வியாழன், 20 ஏப்ரல், 2023

அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வர இருக்கும் பயணம் குறித்த பதிவுகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“IT TAKES COURAGE TO GROW UP AND LIVE LIFE IN A DIFFERENT WAY, BUT IT CAN ALSO TAKE COURAGE TO STAY AS YOU ARE.”

 

******


 

கடந்த சில மாதங்களாக, நடுவில் சற்றே இடைவெளியுடன், சென்ற ஏப்ரல் மாதத்தில், உத்திரப் பிரதேசம் மாநிலத்திற்குச் சென்று வந்த ஆறு நாட்கள் பயணம் குறித்து நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் 48 பகுதிகளாக இங்கே வெளியிட்டு வந்தேன்.  பயணம் சென்று வந்த பின் இத்தனை இடைவெளியில் பதிவுகள் எழுதுவது எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனாலும், இந்தப் பதிவுகள் வழி வலைப்பூவை வாசிக்கும் சில நபர்களுக்காவது தகவல்கள் பயனுள்ளதாக அமையும் என்பதாலேயே தொடர்ந்து பயணக் கட்டுரைகளை தொடராக இங்கே எழுதிக் கொண்டு இருக்கிறேன்.  அந்த வரிசையில், இந்தப் பதிவு முதல், புதியதொரு பயணத்தொடர் ஆரம்பிக்கிறது - தொடராக வரப்போவது எனது உத்திரப் பிரதேசப் பயணத்திற்கு அடுத்த பயணம் குறித்து! “இந்திரனின் தோட்டம்” என்ற தலைப்பில் இந்தப் பயணத் தொடர் தொடங்கியிருக்கிறேன்.  இந்திரனின் தோட்டம் என்ற தலைப்பு ஏன்? பதிவின் தலைப்பில் எழுதி இருக்கும் Indrakil என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? எந்த மாநிலத்திற்கு இந்த பயணம்? இது போன்ற தகவல்களைச் சொல்வதற்கு முன்னர் பயணம் எப்படித் துவங்கியது என்பதைச் சொல்லி விடுகிறேன். 



 

சில வருடங்களுக்கு முன்னர் கேரள நண்பர் பிரமோத் என்னை அழைத்து பயணம் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஒரு வாரம் விடுப்பு எடுத்து பயணம் செல்லலாமா?  என்று கேட்டிருந்தார். நாங்கள் செல்ல நினைத்தது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு! உடனேயே “ஆஹா, இந்த மாநிலத்திற்கு நான் இதுவரை சென்றதில்லை என்பதால், போகலாமே!” என்று சொல்லி விட்டேன்.  நான் பணிபுரியும் மத்திய அரசின் ஒரு துறையான CPWD (Central Public Works Department) நிர்வகிக்கும் Directorate of Estates என்ற துறையின் அரசு அலுவலர்களுக்கான விடுதி சிக்கிம் தலைநகர் Gகேங்டாக்-இல் இருக்கிறது என அங்கே இரண்டு அறைகளை முன்பதிவு செய்தும் விட்டேன்.  அதெல்லாம் முடிந்து பயணத் திட்டங்கள் வகுத்து, எத்தனை பேர் பயணிக்கப் போகிறோம் என்பதையெல்லாம் முடிவு செய்த பிறகு, விமானத்திற்கான முன்பதிவு செய்ய வேண்டியது தான் பாக்கி. கடைசி நேரத்தில் அலுவலக சிக்கல்கள் காரணமாக என்னால் அங்கே நண்பர் பிரமோத் உடன் பயணிக்க இயலவில்லை. 

 

அடுத்து மீண்டும் ஒரு திட்டம் - 2021-இல்! புது தில்லி நண்பர்கள் குழுவுடன் சிக்கிம் பயணிக்கலாம் எனத் திட்டமிட்டு சிக்கிம் நகரில் இருந்த, தெரிந்த ஒரு பயண ஏற்பாட்டாளர் உடன் மின்னஞ்சல் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம்.  மீண்டும் தீநுண்மி தலைதூக்க, சிக்கிம் நகருக்கு பயணிகள் வருவதற்கு நிறைய விதமான கட்டுப்பாடுகள், தடைகள் என விதித்துவிட்டார்கள்.  அதனால் அந்தத் திட்டமும் திட்ட அளவிலேயே நின்றுவிட்டது.  என்னவோ, சிக்கிம் பயணம் தடைபட்டுக்கொண்டே இருந்தது.  சரி என்றைக்குப் போக முடிகிறதோ அப்போது போகலாம் என விட்டுவிட்டு மற்ற பயணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். பல சமயம் அதிகம் திட்டமிட்டும், பயணங்கள் செய்ய முடியாமல் போவது வழமை தானே!. அது போலவே, எனது இந்த இரண்டு சிக்கிம் பயணத் திட்டங்களும் திட்ட அளவிலேயே நின்று போனது! 



 

இப்படி இருக்க, சென்ற ஆகஸ்ட் மாதம் (2022) தில்லியில் இருக்கும் அரசு பயிற்சி நிலையம் ஒன்றில், அலுவலகப் பணி சம்பந்தமான ஐந்து வார பயிற்சி ஒன்றில் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக நான் அந்த பயிற்சியில் பங்கு கொள்ள முடியவில்லை. இரண்டாம் முறை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பயிற்சிக்கு, எனது பெயர் பரிந்துரை செய்தபோது, கட்டாயம் பங்கு கொண்டே ஆகவேண்டும் என்பதால் பயிற்சியைத் தொடங்கினேன்.   ஐந்து வார பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.  அங்கே இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் குழுமங்கள் என ஆய்வு செய்வது மட்டுமல்லாது சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வர வாய்ப்பு உண்டு.  பயிற்சியின் போது ஓடியா மாநிலத்தைச் சேர்ந்த எங்கள் பயிற்சியாளர்  எங்களுக்கு, பயணிக்கப் போகும் மாநிலமாக இரண்டு Options கொடுத்தார் - அவை கேரளா மற்றும் சிக்கிம்!  நான் உடனடியாக சிக்கிம் போகலாம் என்று எனது தெரிவைச் சொல்லி விட்டேன்.  அதற்கு, பயிற்சிக்கு வந்த மற்ற நபர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டேன். சிக்கிம் மாநிலத்தில் குளிர் அதிகமாக இருக்கும், பனிப்பொழிவு இருக்கும் என்றெல்லாம் சிலர் சொல்ல, அதெல்லாம் தில்லியில் இருக்கும் நமக்கு பழக்கம் தானே என்று சமாளித்து, ஒரு வழியாக பயணிக்கப் போவது சிக்கிம் என்று முடிவாகி விட்டது. 




 

சிக்கிம் மாநிலத்திற்கு Indrakil என்ற புனைப்பெயர் உண்டு - அதாவது இந்திர தேவனின் தோட்டம் என்பது தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம்.  மாநிலம் முழுவதும் இமயமலையின் அழகு சொட்டும் இடம். எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். குளிர் நாட்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும்.  பக்கத்திலேயே வேறு நாடுகள் - குறிப்பாக சீனா மற்றும் திபெத்.  எல்லைப் பகுதிகளில் இருக்கும் இடங்கள் செல்ல தனியாக அனுமதியும் பெற வேண்டியிருக்கும் மாநிலம்.  சிக்கிம் தலைநகர் Gகேங்டாக்.  மொத்தமே நான்கே நான்கு மாவட்டங்கள் - அதனால் பெயர் வைக்கும் தொல்லைகள் இல்லை - வடக்கு சிக்கிம், மேற்கு சிக்கிம், கிழக்கு சிக்கிம், தெற்கு சிக்கிம் என சுலபமாக முடித்து விடுகிறார்கள்.  அனைத்து மாவட்டங்களிலும் பார்க்க வேண்டிய தலங்கள் உண்டு. சிக்கிம் மாநிலம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்கள் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது பத்து நாள் அவசியம்.  எங்களுக்கு இருந்ததோ ஐந்தே நாட்கள் - அதிலும் இரண்டு நாட்கள் வேறு திட்டம் இருந்தது என்பதால் இரண்டு-மூன்று நாட்களில் என்ன பார்க்க முடியும்? முடிந்தவரை பார்க்க வேண்டியது தான்.

 

நவம்பர் மாதத்தின் 15-ஆம் தேதி காலை புறப்பட்டு 19-ஆம் மாலை தில்லி திரும்பும் விதமாக பயிற்சி நிறுவனமே ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள்.  செலவு மொத்தமும் அரசாங்கத்தின் பாடு! நாம் சென்று வந்தால் மட்டும் போதுமானது! ஆஹா எவ்வளவு வசதி இல்லையா? ஆனால் சில தொல்லைகள் உண்டு - குறிப்பாக பயணம் சென்று வந்ததும் அதற்கான Report தயார் செய்து ஒரு வாரத்திற்குள் பயிற்சி தந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் - ஒவ்வொரு பயிற்சி பெறுபவரும் தனித்தனியாக! அதுவும் குறைந்தது 25-30 பக்கங்கள் - பயணம் குறித்தும், அங்கே பார்த்த விஷயங்கள் குறித்தும், அலுவலகங்களில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் எழுத வேண்டும்! பயணம் குறித்து எழுதுவது நமக்கு பிடித்த விஷயமாக இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் எழுத வேண்டும் என்பது தான் கொஞ்சம் இடித்தது. பயிற்சியில் தேர்ச்சி பெற, Tour Report மதிப்பெண்கள் அவசியம் என்பதால் உடனடியாக எழுதிக் கொடுத்து விட்டேன்.  

 

29 பேர் கொண்ட குழுவாக பயணம். நவம்பர் 15-ஆம் தேதி (2022) காலை வீட்டிலிருந்து 05.00 மணிக்கு தயாராகி புறப்பட்டேன். Indriver என்ற செயலியை சமீப நாட்களாக பயன்படுத்த ஆரம்பித்து இருந்தேன். Ola, Uber போன்ற இரண்டுமே அதிக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டதாலும், இந்தப் புதிய செயலி மாறுபட்ட விதத்தில் செயல்படுவதால் இந்த புதிய வசதி பிடித்திருந்தது.  நாம் செல்ல வேண்டிய இடத்தை உள்ளீடு செய்தால், செயலி ஒரு Base Fare காணிப்பிக்கும்.  அதே சமயம், இந்த செயலியை பயன்படுத்தும் அனைத்து ஓட்டுனர்களும் அவரவர் கட்டணத்தைச் சொல்வார்கள். எந்த ஓட்டுநர் சொல்லும் கட்டணம் நமக்கு தோது படுகிறதோ, அவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது நல்ல வசதியாக இருக்கிறது என்பதால் இந்த செயலி தான் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துகிறேன். எனக்கு வந்தது ஜிதேந்தர் என்ற ஓட்டுநர் - Maruti Ritz வாகனம்! இதோ இந்திரனின் தோட்டத்திற்குச் செல்லும் பயணம் தொடங்கி விட்டது.  நீங்களும் வாருங்கள் - இந்திரனின் தோட்டத்தில் ஒரு உலா வருவோம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


குறிப்பு - படங்கள் இணையத்திலிருந்து…

10 கருத்துகள்:

  1. செலவில்லாமல் செல்ல பின்னால் விதி இருக்கிறது என்பதாலேயே இறைவன் முதல் இரு திட்டங்களையும் நிறுத்தி வைத்தாரோ என்னவோ... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அலுவலகச் செலவில் சென்றாலும் மற்றவர்கள் இருப்பதால் விருப்பமான இடங்களைத் தேர்வெஞு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதா?

    பதிலளிநீக்கு
  3. பயணத்திட்டமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
    தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  4. பாத்தீங்களா வெங்கட்ஜி! நடப்பது எதுவும் நன்மைக்கே! முந்தைய இரண்டு திட்டங்களும் நடக்காமல் போனது இப்படி ஒரு வாய்ப்பு வர இருக்கு மாதாவா!!! என்று!

    நீங்கள் செல்லாத மாநிலம் என்றதுமே எனக்கு சிக்கிமாக இருக்குமோ என்று தோன்றியது கேரளா, மஹாராஷ்டிரா கர்நாடகா (நான் அறிந்தவகையில் உங்கள் பயணக் கட்டுரைகளை வாசித்த வகையில்) என்று தோன்றினாலும் சிக்கிம். நீங்கள் பகிர்ந்திருந்த படம் சொல்லிவிட்டது! (எனக்குதான் இப்படி ஊர்களை இணையத்தில் சுத்திப் பார்க்கும் பழக்கம் உண்டே!!!! ஹாஹாஹா)

    பயணம் பிறந்த கதை சுவாரசியம்! நல்ல வாய்ப்பு. ஆர்வமாக இருக்கு உங்கள் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை. சிந்திக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அருமையான இயற்கை எழில் கொஞ்சும் ஊர் .
    படங்கள் அருமை.
    சிக்கிம் பயணம் தட்டி போனது இதற்குதான் போல.
    இந்த காலத்தில் மேலும் அழகாய் இருக்கும் ஊரை பார்க்க வாய்ப்பு.
    பயண திட்டம் மாறியதும் நன்மைதான்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பு சார்.
    மேகாலயா மற்றும் சிக்கிமுக்கு செல்லும் ஆர்வம் எனக்கு வெகு காலமாக உண்டு.
    தாங்கள் குறிப்பிட்ட ஆரஞ்சு ரெஸ்டாரண்ட்டில் தங்கும் ஆர்வமும் இருக்கிறது.
    ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உங்களின் பயண பதிவுகள் எங்களின் பயணத்திற்கு தூண்டுதலாக உள்ளன..

    தொடருங்கள் என்றும் வாசிக்கும் ஆவலுடன் நாங்கள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....