சனி, 18 பிப்ரவரி, 2023

முகநூல் இற்றைகள் - உத்தமர் கோவிலும் முத்தங்கி சேவையும் - 21 ஜனவரி 2023


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட புருஷா மிருகமும் சிவாலய ஓட்டமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

PUT YOUR HEART, MIND, AND SOUL INTO EVEN YOUR SMALLEST OF ACTS. THAT WOULD PROVE TO BE YOUR SECRET OF SUCCESS.

 

******
 

சில நாட்கள் முன்னர் கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் இருக்கும் உத்தமர் கோவில் சென்று வந்தேன்.  திருச்சியில் இருக்கும் பிரதான கோவில்களில் ஒன்று உத்தமர் கோவில்.  மும்மூர்த்திகள் ஸ்தலம்.  இந்து தர்மத்தின் மூன்று மூர்த்திகளையும் ஒரு சேர  தரிசிக்க ஏதுவாக ஒரு ஸ்தலம்.  மிகவும் பழமையான கோவில்.  சிவன் (பிச்சாண்டார்), விஷ்ணு (புருஷோத்தமன்) மற்றும் பிரம்மா ஆகிய மூவருக்கும் இங்கே தனி சன்னதிகள் உண்டு என்பதோடு மூவரும் தத்தமது தேவியருடன் இங்கே அருள் புரிகிறார்கள்.   

மூன்று மூர்த்திகளும் தத்தமது தேவியருடன் உத்தமமாக இங்கே அருள் பாலிப்பதால் திருமங்கை  ஆழ்வார் இந்த தலத்தினை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்திருப்பதாக தகவல்களுண்டு.  நான் சென்ற அன்று புருஷோத்தம பெருமாளுக்கு முத்தங்கி சேவை.  மிகச் சிறப்பான அலங்காரம் - ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் கொண்டாடப்படும் இராப்பத்து திருவிழா சமயத்தில் மட்டுமே பெருமாளுக்கு முத்தங்கி சேவை என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.  பெருமாளை முத்தங்கி சேவையில் தரிசிக்க நீங்கள் ஆசைப்பட்டால், அதுவும் அந்த அழகனை மேலும் அழகாக்கும் முத்தங்கியில் சேவிக்க ஆசைப்பட்டால், நிச்சயம் இராப்பத்து சமயத்தில் இக்கோவிலுக்குச் செல்வது சிறப்பு. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும், “சிறப்பு தரிசனம் (பத்து ரூபாய்) சீட்டு வாங்கிட்டு போங்க!” என்றார் கோவில் ஊழியர் ஒருவர்.  சரி என வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால் நின்று நிதானித்து, கிழக்கு நோக்கி பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் பெருமாளை திவ்ய தரிசனம் செய்து கொள்ள முடிந்தது.  பக்கத்திலே தனி சன்னதியில் என்றும் உணவுக்கு பஞ்சமில்லாத நிலையை பக்தர்களுக்கு அருளக்கூடிய பூர்ணவல்லி தாயார். 

 விஷ்ணுவை தரிசித்த பிறகு பிச்சாண்டவரையும், சவுந்தர்ய பார்வதியையும், பிரம்மா மற்றும் ஞான சரஸ்வதி ஆகியோரையும் தரிசித்து மனதில் நிம்மதி அடைந்தேன்.  பக்தர்கள் கூட்டம் இல்லாமல் நின்று நிதானித்து இறைவன் சன்னதியில் தரிசனம் செய்வது தான் பிடித்திருக்கிறது.  பிரபலமான கோவில்களில் தள்ளுமுள்ளு கூட்டத்தில் “ஜருகண்டி ஜருகண்டி” என்று திருப்பதி கோவில் போல இங்கே இல்லை.  நம்மை தள்ளி விடாமல், நின்று நிதானித்து தரிசனம் செய்ய முடிவதால் கிடைக்கும் நிம்மதியும், திருப்தியும் மனதுக்கு உகந்தவையாக இருக்கிறது.  அப்படியான நிம்மதியும் திருப்தியும் உத்தமர் கோவிலில் எனக்கு வாய்த்தது.  சிறப்பான கோவில். சரஸ்வதி தேவி கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி மற்றும் ஜெபமாலையுடன் இங்கே காட்சி தருவது சிறப்பு. 
 

அழகான கோவில்.  திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 விஷ்ணு கோவில்களில் இந்த உத்தமர் கோவில் மூன்றாம் இடத்தில் இருப்பது.  திருச்சி வந்தால் நிச்சயம் சென்று வர வேண்டிய கோவிலும் கூட! கோவில் குறித்து இன்னும் தகவல்களுண்டு! விரைவில் திருச்சியில் அமைந்துள்ள ஆறு திவ்யதேசங்கள் குறித்து எழுத இருக்கிறேன்.  அப்போது இன்னும் அதிக தகவல்களை எழுத எண்ணம் - அவன் அருள் இருந்தால் எழுதுவேன். அவ்வப்போது உற்சவங்கள், விழாக்கள் என நடப்பதுண்டு.  அந்த சமயம் இல்லாமல் மற்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதில்லை.  திருச்சி வரும் வாய்ப்பு இருப்பவர்கள் நிச்சயமாக சென்று மும்மூர்த்திகளின் அருளை பெறலாமே!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

22 கருத்துகள்:

 1. முத்தங்கி சேவை படம் கிடைக்கவில்லையா?

  மிகச் சமீபத்தில் இந்தக் கோவில் தரிசனம், நல்ல மழை நாளில் வாய்க்கப்பெற்றோம். பதிவு பென்டிங்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. முத்தங்கி சேவை - கோவிலில் படம் எடுக்கவில்லை. இணையத்தில் தேடியபோது இந்த கோவிலில் எடுத்த முத்தங்கி சேவை படம் கிடைக்கவில்லை. அதனால் சேர்க்கவில்லை.

   தங்களது அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 2. நானும் உங்கள் கட்சி.  பிரபலமான கோவில்களில் தள்ளுமுள்ளுகளுக்கு நடுவே பதட்டத்துடன் சேவித்து விட்டு வருவதை விட, பழமையான கோவில்களில் நிம்மதியாக ஏகாந்தமாக வணங்கி வருவதையே நானும் விரும்புவேன்.  இந்தக் கோவில் சென்று பார்க்க ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. அதிக கூட்டம் இருக்கும் இடத்தில் மனது இறைவனோடு ஒன்றுவதில்லை ஸ்ரீராம். அதனால் இப்படியான அதிக கூட்டம் இல்லாத கோவில்கள் தான் எனது இலக்கு.

   தங்களது அன்பிற்கு நன்றி.

   நீக்கு
  2. ஆனால் சில கோவில்களில், அவர்களது நிலை காரணமாக, நம்மிடம் காசு எதிர்பார்க்கிறார்கள். வெங்கட்டே திருவெள்ளறை பற்றிக் குறிப்பிட்ட நினைவு. அதனால் கூட்டமில்லாத, நம்மைப் பிடுங்காத கோவில்களில் தரிசனம் மிக நிறைவாக அமைந்துவிடும்

   நீக்கு
  3. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம். சமீபத்தில் திருவெள்ளரை சென்ற போது கிடைத்த அனுபவம் இன்னும் எழுதவில்லை. எழுத வேண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 3. பெரிய கோயில்களில் இப்படி பிரச்சனைகள் பெருகி விட்டது.

  பதிலளிநீக்கு
 4. மும்மூர்த்திகள் உறையும் உத்தமர் கோவில் தரிசனம் பெற்றோம்.

  பதிலளிநீக்கு
 5. இன்றைய வாசகம் அருமை. உண்மை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 6. உத்தமர் கோயில் சென்றிருக்கிறேன். பல பல வருடங்களுக்கு முன்னால். சாதாரண தினத்தில்தான். கூட்டமே இல்லாமல் இருந்தது மிகவும் பிடித்தது,. எனக்கும் தள்ளு முள்ளு ஜருகண்டி இடங்கள் ஏனொ மனதிற்கு நெருக்கமாக இருப்பதில்லை. இதோ இன்று மஹாசிவராத்திரி கூட வீட்டிற்கு அருகில் இருக்கும் தினமும் செல்லும் சிவன் கோயிலுக்குச் செல்லவில்லை. கூட்டம் என்பதால்.

  உங்கள் கட்சிதான் நானும். நிம்மதியான தரிசனம் வேண்டும் பழம் பெரும் கோயில்கள் மிகவும் பிடிக்கும்.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமையான கோவில்களில் கிடைக்கும் அமைதி அலாதியான ஒன்றாக இருக்கும் கீதா ஜி. தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. மும்மூர்த்திகளும் இருக்கிறார்கள் அதுவும் தனி தனி சன்னதியுடன். சுசீந்திரத்தில் மூவரும் ஒன்றாக....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுசீந்திரம் செல்ல வேண்டும். தற்போது பத்மநாபன் அண்ணாச்சியும் இருப்பதால் செல்ல திட்டம் உண்டு கீதா ஜி. பார்க்கலாம் எப்போது அங்கே செல்ல முடிகிறது என்று.

   நீக்கு
 8. பக்தர்கள் கூட்டம் இல்லாமல் நின்று நிதானித்து இறைவன் சன்னதியில் தரிசனம் செய்வது தான் பிடித்திருக்கிறது. பிரபலமான கோவில்களில் தள்ளுமுள்ளு கூட்டத்தில் “ஜருகண்டி ஜருகண்டி” என்று திருப்பதி கோவில் போல இங்கே இல்லை. நம்மை தள்ளி விடாமல், நின்று நிதானித்து தரிசனம் செய்ய முடிவதால் கிடைக்கும் நிம்மதியும், திருப்தியும் மனதுக்கு உகந்தவையாக இருக்கிறது. //

  அதே அதே....டிட்டோ

  கீதா

  பதிலளிநீக்கு
 9. உத்தமர் கோவில் படங்களும் விவரங்களும் அருமை.
  இந்த மாதிரி கோவில்களில் நிம்மதியாக தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....