gentle caress on their peaks. – Munia Khan


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


******


தொடரின் சென்ற பகுதியில் MG Market பகுதியில் உலா வந்த பிறகு,  அந்த இடத்திலிருந்து நடந்தே தங்குமிடம் திரும்பி இரவு உணவிற்குப் பிறகு ஆழ்ந்த உறக்கம் குறித்து எழுதி  இருந்தேன். அடுத்த நாள் விடியலில் தயாராகி ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை முன்னரே எங்கள் பயண ஏற்பாட்டாளர் செய்திருந்தார்.  நாங்கள் அன்று செல்ல வேண்டிய இடத்திற்கு நினைத்தபடி சென்று விட முடியாது.  அப்படி என்ன இடம் என்று கேட்கிறீர்களா? சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் சீன எல்லைப் பகுதியான NATHULA PASS என்ற இடம் தான் அந்த இடம்.  முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தினர் மட்டுமே இருக்கக் கூடிய இடம்.  வழியில் சில கிராமங்கள், கடைகள் என இருந்தாலும் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.  ஆகையால் அந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டுமெனில் முன்னரே அனுமதி பெற வேண்டும்.  அந்த அனுமதிக்கு Protected Area Permit (PAP) என்று பெயர்.  இந்த அனுமதியைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  அவை குறித்த தகவல்கள் கீழே உள்ள சுட்டியில் கிடைக்கும்.  ஒரு தனி நபருக்கு 200/- வரை கட்டணம் உண்டு.  நீங்கள் பயணிக்கும் வாகனத்திற்கும் சேர்த்து நீங்கள் அனுமதி கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.  இவை எல்லாவற்றையும் பயண ஏற்பாட்டாளர் மூலம் செய்து கொள்வது நல்லது. 


PAP - Sikkim Tourism


காலை நேரத்திலேயே நாங்கள் அனைவரும் குளிருக்குத் தகுந்த உடைகளை அணிந்து கொண்டு வாகனங்களில் புறப்பட்டோம்.  இந்த சிக்கிம் பயணத்தில் எங்களுக்கு அமைந்த வாகன ஓட்டி ஒரு ஷோக்குப் பேர்வழி.  நிறைய பேசுபவர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றாலும் அவரது பேச்சில் கொஞ்சம் ஆபாச நெடி வீசும்!  அவர் நல்ல திறமைசாலி என்றாலும் சிலருக்கு அவருடைய பேச்சு அருவெறுப்பு தரக்கூடும்.  அவர் ஒரு YOUTUBER/VLOGGER என்பது கூடுதல் தகவல்.  PM GURUNG என்பது அவரது பெயர்.  அவரது YOUTUBE தளத்தில் சிக்கிம் குறித்த நிறைய காணொளிகள் உண்டு.  உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் அவரது தளத்தில் உள்ள காணொளிகளை கண்டு ரசிக்கலாம்.  சமீபத்தில் அதாவது பதினைந்து நாட்களுக்கு  முன்னர் கூட NATHULA PASS குறித்த ஒரு காணொளி அவரது YOUTUBE தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  GANGTOK-லிருந்து NATHULA PASS வரையான பயணம் குறித்த அவரது சமீபத்திய காணொளியைப் பார்க்க விரும்பினால் சுட்டி கீழே. 


Gangtok to Nathula Pass | Now' update weather | day 16/May/2023 Sikkim tour /A2Z information - YouTube


PM Gurung அவரது வாகனத்தினைச் செலுத்த எங்கள் பயணம் சிக்கிம் மாநிலத் தலைநகர் Gangtok-லிருந்து அதிகாலை நேரத்தில் தொடங்கியது.  நீண்ட நெடிய மலைப்பாதையில் பயணிக்க இருக்கிறோம் என்பதால் சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம்.  எங்கள் குழுவில் இருந்த இரண்டு பேருக்கு மலைப்பகுதியில் பயணிப்பதில் இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்தன என்பதால் அவர்கள் முதல் நாள் வாங்கிய புளிப்பு மிட்டாய்களை நிறைய வைத்திருந்தார்கள்.  பொதுவாக நான் வாகன ஓட்டியின் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதே வழக்கம் - என் உயரத்திற்கு கொஞ்சம் காலை நீட்டி அமர அந்த இருக்கை தான் வசதி.  ஆனால் வேறு ஒரு நண்பர் பின்னால் அமர்ந்தால் எனக்கு அதிகம் தலைசுற்றி வாந்தி வருகிறது என்று சொல்லி முன்னால் அமர்ந்து பயணித்தார். அதனால் சில காட்சிகளை என்னால் படமோ அல்லது காணொளியோ எடுக்க முடியவில்லை.  வழி நெடுக மலை, மலை, மலையைத்தவிர வேறில்லை.  சில கிலோமீட்டர் பயணம் முடித்த பிறகு நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு VIEW POINT!  அங்கே இருந்து பார்க்க - ஆஹா கண்கொள்ளா காட்சி அது.  உங்கள் கண் முன்னே நாம் வரலாற்றுப் பாடத்தில் படித்த கஞ்சன்ஜங்கா மலைத்தொடர் அதுவும் பனிபடர்ந்த சிகரமாக காட்சி அளிக்கிறது. 









எங்கள் வாகன ஓட்டி...




சாலைகள்….




எங்கள் வாகனத்திலிருந்து இறங்கிய நாங்கள் சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று அந்த சூழலையும் இயற்கை அன்னை நம் கண்களுக்கு படைத்திருக்கும் விருதினையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.  அந்த இடங்களில் நிறைய கடைகள் - கடைகளில் ஜரூராக குளிருக்கு ஏற்ற தொப்பிகள், கையுறைகள், காலுறைகள், ஷால்கள் என பலவும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  இந்த இடங்களிலும் கடைகளை வைத்து, விற்பனையை கவனித்தது எல்லாமே பெண்கள் மட்டுமே.  பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை நிர்வாகம் செய்வதிலிருந்து பொருள் ஈட்டுவதையும் செய்கிறார்கள்.  ஆண்கள் அந்த அளவுக்கு குடும்ப விவகாரங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் குடிப்பதிலும் கும்மியடிப்பதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  பொருட்கள் விற்பனை மட்டுமல்லாது குடிநீர், தேநீர், மோமோஸ் என உணவு சம்பந்தமான கடைகளும் கிடைக்கிறது. எங்கள் குழுவினர் அனைவரும் இந்த இடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்து இயற்கை எழிலை ரசித்ததோடு, நிழற்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தோம்.  


இந்த மலைப்பிரதேசத்தில் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என நினைத்தால் அப்படி இல்லை என்று அங்கே இருப்பவர்கள் சொல்லக்கூடும். வருடத்தின் பல நாட்கள் அதிக குளிர், பனிப்பொழிவு என மிகவும் கடுமையான நாட்களாகவே அமைந்து விடுவதால் இங்கே வாழ்க்கை சுலபமானதாக இருப்பதில்லை. அதிக உழைப்பு தேவையாக இருக்கிறது.  இவர்களின் பொருளாதாரம் முழுக்க முழுக்க சுற்றுலா வருபவர்களை நம்பியே இருக்கிறது.  சுற்றுலா வாசிகள் வருகை குறைந்தால் இவர்கள் அனைவரும் அந்த இடங்களிலிருந்து புறப்பட வேண்டியிருக்கும்.  அனைவரும் சுற்றுலாவாசிகள் வரும் சமயத்தில் மட்டுமே சம்பாதிக்க முடியும்.  அதிலும் குளிர் அதிகமாக இருந்து, பனிப்பொழிவு அதிகமாகி விட்டால் இவர்கள் வருமானம் குறைந்து விடும் என்பதால் கிடைத்த காலத்தில், கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  நாங்கள் சென்ற போதும், நிறைய சுற்றுலா பயணிகள் வருகை இருந்ததால் அங்கே இருந்த மக்கள் அனைவருமே “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதை சரிவர பயன்படுத்திக் கொண்டார்கள்.  எங்கள் குழுவினர் சிலரும் அந்த ஊர் மக்களிடம் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். 


கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்ல வேண்டும்! அத்தனை அழகு. பனிமூடிய மலைச்சிகரங்கள், அதன் மேல் சூரியனின் கிரணங்கள் பட்டு பொன் போல ஜொலிக்கும் காட்சி, நவம்பர் மாதத்தின் குளிர்ந்த காற்று என அந்த இடம் மிகவும் ரம்மியமானதாக இருந்தது.  எங்களுக்கு அந்த இடத்தினை விட்டு அகலவே மனதில்லை. ஆனாலும் நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பது மட்டுமல்லாது, செல்ல வேண்டிய இடம் இன்னும் முக்கியமானதும், அவசியம் பார்க்க வேண்டியதும் ஆன NATHULA PASS என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.  வழியில் ஒரு சிறு கடை அருகே வாகனங்கள் நிற்க அங்கே தேநீர் அருந்தினோம் - எங்கள் ஓட்டுநருக்கும் சிரம பரிகாரம் தேவை அல்லவா?  அந்த இடத்தில் தேநீர் அருந்தியதோடு, எங்களுக்கான மத்திய உணவுக்கும் சொல்லி வைத்து விட்டார் எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட நபர்.  சிறிது ஓய்வுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சீன எல்லையை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.  சீன எல்லை அனுபவங்கள் எப்படி இருந்தன, அங்கே என்ன பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

18 கருத்துகள்:

  1. இந்திய ராணுவம் இருக்கும் பகுதி.. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. மலைச் சிகரங்கள் அழகு அடுத்து சீன எல்லையை காண ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. மலைச்சிகரங்கள் அழகு. விரலினால் பிடிக்க முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரலினால் பிடிக்க முடியவில்லையா..... பிடித்தேன். நண்பர் படம் எடுக்கவில்லை.

      தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. PM Gurung யுட்யூப் சென்று பார்த்துவிட்டேன். ஹையோ என்ன சொல்ல? சிக்கிம் பனி மழையில் அவர்கள் புதுவருட கொண்டாட்டம் என்று சொல்லி போட்டிருக்கும் யுட்யூப் காணொளியைக்கொஞ்சம் பார்த்தேன் அவர் பேசுவது புரியவில்லை என்றாலும் இடம் தானே நமக்கு!! குறித்து வைத்துக் கொண்டேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பார்ப்பேன். எனக்குப் பிடித்த விஷயம் ஊர் சுற்றுவது. இப்படியேனும் பார்த்துக் கொள்ளலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது பக்கத்தில் நிறைய காணொளிகள் உண்டு. பார்த்து ரசிக்கலாம் - நேரம் கிடைக்கும்போது.

      தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. சீன எல்லை - ஆஹா thrilling ஆக இருக்கு வாசிக்கும் போதே. Nathula Pass பார்க்க ஆர்வம் மேலிடுகிறது அதுவும் நம்ம ராணுவம் இருக்குமே.

    கஞ்சன்ஜங்கா - பார்க்க ரம்மியம். இது போன்ற இடங்களில் பார்த்துவிட்டு வர மனசே இருக்காது. சாலைகள் மலைகள் அழகு, நானும் கூடவே பயணிப்பது போன்ற உணர்வு. படங்கள் எல்லாம் செம

    மகனும் தில்லி வழியாக வந்த போது விமானம் தில்லியை எட்டும் முன் இமயமலைப்பகுதியின் மேல்தானே பறக்கும் விமானம். மகன் இமயமலையை படங்கள் எடுத்திருந்தான். கஞ்சஞ்சங்காவும். அவன் வருத்தப்பட்டான் மலை மீது பனியே இல்லை...பருவகாலங்கள் எப்படி மாறி வருது என்று .....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருவ காலங்களில் மாற்றம் நிறையவே நடக்கிறது. பல விஷயங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் கீதா ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் வாஸந்தியின் "ஆர்த்திக்கு ஏன் கன்னம் சிவந்தது"' கதையில் இடம் பெறும். காலை கஞ்சஞ்சஜங்கா மலைசிகரத்தை பார்ப்பதே அழகு. ஜன்னல் வழியே தினம் தரிசனம் செய்வது கதையில் இடம்பெறும்.

    பயணவிவரங்கள் அருமை. சுற்றுலா வருபவர்களை நம்பி பிழைப்பவர்கள் வாழ்க்கை மிகவும் கடினம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்த்திக்கு ஏன் கன்னம் சிவந்தது..... படித்ததில்லை. தலைப்பு படிக்கத் தூண்டுகிறது.

      பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  8. ஆஹா ...கண் கொள்ளா காட்சிகள் ...மிக சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....