வெள்ளி, 26 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“I think they should list shopping as a cardiovascular activity. My heart never beats as fast as it does when I see a ‘reduced by 50 percent’ sign.” — Sophie Kinsella, Confessions Of A Shopaholic (2009 American Film). 


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


******சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் Gகாங்டாக் நகரில் புத்தமத வழிபாட்டுத் தலம் ஒன்றையும், ஒரு சிறு அருவியையும் பார்த்த பிறகு எங்கள் வாகனங்கள் அனைத்தும் நகரின் பிரபலமான மார்க்கெட் ஆன MG Marg நோக்கி விரைந்தன.  மலைப்பகுதிகளில் உள்ள எல்லா நகரங்களிலும், குறிப்பாக ஷிம்லா, டார்ஜிலிங், நைனிதால் போன்ற மலைவாசஸ்தலங்களில் ஆங்கிலேயர்கள் Maal Road என்ற பெயரில் கடைகள் வரிசையாக அமைத்து இயற்கை எழிலை ரசித்தபடி அங்கே உலா வர ஏதுவாக அமைத்து இருந்தார்கள்.  அதே போல சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இலும் ஆங்கிலேயர்கள் ஒரு மால் ரோடு அமைக்கவில்லை என்றாலும் தற்போது அந்த நகரில் MG Marg என்ற பெயரில் ஒரு பிரபலமான ஷாப்பிங் பகுதி அமைந்திருக்கிறது.  விதம் விதமான கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் என மிகவும் அழகான இடமாக உருவாக்கி இருக்கிறார்கள்.  சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இன் இதயம் போன்றது இந்தப் பகுதி என்றும் சொல்லலாம். மொத்தமே ஒரு கிலோ மீட்டர் நீளம் தான் இருக்கும் இந்த MG Marg - MG என்ற பெயர் சுருக்கம் இவருடையது என்று நீங்கள் யூகித்து இருக்கலாம் - ஆம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பெயரில் தான் இந்த சாலை அமைத்து இருக்கிறார்கள்.  சாலையின் ஆரம்பத்தில் அவருடைய ஒரு பெரிய சிலையும் இருக்கிறது.  அந்த இடம் பலரும் நிழற்படம் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருக்கிறது. இந்த சாலையின் சிறப்பு என சில விஷயங்களைச் சொல்லலாம். இந்த ஒரு கிலோ மீட்டர் பாதையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை! எச்சில் துப்புவது, குப்பைகள் போடுவது, சிகரெட்-பீடி போன்றவை குடிப்பது என எதற்கும் அனுமதி இல்லை.  மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பதால் எப்போதும் அழகாகவே இருக்கிறது இந்த இடம்.  சுற்றுலாவாசிகள், உள்ளூர் மனிதர்கள் என அனைவரும் நாடும் இடமாக இந்த MG Marg அமைந்து இருக்கிறது.  செவ்வாய் கிழமைகளில் மட்டும் விடுமுறை விடப்படும் இந்த மார்க்கெட் தினமும் காலை 08.00 மணிக்கு திறந்தால் மாலை 07.00 (சில சமயங்களில் 09.00 மணி) வரை கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன.  மாலை நேரங்களில் இந்த இடமே ஜகஜ்ஜோதியாக இருக்கிறது.  எங்கேயும் ஒளிரும் அழகிய விளக்குகள், தண்ணீர் திவலைகள் திளைக்கும் நீரூற்றுகள், அங்கே வருபவர்கள் அமர்ந்து சூழலை ரசிக்கும் விதமாக, சாலையின் நடுவே அமைக்கப்பட்ட பெஞ்சுகள், அங்கே அமர்ந்து கொண்டு சூழலை ரசிக்கும் பெரியவர்களும், யுவதிகளும் என மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்த இடம் முழுவதும்! எங்கள் குழுவினர் அனைவரும் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் படையெடுக்க, நான் மீண்டும் தனியாக உலா வந்தேன்.  நிறைய கடைகள் - உணவு வகைகள், துணி வகைகள், அலங்காரப் பொருட்கள், பெண்களுக்கான விஷயங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள், மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் என பல விஷயங்கள் அங்கே விற்பனை ஆகின்றன.  விதம் விதமான தேயிலை தூள் மட்டுமே விற்கும் கடைகளும் நிறையவே அங்கே பார்க்க முடிந்தது.  அந்தக் கடைகளுக்குள் நுழைந்தால் விதம் விதமான தேநீர் வாசம்! சில கடைகளில் தேநீர் வாசம் என்றால் பல கடைகளில் அங்கே விற்கப்படும் விதம் விதமான உணவுப் பொருட்களின் வாசம் அங்கே உலா வரும் சுற்றுலாவாசிகள்/உள்ளூர்வாசிகளின் மூக்கில் நுழைந்து தங்களுக்கான வாடிக்கையாளர்களை வலைவீசிப் பிடிக்கின்றது. நாள் முழுவதும் பல இடங்களை பார்த்து விட்டு வந்த பின்னர், இந்த அழகான சூழலில் நடந்தபடியே பாரம்பரிய உணவு வகைகளை சுவைப்பதோடு, அந்த இடத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து சூழலை ரசிக்கலாம் என்பதும் நல்லதொரு வசதி.  பல சுற்றுலாவாசிகள் இங்கே வந்தாலும், உள்ளூர்வாசிகளும் இந்த இடத்தில் நிறைந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாலைப் பொழுதும் இங்கே வந்து பொழுதைப் போக்குவது அவர்களது வாடிக்கையாக இருக்கிறது.  பெரும்பாலான கடைகள் பச்சை வண்ணத்தில் மிளிர்கின்றன.  சாலையின் ஒரு ஓரத்தில் சுற்றுலா பயணிகள் தகவல் மையம் இருக்கிறது. அதன் அருகே ஒரு தற்காலிக மேடையும் அமைத்து இருக்கிறார்கள்.  அந்த மேடையில் அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.  நாங்கள் சென்ற நேரம் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்து, தங்களது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.  நீண்ட நேரம் இந்த சாலையில் நான் உலாவிக் கொண்டிருந்தாலும், எதுவும் வாங்கவில்லை.  என்னுடன் வந்திருந்த மற்ற அலுவலர்கள் அனைவரும் எதை எதையோ வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.  திரும்பவும் விமானத்தில் பயணிக்கும் போது பொருட்களின் எடை அனுமதிக்கப்பட்ட 15 கிலோவை தாண்டிவிடும் என்று எனக்குத் தோன்றியது.  ஆனால், குழுவாக இருப்பதால் என்போன்றவர்கள் பொருட்கள் குறைவாக வைத்திருந்தால் பிரச்னை இருக்காது என்பதும் மனதில் ஓடியது.  நான் பல கடைகளில் மகளுக்கு ஏதேனும் வித்தியாசமான பொருட்கள் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒன்றிரண்டு கைப்பைகள் பிடித்திருக்க, அவற்றை படம் எடுத்து அனுப்பி வைத்தேன்.  ஆனால் மகளுக்கு  அது அவ்வளவாக பிடித்திருக்கவில்லை என்பதால் வாங்கவில்லை.  அதுவும் நல்லதற்கே! மகளுக்கும் மனைவிக்கும் எது பிடிக்குமோ அவர்களே வாங்கிக் கொள்வது நல்லது தானே.  சிறிது நேரம் அந்த சாலையின் ஓரத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடியே ஒரு தேநீர் அருந்தினேன்.  ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனபிறகும் என்னுடன் வந்தவர்கள் அவர்களது ஷாப்பிங் முடித்திருக்கவில்லை.  நான்கு ஐந்து பேர் என்றால் வாகனத்தில் சேர்ந்து பயணித்து இருக்கலாம்.  தனியாக வாகனம் அமர்த்திக் கொள்ள எனக்கு மனதில்லை.  ஒரு கிலோ மீட்டர் தொலைவு தானே, மலைப்பாதையில், மேலும் கீழும் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டேன் - இருக்கவே இருக்கிறது Google Maps. பொதுவாக சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது மட்டுமல்ல, நடந்து செல்லும் போதும் Google Maps பயன்படுத்தினால் சில சமயங்களில் நன்றாக சுற்றவைத்துவிடும்! ஆனால் இந்த முறை பிரச்னை ஏதும் இல்லாமல் நேரடியாக எனது தங்குமிடத்திற்கு என்னால் Google Maps உதவியோடு சென்று சேர முடிந்தது.  ஆனால் அந்தப் பாதைகளில் பெரும்பாலும் தெரு விளக்குகள் இல்லை - இருந்தாலும் மிகவும் மங்கலாக இருந்தது.  தனியாக நடக்கும்போது, எதிரே பார்க்கும் உள்ளூர் வாசிகள் ஏனோ ஒரு வித விரோதத்துடன் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.  எனக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்றாலும், வட கிழக்கு மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு அவர் நடந்து வந்த போது சில தொல்லைகள் இருந்ததாம்.  அவர் பாதி வழி நடந்து வந்தபின்னர் தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஒரு டாக்ஸி பிடித்து வந்ததைச் சொன்னபோது, நல்லவேளை எனக்கு பிரச்னை ஏதும் இல்லாமல் போனதே என்று நினைத்துக் கொண்டேன்.  தங்குமிடத்திற்கு வந்து சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொண்ட பிறகு இரவு உணவுக்காக தங்குமிடத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று சேர்ந்தேன்.  நல்ல வேளையாக மதியம் இருந்தது போல அதிக கூட்டம் இல்லாமல் நாங்கள் மட்டுமே இருந்ததால் நின்று நிதானித்து, Buffet முறையில் வைக்கப்பட்டு இருந்த உணவை கவனித்து, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு சில நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவியபடி உண்ண முடிந்தது.  அடுத்த நாள் காலையில் விரைவாக தங்குமிடத்திலிருந்து புறப்பட வேண்டும் - நீண்டதொரு பயணம் காத்திருந்தது - என்பதால் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று கதவை தாளிடாமல் தூங்க ஆரம்பித்தேன் - எனது ரூம் பார்ட்னர் எப்போது வந்தார் என்று கூட தெரியாமல் நல்ல உறக்கம்! இப்படியாக சிக்கிம் தலைநகர் Gகாங்டாக் நகரில் எனது ஒரு நாள் கழிந்தது.  அடுத்த நாள் எங்களுக்கு என்ன அனுபவங்களைத் தந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

12 கருத்துகள்:

 1. என்ன விரோதம் அவர்களுக்கு நம்மேல்?  நடந்தே தங்குமிடம் சென்று விட்டீர்கள்.. எவ்வளவு நேரம் பிடித்தது?  ஷாப்பிங் இடத்தில நம்மோடு வந்த ஒருவரைக் காணோமே என்று மற்றவர்கள் தேடி இருக்க மாட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த தூரம் நடக்க எனக்கு சுமார் அரைமணி நேரம் ஆனது ஶ்ரீராம்.

   ஏதோ ஒரு வெறுப்பு.அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாநிலத்தவர்கள் மீது அதிக வெறுப்பு என சிலர் அங்கே சொன்னார்கள். காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று சொல்லவில்லை.

   தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 2. MG Marg - தரை மிக நன்றாகப் போட்டிருக்கிறார்கள். ஷிம்லா Maal Road கொஞ்சம் மலைப்பாங்காக இருக்கும் என்று நினைவு ஆனால் சுற்றிலும் ரசித்துப் பார்த்தபடி செல்லலாம். ஆனால் நாங்களும் அங்கும் எதுவும் வாங்கவில்லை சும்மா அந்த வழியாக நடந்து சென்றதோடு சரி.

  காந்தி சிலை இருப்பதாலும் அவர் பெயர் தாங்கிய சாலை என்பதாலும் இருக்குமோ!!? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் //எச்சில் துப்புவது, குப்பைகள் போடுவது, சிகரெட்-பீடி போன்றவை குடிப்பது என எதற்கும் அனுமதி இல்லை. //

  நல்ல விஷயம் இல்லையா!

  இரவுக் காட்சிப் படம் மிக அழகு! வெளிநாட்டுத் தெரு போல இருக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 3. என்னென்ன பொருட்கள் இருக்கின்றன புதிதாக வந்திருக்கின்றன என்று வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடிக்கும். சில கலைப்பொருட்களை ரசித்துப் பார்க்கவும் பிடிக்கும். ஆனால் வாங்கும் பழக்கம் மிகவும் குறைவு.

  ;அந்த மக்களுக்கு நம்மீது என்ன விரோதம் அலல்து நம்மூரில் இருப்பது போல் வழிப்பறி போன்றவையா? நம்மை வேற்று மனிதர்களாகப் பார்க்கிறாங்களோ? இந்திய மாநிலமாக இருந்தாலும்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் வேடிக்கை பார்க்கவே பிடிக்கும். பொதுவாக வாங்குவதில்லை.

   காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை கீதா ஜி.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. //நடந்து செல்லும் போதும் Google Maps பயன்படுத்தினால் சில சமயங்களில் நன்றாக சுற்றவைத்துவிடும்!// - ஐயர் மெஸ்ஸை வாரணாசி கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்க நான் கூகுள் மேப் உபயோகித்து கண்ட இடங்களில் சுற்றி, மனைவியின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ வாங்கியது நினைவுக்கு வருது. இதுக்கா இவ்வளவு அலட்டல் என்று சொன்னாள் ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /இதுக்கா இவ்வளவு அலட்டல்.....// ஹாஹா.....

   தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 5. MG Marg பகுதி அருமை.
  அமர்ந்து வேடிக்கை பார்க்க இருக்கைகள் போட்டு இருப்பது மகிழ்ச்சி.
  படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....