புதன், 12 ஏப்ரல், 2023

தமிழகப் பயணமும் கோவில் உலாக்களும் - சில எண்ணங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் வாரணாசி - நகர்வலம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“And when it rains on your parade, look up rather than down. Without the rain, there would be no rainbow.” - Gilbert K. Chesterton, writer.

 

******



திருவாமாத்தூர் - விழுப்புரம் அருகே!


தலைநகர் தில்லியிலிருந்து ஜனவரி இரண்டாம் தேதி இரவு புறப்பட்டது. இந்த முறை குடும்பச் சூழல்கள் காரணமாக நீண்ட விடுமுறை - மூன்று மாதங்களுக்கும் மேலாக திருவரங்கம்/தமிழகத்தில் தான் வாசம்.  பொதுவாக இத்தனை நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு வருவது இல்லை.  வருகின்ற சில நாட்களில் அதிகம் வேலைகள் இருக்கும் என்பதால் என்னுடைய சில விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததில்லை! என்ன பெரிய விருப்பம் - இங்கே இருக்கும் கோவில்கள் சென்று வருவது தான். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பல இடங்களில் சுற்றி வருகின்றோமே, இது வரை நம் ஊரிலேயே எத்தனை எத்தனை கோவில்கள் பார்க்க இருக்கின்றன, அவற்றை எல்லாம் பார்க்க இது வரை முடியவில்லையே, அல்லது முயற்சிக்கவே இல்லையே என்ற எண்ணம் அவ்வப்போது தலைதூக்க, நிச்சயமாக ஒய்வு பெற்று தமிழகம் வந்து இருக்கும் சமயத்தில் முடிந்த வரை தமிழகத்தில் கோவில் உலா செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் யோசிப்பேன்.  



திருவாமாத்தூர் - விழுப்புரம் அருகே!

இந்த முறையும் அப்படியான எண்ணங்கள் வந்தன. அதுவும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த முதல் இரண்டு மூன்று வாரங்களில் இந்த எண்ணம் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது.  சரி இந்த முறை நீண்ட விடுமுறையில் வந்திருப்பதால், குடும்பத்தில் எப்படியான சூழல் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு நாளேனும் காலை நேரத்தில் வீட்டை விட்டு புறப்பட்டு, அருகருகே இருக்கும் சில கோவில்களையாவது பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.  பெரிதாக செலவு கிடையாது. வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வரை நடை, அங்கிருந்து பேருந்து, கோவில் உலா, மதியத்திற்குள் வீடு திரும்பல்! இவ்வளவு தான்.  கோவில்களில் பெரும்பாலும் நான் அர்ச்சனை போன்றவை செய்வதில்லை! ஆண்டவனுக்கே நமக்கு எது தரவேண்டும் என்பது தெரியும்! நாம் கேட்டுத்தான் அவன் கொடுக்க வேண்டுமா? என்று சின்ன வயதிலேயே எடுத்த முடிவு.  மிகவும் அரிதாகவே அர்ச்சனை, அபிஷேக ஆராதனை போன்றவற்றில் ஈடுபடுவேன். 



திருமங்கலம் - லால்குடி அருகே! 

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, அங்கே இருக்கும் சிற்பங்களையும் ஓவியங்களையும் ரசிப்பது, கோவில் குறித்த தகவல்களையும், முன்னோர்கள் எழுதிய பாடல்களையும் படித்து அதன் பொருள் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்றே எனது கோவில் உலா இருக்கும். இருக்கவே இருக்கிறது அலைபேசி - அதில் சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொள்வதோடு சரி! இப்போதெல்லாம் எனது DSLR கூட எடுத்துச் செல்வது குறைந்து விட்டது! நிழற்படங்கள் எடுப்பதில் ஈடுபாடு குறைந்ததாக அர்த்தம் இல்லை - ஆனால் அத்தனை பெரிய கேமராவை எடுத்துச் செல்ல மனம் வருவதில்லை.  நாள் முழுவதும் அதனுடன் சுற்றினால் தோள் வலி வந்துவிடுகிறது என்பதும் ஒரு காரணம்.  முடிந்த வரை இறைவன் நமக்கு அளித்த இயற்கையான கேமரா கண்களைக் கொண்டே ரசித்து விடுவது, சிலவற்றை மட்டுமாவது அலைபேசி கேமராவில் சிறைபிடித்துவிடுவது என்ற எண்ணம்  வந்துவிட்டது! இன்னுமொரு விஷயமும் இந்தப் பயணத்தில் அதிகம் செய்தது - உடை விஷயத்தில் வந்த மாற்றம்! 



திருவண்ணாமலை...

பொதுவாக எங்கே பயணித்தாலும் Pant, Shirt என இருந்துவிட்டோம்! தில்லியிலோ, மற்ற நகரங்களிலோ வேஷ்டி அணிந்து கொள்ளவே முடிவதில்லை என்பதால், இந்த முறை தமிழகத்தில் கோவில் உலா வந்த போது முடிந்தவரை வேஷ்டியில் தான் எனது உலா! வசதியாகவும் இருக்கிறது, நமது பாரம்பரிய உடையில் கோவிலுக்குள் செல்கிறோம் என்ற மனநிறைவும் கிடக்கிறது! சிலருக்கு இருக்கும் கஷ்டம் போல (வேஷ்டி அவ்வப்போது அவிழ்ந்து விடுவது!) எனக்கு இல்லை.  காலையில் கட்டினால் நானாகவே கழற்றினால் தான் உண்டு! தமிழகம் வந்துவிட்டால் இருக்கும் எனது Pant அனைத்தும் யாருக்கேனும் கொடுத்துவிடலாம் என்று இல்லத்தரசியிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஒன்றிரண்டாவது வைத்துக் கொள்ளுங்களேன் என்று அவளும் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்! இரும்பு பீரோவில் இடம் காலியானால் அவளுக்கும் வசதி - நிறைய இருந்தால் அதை பராமரிப்பது கடினமாயிற்றே! 



திருவண்ணாமலை...


அதெல்லாம் சரி, நிறைய கோவில்களுக்குச் சென்றதாகச் சொன்னாலும், இந்த வலைப்பூவில் அதைப் பற்றி எழுதவில்லையா என உங்களில் சிலரேனும் நினைக்கக்கூடும்! தகவல்களை முடிந்தவரை பகிர்ந்து கொள்வது எனது வழக்கம் தானே! இந்தப் பயணத்தில் பார்த்த கோவில்கள் குறித்து எழுத வேண்டும் - பயணத்தில் பார்த்த ஒரு சில கோவில்கள் குறித்து இங்கே எழுதி இருக்கிறேன் - அவற்றுக்கான சுட்டிகள் கீழே!

 

கோவில் உலா - சிவனுக்கே பிடித்த திருத்தலம் - திருவாசி…

 

உத்தமர் கோவிலும் முத்தங்கி சேவையும்

 

பூமிநாதசுவாமி திருக்கோவில், மண்ணச்சநல்லூர், திருச்சி

 

எமனுக்கு வரம் அளித்த சிவன் - திருப்பைஞ்சீலி

 

ஆஹா என்ன அழகான ஊர் - அழகிய மணவாளம்…

 

ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ அமலீஸ்வரர் திருக்கோவில் கோபுரப்பட்டி…

 

மேலே குறிப்பிட்ட ஆறு பதிவுகளில் நான் பார்த்த கோவில்கள் குறித்து எழுதி இருந்தாலும், இன்னும் நிறைய கோவில்கள் குறித்து எழுத இயலவில்லை.  இதோ தில்லியும் திரும்பியாயிற்று.  நேரம் எடுத்து, இந்தப் பயணத்தில் பார்த்த கோவில்கள் குறித்து எழுத வேண்டும்.  இந்த வாழ்நாளுக்குள் தமிழகத்தில் இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்கள், வைப்புத் ஸ்தலங்கள் மற்றும் திவ்யதேசங்கள் ஆகியவற்றை தரிசித்து விடவேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கிறது.    இந்தப் பயணத்தில் திருச்சி பகுதியில் இருக்கும் ஆறு திவ்யதேசங்களையும், சில பாடல் பெற்ற/வைப்புத் தலங்களையும் தரிசிக்க முடிந்தது!  இறைவன் வழிகாட்டினால் நிச்சயம் மற்ற இடங்களுக்கும் செல்ல முடியும் என்று தோன்றுகிறது!  நின்று நிதானித்து இந்தக் கோவில்களில் உலா வர வேண்டும் என்று ஆசையுண்டு - அவனது அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு! 



அன்பில் அருகே ஒரு மாரியம்மன் கோவில்… 

இந்தப் பயணங்கள் பக்தி உலா என்ற அளவில் நிச்சயம் இல்லை - நம் தமிழகத்தில் எத்தனை எத்தனை திறமையான கலைஞர்கள், சிற்பிகள் என இருந்திருக்கிறார்கள், அவர்களை நாம் அறிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்தாலும், அவர்களது திறமையின் சாட்சியாக இன்றும் நிலைத்து நிற்கும் கலையையாவது கண்டு களித்து, அது குறித்து நாமும் தெரிந்து கொள்வதோடு, இங்கே பகிர்ந்து கொள்வதால், இங்கே வரும் சிலருக்கேனும் அந்தத் தகவல்களை கடத்த முடியுமே என்ற சிந்தனை தான் அதிகம் இருக்கிறது.  எனது பக்தி உலா எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தொடரும்! பதிவுகளும் தொடரும்!  விரைவில் நான் சென்ற கோவில்கள் குறித்து எழுதுவேன்!  நதிக்கரை நகரங்கள் தொடர் முடிந்த பிறகு வேறு ஒரு பயணத்தொடர் வர இருக்கிறது.  நடுநடுவே கோவில் உலாவும் வரும்! அந்தப் பதிவுகள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்பிக்கை எனக்கு உண்டு!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

11 கருத்துகள்:

  1. கோவில்கள் சுற்றும் விஷயத்தில் உங்கள் கருத்துதான் எனக்கும்.  அப்படியே!  வேஷ்டி காட்டும் திறமை எனக்கு இல்லை!  நான் இந்த மாதம் 28 நாட்கள் லீவு போட்டிருக்கிறேன்.  இவ்வளவு நாட்கள் லீவு போட்டிருப்பபது இதுவே முதல் முறை.  முன்னர் அதிக பட்சம் 15 நாட்கள் எடுத்திருக்கிறேன்.   செவீசில் மொத்தமே நாற்பது நாட்கள்தான் இவ்வகை விடுப்பு எடுத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை செய்கிறவர்களுக்கு வேலை கொடுக்கணும். சும்மா இருப்பவனுக்கு ப்ரொமோஷன் கொடு என்பதுதான் பொதுவான ரூல்.

      நீக்கு
  2. நிறைய கோவில் தரிசனங்கள் கிட்டட்டும். ஒரே மாதிரி சிற்பம் மிக் தொலைதூரத்தில் இருக்கும் கோயிலில் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன். சிற்பத்துக்கான புத்தகம் (ஓலைச் சுவடி) இல்லாமல் இது எப்படி சாத்தியப்பட்டிருக்கும்?

    பதிலளிநீக்கு
  3. கோயில் உலா பற்றிய தகவல்கள் சிறப்பு.

    நான் இந்தியா வந்ததிலிருந்து வேட்டிதான்.

    துபாயில் ஓர் முறை பப்ளிக் பார்க்கில் சங்ககூட்டம் நடத்தினேன்.

    நான் மட்டும் பட்டு வேட்டி சட்டையில் பரபரப்பாக்கினேன்.

    போலீசார் பார்த்தும் ஒன்றும் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
  4. அருமை 👍
    அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம்🙏

    பதிலளிநீக்கு
  5. முதல் படம் கோபுரம் படமே ஈர்க்கிறது அழகு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கோவில்களில் பெரும்பாலும் நான் அர்ச்சனை போன்றவை செய்வதில்லை! ஆண்டவனுக்கே நமக்கு எது தரவேண்டும் என்பது தெரியும்! நாம் கேட்டுத்தான் அவன் கொடுக்க வேண்டுமா? என்று சின்ன வயதிலேயே எடுத்த முடிவு.//

    ஹைஃபைவ் ஜி!!! நானும் அதேதான். நேரே போவேன் வழிபடுவேன் வருவேன். அவ்வளவுதான். வேண்டுதல்களும் வைத்துக் கொண்டதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆமாம் ஜி நானும் சிற்பங்களை ரசிப்பது ரொம்பப் பிடித்த விஷயம். என் புகைப்படக் கருவி பாக்கெட் அளவுதானே!! கை அடக்கம் என்பதால் அதனுடன் செல்வதாகிவிட்டது.

    கோயில் உலா பதிவுகள் தொடரட்டும் ஜி.

    எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் எழுதத்தான் கடினமாக இருக்கிறது...நேரம், மன ஒத்துழைப்பு...என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பதிவு.
    உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும். இறைவன் அருள்வார்.
    கோவில் படங்கள் எல்லாம் அருமை. உங்கள் படமும் நன்றாக இருக்கிறது. என் அப்பா வீட்டுக்கு, கோவில்கள் , விழாக்கள் எல்லாம் வேஷ்டிதான்.
    அவர்கள் தழையத் தழைய அழகாய் கட்டுவார்கள் அப்பா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....