வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கனக் Bபவன் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

REAL LEADERSHIP HAS ALWAYS BEEN BUILT ON A STRONG CHARACTER. IT'S NOT JUST A ROLE ONE PLAYS; IT'S A LIFE ONE LEADS.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஐந்து



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி ஐந்தாம் விதி சொல்வது, "உன்னை, தொடர்ந்து மீளுருவாக்கம் செய்துகொண்டே இரு".

 

மூல நூலில், இதை "RE-CREATE YOURSELF" என்கிறார் எழுத்தாளர்.

 

ஒரு மாணவனோ, தொழிலாளியோ, ஆரம்பத்தில் சிறிது நற்பெயரைச் சம்பாரிப்பதும், தனக்கென ஒரு சிறந்த நற்பிம்பத்தை உருவாக்குவதும் எவ்வளவு சவாலானது என அறிவோம்.

 

அதையும் விட மிகப் பெரிய சவால், நாம் உருவாக்கிய பிம்பத்தில் நாமே சிக்கிக்கொண்டு வெளிவர முடியாமல் தவிப்பதே.

 

அது நல்ல பிம்பமே என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதை ஒரு சாதனையாகப் புகழ்வோர் கூட, காலப்போக்கில், அதை மறந்து நாம் காணாமல் ஆக்கப்படும் அபாயமே நேர்வதுண்டு.

 

எனவேதான், அவ்வப்போது தம் சுற்றத்தாரை சற்று அதிர்ச்சியூட்டும்படி, சிறிது நாடகத்தனமான நடவடிக்கைகளை பெரும் கவர்ச்சி வாய்ந்த ஆளுமைகள் மேற்கொள்வதைக் காணலாம்.

 

அரசியல்வாதிகளின் சர்ச்சைப் பேச்சுகள், பிரபலங்கள் மற்றவர் மீது வைக்கும் காத்திரமான விமர்சனங்கள் உள்ளிட்டவை, சொல் அளவிலான பிம்ப மீளுருவாக்கத்தின் எடுத்துக்காட்டுகள்.

 

இருப்பினும், செயல் அளவிலான மீளுருவாக்க நடவடிக்கைகளே, நீண்டகால அளவில் நம் வலிமையைப் பெருக்கவல்லதாகும்.

 

அதிலும், தம் வாழ்வில் ஏற்படும் மிகக் கொடூரமான திருப்புமுனைகளை, தம்மை மீளுருவாக்கம் செய்யும் அற்புத வாய்ப்புகளாக உபயோகித்த கீழ்காணும் சில பெரும் ஆளுமைகளின் அனுபவங்களே, இவ்விதியின் சாரத்தை அனைவருக்கும் தெளிவாக்கும்.

 

கோவிந்தப்ப வேங்கடசாமி என்பவர், 1918 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தம் தாய் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

 

தம் பத்தாம் வயதில், தம் தாயின் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலால் மூன்று சகோதரர்களை இழந்த இவர், ஒரு மகப்பேரு மருத்துவராக ஆகும் சவாலை ஏற்றுக்கொண்டு படிப்படியாக மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார்.

 

கிட்டத்தட்ட ஒரு மருத்துவர் ஆகிய நிலையில்,  தம் முப்பதாம் வயதில், ஒரு அரியவகை முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்ட இவரின் உடல் முழுதும் முறுக்கப்பட்டது.

 

இதனால் மகப்பேரு மருத்துவராகத் தொடர முடியாத நிலையில், முறுக்கப்பட்ட தம் விரல்களால், கண் அறுவை சிகிச்சையைத் துல்லியமாகச் செய்ய பயிற்சி எடுத்துச் சிறந்த கண் மருத்துவராக மாறினார்.

 

1976 இல் ஓய்வு பெற்றபின், அவர் தொடங்கியதே, உலகப் புகழ் பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை.

 

அறுபது சதவிகித சிகிச்சையை, சலுகைக் கட்டணத்தில் சேவையாகச் செய்து கூட, உலகத்தரமான மருத்துவ சேவையைத் தொடர்ந்து இலாபமாக வழங்கும் இதன் தொழில்முறை, பலரை பிரமிப்பிற்குள்ளாக்கி வருகிறது.

 

அத்தொழில்முறை செயல்படும் வியத்தகு விதத்தையும், தான் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலுக்கேற்ப தம்மை மீளுருவாக்கம் செய்துகொண்டே இருந்த திரு வேங்கடசாமி அவர்களின் மேலும் பல வாழ்வனுபவங்களையும், அவரின் தங்கை வழி பேத்தி, திருமதி பவித்ரா கே மேத்தா அவர்களின் "வெளிச்சத்தின் சந்நிதி" என்னும் சிறிய நூலை பின்வரும் யுட்யூப் காணொளி சுட்டியில் கேட்டு மகிழலாம்.

 

வெளிச்சத்தின் சந்நிதி_ பவித்ரா கே மேத்தா  | Audiobook |

 

சூழலுக்கேற்ப வித்தியாசமான வேடங்களைப் பூணத் தயாராக இருத்தலும், இவ்விதியின் மற்றொரு முக்கிய சாரம் ஆகும்.

 

ஒரு வேகப் பந்துவீச்சாளராக 1969 இல் தம் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர், மூத்த வீரர் திரு மொஹிந்தர் அமர்நாத் அவர்கள்.

 

அதிலிருந்து, தம் உடல் வாகுவிற்கு ஏற்ற சுழற் பந்துவீச்சாளராகத் தொடர்பயிற்சி மூலம் தம்மைத் தகவமைத்துக் கொண்டதோடு, சடாரென்று எழும்பி வரும் பந்துகளை "Short balls" திறனுடன் எதிர்கொள்ளவும் பயிற்சி செய்தார்.

 

அதன் விளைவாகவே, 1983 ஆண்டு உலகக் கோப்பையில், இந்தியாவிற்காக அனைத்து துறைகளிலும் சிறப்பாகப் பங்களிக்க முடிந்தது.

 

இவரைப் போலவே, ஒரு வேகப்பந்து வீச்சாளராகத் தம் வாழ்வைத் தொடங்கிய திரு சச்சின் அவர்களின் 24 ஆண்டு நீண்ட வெற்றிகரமான சர்வதேச சாதனைகளுக்கும் பின்னால், இவ்விதியே இருப்பதை அவரின் சுயசரிதை நூலைப் படிப்பதன் மூலம் அறியலாம்.

 

அதில் 2004 இல் அவர் முழங்கையில் ஏற்பட்ட மிக மோசமான காயம் "Tennis Elbow injury" மிக முக்கியமானது.

 

மட்டை பிடிக்கும் முறையிலிருந்து, ஆட்டத்தின் பல்வேறு முறைகளில், அவர் செய்துகொண்ட மாறுபாடுகள் படிக்கப் படிக்க சுவாரசியமானவை.

 

வாழ்வில் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டாலும், வெளிப்படையாக மிகவும் கலகலப்பாக இருப்பதே இவ்வாளுமைகளின் மற்றொரு சிறப்பு இயல்பு.

 

எனவே, கடந்தகாலத் துயரங்களை எண்ணியே காலம் கழிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதையும், எதிர்கால உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில், நம் திறமைகளை மீள் வடிவமைப்பு செய்வதிலேயே, நம் வலிமையின் சாரம் இருப்பதையும் உணர்வோம்.

 

நம்மை மீளுருவாக்கம் செய்கையில், நாம் எச்சறிக்கையாக இருக்கவேண்டிய இடங்கள் குறித்து நூலின் கடைசி நான்கு விதிகளில் விரிவாக அறியவிருக்கிறோம்.

 

அதற்கு முன், பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் ஒரு குழுவின் தலைவராக இருப்போர், எதிர்கொள்ளும் பெரும் அபாயங்களைக் கையாள உதவும் முக்கிய உபாயம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

16 கருத்துகள்:

  1. இன்றைய விதியின் சில இடங்களில் என்னை நான் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். இன்றைய நிலையில் எனக்கும் சில புதிய சிந்தனைகளைக் கொடுத்தது உங்கள் எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை ஆங்காங்கே பொருத்திப் பார்த்து பொருமையாக வாசித்து பின்னூட்டங்களை வழங்குவதற்கும், தொடர்ந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. எதிர்கால திட்டங்களே நம்மை ஊக்குவிக்கும் நடந்தவைகள் பயனற்றவையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி சார்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. உண்மை. எதிர்காலம் நம்மை ஊக்குவிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. அதைத்தான் பேச்சாளர்கள் "Forward thinking" என்கிறார்கள்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பொருத்தமான கருத்து சார்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  5. ஒவ்வொரு விதியும் படிக்க ஆரம்பிக்கும் போது இது சரியாக வருமா என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் படித்து முடிக்கும் போது சரிதான் என்று முடிவுக்கு வரமுடிகிறது.
    அருமை 👍
    வரவிருக்கும் சுவாரஸ்யமான விதிகளை படிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம் 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதிகளின் ஆரம்பத்தில் தங்களுக்கு சற்று முறன்பாடுகள் இருப்பினும், தங்கள் பொருமையான வாசிப்பிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நிர்மலா ரங்கராஜன் மேடம்.

      நீக்கு
  6. அரவிந்த் இந்த விதியை - நான் வீழ்வேனென்று நினைத்தாயா என்று நம்மை நாமே உத்வேகப்படுத்தல் என்றும் சொல்லலாம் இல்லையா? நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே இருத்தல் என்றும் சொல்லலாம் தானே? இல்லையேல் கொஞ்ச நாட்களில் ஒரு சலிப்பு வந்துவிடும் எனவே புதிதுபுதிதாய் சிந்தித்தல், பரிணாமங்கள் என்றும் கொள்ளலாம் இல்லையா? அவை நம்மை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம்.
      நம்மை புதுப்பித்தலே, நம் தினசரி வாழ்விற்கு அர்த்தத்தையும் கொடுக்கும்.
      இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. நம் வாழ்வு முழுதும் கற்கவேண்டிய ஏதாவது இருந்தே தீரும்.

      நீக்கு
    2. ஆம் மேடம்.
      நம்மை புதுப்பித்தலே, நம் தினசரி வாழ்விற்கு அர்த்தத்தையும் கொடுக்கும்.
      இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. நம் வாழ்வு முழுதும் கற்கவேண்டிய ஏதாவது இருந்தே தீரும்.

      நீக்கு
  7. இந்த விதி எல்லோருக்குமே பொருந்தும் ஒன்று.

    வாசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  8. நம்மை புதுப்பித்து கற்றுக்கொண்டே இரு என்கிறது . கால மாற்றத்தில் இது முக்கிய தேவைதான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....